Saturday, December 22, 2012



Animated Flower Yellowஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்று இரட்டை பட்டம் (Double Degree) காரணமாக பணிநியமனம் வழங்கப்படாத 13 ஆசிரியர்களுக்கு 13 பணியிடங்களை தற்காலிகமாக ஒதுக்கி அரசிடம் விளக்கம் கோரி உயர்நீதி மன்றம் உத்தரவு

        ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double Degree) பயின்றதன் காரணமாக பல ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படவில்லை.
 
              இதனால் பதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகினர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அனுகியபோது , "உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இரட்டை பட்டம் பயின்றோருக்கு பணி வழங்க இயலாது" என விளக்கமளித்ததால், இதனால் பலர் நீதிமன்றத்தை அனுகினர்.
 
        இந்நிலையில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 13 பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நேற்று (21.12.2012) இவ்வழக்கின் விசாரணை தொடங்கியது. தாங்கள் TET விண்ணப்பம் அளித்தபோது இரட்டை பட்டம் பணிநியமனத்திற்கு தகுதியுடையது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியமும்  உயர்கல்வி ஆணையமும் தகவல் அளித்ததையும்,  100க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்டது.

          இதையடுத்து வழக்கு தொடுத்துள்ள 13 ஆசிரியர்களுக்கும் 13 பணி இடங்களை தற்காலிகமாக ஒதுக்கியும் இப்பணியிடங்கள் ஏற்கனவே விசாரணையில் இருக்கும் அனைத்து TET நியமனம் தொடர்பான இறுதித்தீர்புக்கு உட்பட்டது என்றும், இதுகுறித்து விளக்கத்தினை 15 நாட்களுக்குள் அளிக்க அரசுக்கும் கல்வித்துறைக்கும் உயர்நீதி மன்றநீதிபதி திரு.வெங்கடராமன்  உத்தரவிட்டார்.


Animated Flower Yellow10ம் வகுப்பு தேர்வெழுதுவோர் விபரங்களை இணையத்தில் பதிய உத்தரவு

     பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர், அந்தந்த பள்ளிகளில் உள்ள, இணையதள வசதியைப் பயன்படுத்தி, தங்களைப் பற்றிய விவரங்களை, பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார். ஜன., 4ம் தேதிக்குள், இந்தப் பணிகளை முடிக்க வேண்டும்.
     தமிழகத்தில் அடுத்த ஆண்டு, மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கி, ஏப்ரலில் முடிகிறது. இந்த தேர்வை, 10.5 லட்சம் மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர். பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள், "சிடி"யில் சேகரிக்கப்பட்டு, கல்வி மாவட்ட வாரியாக, குறிப்பிட்ட மையங்களில் ஒப்படைத்து, பின் அவை, தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். தேர்வுத் துறையில், பல்வேறு திட்டங்கள், இணையதளம் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விவரங்களையும், இணையதளம் வழியாக பதிவு செய்ய, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவியர், தங்களது பள்ளிகளில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, ஆசிரியர் உதவியுடன், தங்களைப் பற்றிய விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

     பதிவு செய்யப்படும் தகவல்களில் தவறுகள் இருந்தால், அதை உடனடியாக சரி செய்து கொள்ளவும், வழி செய்யப்பட்டுள்ளது. ஜன., 4ம் தேதிக்குள், இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி, வலியுறுத்தி உள்ளார்.

      இது குறித்து, வசுந்தரா தேவி கூறுகையில், "தேர்வுத்துறை இணையதளத்தில், ஒவ்வொரு பள்ளியும், அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள, "பாஸ்வேர்டை" பயன்படுத்தி, இணையதளத்திற்குள் சென்று, விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதை, தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்,&'&' என,தெரிவித்தார்.

      இணையதளத்தில் பதிவு செய்யப்படும் தகவல்கள், "நிக்" மையங்கள் மூலம் பெறப்பட்டு, சென்னையில் உள்ள தகவல் தொகுப்பு விவர மையத்திற்கு அனுப்பப்பட உள்ளது. பின், மாணவ, மாணவியர் குறித்த விவர பட்டியல், தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய திட்டத்தால், தேர்வுப் பணிகள், பெரும் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதாக, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இணையதள பதிவின் போது, மாணவ, மாணவியர் கவனிக்க வேண்டிய, முக்கிய அம்சங்கள் குறித்து, தேர்வுத்துறை கூறியிருப்பதாவது

* தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, இனம், மொழி, எந்த மொழிகளில் தேர்வை எழுதுகின்றனர் என்ற விவரங்களை, ஒன்றுக்கு பலமுறை, மாணவர்கள் சரிபார்க்க வேண்டும்.

* மாணவர்களின் புகைப்படங்கள் மிகவும் முக்கியம். சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை, "அப்லோட்" செய்ய வேண்டும்.

* உடல் ஊனமுற்றவர்களாக இருந்தால், "PH" என, குறிப்பிட வேண்டும். இந்த விவரங்கள் மிகவும் முக்கியம் என்பதால், தலைமை ஆசிரியர் மேற்பார்வையில், பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

* சரியான தகவல்களை பதிவு செய்தால்தான், பிழையில்லாத மதிப்பெண் பட்டியலை வழங்க முடியும். இதை உணர்ந்து, தலைமை ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். தவறுகள் நடந்தால், சம்பந்தபட்ட தலைமை ஆசிரியர் மீது, கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, தேர்வுத் துறை கூறியுள்ளது.

      பிளஸ் 2 மாணவர்கள் திருத்தம் செய்யலாம்

        பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்கள், தங்களை குறித்த விவரங்களை, பழைய முறையில், ஏற்கனவே வழங்கி உள்ளனர். எனினும், அந்த விவரங்களில், ஏதேனும் தவறுகள் இருந்தால், உடனடியாக, இணையதளம் வழியாக, திருத்தம் செய்யலாம் என, தேர்வுத் துறை இயக்குனர் தெரிவித்தார். ஜன., 4ம் தேதி வரை, இந்த திருத்தங்களை, அந்தந்த பள்ளிகளில் உள்ள இணையதளம் வழியாகச் செய்ய வேண்டும் என, அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Animated Flower Yellowஉள்ளூர் பள்ளிகளை உயரச்செய்வோம் !


        பள்ளிக்கூடம் என்றாலே சற்றென்று நினைவு கொள்வது நாம் கல்வி பயின்ற தொடக்கப்பள்ளிகளே ! காரணம் நெஞ்சம் நெகிழும் அந்த மலரும் நினைவுகள் பசுமரத்து ஆணி போல் பளிச்சென்று நம் மனதில் ஒவ்வொன்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும்.
        அந்தவகையில் நமதூர் மேலத்தெருவில் கடந்த 1921 ஆண்டுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இன்று நடுநிலைப் பள்ளி என்ற அந்தஸ்தைப் பெற்று அப்பகுதியை சுற்றி வசிக்கக்கூடிய ஏழை எளியோர் வீட்டு மாணவ மாணவிகள் கல்வியை கற்பதற்குரிய சிறப்பை வழங்கி வருகிறது. பரப்பளவில் மிகப்பெரும் இடத்தைக் கொண்டுள்ள பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும்.

      என்னுடைய ஆரம்பக் கல்வியை இப்பள்ளியில் பயின்றதால் இப்பள்ளி மீது எனது கவனம் சற்றுக் கூடுதலாகவே இருக்கும். இப்பள்ளியின் சாலை வழியே பலமுறை நான் கடந்து சென்றிருந்தாலும் தேர்தல் நேரத்தில் எனது வாக்குரிமையை நிலை நிறுத்திக்கொள்வதற்காக [ ஓட்டு போடுவதற்காக ] மட்டும் சென்று வந்ததை தவிர்த்தால் மற்ற நேரங்களில் அங்கே செல்வதற்குரிய வாய்ப்பு எனக்கு அமையாமலேயே போய்விட்டது.

      இன்று காலை எனது நண்பன் ஜமாலுதீன் மூலம் எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இருவரும் ஒன்றாகச் சென்றோம். பள்ளியை சென்றடைந்தவுடன் பள்ளியை முழுவதுமாக பார்வையிட்டுக் கொண்டே எங்களின் நினைவுகள் ஒவ்வொன்றையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துவாறு பார்வையிட்ட எங்களுக்கு அங்கே கண்ட காட்சிகள் அதிர்ச்சியடைய வைத்தன...

மாணாக்கர்களின் எண்ணிக்கை விகிதம் :
      மிகுந்த ஜனத்தொகை இருக்கும் குடியிருப்பு பகுதியின் அருகே பள்ளி இருந்தும் மாணாக்கர்கள் எண்ணிக்கை என்னவோ !? இரண்டு இலக்க எண்ணைத் தாண்டாமல் இருந்தது எங்களுக்கு வேதனையைத் தந்தன. அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி பாட திட்டமே நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன என்பதை மறந்து விட்டு கட்டணத்தை செலுத்தி கல்வியை கற்க எங்கேயோ அனுப்பி வைத்துவிடும் பெற்றோர்கள் நம் முன்னோர்கள் பலர் இதுபோன்ற பள்ளிக்கூடங்களில் கல்வி பயின்று பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என்பதை மறந்து விட்டதேக் காரணமாக இருக்கும்.

      புதிய உணவு வகைகளை சத்துணவு திட்டத்தில் அறிமுகம் செய்துள்ள தமிழக அரசு, புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், சீருடைகள், காலணிகள், வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி [ Geometry Box ], பேருந்து பயண அட்டை, கல்வி உதவித் தொகை, மிதிவண்டி, லேப்டாப் உட்பட தேர்வில் வெற்றிபெறும் மாணக்கர்களுக்கு பரிசுத்தொகை என இதுபோன்ற எண்ணற்ற சலுகைகளை வழங்கி அனைவருக்கும் கல்வி என்ற தொலைநோக்குத் திட்டத்துடன் அரசு செயல்படுத்தி வரும் வாய்ப்பை பெற்றோர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளாமல் தங்களின் பிள்ளைகளை எங்கேயோ இருக்கும் பள்ளிக்கு கல்வி கற்க அனுப்புவதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விகிதம் குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றன.

வகுப்பு அறை !?
      வகுப்பறையின் அருகே செல்வதற்கே எங்களுக்கு அச்சமாக இருந்தது. காரணம் நாங்கள் கல்வி பயின்ற காலக்கட்டத்திற்கு முன்பே கட்டப்பட்டிருந்த இக்கூடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்து இருப்பதைக் கண்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது. மீதமுள்ள பகுதியும் இடிந்து விழுந்து ஆசிரியர், மாணாக்கர் போன்றோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முன்பு இதில் கவனம் செலுத்துவது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமை.
 
உள்ளூர் பள்ளிகளை உயரச்செய்வோம் !
    அடிப்படை வசதிகளான சுகாதாரம், குடி நீர், உணவுக் கூடங்கள் மற்றும் வகுப்பறைகளின் தரம், கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி நமது பள்ளிகளை நாமே தரத்திலும் சேவையிலும் உயர்ந்து நிற்க துணை புரிவோம்.


Animated Flower Yellow

9 மாவட்டங்களுக்கான திருச்சி மண்டல தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் 26.12.2012 அன்று நடைபெறுகிறது


Animated Flower Yellow10ம் வகுப்பு தேர்வு - ஆங்கிலம் முதல் தாளில் குழப்பம்

     பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்விற்கான, ஆங்கிலம் முதல் தாளில் இரண்டு கேள்விகள் இடம் பெறாததால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.     பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு, தற்போது நடந்து வருகிறது. நேற்று நடந்த, ஆங்கிலம் முதல் தாள் தேர்வில், 42 மற்றும் 45 எண்களுக்கான
கேள்விகள் இடம் பெறவில்லை; பாடலின் இரண்டு வரிகள் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தன. அதற்கான கேள்வி இல்லாததால், மாணவர்கள் குழப்பமடைந்தனர். அந்த பிரிவில், ஐந்து கேள்விகளுக்கு, ஐந்து மதிப்பெண் என, குறிப்பிடப் பட்டிருந்தது.

ஒரு சில பள்ளிகளில், தேர்வு கண்காணிப்பாளர்களாக இருந்த ஆசிரியர்கள், இந்த தவறை கண்டுபிடித்து, அதற்கான கேள்வியை எழுதிக் கொள்ளுமாறு மாணவர்களிடம் தெரிவித்தனர். இறுதித் தேர்வில், இதுபோன்று கேள்விகள் இடம்பெறாமல் இருந்தால், கண்காணிப்பாளர் எந்த பதிலையும் தெரிவிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு, கல்வித் துறையால் விதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் எஸ்.எம்.பி., பள்ளி மாணவன் பிரின்ஸ்ராஜ் கூறுகையில், "கேள்வி இடம் பெறாததால், அதை விட்டு விடலாம் என்று நினைத்தேன். இருந்தாலும், ஆசிரியரிடம் சந்தேகம் கேட்டேன். சரியான கேள்வியை அவர் தெரிவித்ததால், அதற்கான விடையை எழுதினேன்,&'&' என்றார்.

திண்டுக்கல் எஸ்.எம்.பி., பள்ளி ஆங்கில ஆசிரியை விஜயலட்சுமி கூறியதாவது: நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு, இது போன்ற சூழ்நிலையில் என்ன கேள்வி கேட்கப்பட்டிருக்கும் என்பதை உணர்ந்து, அவர்களாகவே எழுதிக் கொள்வர். பிற மாணவர்கள் அதற்கான விடை தெரிந்தும், கேள்வி கேட்கப்படாததால் அதை எழுத வேண்டாம் என்று நினைத்தால், அவர்களுக்குத் தான் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் கூறுகையில், "கேள்விகள் இடம்பெறவில்லை என்ற தகவல், என் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், விடை எழுதியிருக்கும் மாணவர்களுக்கு, அது தவறாக இருந்தாலும், முழு மதிப்பெண் வழங்கப்படும். இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை,&'&' என்றார்.

Animated Flower Yellowஉயர்கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகிறது

        உயர்கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்குவது தொடர்பான புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
      திட்டமிட்டபடி பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்படாத நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முடிந்து விட்டது. நிறைவேற்றப்படாத மசோதாக்களில், "உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய அங்கீகார ஒழுங்காற்று ஆணைய மசோதா (2010)' வும் ஒன்று.

          கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி திட்டங்கள் அனைத்தும் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. இத்தகைய அங்கீகாரம் வழங்குவதற்காக புதிய அமைப்பு நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

         இந்த மசோதா நிறைவேறுவது தாமதமாகி வரும் நிலையில், இதுதொடர்பான புதிய விதிமுறைகள் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் எம்.எம். பல்லம் ராஜு நேற்றுவெள்ளிக்கிழமை தெரிவித்தார். பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) மற்றும் ஏஐசிடிஇ ஆகியவை இணைந்து இந்த விதிமுறைகளை வகுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
Animated Flower Yellowகுரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

      தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)  நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க டிச.,31ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
     வங்கி அல்லது தபால் வழியாக கட்டணம் செலுத்துபவர்கள் ஜனவரி 3ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது. இதற்கு முன் இணையதளத்தில் விண்ணப்பிக்க 24, கட்டணம் செலுத்த 27ம் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் ஏராளமாக வந்து குவிந்த வண்ணம் உள்ளதால் விண்ணப்பதாரர்களின் நலன் கருதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment