பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர 
சிறப்பு ஆசிரியர்கள் பேரணி
 
 
            பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி' பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் திருச்சியில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர்.தமிழ்நாடு பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு பேரணி நேற்று திருச்சியில் நடந்தது.பேரணிக்கு மாநில பொதுச் செயலாளர் சேத்துராஜா தலைமை வகித்தார். 
 
                  சிறப்பு அழைப்பாளராக கடலூர் பகுதி தலைவர் செந்தில்குமார் பங்கேற்று பேசினார்.கால முறை ஊதியம் வழங்க வேண்டும். அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியமர்த்தப்பட்ட 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை, முழு நேர பணியாளராக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.கவுன்சிலிங் மூலம் பணி இடமாற்றம் அளிக்க வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாற்றம் செய்யாமல், மாவட்டத்திற்குள்ளேயே இடமாற்றம் அளிக்க வேண்டும். கோடை விடுமுறை காலத்திற்கு ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த பேரணி, திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் துவங்கி, கலெக்டர் அலுவலகம் சென்றடைந்தது.அங்கு கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டரிம் அளித்தனர். பேரணியில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். சங்க தலைவர் குமரேசன் நன்றி கூறினார்.  
இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பணி மூப்பு வெளியீடு 
  
 
 
               இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான பணிமூப்பு பட்டியல் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. 
 
          17.12.2011 வரை நியமனம் பெற்ற இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர்கள் இந்த பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் ஆவர். தமிழ்பாடத்தில் 4,382 பேர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள். 17.12.2011ஆம் தேதி தகுதி நாளாக கொள்ளப்படும்.  
 
             கணித பாடத்தில் 158 பேர் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் தகுதி நாள் 12.7.2011 ஆகும். வரலாறு பாடப்பிரிவில் 346 பேரும், அறிவியல் பாடத்தில் 63 பேரும், ஆங்கில பாடத்தில் 93 பேரும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியுடையவர்கள் ஆவர். தகுதி நாள்: வரலாறு & 19.12.2011, அறிவியல் & 7.12.2010, ஆங்கிலம் & 12.1.2011. இந்த பதவி உயர்வுகள் வரும் ஜூன் மாதத்தில் வழங்கப்பட உள்ளது. பதவி உயர்வுக்கான பட்டியல் விவரங்கள் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. பெயர் விடுபட்டுள்ள ஆசிரியர்கள், தலைமையாசிரியரின் பரிந்துரையை பெற்று முதன்மை கல்வி அலுவலரை அணுகலாம். இத்தகவலை தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் இசக்கியப்பன் தெரிவித்துள்ளார். 
 
 
 
 |  
ACKNOWLEDGEMENT FORM FOR RECEIVING +2 TML 
 |  
நாசா அறிவியல் போட்டி: இந்திய மாணவர்கள் சாதனை 
  
             அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசா சார்பில் நடத்தப்பட்ட, "கிரேட் மூன்பக்கி ரேஸ்" எனப்படும், அறிவியல் போட்டிகளில், இரு பிரிவுகளில் பங்கேற்ற இந்திய மாணவர்கள், முதல் பரிசை வென்றுள்ளனர். அத்துடன், இந்திய மாணவர் வடிவமைத்த வாகனத்திற்கு, சிறப்பு பரிசும் கிடைத்துள்ளது. 
  
 
           "கிரேட் மூன்பக்கி ரேஸ்" என்ற அறிவியல் போட்டி, ஒவ்வொரு ஆண்டும், நாசாவால் நடத்தப்படுகிறது. இதில், உலகின் பல நாடுகளை சேர்ந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனர்.
 
  
           இந்தாண்டு, கடந்த மாதம், 25 முதல், 28ம் தேதி வரை நடைபெற்ற போட்டிகளில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, "அக்யூரிட் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்டு டெக்னாலஜி"யை சேர்ந்த மாணவர்கள், பங்கேற்று முதலிடம் பிடித்தனர். 
  
              மகாராஷ்டிராவிலுள்ள உள்ள, படேல் ஸ்கூல் ஆப் டெக்னாலஜி மேனேஜ்மென்ட்டை சேர்ந்த மாணவர்கள், நிலவிலிருந்து அனுப்பப்படும் தகவல்களை சேகரிக்கும் முறையில், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதில், முதலிடம் பிடித்தனர். இந்த இரு குழுவினருக்கும் நாசாவின் சார்பில், பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 
  
               அதுமட்டுமின்றி, போட்டியின் முக்கிய அம்சமாக, நிலவில் பயணிக்க கூடிய வகையில், எடை குறைந்த நவீன வாகனத்தை வடிவமைத்ததற்காக, இந்திய குழுவிற்கு தலைமை தாங்கிய, இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த, சாகேப் சூத் சானுவுக்கு, சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. 
  
           உலக அளவில் தயாரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களிலும், இதுவே மிகவும் எடை குறைந்ததாகவும், நவீன முறையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், நாசா விஞ்ஞானிகள் பாராட்டு தெரிவித்தனர். இவர் தயாரித்த வாகனம், எட்டு அடி நீளமும், மிகக் குறைந்த எடையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. 
  
               இதை மடக்கி, ஒரு சிறிய பெட்டியாக மாற்றும் வகையிலும் இருந்தது. நான்கு சக்கரங்களை உடைய இதில், இரண்டு பேர் பயணிக்கலாம். சிறு வயது முதலே, பொம்மைகளை பிரித்து மீண்டும் சரி செய்யும் பழக்கமுடைய சாகேப், தற்போது உலக அளவில் சாதனை படைத்ததில், மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக 
தெரிவித்துள்ளார் 
 
 
 |  
ஓவிய கலையில் விருப்பமா? காத்திருக்கிறது அரசு கவின் கலை கல்லூரி 
  
              நன்றாக ஓவியம் வரையும் திறன் உடைவர்கள் தங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள, சென்னை, அரசு கவின் கலை கல்லூரியில் பட்ட படிப்புகள் காத்திருக்கின்றன. 
  
 
             களிமண்ணில் காவியங்களை படைப்பேன், பென்சில் நுனியில், உலகை திரும்பி பார்க்க வைப்பேன், சோற்றில் கூட படைப்புகளை உருவாக்குவேன் என, படைப்பாற்றலை பெற்ற மாணவர்களா நீங்கள்?உங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ள, சென்னை அரசு கவின் கலை கல்லூரி, இளங்கலை, முதுகலை பட்ட படிப்புகளை வழங்குகிறது.
 
  
             இங்கு பட்ட படிப்புகளை முடிக்கும் மாணவர்களுக்கு, பத்திரிகை, விளம்பரம், சினிமா துறைகளில் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள், நுழைவு தேர்வு மூலம், இந்த கல்லூரியில் சேர்க்கப்படுகின்றனர். 
  
                  இந்த கல்லூரியில், நான்காண்டு இளங்கலை பட்ட படிப்பில், சிற்ப கலை, வண்ண கலை, பதிப்போவிய கலை, காட்சிவழி தகவல் தொடர்பு, சுடுமண் சிற்ப கலை, துகிலியல் கலை உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. 
  
                அரசு கவின் கலை கல்லூரி, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, பெரியமேடு, சென்னை - 3 என்ற முகவரியிலும், 044-2561 0878 என்ற எண்களை தொடர்பு கொண்டு, தகவல்களை பெறலாம் 
 
 
 |  
மே 24ல் சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு 
  
             சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைநிலை கல்வி இளங்கலை தேர்வுகள், இம்மாதம், 24ம் தேதி துவங்குகிறது. 
  
 
         இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பல்கலைக்கழக தொலைநிலை கல்வியில் வழங்கப்படும், பி.ஏ., - பி.காம்., உள்ளிட்ட இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள், இம்மாதம், 24ம் தேதி துவங்கி, ஜூன் 6ம் தேதி வரை நடக்கிறது.
 
  
           தேர்வு அட்டவணை, தேர்வு மையம் குறித்த தகவல்கள், தபால் மூலம் மாணவர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள்,  http://www.ideunom.ac.in என்ற பல்கலைக்கழக இணைய தளத்திலிருந்து, ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாதிரி வினாத்தாள், தேர்வு மையம் உள்ளிட்ட தகவல்களையும், பல்கலைக்கழக இணைய தளத்திலிருந்து பெறலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது  
 
 
 |  
அடுத்த கல்வியாண்டு புத்தகங்கள்: பள்ளி வாரியாக அனுப்பும் பணி தீவிரம் 
  
           ஈரோடு மாவட்டத்தில் அடுத்த கல்வியாண்டில் கல்வி பயிலும், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 வகுப்பினருக்கு பள்ளி வாரியாக இலவச புத்தங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது. 
  
 
              ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இரு கல்வி மாவட்டத்திலும், 149 அரசு பள்ளிகள், ஒன்பது நகரவை, 22 நிதியுதவி, எட்டு பகுதி நிதியுதவி, 34 சுயநதி, நான்கு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, சமூக நலத்துறை பள்ளி ஒன்றும், இரு மாதிரி பள்ளிகள், ஒரு ரயில்வே மிக்ஸ்டு பள்ளி, 140 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம், 370 பள்ளிகள் உள்ளன.
 
  
               கடந்த கல்வியாண்டில் பயின்ற, ஒன்று முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை அனைத்து வகுப்பினருக்கும், முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து, அனைவரும் கோடை விடுமுறையில் உள்ளனர். அனைத்து வகுப்பினருக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடும் பணியில் கல்வித்துறை தீவிரமாக உள்ளது. 
  
               இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான புத்தகங்களை, மாவட்டம் வாரியாக பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது. அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் இலவச புத்தகங்கள், தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலமாக, தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 
அடுத்த கல்வியாண்டில் கல்வி பயிலும், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 வகுப்பினருக்கான புத்தகம், பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள இரு கல்வி மாவட்டத்துக்கான புத்தகங்களும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
  
               எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்புக்கான தமிழ் புத்தகங்கள், பத்தாயிரத்து, 500 புத்தகங்களும், ஆங்கில புத்தகங்கள், 27 ஆயிரத்து, 300 புத்தகங்கள், கணிதம் மற்றும் அறிவியல் பாடத்துக்கு தலா, 25 ஆயிரத்து, 100 புத்தகங்களும், சமூக அறிவியல், 25 ஆயிரத்து, 400 புத்தங்களும் வரப் பெற்றுள்ளன. 
  
               ஆங்கில மீடியத்தில் ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தலா, 1,100 புத்தங்கள் வரப்பெற்றுள்ளது. ப்ளஸ் 2 வகுப்புக்கு, 24 ஆயிரத்து, 800 தமிழ் புத்தகமும், 12 ஆயிரத்து, 500 கணித புத்தகமும், 12 ஆயிரத்து, 700 இயற்பியல் புத்தகமும், 6,900 பயோ பாட்டனி புத்தகமும், 6,900 இந்திய பொருளாதாரம் புத்தகமும், 700 தாவரவியல் புத்தகமும், 13 ஆயிரத்து, 200 வணிகவியலில் புத்தகமும், 13 ஆயிரத்து 100 கணக்குப்பதிவியல் புத்தகமும், 1,200 பயோ மேக்ஸ் புத்தகமும், 13 ஆயிரத்து 200 கம்ப்யூட்டர் சைன்ஸ் புத்தகமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
  
              ப்ளஸ் 2 ஆங்கில மீடியத்தில், மொழிப்பாடம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்), 24 ஆயிரத்து 800 புத்தகமும், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்கள் தலா 1,100 புத்தகங்களும், 700 பயோ ஜூவாலஜி புத்தகமும், தலா, 1200 இந்திய பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதிவியல் புத்தகங்களும், 1,300 கம்ப்யூட்டர் சைன்ஸ் புத்தகமும் வரப்பெற்றுள்ளது. 
 
 
 |  
 
மெட்ரிக் பள்ளிகளில் ஏழை குழந்தை 
சேர்க்கை: விண்ணப்பிக்க நாளை கெடு
 
 
 
               தனியார் மெட்ரிக் பள்ளிகளில் அரசு இட ஓதுக்கீட்டில் சேர, நாளைக்குள் (9ம் தேதி) விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
          இதுகுறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வக்குமார், மெட்ரிக்., பள்ளிகள் ஆய்வாளர் மதிவாணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
             அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், சுயநிதி மெட்ரிக்., பள்ளிகளில், நுழைவு நிலை கல்வியில் 25 சதவீதம் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்.
             இதன் அடிப்படையில், 25 சதவீத இடஒதுக்கீட்டிற்காகன மாணவர் சேர்க்கைக்கு, திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக்., பள்ளிகளில் கடந்த, 2ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வரும், 9ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
               விண்ணப்பித்தவர்களின் பட்டியல், 11ம் தேதி வெளியிடப்படும். இதில் தகுதியுடைய மாணவர்கள், 14ம் தேதி பெற்றோர், மக்கள் மத்தியில் ரேண்டம் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர் தேர்வு பட்டியல் அன்று மதியம், 2 மணிக்கு, பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும். இந்த வாய்ப்பை தகுதியுடையவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
               நேற்று முன் தினம் கே.கே.நகர் ஆல்பா மெட்ரிக்., பள்ளியில், 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பம் வழங்க மறுப்பதாக, ஏர்போர்ட் காமராஜர் நகரைச் சேர்ந்த சுதா என்பவர் ஆட்சியர் ஜெயஸ்ரீயிடம் புகார் மனு அளித்தார்.
                     இதில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டதால், அந்த பள்ளியில் உடனடியாக சுதாவுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டது. இதன் எதிரொலியாக தற்போது, இட ஒதுக்கீடு குறித்து, திருச்சி மாவட்ட கல்வி அதிகாரிகள் முறையாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
  
  
 
 
 |  
 
 
 
 
 
 | 
No comments:
Post a Comment