இலவச கல்வி உபகரணங்களை அரசே நேரடியாக பள்ளிக்கு லாரிகள் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் 
  
             விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 40 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் அங்கு கட்டட வசதிகள் இல்லாமல் உள்ளது என தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்தனர். 
 
 
          அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, விருத்தாசலம், திட்டக்குடி தாலுகாவிலுள்ள தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விருத்தாசலம் ஆண்கள் பள்ளியில் நடந்தது. 
  
           ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார் தலைமை தாங்கி பேசுகையில், "அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வருகைப் பதிவு செய்து விட்டு, தங்கள் சொந்த வேலைகளை கவனிக்கின்றனர். எனது தலைமையில் 4 தலைமை ஆசிரியர்கள், 2 ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 
             தாமதமாக பள்ளிக்கு வருவதும், பணியை ஒழுங்காக செய்யாத ஆசிரியர்கள் குறித்த விவரங்களை தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். இனி தவறுகள் நேர்ந்தால் கண்காணிப்புக்குழு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும்" என்றார். 
              அதனைத் தொடர்ந்து தலைமையாசிரியர்கள் பேசும் போது, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் நடுநிலைப் பள்ளியாக இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட 40 பள்ளிகளில், போதிய கட்டட வசதி இல்லை. 
             அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பரவலாக அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. நியாய விலைக்கடை மற்றும் டாஸ்மாக்கிற்கு நேரடியாக லாரிகள் மூலம் பொருட்களை அனுப்புவது போன்று இலவச கல்வி உபகரணங்களையும் அரசே நேரடியாக பள்ளிக்கு லாரிகள் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
 
 
 | 
"ஆசிரியர்கள் மொழி, பண்பாட்டையும் கற்றுத்தர வேண்டும்" 
  
            'மாணவர்களுக்கு பாடத்தோடு, மொழி, பண்பாட்டையும் ஆசிரியர்கள் கற்று தர வேண்டும்" என எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பேசினார். 
 
 
         "தினமலர்" சங்கமம் இக்கரையும், அக்கரை(ற)யும் என்ற தலைப்பில் ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளி மாணவர்களின் விவாத மேடை நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. கல்வி புரட்சி நிகழ்ச்சியில், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற மதியழகன் பேசியதாவது: 
           தமிழகத்தில் மாணவர்களுக்காக ஊடகங்கள், நாளிதழ்கள் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. ஆனால், அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் வித்திட்டது, தினமலர் நாளிதழ் தான். தமிழகத்தில் அமைதியான முறையில் கல்விப் புரட்சியை, தினமலர் நடத்தி கொண்டிருக்கிறது. 
          மாணவர்களிடம் மன அழுத்தம் காணப்படுகிறது. கல்வியாளர்கள் ஆராய்ச்சி செய்து, சமச்சீர் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்த திட்டத்திற்கு ஒரு பக்கம் வரவேற்பும், மற்றொரு பக்கம் எதிர்ப்பும் இருக்கிறது. 
               மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் படிக்க வேண்டும் என்பதற்காக, &'சங்கமம்&' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இவ்வாறு, அவர் பேசினார். 
விவாத மேடையில், ஆசிரியர்கள் சார்பில், தாயுமானவன், ஆனந்தன், கலைச்செல்வி, குருபிரபு, லட்சுமிபதி, லுாயிஸ், பாலகிருஷ்ணன், பெற்றோர் சார்பில், கோபால், அம்பிகா, குமரேசன், கீர்த்திவாசன், நாகராஜன், சண்முகசுந்தரம், மாணவர்கள் சார்பில், பாலாஜி, சுவாதி, சித்ரா, பவித்ரா, அர்ச்சனா, சண்முகசுந்தரம், சரணவன் உட்பட, 21 பேர் கலந்து கொண்டனர். 
மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கு என்ன காரணம்? குழந்தைகளுக்கு அடிப்படை சட்ட உரிமை வழங்கப்படுகிறதா? மாணவர்களுக்கு நவீன தொழில் நுட்ப சாதனங்களை வாங்கி கொடுப்பதாலும், கைச்செலவுக்கு பணம் வழங்குவதாலும் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுமா? 
மனப்பாடம் செய்வதால், மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி பாதிக்குமா? உள்ளிட்ட, பல்வேறு கேள்விக் கணைகள், விவாத மேடையில் தொடுக்கப்பட்டன. அதற்கு, ஆசிரியர்களும், பெற்றோரும், மாணவர்களும் உடனுக்குடன் தங்கள் பதில்களை பதிவு செய்து, விவாத மேடையை, பயனுள்ள கருத்துகளை வெளிப்படுத்தும் களமாக மாற்றினர். 
கெடுக்கும் சமூக வலைதளங்கள்: விவாத மேடையின் நடுவர், மனுஷ்யபுத்திரன் பேசியதாவது: ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து விட்டது. பெற்றோர், தங்கள் குழந்தைகளை பணம் சம்பாதிக்கும் இயந்திரமாகவும், பந்தயத்தில் ஓடும் குதிரைகளாகவும் கருதுகின்றனர். 
"வீடியோ கேம்ஸ்" போன்ற கேளிக்கைகளும், சமூக வலைதளங்களும், குழந்தைகளை பாதிக்கின்றன. மாணவர்கள் மனப்பாடம் செய்து படிப்பதால், மட்டும் ஆளுமை வளர்ச்சியை அடைந்து விட முடியாது. விளையாட்டு துறையில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். 
பாடங்களை சரியாக நடத்தாத, திறமை இல்லாத ஆசிரியர்களை தான் மாணவர்கள் வெறுப்பர். மாணவர்களிடம் ஆசிரியர்கள் பாகுபாடு காட்டக் கூடாது. மாணவர்களை அடிக்க கூடாது. மாணவர்களுக்கு பாடத்தை கற்பிப்பதோடு, மொழி, பண்பாட்டையும் கற்பிக்க வேண்டும். மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெற்றோர், ஆசிரியர்கள், சமூகம் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். 
உளவியல் நிபுணர் கிர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி பேசுகையில் கூறியதாவது: ஸ்கூல் என்ற வார்த்தைக்கு, வாழ்க்கையை முழுமையாக வரைமுறைப்படுத்த, சமுதாயம் ஏற்படுத்தி தரும் கூடம் என்ற பொருள் உண்டு. 
ஆசிரியர்கள் சரியாக பாடம் கற்று தரவில்லை என்ற குறைகளை மாணவர்கள் சொல்லக் கூடாது. கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மாணவர்களுக்குள் உருவாக வேண்டும். பிறரிடம் அன்பு, பாசத்தை வெளிப்படுத்தி மாணவர்கள் பழக வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். 
விவாத மேடையில் பங்கேற்று, வெளியே வந்த மாணவ, மாணவியர் தெரிவித்த கருத்துக்கள்: 
பவானி, கிழக்கு தாம்பரம், அரசு மகளிர் மேல்நிலை பள்ளி: தினமலர் நாளிதழ் நடத்திய சங்கமம் நிகழ்ச்சி மாணவ, மாணவியருக்கு பயனுள்ளதாக இருந்தது. ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துக்கள், எங்கள் மனதில் பசுமரத்தில் அடித்த ஆணி போல் பதிந்து விட்டது. அவர்களின் அறிவுரையை ஏற்று, நாங்கள் பாடங்களை கவனமாக படிப்போம். 
ஆதித்தியா, ஆசான் மெமோரியல் பள்ளி: இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன். எனக்கு தெரியாத பல முக்கிய தகவல்களை தெரிந்து கொண்டேன். ஆசிரியர்களுக்கு என்னென்ன கஷ்டங்கள் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். பெற்றோர் தரும் கைச்செலவுக்கான பணத்தை வீணாக செலவு செயமாட்டேன். 
விக்னேஷ், இந்து மேல்நிலை பள்ளி: சங்கமம் நிகழ்ச்சி நல்ல பயனுள்ளதாக அமைந்தது. நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். பெற்றோரும், ஆசிரியர்களும் பாராட்டும் வகையில், நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது. 
மனோஜ் குமார், மோதிலால் பள்ளி: ஆசிரியர்களிடம் மாணவர்கள் நட்பாக பழக வேண்டும். எந்த ஒரு நல்ல செயலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 
தீபலட்சுமி, எஸ்.எம்.ஜே.வி., பள்ளி: யதார்த்தமாகவும், வெளிப்படையாகவும் நடந்த கலந்துரையாடல் கூட்டம் மாணவ, மாணவியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உடற்பயிற்சி அவசியம் என்பதை புரிந்து கொண்டேன். மன அழுத்தம் குறைந்ததாக உணருகிறேன். 
 
  
 | 
சமையலர்களுக்கு புதிய பயிற்சி: ஆயிரக்கணக்கான விடுதிகளுக்கு விடிவு 
  
           தமிழகத்தில் உள்ள, அனைத்து விடுதி சமையலர்களுக்கும், அந்தந்த நலத்துறை நிர்வாகம், புதிய பயிற்சி அளிக்கத் திட்டமிட்டு உள்ளது. விரைவில், அதற்கான அறிவிப்பு வெளியாகும் என, கூறப்பட்டது. 
 
 
         ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 1,300 விடுதிகள்; 42 பழங்குடியினர் நல விடுதிகள்; 301 உண்டு உறைவிட பள்ளிகள்; பிற்படுத்தப்பட்டோருக்காக, 1,294 விடுதிகள் உள்ளன. இந்த விடுகளில், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தங்கி உள்ளனர். 
          இவர்களுக்கு மூன்று வேளை உணவும், சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது. மேலும், குடியரசு தினம், சுதந்திர தினம், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட சிறப்பு நாட்களில், உணவில், இனிப்பு வகைகளும் அளிக்கப்படுகிறது. 
               இந்நிலையில், பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட, 23 குழந்தைகள் இறந்தனர்; அதே போல், தமிழகத்தில் விடுதியில் சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள, விடுதி சமையலர்களுக்கு, புதிய பயிற்சி அளிக்க, நலத்துறைகள் திட்டமிட்டு உள்ளன. 
             இப்பயிற்சியில், சுகாதாரமான முறையில் உணவைச் சமைப்பது, அவற்றை முறையாகப் பாதுகாப்பது, ஆய்வுக்கு உட்படுத்துவது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், மாணவர்களிடம் எவ்வாறு மனிதநேயத்துடன் பழக வேண்டும் என்பது குறித்து, பயிற்சி அளிக்கப்படும் என, தெரிகிறது. 
              இப்பயிற்சிகள் உரிய முறையில் அளிக்கப்பட்டு, ஓரளவு அமல்படுத்தப்பட்டால் கூட, மாணவர்களுக்குச் சுகாதார சீர்கேடு பாதிப்புக் குறையும் வாய்ப்பு ஏற்படும் 
 
  
 | 
இந்திய வம்சாவளி நிபுணர்களுக்கு அமெரிக்க நிறுவன விருது 
  
              கணிதம் மற்றும் அறிவியலில் ஆய்வு மேற்கொண்ட, இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பேருக்கு, அமெரிக்க நிறுவனத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. 
 
          அமெரிக்க நிறுவனமான, "சிமென்ஸ்" ஆண்டுதோறும், கணிதம் மற்றும் அறிவியல் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருதும், ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்து வருகிறது. 
            இவ்வகையில், இந்த ஆண்டு, நான்கு இந்தியர்கள் உட்பட, 13 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. கணிதத் துறையில் ஆய்வு மேற்கொண்டதற்காக, ஸ்டேன்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர், கண்ணன் சவுந்தர்ராஜனுக்கும், பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசிரியர், ராஜீவ் அலூருக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. 
             இது தவிர, கணினி அறிவியலில் கணிதத்தின் பயன்பாடு பற்றிய பாடப்பிரிவில் வல்லவரான, சலீல்வதான், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றுகிறார். கணினி அறிவியில் இவர் மேற்கொண்ட சிறந்த ஆய்வை பாராட்டி, இவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 
             கான்பூர் ஐ.ஐ.டி.,யில் பட்டம் பெற்று, ஏல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள செந்தில், இயற்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இயற்பியலில் இவருடைய ஆய்வை பாராட்டி, சிமென்ஸ் நிறுவனம் இவருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது. 
                    இவர்கள் அனைவருக்கும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, தலா, 60 லட்சம் ரூபாய், "ஸ்காலர்ஷிப்" வடிவில் வழங்கப்படும். 
 
  
  
 | 
"இருபதாம் நூற்றாண்டு பாடங்களால் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாது" 
  
  
         இருபதாம் நூற்றாண்டு பாடங்களால், மாணவர்கள் தற்போதுள்ள பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாது, என பல்கலை பதிவாளர் மாணிக்கவாசகம் பேசினார். 
 
         காரைக்குடி அழகப்பா பல்கலை பாடத்திட்ட மேம்பாட்டு மையம் சார்பில், பாட திட்ட அமைப்பும், அதன் வளர்ச்சியும் குறித்த கருத்தரங்கம் பதிவாளர் மாணிக்கவாசகம் தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது: 
          "தற்போதுள்ள உலகளாவிய போட்டியை, எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களின் தேவைக்கேற்ப புதுமையான பாடத்திட்டங்களையும், நெகிழ்வான பாடத்திட்டங்களையும், வழங்குவதற்கு கல்வி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 
           20ம் நூற்றாண்டு பாடங்களை வைத்து, மாணவர்கள் தற்போது உள்ள பிரச்னைகளை எதிர் கொள்ள முடியாது. எனவே இளங்கலை பாடத்திட்டத்தினை, உலக தர நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்கு மாணவர்களிடையே, விஞ்ஞான திறனையும், மேலாண்மை திறனையும் ஒருங்கிணைக்க வேண்டும். 
                 இளங்கலை, முதுகலை பாடங்கள் செயல்முறை விளக்கத்தோடு இணைந்த கல்வியாக இருக்க வேண்டும். மாணவர்கள் நவீன கட்டமைப்பு, தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தும் வகையில், பாடத்திட்டங்கள் அமைய வேண்டும்," என்றார். 
 
  
 | 
முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம்: சத்துணவு மையங்களுக்கு உத்தரவு 
  
          முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்க வேண்டும் என நீலகிரி கலெக்டர் உத்தரவிட்டார். 
 
        ஊட்டி அண்ணா கலையரங்கில் எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தின் கீழ் நடந்த ஒரு நாள் பயிற்சியில் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் பேசியதாவது: 
           "சத்துணவு வழங்கும் பணியாளர்கள் சத்துணவு மையங்கள், சுற்றுப்புற பகுதிகளை சுத்தமாக வைத்து வேண்டும். மதிய உணவு வழங்குவதற்கு முன்பு சமையல் பாத்திரங்கள் சுத்தமாக பராமரித்திருக்க வேண்டும். தரமான காய்கறிகள் கீரை வகைகளை பயன்படுத்தி உணவை தரமான முறையில் தயாரிக்க வேண்டும். 
           மதிய உணவை குழந்தைகளுக்கு வழங்குவதற்கு முன்பு பள்ளி தலைமையாசிரியர் உண்ட அரைமணி நேரத்திற்கு பிறகே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்கி பின்பே பள்ளியை விட்டு செல்ல வேண்டும். 
              குழந்தைகளுக்கு எக்காரணத்தை கொண்டு பாதி முட்டை வழங்க கூடாது. முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப் பழம் வழங்க வேண்டும். நன்கு காய்ச்சிய குடிநீர் வழங்க வேண்டும். இம்முறைப்படி அனைத்து பணியாளர்களும் குழந்தைகளுக்கு தவறாமல் வழங்க வேண்டும்." இவ்வாறு கலெக்டர் பேசினார். 
 
  
 | 
காடுகள் பரப்பளவு குறைந்து விட்டது: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வருத்தம் 
  
  
         "தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு படிப்படியாக குறைந்து வருவதால், பருவ மழை தவறி வருகிறது," என, பள்ளி விழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார். 
 
          கரூர் பி.ஏ., வித்யாபவன் மேல்நிலைப்பள்ளியில், 13வது ஆண்டு அனைத்து மன்ற துவக்க விழா நடந்தது. விழாவில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது: 
          "இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காஃபி மற்றும் டீ ஆகியவற்றை பயிரிட காடுகள் அழிக்கப்பட்டது. இந்தியாவில் வளர்ந்திருந்த தரம் நிறைந்த மரங்களை எல்லாம், ஆங்கிலேயர்கள் வெட்டி எடுத்துச் சென்று விட்டனர். 
           மேற்கு தொடர்ச்சி மலை, கடல் மட்டத்தில் இருந்து 3,000 அடி உயரத்தில் இருந்தது. அதிலிருந்து 300, 400 அடி உயரத்தில் மரங்கள் இருந்தது. தற்போது அந்த மரங்கள் எல்லாம் காணவில்லை. கடந்த 1900ம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 350 நாட்களுக்கு மேல் மழை பெய்தது. 1950ம் ஆண்டுகளில் 200 நாட்கள் மழை பெய்தது. தற்போது ஆண்டுக்கு 50 நாட்களில் மழை பெய்வது இல்லை. இதற்கு காரணம் மரங்களை வெட்டியதுதான். 
           கடந்த 1950வது ஆண்டுகளில் 33 சதவீதமாக இருந்த காடுகளின் பரப்பளவு தற்போது படிப்படியாக குறைந்து எட்டு சதவீதமாக உள்ளது. இதனால், பருவமழை தவறி விட்டது. பருவமழையை நம்பி, விவசாயிகள் சாகுபடி பணிகளை துவக்கினர். ஆனால், பருவமழை தவறி விட்டதால், விவசாயிகளால், சாகுபடி பணிகளை கணிக்க முடியவில்லை. புயல் மழையை நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது." இவ்வாறு அவர் பேசினார். 
 
  
 | 
பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை 47,376 
  
          மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், பள்ளி செல்லா குழந்தைகள், 47,376 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, சிறப்பு மையங்களிலும், வயதுக்கேற்ற பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டு, கல்வி அளிக்கப்படுகிறது. 
 
 
             அனைவருக்கும் கல்வி இயக்க, மாநில இயக்குனரக உத்தரவை அடுத்து, மாநிலம் முழுவதும் ஆண்டு தோறும், 6 - 14 வயது வரை உள்ள, பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறாளிகள் கணக்கெடுக்கும் பணி நடத்தப்படுகிறது. 
        அந்தந்த யூனியன் பகுதியில் உள்ள, வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், தலைமையாசிரியர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவர். நடப்பு ஆண்டுக்கான கணக்கெடுப்பு, கடந்த ஏப்., 10ம் தேதி, மாநிலம் முழுவதும் துவங்கியது. 
             கணக்கெடுப்பு பணியின் போது சேகரித்த விவரங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க மாநில இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும், 6 - 10 வயது வரை, 18,216 பேரும், 11 - 14 வரை, 29,160 பேரும் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 
         அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டத்தில், 4,587 பேரும், குறைந்த பட்சமாக, நீலகிரி மாவட்டத்தில், 462 பேரும் பள்ளி செல்லாமல் உள்ளனர். மேலும், தேனி மாவட்டம், 545 பேர், கன்னியாகுமாரி, 551 பேர், புதுக்கோட்டை மாவட்டம், 572 பேர் என, குறைந்த அளவில் பள்ளி செல்லா குழந்தைகள் உள்ளது, கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது. 
          கண்டுபிடிக்கப்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளுக்கு, சிறப்பு மையங்களிலும், வயதுக்கேற்ற பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்படுகிறது. 
              தமிழகம் முழுவதும், ஐந்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள அரசு தொடக்கப் பள்ளி குறித்து கணக்கெடுப்பு நடத்த, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. 
         தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 836 அரசு தொடக்கப் பள்ளிகளில் நடந்த கணக்கெடுப்பில், பாலக்கோட்டை அடுத்த, அய்தாண்டஹள்ளி அரசு தொடக்கப் பள்ளியில், 3 மாணவர் மட்டும் படிப்பது தெரியவந்து உள்ளது. இங்கு, 3ம் வகுப்பு, 4ம் வகுப்பு, 5ம் வகுப்பில் தலா, 1 மாணவர் என, மொத்தம், 3 மாணவர்களே படித்து வருகின்றனர். 
             இப்பள்ளி குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கு தகவல் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக, கல்வித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர். 
              இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர் ஒருவர் கூறியது: பெற்றோர், தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதைப் பெருமையாகக் கருதுகின்றனர். இந்தக் கல்வியாண்டில் பெரும்பாலான அரசு பள்ளிகளிலும், ஆங்கில வழிக் கல்வி துவங்கப்பட்டாலும், பெரும்பாலானோர் தங்களது குழந்தைகளை, தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் சேர்பதைப் பெருமையாகக் கருதுகின்றனர். 
             அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் கூட, தங்களது குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் சேர்ப்பதன் விளைவாக இது போன்ற நிகழ்வு நடப்பதற்குக் காரணமாக உள்ளது. இதனால், அரசு பள்ளிகளில், 5க்கும் குறைவாக உள்ள படிக்கும் மாணவர்களால் அரசுக்குச் செலவு ஏற்படுவதை விட, அங்கு பணியாற்றும் ஆசிரியர், மாணவர்களுக்கு முழு ஈடுபாடு உடன் கல்வி கற்றுக் கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார். 
 
  
 
 | 
| 
 | 
பள்ளிகள் தரம் குறித்த ஆலோசனைக் கூட்டம் 
  
           2013-14ம் கல்வி ஆண்டு அரசு பொது தேர்வுகளில், அரசு பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்த, ஆலோசனை கூட்டம், சென்னையில், ஆக.,1, 2ம் தேதிகளில் நடை பெறுகிறது. இதில், அனைத்து மாவட்ட சி.இ.ஓ., கூடுதல் சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் பங்கேற்கின்றனர். 
 
      கல்வித்துறை செயலர் சபிதா தலைமையில், கல்வித்துறை இயக்குனர் தேவராஜன், இணை இயக்குனர்கள் இதில் பேசுகின்றனர். கூட்டத்தில், கடந்த ஆண்டு நடந்த அரசு பொதுதேர்வில், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகள் குறித்து விவாதப்படுகிறது. 
         பள்ளியின் தரம், அனைவருக்கும் கல்வி திட்ட கட்டுமான பணிகளால் ஒவ்வொரு அரசு பள்ளியிலும் கல்வித்தரம் உயர்ந்துள்ளதா, இல்லையா போன்றவை குறித்தும், சி.இ.ஓ.,க்களிடம் கருத்துக் கேட்டு, கல்வித்துறை செயலர் ஆலோசனை வழங்க உள்ளார். 
          தேர்ச்சி விகிதம் குறைவான பள்ளிகள் குறித்து சம்பந்தப்பட்ட சி.இ.ஓ.,க் களிடம், சரியான விளக்கம் கேட்கப்படும் என தெரிகிறது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் "பள்ளியின் தரம், வளர்ச்சி, அரசு நலத்திட்டங்கள் முறையாக சென்று சேர்ந்துள்ளதா என்பது குறித்து, சி.இ.ஓ.,க்களிடம் விபரம் கேட்கப்படும். " என்றார். 
 
  
  
 | 
அரசு பள்ளிகளில் பணியாற்றும் 652 ஆசிரியர்கள் பணி நீக்கம் 
  
           உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, போதிய கல்வித் தகுதி இல்லாததால், அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 
  
        தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தகுதி இல்லாத கணினி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.  
  
         அதன் பிறகும் அவர்கள் பணியில் தொடர்ந்ததால் சர்ச்சை நீடித்து வந்தது. இந்நிலையில், அவர்கள் அனைவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கணினி ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த காலி இடங்களை நிரப்புவது குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது 
 
 
 
  
  
 | 
6வது ஊதிய கமிஷன் 
  
           6வது ஊதிய கமிஷன் அரிவிக்கப்பட்டத்திலிருந்தே எவ்வாறு இடைநிலை ஆசிரியர்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர் என்பதை பார்ப்போம்.  
  
          நடுவன் அரசுக்கு பரிந்துரை செய்த ஊதியக் குழு கமிட்டி ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ துறையில் செவிலியர்களுக்கு மட்டும் சிறப்பு ஊதிய நிர்ணயங்கள் செய்தல் வேண்டும் ஏனெனில் இவை இரண்டும் சேவையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை என பரிந்துறை செய்தது.  
  
          எனவே மத்திய அரசு அன்றைய அடிப்படை ஊதியமான 4500 x பெருக்கு விகிதமான 1.86 ஆல் பெருக்க கிடைத்த தொகையான ரூ.8370ஐ அடிப்படை ஊதியமாக வைக்காமல் ரூ.9300 ஐ அடிப்படை ஆக வைத்து கிரேடு ஊதியமாக 4200 ஐ சேர்த்து ஒரு இடைநிலை ஆசிரியரின் அடிப்படை ஊதியம் ஆக ரூ13500 ஐ அறிவித்தது.  
  
          எள்முனையளவும் குறையாது மத்திய அரசின் பரிந்துறைகளை அறிவிப்போம் என அறிவித்த அன்றைய தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கியதே எள்முனையளவு தான் என்பது நாம் பெற்ற முதல் ஏமாற்றம். ஆம்.  
  
           அன்று இடைநிலை ஆசிரியருக்கு வழங்கப்பட்டது 5200 – 20200 + தர ஊதியம் 2800 ஆக அடிப்படை ஊதியம் ரூ 8000/-. ஆனால் அன்று இடைநிலை ஆசிரியர்கள் சாதாரண நிலையிலே பெற்று வந்த ஊதியம் ரூ4500 + ரூ2250 = ரூ 6750/- வளரூதியங்கள் இல்லாமல். பெற வேண்டியது ரூ.8370/-. இதில் எதிலும் நமக்கு வழங்காமல் ரூ8000/ மட்டும் நமக்கு வழங்கி, முதல் முறையாக இடைநிலை ஆசிரியர்கள் ஏற்கனவே பெற்று வந்த ஊதியத்தை விடவும் குறைவான ஊதியத்தை வழங்கிய முதல் ஊதியக்குழு எனும் பெருமையை தட்டிச் சென்றது.  
  
              பின்னர் ஆசிரிய சங்கங்களின் பொறுப்பாளர்கள் இந்த முரண்பாடுகளை சுட்டி காட்டி பேசிய பொழுது, மத்திய அரசு வழங்கிய 9300 எனும் முதல் நிலையை வழங்காமல், பெருக்கு விகிதத்தின் படி கிடைக்கப்பெற்ற ரூ 8370/ மட்டும் அடிப்படையாக அனுமதித்து, கிரேடு சம்பளத்தில் எவ்வித மாற்றத்தையும் அனுமதிக்கவில்லை.  
  
ஆக மத்திய அரசு அனுமதித்த ஊதியத்தில் முதல் நிலையில் 830ம், தர ஊதியத்தில் 1400 ஆக மொத்தம் ரூ2230 01.06.2006ல் காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன்பிறகு 01.06.2009க்கு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு அடிப்படை ஊதியம் 5200 + 2800 = ரூ 8000/- மட்டுமே நிர்ணயம் செய்து , நியமனத்தின் போது 01.06.2009க்கு முன், 01.06.09 க்கு பின் எனும் இரு வேறு நிலைகளை இடைநிலை ஆசிரியர் சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்டது. 
  
பின்னர் அனைத்து சங்கங்களும் இணைந்து மாநிலந் தழுவிய அளவில் நடத்திய போராட்டங்களுக்கு பிறகு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.500 சிறப்பு படியாக வழங்கப்பட்டது. பின்னர் இந்த இது 01.01.2011 முதல் ரூ 750/ ஆக தனிப்பட்ட ஊதியமாக அனுமதிக்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வு ஆணையானது பட்டதாரி / தொடக்கப்பள்ளி ஆசிரிராக பதவி உயர்வின் போது, 01.01.2011க்கு முன் பதவி உயர்வு பெற்றவர்கள், 01.01.2011க்கு பிறகு பதவி உயர்வு பெற்றவர்கள் எனும் இரு வேறு நிலையை உருவாக்கியுள்ளது. இந்த 750யும் பெறுவதில் தான் எத்தனை சிரமங்கள். ஒரு சில மாவட்டங்களில் அரசாணையின்படி அனுமதிக்கப்படும் நிகழ்வும், பல மாவட்டங்களில் முடியாது 750ஐ அனுமத்தித்தால் அதிக சம்பளம் கணக்கு வருகிறது என்று அங்கலாய்ப்பு வேற! ஏற்கனவே அரைகுறையாக அனுமதிக்கப்பட்டதில் பெறுவதற்குள் அடுத்த பதவிவுயர்வும், சம்பளக் கமிஷனும் வந்து விடும் போல் உள்ளது. 
  
அரசாணைகளை பொறுத்தமட்டில INTENTION OF THE READER IS THE DECISION OF THE G.O. HANG HIM, NOT LEAVE HIM என்ற ஒரே வாக்கியத்திற்கு அவனை தூக்கிலிடு விட்டு விடாதே!! 
  
அவனை தூக்கிலிடாதே விட்டுவிடு HANG HIM NOT, LEAVE HIM என முரண்பாடாக இருவேறு பொருள் கொள்வதுண்டு. அது போல் 
  
இந்த நிலையில் ஓரேயொரு கலங்கரை விளக்கமாக கண்ணுக்கு தெரிந்த மூவர் குழு அறிக்கையும் வெளிவந்து நமக்கு இழைக்கப்பட்ட அநீதியை நியாயப்படுத்தியுள்ளது கூட நமக்கு வேதனையை தரவில்லை. டிப்ளமோ படிப்புகளுக்கு தர ஊதியமாக ரூ.4200 அனுமதிக்கப்பட்டாலும், இடைநிலை ஆசிரியப்படிப்பிற்கான டிப்ளமோவிற்கு மட்டும் ரூ2800 என்பது வழங்கப்படும் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய ரணத்தை ஏற்படுத்தியுள்ளது. 
  
போராட்டம் இல்லாமல் யாராட்டமும் வென்றதில்லை! இதற்கு முன் நாம் பெற்ற சலுகைகளும் உரிமைகளும் நாம் போராடி பெற்றவையே! சுதந்திரம் கூட சும்மா கிடைக்கவில்லை. நினைத்து பார்த்து நமது இயக்கங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு வடிவம் கொடுப்போம்! தோள் கொடுப்போம்! பல பட்டங்களையும், டிப்ளமோ படிப்புகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஆசிரியப் படிப்பிற்கான அடிப்படை ஊதியத்தை வரப் போகும் சமுதாயத்துக்கு பெற்றுத் தருவோம். நன்றி : திரு. ரக் ஷித் 
 
 
 
 
 | 
 
No comments:
Post a Comment