Monday, January 21, 2013


>பணியாற்றிய கல்லூரியை மறக்காத ஜனாதிபதி பிரணாப்

"ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தான் அரசியலுக்கு வருவதற்கு முன், பணியாற்றிய கல்லூரியையும், அதில் படித்த மாணவர்களையும், இன்னும் மறக்கவில்லை" என, அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர். அரசியலில் நுழைவதற்கு முன், 1960ம் ஆண்டுகளில், மேற்குவங்கத்தின் 24-பர்கானா மாவட்டம், வித்யா நகர் கல்லூரியில், இந்திய அரசியல், இந்திய சட்டம் ஆகிய, பாடங்களுக்கான பேராசிரியாக பணியாற்றினார்.
இதன்பின், அரசியலுக்குள் நுழைந்து, படிப்படியாக வளர்ச்சி அடைந்து, தற்போது, நாட்டின் முதல் குடிமகனாகி விட்டார். இந்நிலையில், இந்த கல்லூரியின், பொன்விழா கொண்டாட்டங்கள் நேற்று நடந்தன. இந்த விழாவில், பங்கேற்ற பிரணாப் முகர்ஜி, கல்லூரியின், புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
விழாவுக்கு வந்திருந்த, கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், ஸ்வபன் ராய், சுதாகன்சு கரார் ஆகியோர் கூறியதாவது: நாங்கள், பிரணாப் முகர்ஜியிடம், பாடம் படித்தவர்கள். எங்களை, இப்போதும் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு, அவருக்கு, அபார ஞாபக சக்தி உள்ளது.
இந்த கல்லூரியிலிருந்து, விரைவிலேயே சென்று விட்டாலும், இந்த கல்லூரியையும், அதில் படித்த மாணவர்களையும், அவர் எப்போதும் மறந்தது இல்லை. அரசியலில், மிகப் பெரிய பதவிகளை வகித்தபோது கூட, முன்னாள் மாணவர்களான, எங்களுடன், அவர் தொடர்பில் இருந்தார்.
எங்களின் நிலை குறித்தும், கல்லூரியின் வளர்ச்சி குறித்தும், அவ்வப்போது கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தார். கல்லூரியில் பணியாற்றியபோது, எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுவார். இப்போதும் அப்படித் தான் இருக்கிறார்.
இது தான், அவரது வெற்றியின் அடையாளம். கல்லூரியின் வளர்ச்சிக்கு, பிரணாப்பின் பங்கு, மிக முக்கியமானது. சில மாணவர்கள் மட்டுமே படித்து வந்த, இந்த கல்லூரியில், தற்போது, ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இதற்கு, பிரணாப்பும் ஒரு காரணம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment