Saturday, January 5, 2013


சிக்கலான பிரச்சினைகளுக்கு அறிவியல் அணுகுமுறை: பிரதமர்

அணு ஆற்றல் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் ஆகியவைத் தொடர்பான சிக்கல்களுக்கு, ஆக்கப்பூர்வமான விவாதம் மற்றும் பகுப்பாய்வு மூலமே தீர்வுகாண வேண்டும். நம்பிக்கை மற்றும் பயத்தினால் அல்ல என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெறும் 100வது தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், இதை தெரிவித்தார். அவர் பேசியதாவது: வேற்று கிரகங்களுக்கான மனித ஆய்வுகள் உள்ளிட்ட மேற்கண்ட சிக்கல் வாய்ந்த அம்சங்கள், அறிவியல் ரீதியிலான புரிந்துணர்வின் மூலமே அணுகப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமின்றி, வீடுகள், பணிபுரியும் இடங்கள் மற்றும் சமூகம் ஆகிய அனைத்திலும், மக்களிடம், அறிவியல் சிந்தனைகள் வளர்க்கப்பட வேண்டும். இதற்கான முதலீடுகளும் அதிகப்படுத்தப்பட வேண்டும். விவசாய உற்பத்தி, ஆற்றல் பாதுகாப்பு, சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர் போன்ற துறைகளில் குறைந்த செலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, அறிவியலாளர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஒன்றுக்கொன்று தொடர்புடைய வகையிலான துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கூட்டு மனித முயற்சிகள் மிகவும் அவசியமானவை. தனியார் ஆய்வகங்களில் நடைபெறும் ஆய்வுகள், அரசு உதவியில் நடைபெறும் ஆய்வுகளுக்கு துணைசெய்ய வேண்டும். ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க, விஞ்ஞானிகள், முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

விஞ்ஞான சமூகமானது, மிகப் பெரியளவிலான அமைப்புகளுடன் மட்டும் தொடர்பு கொள்ளாமல், வளர்ந்து வரும் சிறிய ஆராய்ச்சி அம்சங்களுடனும் தொடர்பு கொண்டு, இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இம்மாநாட்டில், வரும் 2020ம் ஆண்டு வாக்கில், உலகின் முதல் 5 பெரிய அறிவியல் சக்திகளுள் ஒன்றாக இந்தியா இடம்பெறுவதை நோக்கமாகக் கொண்ட "அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க கொள்கை"யை மன்மோகன் சிங் வெளியிட்டார்.

இம்மாநாட்டில், மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது: அறிவியல் துறையில், இந்தியா நோபல் பரிசு பெற்று நெடுங்காலமாகி விட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசை, சி.வி.ராமன் பெற்று, 83 ஆண்டுகள் ஆகிவிட்டன.

அந்த இலக்கை அடைய, இந்திய அறிவியல் சமூகமானது, தங்களின் முயற்சிகளை அதிகப்படுத்தி, சவால்களை முறியடிக்க வேண்டும். மேலும், இந்த இலக்கை அடைய, ஒரு குறிப்பிட்ட கால அளவையும் வகுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
10ம் வகுப்பு தனிதேர்வர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர், விரும்பும் பாடங்களில் மறுகூட்டல் செய்ய, ஆன்-லைன் வழியில், ஜனவரி 7,8 தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: செப்டம்பர், அக்டோபர் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு தனித்தேர்வு முடிவு, சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்வர்கள், தாங்கள் விரும்பிய பாடங்களில், மறுகூட்டல் செய்ய விரும்பினால், ஜனவரி 7 மற்றும் 8ம் தேதிகளில், ஆன்-லைன் வழியில் விண்ணப்பிக்கலாம். 

இரு தாள் கொண்ட பாடங்களுக்கு, 305 ரூபாயும், ஒருதாள் கொண்ட பாடத்திற்கு, 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். தேர்வுத்துறையின், www.dge.tn.nic.in இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விண்ணப்ப எண்ணுடன் கூடிய ஒப்புகை சீட்டு மற்றும் வங்கி படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின், அதை பூர்த்தி செய்து, ஐ.ஓ.பி., வங்கியில், "அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை-6' என்ற பெயரில், கட்டணத்தை செலுத்த வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழ் பயிற்று மொழி மாநில மாநாடு

தமிழ் பயிற்று மொழி மாநில மாநாடு, வேலூரில் பிப்ரவரியில் நடக்க உள்ளதாக, தமிழாசிரியர் கழக மாநில தலைவர் ஆறுமுகம் கூறினார்.

அவர் கூறியதாவது: தமிழுக்கும், தமிழாசிரியர் கழகத்திற்கும் உழைத்த டாக்டர் மு.வரதராஜனாரின் நூற்றாண்டு விழா, தமிழாசிரியர் கழகத்தின் 71வது ஆண்டு விழா மற்றும் விருது வழங்குதலை உள்ளடக்கிய மாநில மாநாடு, வேலூரில் பிப்ரவரியில் நடக்கிறது. சிறப்பு ஆய்வரங்கம், கருத்தரங்கங்கள் நடக்கின்றன.

பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி, கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கிராம பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி கொண்டு வரும், அரசின் முடிவை கை விட வேண்டும். தமிழை பயிற்று மொழியாக கொண்டு வர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டம், என்பது உட்பட பல முக்கிய தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்படும்,என்றார்.
குரூப்-2 தேர்வில் நிரம்பாத இடங்களுக்கு கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி

குரூப்-2 தேர்வில், நிரம்பாமல் உள்ள, 630 இடங்களை நிரப்ப, 7ம் தேதி, மீண்டும் கலந்தாய்வு நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. சம்பந்தபட்ட தேர்வர்கள், இணையதளத்தில் உள்ள, அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து, கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

இதுதொடர்பாக தேர்வாணைய செயலர் விஜயகுமார் வெளியிட்டுள்ள  அறிவிப்பு: குரூப்-2 தேர்வில், நேர்காணல் அல்லாத, 3,171 விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய, கடந்த நவம்பர், டிசம்பரில், பணி நியமன கலந்தாய்வு நடந்தது. இதில், 2,541 பேர் மட்டும் பங்கேற்று, பல பணிகளுக்கு, நியமன உத்தரவுகளை பெற்றனர். 

இன்னும், 630 இடங்கள், நிரப்பப்படாமல் உள்ளன. இதற்கு, தகுதியான தேர்வர்களை, தேர்வு செய்வதற்காக, இம்மாதம், 7ம் தேதி, தேர்வாணைய அலுவலகத்தில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது. தகுதிவாய்ந்த தேர்வுதாரர்களின் பெயர் பட்டியல், தேர்வாணையத்தின், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பந்தபட்ட தேர்வர்கள், இணையதளத்தில் உள்ள, அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து, கலந்தாய்வில் பங்கேற்கலாம். இவ்வாறு செயலர் தெரிவித்துள்ளார்.
உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம்: மாணவர்களுக்கு ரூ.26 லட்சம் வழங்கல்

, "உங்கள் பணம் உங்கள் கையில்" திட்டத்தை, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

மத்திய அரசு, பல்வேறு திட்டங்களின் கீழ் கோடிக்கணக்கான ரூபாயை மான்யமாக வழங்கி வருகிறது. மத்திய அரசு வழங்கும் மான்யம், பயனாளிகளிடம் நேரடியாக சென்று சேரும் வகையில் "உங்கள் பணம் உங்கள் கையில் &' என்ற புதிய திட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம், நாடு முழுவதும், 20 மாவட்டங்களில், ஜனவரி 1ம் தேதி முதல், அமலுக்கு வந்தது. இதில், புதுச்சேரியும், ஒரு மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி, மத்திய அரசின், 15 திட்டங்களுக்கான மான்யம், புதுச்சேரியில் உள்ள பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஆதார் கார்டு வந்து சேராதது, பாங்க் கணக்கு துவக்காதது போன்ற காரணங்களால், இரண்டு திட்டங்களுக்கு மட்டுமே நேரடி மான்யம் வழங்கும் திட்டம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இரண்டு திட்டங்களுக்கான பயனாளிகளுக்கு, பாங்க் பாஸ் புத்தகம் வழங்கும் விழா நேற்றுமுன்தினம் மேட்டுப்பாளையத்திலுள்ள இந்தியன் பாங்க் கிளையில் நடந்தது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ், உயர் கல்விக்கான உதவித் தொகை பெறும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, பாங்க் பாஸ் புத்தகத்தை, முதல்வர் ரங்கசாமி வழங்கினார். 

முதல்வர் ரங்கசாமி கூறும்போது, "உங்கள் பணம் உங்கள் கையில்" திட்டத்தின் கீழ், மத்திய அரசின், 2 திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு, 26 லட்சம் ரூபாய், உயர்கல்விக்கான உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டு திட்டங்கள் மட்டும் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள திட்டங்களின் கீழ் மான்யத்தை நேரடியாக வழங்குவது, 10 நாட்களில் அமல்படுத்தப்படும்" என்றார்.
கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு: கல்வித்துறை நடவடிக்கை

டில்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் எதிரொலியாக, கல்லூரிகளில் துறைவாரியாக மாணவிகளின் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து, கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை: கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் இனக்கவர்ச்சி, மின்னனு ஊடகங்களின் தூண்டுதல் மற்றும் அறியாமையால், கல்வி மற்றும் குறிக்கோள்களில் இருந்து விலகி, எதிர்காலம் பாதிக்கும் வகையில், மாணவிகள் நடந்து கொள்ள வாய்ப்புண்டு. 

இதை தடுக்க, பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இச்சூழலை தவிர்க்க, மாணவிகளுக்கு ஆலோசனை தேவை. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கல்லூரியிலும், வகுப்புதோறும் துறை சார்ந்த மூத்த ஆசிரியையை பொறுப்பாளராக நியமித்து, மாணவிகளின் குறைகளை களைய வேண்டும். மாணவிகளின் நடவடிக்கைகளில் திடீர் மாறுதல் தெரிந்தால், தனியே அழைத்து ஆலோசனை தர வேண்டும். மாணவிகளின் குடும்ப சூழல், கற்றல் திறன், வருகை போன்றவற்றை கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால், மாநில மகளிர் ஆணையத்தின் உதவியை பெற்று, சிறப்பு கூட்டம் நடத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அவினாசிலிங்கம் மகளிர் பல்கலை துணைவேந்தர் ஷீலா ராமச்சந்திரன் கூறியதாவது: பெண்களின் நடவடிக்கைகள், ஆடைகள் சார்ந்த கட்டுப்பாடு இல்லாமை போன்றவை, பாலியல் வன்கொடுமைக்கான காரணங்களாக ஏற்றுக் கொள்ள இயலாது. ஆண், பெண் இருவரும் மனிதர்களே. திறமைகளை கொண்டு மனிதர்களை அடையாளம் காணவேண்டும்; ஆடைகளை கொண்டு அல்ல. இவ்வாறு அவர்  கூறினார். 

கோவை மாவட்டத்தில் உள்ள, 89 கலை கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில், துறைவாரியாக பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு, மண்டல கல்லூரி கல்வி இயக்குநரகத்துக்கு, பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
"கல்விக் கடனுக்கு நியாயமற்ற அளவுகோலை பின்பற்றக்கூடாது"

"கல்விக் கடன் வழங்க, நியாயமற்ற அளவுகோலை வங்கி பின்பற்றக்கூடாது. இது கல்விக்கடன் வழங்கும் நோக்கத்தையே சிதைத்துவிடும்" என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

திருச்சியை சேர்ந்த குமார் தாக்கல் செய்த மனு: எனது மகன் நவீன்குமார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 388 மதிப்பெண் பெற்றார். குளத்தூர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் "டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்" படிக்கிறார். நான் டிரைவர் வேலை மூலம், மாதம் 5000 ரூபாய் சம்பாதிக்கிறேன். கல்விக்கடன் கோரி, திருச்சி கே.கே.நகர் "யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா" கிளையில் விண்ணப்பித்தோம். குறைந்தபட்ச மதிப்பெண் பெறவில்லை எனக்கூறி, 2011 டிசம்பர் 9 ல் வங்கி நிர்வாகம் நிராகரித்தது. கடன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி எஸ்.தமிழ்வாணன்: மனுதாரர் மகன், பத்தாம் வகுப்பில் 78 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். கடன் வழங்க வங்கி, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் 50 என நிர்ணயித்துள்ளது. இதன்படி பத்தாம் வகுப்பு படித்ததற்கு 15, கல்லூரி தரத்திற்கு 5 என, மொத்தம் 38 மதிப்பெண் மாணவர் பெற்றுள்ளதாக தெரிவித்து, மனுவை வங்கி நிராகரித்துள்ளது. இது சட்டவிரோதம்.

நியாயமற்ற அளவுகோலை பின்பற்ற முடியாது. இம்மாதிரி கணக்கிடுவதால், கல்விக்கடன் வழங்கும் நோக்கத்தையே சிதைத்துவிடும். "டிப்ளமோ" படிப்பவர்களுக்கு அதிகபட்சம் 15 ஆயிரம் ரூபாய் கல்விக்கடன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் 28 ஆயிரம் கோரியுள்ளார். கிளை மேலாளர் மனுவை பரிசீலித்து, அதிகபட்சம் எவ்வளவு கடன் வழங்க முடியுமோ, அதன்படி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
பட்ஜெட்டில் கல்விக்கான நிதி 7 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு

இந்திய பொருளாதாரம் சரிவடைந்து வருவதால் அரசின் செலவை கட்டுப்படுத்த மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான நிதியில் 7 சதவீதத்தை குறைக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.


நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அரசின் நிதி தொகை ரூ.45,969 கோடியில் இருந்து ரூ.3240 கோடியாக குறைக்கப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறைக்கான நிதி போதிய அளவில் இருப்பதால் அத்துறைக்கான நிதி தொகையில் 7 சதவீதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

முன்னதாக கல்வி துறைக்கான நிதியை அடுத்த நிதியாண்டில் 18 சதவீதம் உயர்த்தி ரூ.61,427 கோடி மதிப்பிலான திட்டங்கள் தீட்டப்படும் எனவும், இது 22 சதவீதம் நிதி தொகை உயர்வு எனவும் சர்வ சிக்ஷா அபியான் தெரிவித்திருந்தது. தற்போது இதில் 7 சதவீதம் குறைப்பு என்பது சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு 20 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி உயர்கல்வி துறைக்கான நிதியையும் 13 சதவீதம் குறைத்து ரூ.15,458 கோடியாக ஒதுக்க அரசு திட்டமிட்டு வருகிறது. 

கல்வி துறை நிதி குறைப்பு, மானிய சிலிண்டர்களை பயன்படுத்தி மதிய உணவு திட்டத்தை கையாண்டு வரும் அனைத்து மாநிலங்களிலும் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிதி நெருக்கடி, வரும் பட்ஜெட்டில் நிதித்துறை அமைச்சகத்தால் ஈடு செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே பல்வேறு நிதி சுமைகளை கல்வித்துறை எதிர்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசின் நிதித் தொகை குறைப்பு உள்நாட்டு கல்வி வளங்களில் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment