Tuesday, January 22, 2013

நடுநிலை பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட ஆசிரியர்களின் CPS தொகை AG அலுவலகத்தில் துவங்கப்படும் புதிய எண்ணிற்கு மாற்றம் செய்வது குறித்த RTI தகவல்



      இந்த தகவல் நிதி உதவி பள்ளியில் பணிபுரிந்து TET தேர்வில் வெற்றி பெற்று  தற்போது அரசு பள்ளி பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.
எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்

        எம்.பில்., முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கும், ஊக்க ஊதியம் அளிக்கப்படும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவால் மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்கள் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், இளங்கலையுடன் பி.எட்., பட்டம் பெற்றவர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்படுகின்றனர். பணியில் சேர்ந்த பின், முதுகலை மற்றும் எம்.எட்., படித்தால், இரு ஊக்க ஊதியம் பெற தகுதி பெறுவர். ஆனால், முதுகலை பட்டம் பெற்று, எம்.பில்., ஆய்வு படிப்பு, பட்டம் பெற்றால், ஒரு ஊக்க ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது.

        தமிழகத்தில் எம்.பில்., பட்டம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கும், ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் உட்பட, பல ஆசிரியர் சங்கங்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், எம்.பில்., முடித்தவர்களுக்கும், ஊக்க ஊதியம் வழங்கப்படும் என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

          இதன்படி, தற்போது பணியில் சேரும் எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்களுக்கு, அடிப்படை 9,300 ரூபாய் மற்றும் தர ஊதியத்தில். 4,600 ரூபாயில், 6 சதவீதம் வரை ஊக்க ஊதியம் வழங்கப்படும். குறைந்தது, ஒரு ஆசிரியரின் சம்பளம், 1500 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது.

           தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக, மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், "ஆசிரியர்களின் பல ஆண்டுகள் கோரிக்கையை, அரசு தற்போது நிறைவேற்றியுள்ளது. இந்த உத்தரவால், மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் எம்.பில்., பட்டதாரி ஆசிரியர்கள் பயனடைவர்,&'&' என்றார்.
ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை: ஆசிரியர் சங்கம் கோரிக்கை

     பொறியியல் கல்லூரிகளுக்கு நடப்பது போல, அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும், ஒற்றை சாரள முறையில், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என, தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


         இதுகுறித்து, உயர்கல்வி துறை செயலருக்கு, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில தலைவர் பாண்டியன் அனுப்பியுள்ள மனு:தமிழகத்தில், 69 அரசு கல்லூரிகள், 163 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட சுயநிதி கலை கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, முறையான நெறிமுறைகளை ஆண்டுதோறும் அரசு வெளியிட்டாலும், அவை பின்பற்றப்படுவதில்லை.

         இதனால், மாணவர் சேர்க்கையில் அதிகபட்ச கட்டண வசூல், இடஒதுக்கீட்டை பின்பற்றாத மாணவர் சேர்க்கை, கட்டாய நன்கொடை வசூல், சுயநிதி பாடப்பரிவுகளுக்கு முன்னுரிமை, மாணவர் சேர்க்கை இல்லையென கூறி, அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை மூடுதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன.

        அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒற்றை சாளர முறையை பின்பற்றினால் மட்டுமே, இம்முறைகேடுகளை களைய முடியும் என, உயர்கல்வி துறை செயலர் மற்றும் இயக்குனருக்கு, கடந்த கல்வியாண்டின் போதே தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைமுறை சிக்கல்கள், கால அவசாகம் இன்மை உள்ளிட்ட காரணங்களால், அடுத்த கல்வியாண்டில், ஒற்றை சாளர முறையை அமல் செய்ய பரிசீலிக்கப்படும் என, உறுதியளித்தனர்.

         தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் நலன் கருதி, வரும் கல்வியாண்டு முதல், அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில், ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும். இவ்வாறு பாண்டியன் கூறியுள்ளார்.
சமூக பிரச்னைகளுக்கு ஆராய்ச்சி மூலம் தீர்வு காண வலியுறுத்தல்

         "சமூக ரீதியான பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும்,' என, மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

        சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில், தேசிய அளவிலான தொழில்நுட்ப திருவிழாவின் துவக்க விழா, நேற்று நடத்தப்பட்டது. பண்ணாரி அம்மன் குழும தலைவர் பாலசுப்ரமணியம் வரவேற்றார். மாநில உயர்கல்வி மன்ற துணைத்தலைவர் சிந்தியா பாண்டியன், தலைமை வகித்து பேசியதாவது:

          தமிழக உயர்கல்வியில், இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. உலகளவிலான கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையில், இந்தியா 3வது இடத்தை பெற்றுள்ளது. 600 பல்கலைக்கழகங்கள், 20 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. 62 சதவீத மாணவர்கள் கலைத் துறையிலும், 38 சதவீத மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் உட்பட இதர பல பிரிவுகளிலும் பயில்கின்றனர்.
உயர்கல்வி மாணவர்களிடையே, திறன் மேம்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்பது, இன்றைய சூழலில் மிகவும் அவசியம். மாணவர்களிடையே புதிய கண்டுபிடிப்புகள், சிந்திக்கும் திறன் போன்றவற்றை மேம்படுத்த வேண்டும். சமூக ரீதியான பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆராய்ச்சிகளை மேம்படுத்த வேண்டும். திறன் மேம்பாடு சார்ந்த கல்வியே கட்டாயம் தேவை. இவ்வாறு, சிந்தியா பாண்டியன் பேசினார்.
        சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தேசிய தொழில்நுட்ப கழக (மணிப்பூர்) ஆட்சி மன்றக் குழு தலைவர் ராஜன் பேசுகையில், "விவசாயத் துறையில் தான், நாட்டின் எதிர்காலமே உள்ளது. இத்துறையில், ஆராய்ச்சிகளும், புதிய கண்டுபிடிப்புகளும் அவசியம்.
         அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்கால வளர்ச்சிக்கு, கல்வி முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். நம்மிடம் இருக்கும் வளங்களை முறையாகவும், சரியாகவும் பயன்படுத்த வேண்டும்,&'&' என்றார்.
மூன்று நாள் விழாவில், தொழில்நுட்பக் கண்காட்சி, பயிலரங்கம், கருத்தரங்கம், ஆய்வுக் கட்டுரை சமர்பித்தல் என, பல நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. 1,719 ஆய்வுக் கட்டுரைகளில், 309 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சிந்தனையாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்: கலாம் வலியுறுத்தல்

        "புதிதாக படைக்கும் சிந்தனையாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்,' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.


      தஞ்சையை அடுத்த வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை பல்கலையில் விண்வெளி தொழில்நுட்ப கண்காட்சி, மூன்று நாட்கள் நடக்கிறது. இதன் துவக்க விழா நேற்று காலை பல்கலை வளாகத்தில் நடந்தது. துவக்க விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது:
எழுச்சியுற்ற இளைய சமூகமாக மாணவ, மாணவியரை காண்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு இடம்பெற்றுள்ள கண்காட்சியில் அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டு மையம், விண்வெளி ஆராய்ச்சிக்கழகம் ஆகியவற்றின் கண்டுபிடிப்பு மாதிரிகள், மாணவ, மாணவியர் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
          
        பிரமோஸ் ஏவுகணை திட்டம் என்பது, பிற நாடுகளுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழும் திட்டமாகும். கார், பஸ் மற்றும் வாகனங்களில் பயணம் செய்யும் போது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களால் வெளியேறும் புகை, காற்று மண்டலத்தை மாசுபடுத்தி, சுற்றுச்சூழலுக்கும் கேடு உண்டாகிறது. அதனால், இதை தடுக்க வேண்டும்.
சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை, 90 சதவீதம் பெற முடியும். இதை மனதில் கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை பல்கலை மாணவ, மாணவியர் ஆராய்ச்சி மூலம் நிகழ்த்த வேண்டும். என்னால் முடியும் என்றால் நம்மால் முடியும், நம்மால் முடியும் என்றால் இந்தியாவால் முடியும். அதனால், முதலில் குழந்தைகளுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் கவிதை ஒன்றை கூற விரும்புகிறேன்.

          இதை திரும்பக்கூறி, நீங்கள் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும். "நான் பிறந்தேன், அரும்பெரும் சக்தியுடன், நற்பண்புகளுடன், கனவுகளுடன், நான் வளர்ந்தேன். நல்லெண்ணங்களை செயல்படுத்த, என்னால் முடியும் எனும் உள்ள உறுதியுடன் நான் பிறந்தேன். ஆகாய உச்சியில் பறக்க நான் பிறந்தேன். நான் ஒருபோதும் தவழ மாட்டேன். தவழவே மாட்டேன். ஆகாய உச்சி வரை பறப்பதே, என் லட்சியம். வாழ்வில் பறப்பேன். பறந்து கொண்டே இருப்பேன்."
இந்த நம்பிக்கை தரும் கவிதையின் படி நடந்தால், பறக்க வேண்டும் எனும் உள்ளுணர்வு உங்களை லட்சியத்தை அடைய வைக்கும். லட்சியம் அறிவாற்றலை தரும். உழைப்பு, உழைப்பு என, உழைத்து கொண்டே இருந்தால், வெற்றி வந்து சேரும்.

        நமக்கு முன்னே ரைட் சகோதரர்கள், தாமஸ் ஆல்வா எடிசன், மைக்கேல் பாரடே, சர்.சி.வி., ராமன் என, எண்ணற்ற விஞ்ஞானிகள் உழைப்பாலும், ஆராய்ச்சியாலும் உயர்ந்துள்ளனர். எதையும் உற்று நோக்கி ஆராய்ச்சி செய்து, புதிதாக படைக்கும் சிந்தனையாற்றலை வளர்ந்து கொண்டால், நீங்களும் சாதனை படைக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

         ரஷ்யா நாட்டின் தென்னிந்திய தூதர் நிக்கலோவ், அமெரிக்கா நாட்டிலுள்ள மேரிலேண்ட் மாநில கவர்னரின் ஆலோசகர் ராஜன் நடராஜன், விஞ்ஞானி சிவதாணுபிள்ளை, கலாமின் ஆலோசகர் பொன்ராஜ், பல்கலை., பதிவாளர் அய்யாவு ஆகியோர் பங்கேற்றனர். பல்கலை வேந்தர் வீரமணி தலைமை வகித்தார்.
லட்சியம் நிறைவேற தேவையான நான்கு குணங்கள்"

      "உழைப்பு, அறிவுத் தேடல், விடாமுயற்சி, தோல்வியை வெல்லும் மனப்பாங்கு என்ற, நான்கு குணங்கள் இருந்தால் கனவு நனவாகும்,' என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வலியுறுத்தியுள்ளார்.

          திருச்சி ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரியில், "கல்விக் கூட்டம்" என்ற விழா நேற்று நடந்தது. விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது:

உங்கள் சிந்தனை, செயல் ஒன்றுபட்டால், 2020ம் ஆண்டில் லட்சியம் நிறைவேறும். அதற்கு, கிராமத்துக்கும், நகரத்துக்கும் இடைப்பட்ட, சமூக, பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக இந்தியாவை மாற்றவேண்டும்.
சுத்தமான குடிநீர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி, எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். சமூக, பொருளாதார வேறுபாட்டை மீறி, பண்பாடு நிறைந்த, தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி, வழிநடத்தி செல்லக்கூடிய தலைவர்களை பெற்ற நாடாகவும் இந்தியாவை மாற்ற வேண்டும். ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வாழ்வில் ஒரு லட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும்.
தொடர்ந்து அறிவைப் பெற, அதை தேடி சென்றடைய வேண்டும்.

       விடா முயற்சி வேண்டும், அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடைச் செய்ய வேண்டும். உழைப்பு, அறிவுதேடல், விடாமுயற்சி, தோல்வியை வெல்லும் மனப்பாங்கு என்ற, நான்கு குணங்கள் இருந்தால் கனவு நனவாகும். இவ்வாறு அவர் பேசினார்.
மாணவர்கள் பணி படிப்பது மட்டுமே: அப்துல்கலாம் அறிவுரை

      மாணவர்களின் பணி படிப்பது மட்டுமே, அதை மட்டுமே நீ செய்ய வேண்டும்&'&' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

      பரமக்குடியில் ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியின் வைரவிழாவில் மாணவ, மாணவியருடன் அவர் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களிடம், "எனக்குள் ஒரு அறிய சக்தி புதைந்துள்ளது. வெற்றி இலக்கை என்றென்றும் வளர்த்து என் சக்தியாலேயே நான் வெற்றி அடைந்தே தீருவேன். ஒவ்வொரு நாளும் வகுப்பில் ஆசிரியர் சொல்லித் தரும் அனைத்தும் பாடங்களையும் அன்றே படிப்பேன். படித்ததை ஓவியம் போல் என் ஆழ்மனதில் பதியச் செய்வேன்" என மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.

        நான் குடியரசுத் தலைவராக இருந்த போது, தினமும் 200 மாணவர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஸ்ரீகாந்த் என்ற மாணவரை சந்தித்த போது, அவர் ஜனாதிபதி ஆக வேண்டும், என்றார். அது போல் மிகப் பெரிய கனவு காண வேண்டும். "நாம் யாராக இருந்தாலும் பரவாயில்லை. என்னால் வெற்றி பெற முடியும்" என்பதை உணர வேண்டும்.

        கார் டிரைவர் ஒருவர் பத்தாம் வகுப்பு படித்தார். நான் அவரிடம் ஏன் படிக்கிறாய் என கேட்டதற்கு என் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க படிக்கிறேன் என்றார். அவர் தற்போது பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பி.எச்.டி., பட்டம் பெற்று மதுரை கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.என்றார்.
தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில், மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கலாம் அளித்த பதில்கள்:

  உலகம் வெப்பமயமாதலை தடுக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு மரமும் வருடத்திற்கு 20 கிலோ கிராம் கார்பன்டை ஆக்சைடை எடுத்துக் கொண்டு, ஆக்சிஜனை வெளியிடுகிறது. ஒருவர் இரு மரம் வைத்தால் புதிய, சுத்தமான இந்தியா உருவாகும். "இன்றிலிருந்து நாம் மரங்களை நட்டு அதை வளர்ப்பேன். எங்கள் வீடு, பார்க், பள்ளி அருகில் அவசியம் செய்வோம்", என உறுதி மொழி ஏற்றனர்.

இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் அழிந்து வர காரணம் என்ன?
விவசாயம் அழியாது. கடந்த வருடம் இந்தியாவில் 250 மில்லியன் டன் அரிசி உற்பத்தியாகியுள்ளது.

இந்தியா வல்லரசாக மாணவர்களாகிய நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
நீ, நீயாக இரு.. மாணவர்களின் பணி என்ன. படிப்பது மட்டும். அதை மட்டும் நீ செய். நீ நன்றாக படித்தால் இந்தியா வல்லரசாக முடியும். என்றார்.

ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இனி வெளிநாட்டு மொழிகள்

     வெளிநாட்டு மொழிகளுக்கான கிராக்கி அதிகரித்து வருவதால், ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவரும், விரும்பும் வெளிநாட்டு மொழிகளை படிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


        இதற்கு முன்னர், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலம் வெளிநாட்டில் இருந்த மாணவர்கள் ஆகியோர்தான், வாரியத் தேர்வை வெளிநாட்டு மொழியில் எழுத முடியும் என்ற விதிமுறை இருந்தது. மற்றபடி, அனைவரும், இந்திய மொழியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
        ஆனால், ICSE பாடத்திட்டத்தில் படிக்கும் பல மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், வெளிநாட்டு மொழிகளைப் படிக்க விரும்பினர். எனவே, ICSE கவுன்சிலிலிருந்து, அனைத்து ICSE பள்ளிகளுக்கும் ஒரு சர்குலர் அனுப்பப்பட்டது. இதன்படி, வரும் 2015ம் ஆண்டு 10ம் வகுப்பு வாரியத் தேர்வு முதல், வெளிநாட்டு மொழிகளில் எழுதக்கூடிய சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment