தமிழ் இலக்கணம்

பாடம்1 :எழுத்து இலக்கணம்               தமிழ் எழுத்துகளின் எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு, எனும் பன்னிரு பகுதிகளையும் விளக்கிக் கூறுவது எழுத்து இலக்கணம் ஆகும்.
தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது.

பாடம்2:எழுத்து இலக்கண வகைகள்: ■முதலெழுத்து
 ■சார்பெழுத்துகள்

முதலெழுத்துகள்

          அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்

பாடம்   3 * உயிரெழுத்துகள்: உயிரெழுத்துகள் 12 அவை:

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ


உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும்.
 


குறில் 

குறுகிய ஓசை உடையவை. அவை : அ,இ,உ,எ,ஒ


நெடில்

 நெடிய ஓசை உடையவை . அவை : ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔபாடம் 4       *     மெய்யெழுத்துகள்: 


மெய்யெழுத்துகள் 18 அவை:

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்


மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். அவை:  வல்லினம்   : க், ச், ட், த், ப், ற்

 மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன்

 இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள்


பாடம்   5: சார்பெழுத்துகள் முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்ற்ன.


சார்பெழுத்து பத்து வகைப்படும் அவை:


1. உயிர்மெய் எழுத்து
 2. ஆய்த எழுத்து
 3. உயிரளபெடை
 4. ஒற்றளபெடை
 5. குற்றியலுகரம்
 6. குற்றியலிகரம்
 7. ஐகாரக் குறுக்கம்
 8. ஔகாரக் குறுக்கம்
 9. மகரக்குறுக்கம்
 10. ஆய்தக்குறுக்கம்


பாடம்   6: உயிர்மெய் எழுத்து 
ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.
 
 
 
எடுத்துக்காட்டு:
 
'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.
 
 
 
எடுத்துக்காட்டு:
 
க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ

ச, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சை, சொ, சோ ,சௌ


பாடம்   7: மகரக்குறுக்கம்
"ம்" என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும்.மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம்
ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும்
 - நன்னூல்

எ.கா:

வரும் வண்டி
 தரும் வளவன்

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் நிலைமொழியீற்றில் மகரமும் வருமொழி முதலில் வகரமும் உள்ளன. இது போல "நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல் மொழியோடு புணரும் போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே ஒலிக்கும்". இது ஒரு வகை மகரக்குறுக்கம்.
 செய்யுள் இறுதிப் போலி மொழிவயின்
 னகார மகாரம் ஈர் ஒற்றாகும் (தொல். 51)
பாடல்களின் முடிவில் போலும் என்று வரும் சொல்லில் னகரமும் மகரமும் ஒன்றாகி போன்ம் என்று ஈரொற்றாக நிற்கும். இந்நிலையில் மகரம் தன் ஒலிப்பளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இது மற்றொரு வகை மகரக்குறுக்கம் ஆகும்.


பாடம்   8: ஔகாரக் குறுக்கம் 
ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்ற்ரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும்.


தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்
 நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்
 - நன்னூல்
எ.கா:
ஔவை
மேற்கண்ட எடுத்துக்காட்டில் மொழிக்கு முதலில் வந்த்துள்ள 'ஔ' தனக்குறிய இரண்டு மாத்திரையிலிருந்து ஒன்றரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.
 

குறிப்பு:
 
ஔகாரம் மொழிக்கு முதலில் மட்டுமே வரும். இடையிலும் கடையிலும் வராது.


பாடம்   9: ஐகாரக் குறுக்கம் 
ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிப்பது.ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம்.ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுதே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையகவும், இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையகவும் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குரைந்தொலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும்.
 தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம்
 நையும் ஔ உம் முதல் அற்று ஆகும்

 -- நன்னூல்

எ.கா:

 ஐந்து - ஐகாரம் மொழிக்கு முதலில் - 1 1/2 மாத்திரை
 வளையல் - ஐகாரம் மொழிக்கு இடையில் - 1 மாத்திரை
 மலை - ஐகாரம் மொழிக்கு கடையில் - 1 மாத்திரை

 

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஐகாரம் குறைந்து ஒலிப்பதை காண்க.


பாடம்   10: குற்றியலிகரம்
நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்.


குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்

(குறுகிய ஓசையுடைய இகரம்)யகரம் வர குறள் உ திரி இகரம் உம்
 அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய
 - நன்னூல்


எ.கா:


நாடு + யாது -> நாடியாது
 கொக்கு + யாது -> கொக்கியாது


மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம்.


பாடம்   11:குற்றியலுகரம் 

குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா கு, சு, டு, து) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (எ.கா: ற, கி, பெ, ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது.
இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.

குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்
 
(குறுகிய ஓசையுடைய உகரம்)
 


எ.கா:


நாடு என்னும் தமிழ்ச் சொல்லில், கடைசியில் வரும் டு என்னும் எழுத்து (உகரம் ஏறிய ட் என்னும் வல்லின எழுத்து), தன் இயல்பான ஒரு மாத்திரை அளவு நீட்டிக்காமல், அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதில் தனி நெடிலுடன், வல்லின மெய்யோடு (ட்) சேர்ந்த உகரம் (டு)வந்துள்ளதைப் பார்க்கலாம். இவ்வுகரம் அரை மாத்திரையளவே ஒலிப்பதை காணலாம்.
 
 
 
இதே போல பருப்பு, சிறப்பு, நேற்று, வேடடு, பேசசு, கொடுக்கு, மத்து போன்றசொற்களில் கடைசியில் வரும் உகரம் ஏறிய வல்லின மெய்கள் குற்றியலுகரம் ஆகும்.
 

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், குறைந்து ஒலிக்கும் உகரமே குற்றியலுகரம்.


பாடம்   12:குற்றியலுகரத்தின் வகைகள்
குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை

1. நெடிற்றொடர்க் குற்றியலுகரம்
 2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
 3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
 4. வன்றொடர்க் குற்றியலுகரம்
 5. மென்றொடர்க் குற்றியலுகரம்
 6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
 

1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்:இதில் நெடில் எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
 
எ.டு:-
 'நா'கு, 'கா'சு, 'மா'டு, 'மா'து, 'பே'று, த'ரா'சு
 
மா | டு +அல்ல = மாடல்ல
 ம்+ஆ | ட்+உ +'அ' ல்ல = மா ட் + அ ல்ல ( நிலைமொழியின் உகரம் திரிந்தது)
 
'மாடு' என்ற சொல் 'அல்ல' என்ற சொல்லுடன் இணைந்து நெடில் தொடர் குற்றியலுகரம் ஆயிற்று. அதாவது டு என்ற உகர எழுத்தானது 'மா' என்ற நெடிலுக்கு அடுத்து வந்ததாலும் வரும் மொழியின் முதல் எழுத்தான 'அ' உடன் நிலைமொழியின் ஈற்றிலுள்ள உகரம் திரிந்து ட்+உ= டு ஆனது ட்+அ=ட என்று குறுகியதால் நெடில் தொடர் குற்றியலுகரம் ஆனது. அதாவது நெடிலைத்தொடர்ந்த குற்றியலுகரம்.
 
 
 

2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்இ·'து' - ஆய்த எழுத்தை அடுத்து உகரம் ஆகும்.

அ·து, இ·து, எ·து, க·சு, எ·கு போன்ற சொற்கள் வரும். இவற்றோடு வருமொழி முதலில்
 உயிரெழுத்து வரும்போது குற்றியலுகரம் உண்டாகும்.
அ·து + இல்லை = அ·தில்லை
இங்கே நிலைமொழியில் '·' என்ற ஆய்த எழுத்தை அடுத்து 'து' வந்ததாலும்
 வருமொழி 'இ' உடன் இணைந்ததால் உகரம் போய் அ·தில்லை என்று ஆனதாலும்
 ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் ஆனது. 
3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:இதில் உயிரெழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
 
எ.டு: வி'ற'கு, அ'ர'சு, கு'ற'டு, அ'ரி'து, ம'ர'பு, க'ளி'று, மி'ள'கு, வ'ர'கு, அ'ட'கு போன்றவை.
 
அரசு + ஆட்சி = அரசாட்சி
 
நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து ர்+அ என்பதில் 'அ' என்னும் உயிரெழுத்தை அடுத்து 'சு' என்ற
 உகரம் வந்ததால் உயிர்த் தொடர் உகரம் ஆயிற்று. இது 'ஆட்சி' எனும் வரும் மொழியின் முதலெழுத்து 'ஆ' உடன் இணைந்து நிலைமொழியின் உகரத்தைத் திரித்து அரசாட்சி என்று புணர்ந்ததால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாயிற்று.
 
 

4. வன் தொடர்க் குற்றியலுகரம் :இதில் வல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.

எ.டு: சுக்கு, அச்சு, பட்டு, கழுத்து, உப்பு, கசப்பு.
பட்டு + ஆடை = பட்டாடை
இங்கே நிலைமொழியின் ஈற்றயல் எழுத்து 'ட்' என்ற வல்லின எழுத்தைத் தொடர்ந்து 'டு' என்ற உகர எழுத்து வந்ததாலும், அது 'ஆடை' என்ற வரும்மொழியுடன் இணைந்து தனது ட்+உ=டு விலுள்ள உகரத்தைத் திரிந்து ட்+ஆ=டா ஆனதாலும் வன் தொடர்க் குற்றியலுகரமாயிற்று.  
5. மென் தொடர்க் குற்றியலுகரம்:இதில் மெல்லின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
 
எ.டு: சங்கு, பஞ்சு, நண்டு, பந்து, கம்பு, கன்று.
 
சங்கு + ஊதினான் = சங்கூதினான்
 
இங்கே 'ங்' என்கிற மெல்லின எழுத்தை அடுத்து 'கு' என்ற உகரம் வந்ததாலும் வரும்மொழியுடன்
 இணைந்து நிலைமொழி 'உ'கரம் திரிந்து வரும்மொழி 'ஊ' உடன் இணைந்து சங்கூதினான் என்று
 ஆனதாலும் மென் தொடர்க் குற்றியலுகரம் ஆனது.
 

6. இடைத் தொடர்க் குற்றியலுகரம்:இதில் இடையின எழுத்துக்களை அடுத்து உகரம் வரும்.
 
எ.டு: பெய்து, கொய்து, மல்கு, புல்கு, எள்கு, மாழ்கு
 
பெய்து + உடுத்தான் = பெய்துடுத்தான்.
 
இங்கே நிலைமொழியில் 'ய்' என்ற இடையின எழுத்தை அடுத்து 'து' என்ற உகரம் வந்ததாலும்
 அது வரும்மொழி 'உ' உடன் இணைந்து நிலைமொழி உகரம்கெட்டு பெய்துடுத்தான் என்று
 குறுகியதாலும் இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆயிற்று


பாடம்   13:ஒற்றளபெடை

ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பதாகும்.
ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும். இதுவே ஒற்றளபெடை ஆகும்.
 ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம்

 அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை கடை
 மிகல் ஏ அவற்றின் குறி ஆம் வேறு ஏ

 - நன்னூல்
எ.கா:
 வெஃஃகு வார்க்கில்லை - குறிற்கீழ் இடை
 கண்ண் கருவிளை - குறிற்கீழ் கடை
 கலங்ங்கு நெஞ்ச்மிலை - குறிலிணைகீழ் இடை
 மடங்ங் கலந்த மன்னே - குறிலிணைகீழ் கடை
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதை காணலாம்.
ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அதே எழுத்து எழுதப்படும்.

பாடம்   14: உயிரளபெடை
உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதற்கு உயிரளபெடை எனறு பெயர்.உயிர் + அளபெடை = உயிரளபெடை


மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.


இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில்
 அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறி ஏ
 -நன்னூல்

எ.கா:
 1 ஓஒதல் வேண்டும் - முதல்
 2 கெடுப்பதூஉம் கெட்டார்க்கு - இடை
 3 நல்ல படாஅ பறை - கடை


மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதை காணலாம்.


ஓர் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அவ்வெழுத்திற்கு இனமான குறில் எழுத்து எழுதப்படும்.


இதில் செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை என மூன்று வகைகள் உள்ளன.


பாடம்   15: ஆய்த எழுத்து 
ஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு.

ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.
('தொல்காப்பியம்', எழுத்திகாரம் 500 B.C.)


 இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.

எ.கா:

அஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய் 

இஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய்
5 comments:

 1. வணக்கம் அருமையான முயற்சி... வாழ்த்துகள்... தொடருங்கள் உங்கள் பணியை...

  அன்புடன்
  இளங்குமரன்
  தமிழாசிரியர்
  சிங்கப்பூர்

  ReplyDelete
 2. வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 3. இதில் பிழை ஏதும் இருப்பின் சுட்டிக் காட்டவும்

  ReplyDelete