வெளிநாட்டில் படிக்கச் செல்வோர், ஒரு குறிப்பிட்ட நாட்டில் கல்விக்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைத் தாண்டி, அவர் அங்கே படிக்கும் காலம் வரையான இதர செலவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
அதைப் பொறுத்தே, ஒருவரால் தனது வெளிநாட்டு கல்வி செலவை சமாளிக்க முடியுமா? என்பதை திட்டமிட முடியும். சரியான பொருளாதார திட்டமிடல் இல்லாமல் வெளிநாடு சென்றால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும். எனவே, ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மாணவருக்கு எந்தளவு செலவாகும் என்பதைப் பற்றிய விபரங்கள் இக்கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியா
இந்நாட்டில் படிக்கும் ஒரு வெளிநாட்டு மாணவருக்கு, ஒரு ஆண்டிற்கு சராசரியாக ஆகும் வாழ்க்கைச் செலவு 14,148 ஆஸ்திரேலிய டாலர்கள். ஒரு வெளிநாட்டு மாணவருக்கு, ஒரு வாரத்திற்கான தங்குமிடச் செலவு (அவர் வசிக்கும் இடத்தைப் பொறுத்து) 70 ஆஸ்திரேலிய டாலர் முதல 400 ஆஸ்திரேலிய டாலர்கள் வரை ஆகிறது.
ஒரு வாரத்திற்கான இதர வகை செலவின விபரங்கள் பின்வருமாறு,
மளிகைச் சாமான்கள் மற்றும் வெளியில் சாப்பிடுதல் - 80 முதல் 200 ஆஸ்திரேலிய டாலர்கள்
கேஸ் மற்றும் மின்சாரம் - 60 முதல் 100 ஆஸ்திரேலிய டாலர்கள்
போன் மற்றும் இணையதளம் - 20 முதல் 50 ஆஸ்திரேலிய டாலர்கள்
பொது போக்குவரத்து - 10 முதல் 50 ஆஸ்திரேலிய டாலர்கள்
பொழுதுபோக்கு - 50 முதல் 100 ஆஸ்திரேலிய டாலர்கள்
கனடா
ஒரு ஆண்டிற்கு ஏறக்குறைய 10,000 முதல் 12,000 கனடா டாலர்கள் வரை செலவாகிறது. தங்குமிடச் செலவு, உணவு, போக்குவரத்து, மருத்துவக் காப்பீடு, புத்தகங்கள் மற்றும் துணிமணிகள் வாங்குதல் உள்ளிட்டவை மேற்கண்ட செலவினத்தில் அடக்கம். ஒரு வெளிநாட்டு மாணவரின் வாழ்க்கை முறையைப் பொறுத்து, அவருக்கான செலவினங்கள் கனடாவில் மாறுபடும்.
சீனா
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, சீனாவில் வாழ்க்கைச் செலவினங்கள் குறைவு. பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் வாழும்போது, மாதத்திற்கு 500 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும். அதேசமயம், கிங்டோ, டாலியன் மற்றும் ஜினான் போன்ற சிறிய நகரங்களில் வாழும்போது, மாதம் 300 அமெரிக்க டாலர்கள் வரைதான் செலவாகும்.
பீஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களில், ஒரு சிறிய அபார்ட்மென்டின் மாத வாடகை குறைந்தபட்சம் 200 முதல் 300 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும். அதேசமயம், சிறிய நகரங்களில் வாடகை குறைவு.
போக்குவரத்து செலவும் மிகவும் குறைவுதான். பேருந்து கட்டணம் வழக்கமாக சுமார் 15 சென்டுகள் வரைதான். பீஜிங் நகரில் சப்-வே டிக்கெட் சுமார் 30 சென்டுகள் வரை இருக்கும்.
பிரான்ஸ்
இந்நாட்டைப் பொறுத்தவரை, பாரிஸ் நகருக்கு வெளியே, மாதத்திற்கு 700 முதல் 850 யூரோக்கள் வரை செலவாகும். அதே பாரிஸ் நகராக இருந்தால் 1,100 யூரோக்கள் வரை செலவாகும். நீங்கள் தங்கும் முதல் மாதத்தில், சில கூடுதல் செலவுகள் ஏற்படும். அந்த வகையில் மொத்த செலவினத் தொகை 1,700 யூரோ என்ற அளவில் உயர்ந்து நிற்கும்.
சில செலவின விபரங்கள்
வாடகை - 300 முதல் 400 யூரோக்கள்
உணவு - 230 யூரோக்கள்
போக்குவரத்து - 35 யூரோக்கள்
பொழுதுபோக்கு - 75 யூரோக்கள்
கைச்செலவு - 35 யூரோக்கள்
படிப்பு உபகரண செலவு - 50 யூரோக்கள்
ஒரு வெளிநாட்டு மாணவருக்கு, பிரான்ஸ் நாட்டில் முதல் மாத செலவு விபரம்
வாடகை - 400 யூரோக்கள்
வீட்டு ஒப்பந்தம் - 400 யூரோக்கள்(1 மாத வாடகை)
வருடாந்திர வீட்டு காப்பீடு - 50 யூரோக்கள்
சேர்க்கை கட்டணம் - 180 முதல் 596 யூரோக்கள்
சமூக பாதுகாப்பு உறுப்புத்துவம் - 203 யூரோக்கள்
மருத்துவ காப்பீட்டு உறுப்புத்துவம் - 70 முதல் 285 யூரோக்கள்.
மேற்கண்ட செலவினங்களைத் தவிர, கேஸ், மின்சாரம் மற்றும் டெலிபோன் உள்ளிட்ட இதர செலவினங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஜெர்மனி
படிக்கும் கல்வி நிறுவனத்தின் இருப்பிடம் மற்றும் ஒரு வெளிநாட்டு மாணவரின் வாழ்க்கை முறை ஆகிய அம்சங்களில் வேறுபாடுகள் இருந்தாலும், தோராயமாக, ஒரு வெளிநாட்டு மாணவருக்கு, ஜெர்மனியில் மாதத்திற்கு 794 யூரோக்கள் வரை செலவாகிறது.
மியூனிச், ஹேம்பர்க் மற்றும் குலோன் போன்ற நகரங்கள் செலவு மிகுந்தவை. அதேசமயம், செம்னிட்ஸ், டிரெஸ்டென் மற்றும் எர்பர்ட் போன்ற நகரங்கள் செலவு குறைந்தவை.
சில செலவு விபரங்கள்
வாடகை - 298 யூரோக்கள்
உணவு - 165 யூரோக்கள்
உடை - 52 யூரோக்கள்
போக்குவரத்து - 82 யூரோக்கள்
மருத்துவக் காப்பீடு - 66 யூரோக்கள்
டெலிபோன், இணையம் உள்ளிட்ட வசதிகள் - 33 யூரோக்கள்
பணி மற்றும் படிப்பு உபகரணங்கள் - 30 யூரோக்கள்
பொழுதுபோக்கு - 68 யூரோக்கள்.
ஹாலந்து
உணவு, பொது போக்குவரத்து, புத்தகங்கள், துணிமணிகள், சினிமா டிக்கெட், ஹவுசிங் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற அனைத்தையும் சேர்த்து, ஒரு வெளிநாட்டு மாணவருக்கு இந்நாட்டில் சுமார் 800 முதல் 1,100 யூரோக்கள் வரை செலவாகிறது. தங்குமிடத்தைப் பொறுத்து, வாடகை 300 முதல் 600 யூரோக்கள் வரை செலவாகிறது.
இந்நாட்டின் பல நகரங்களில் குறைந்த செலவில் நல்ல உணவுகள் கிடைக்கும். அதேசமயம், ஒருவர் தானே சமைத்து உண்டால், அவருக்கு செலவு மிகவும் குறைவு. ரயில் மற்றும் சினிமா டிக்கெட்டுகளில் மாணவர்களுக்கென்று தள்ளுபடி சலுகைகள் உண்டு.
அயர்லாந்து
ஒரு மாணவரின் வாழ்க்கை முறை, வாழும் இடம் மற்றும் தங்குமிடம் ஆகியவற்றைப் பொறுத்து செலவினங்கள் மாறுபடுகின்றன. ஒரு சர்வதேச மாணவருக்கு, அயர்லாந்தில் ஆண்டிற்கு சுமாராக 6,000 முதல் 11,000 யூரோக்கள் வரை செலவாகிறது.
கல்விக் கட்டணத்தை தவிர, இதர செலவினங்களுக்கான வருடாந்திர தொகை
தங்குமிடம் - 2,500 முதல் 5,000 யூரோக்கள்
பாடப்புத்தகம் - 600 யூரோக்கள்
உணவு மற்றும் வீட்டுச் செலவினம் - 1,500 முதல் 2,500 யூரோக்கள்
இதர செலவுகள் - 1,000 முதல் 2,500 யூரோக்கள்.
இத்தாலி
இடத்தைப் பொறுத்து, உணவு, தொலைபேசி, உள்ளூர் போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை உள்ளடக்கி, ஒரு மாதத்திற்கு 1,000 முதல் 1,500 யூரோக்கள் வரை செலவாகிறது. இத்தாலியின் சுற்றுலா மற்றும் பெரிய நகரங்களில், இதர நகரங்களைவிட செலவு அதிகம்.
ஜப்பான்
இந்நாட்டில் தோராயமாக, ஒரு மாதத்திற்கான தங்குமிடச் செலவு 1,165 அமெரிக்க டாலர்கள். இது அதிகம்தான். அதேசமயம், அந்நாட்டைப் பொறுத்தவரை, இது சராசரி செலவு. அதேசமயம் டோக்கியோ போன்ற நகரங்களோடு ஒப்பிடுகையில், வேறு சில ஜப்பானிய நகரங்கள் செலவு குறைந்தவையாக உள்ளன.
சில செலவின விபரங்கள்
தங்குமிடம் - 34,000 யென்
மின்சாரம், தண்ணீர் மற்றும் கேஸ் - 8,000 யென்
உணவு - 26,000 யென்
பொழுதுபோக்கு - 8,000 யென்
மருத்துவம் மற்றும் காப்பீடு - 3,000 யென்
நியூசிலாந்து
தங்குமிடம், உணவு, உடை, பொழுதுபோக்கு, போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்களுக்கு, ஒரு மாதத்திற்கு, ஒரு வெளிநாட்டு மாணவர், நியூசிலாந்தில் சுமார் 800 முதல் 1,000 நியூசிலாந்து டாலர்கள் செலவழிக்க வேண்டியிருக்கும். அதேசமயம், ஒருவர் இருக்கும் இடம், மேற்கொள்ளும் படிப்பு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொறுத்து செலவினம் மாறுபடும்.
ரஷ்யா
இந்நாட்டில் ஒரு மாதத்திற்கு 300 முதல் 400 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும். தலைநகர் மாஸ்கோவை விட, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் ஓல்கோகிராட் உள்ளிட்ட நகரங்கள் செலவு குறைந்தவை. ஒரு வாரத்திற்கான மளிகை செலவு ஒரு நபருக்கு தோராயமாக 40 முதல் 80 அமெரிக்க டாலர்கள் வரை வரும்.
ஒரு மாணவர் தனது 3 வேளை உணவை, 20 அமெரிக்க டாலர் செலவில் பெறலாம். மாதாந்திர மெட்ரோ பாஸ் எடுக்க 8 முதல் 16 டாலர்கள் வரை செலவாகும். பஸ், டிராம் மற்றும் டிராலிபஸ் ஆகிவற்றில் ஒரு தடவை பயணிக்க, (தூரத்தை கணக்கில் எடுக்காமல்) 10 முதல் 50 சென்ட்டுகள் செலவாகும்.
மேலும், பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொடர்பு செலவினங்கள், ஐரோப்பாவின் இதர நாடுகள் மற்றும் வடஅமெரிக்க நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு.
சிங்கப்பூர்
ஒரு மாதத்திற்கு, ஒரு வெளிநாட்டு மாணவர் 750 முதல் 2,000 சிங்கப்பூர் டாலர்கள் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். ஒருவர் எங்கு தங்கியிருக்கிறார் மற்றும் அவரின் வாழ்க்கை முறை எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்து செலவினங்கள் மாறுபடுகின்றன.
இந்நாட்டில், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட பொது போக்குவரத்து அமைப்பு உள்ளது. இதன்மூலம், அதற்கான செலவுகள் மிகவும் குறைவு.
சில செலவின விபரங்கள்
தங்குமிடம் - 200 முதல் 1500 சிங்கப்பூர் டாலர்கள்
உணவு - 300 முதல் 450 சிங்கப்பூர் டாலர்கள்
பொதுப் போக்குவரத்து - 20 முதல் 100 சிங்கப்பூர் டாலர்கள்
தனிப்பட்ட செலவு - 100 முதல் 200 சிங்கப்பூர் டாலர்கள்
ஸ்பெயின்
ஒரு மாதத்திற்கு, இந்நாட்டில் 900 முதல் 1,500 அமெரிக்க டாலர்கள் செலவாகின்றன. எந்த நகரத்தில் வசிக்கிறோம் என்பதைப் பொறுத்து செலவு மாறுபடுகிறது. ஏனெனில், பெரிய நகரங்களில் தங்குமிட செலவு மிக அதிகம். அதேசமயம், உணவு மற்றும் இதர சேவைகளுக்கான கட்டணம் ஆகியவை, ஏறக்குறைய நாடு முழுவதும் சற்றேறக்குறைய ஒரே மாதிரிதான்.
சில செலவின விபரங்கள்
காபி - 1.25 யூரோ
ஒரு லிட்டர் பால் - 0.80 யூரோ
சான்ட்விட்ச் - 3.50 யூரோ
மெட்ரோ அல்லது பஸ் டிக்கெட் - 1.50 யூரோ
ஒரு லிட்டர் பெட்ரோல் - 1.35 யூரோ
செய்தித்தாள் - 1.10 யூரோ
சாதாரண ஓட்டலில் உணவு - 11 யூரோ
பிரிட்டன்
இந்நாட்டைப் பொறுத்தவரை, படிக்கும் பல்கலை எந்த நகரத்தில் உள்ளது, மாணவரின் வாழ்க்கை முறை மற்றும் அவர் எந்தப் படிப்பை மேற்கொள்கிறார் என்பதைப் பொறுத்து செலவினங்கள் பெரிதும் மாறுபடுகின்றன.
ஒரு வெளிநாட்டு மாணவர், ஒரு வாரத்திற்கு 144 முதல் 270 பவுண்டுகள் வரை செலவு செய்கிறார். இதில் கல்விக் கட்டணம் அடங்காது. இந்த செலவு மாதத்திற்கு 940 முதல் 1,765 பவுண்டுகள் வரை ஆகிறது.
அமெரிக்கா
ஒரு வெளிநாட்டு மாணவர், மாதத்திற்கு தோராயமாக 800 முதல் 1000 அமெரிக்க டாலர்கள் வரை செலவு செய்கிறார். அதேசமயம், நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ போன்ற பெரிய நகரங்களில் இருந்தால் அந்த செலவு 1,250 டாலர்கள் வரையும் செல்லும்.
அதேசமயம், புறநகர் பகுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு மாணவருக்கு, ஓராண்டு வாழ்க்கை செலவினமாக சுமார் 650 முதல் 800 அமெரிக்க டாலர்கள் செலவாகின்றன. அமெரிக்காவில் தங்குமிடங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
கல்வி நிறுவன வளாகத்தில் தங்குவதைவிட, வெளியில் தங்குவது செலவு குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், அங்கே சென்ற புதிதில், முதல் 6 மாதங்களுக்கு, கல்வி நிறுவன வளாகத்திலேயே தங்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அந்நாட்டில், வெளிநாட்டு மாணவர்களுக்கான காப்பீட்டுக் கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவாக, ஆண்டிற்கு 500 முதல் 1,000 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகிறது.
சில செலவின விபரங்கள்(ஒரு மாதத்திற்கு)
வாடகை - 400 அமெரிக்க டாலர்கள்
மளிகை - 100 அமெரிக்க டாலர்கள்
போன் - 100 அமெரிக்க டாலர்கள்
இதர செலவுகள் - 200 அமெரிக்க டாலர்கள்.
No comments:
Post a Comment