Monday, September 16, 2013


பள்ளி கல்வித்துறை செயல்பாடு: அமைச்சர் ஆலோசனை
          பள்ளி கல்வித்துறைக்கு, கூடுதல் பொறுப்பேற்றுள்ள, அமைச்சர் பழனியப்பன், துறை செயல்பாடு குறித்து, அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.

               பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த வைகை செல்வன், கடந்த, 5ம் தேதி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த துறை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பனிடம், கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.

               இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை செயல்பாடு குறித்து, பழனியப்பன், முதல் முறையாக, அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார். டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பாடநூல் கழக கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி, பாடநூல்கழக நிர்வாக இயக்குனர், மகேஸ்வரன், பள்ளிகல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன் உட்பட பல்வேறு அதிகாரிகள், கூட்டத்தில் பங்கேற்றனர்.

              பள்ளிக் கல்வித்துறை சார்ந்து, முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, துறை சார்ந்து அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஆகியவை குறித்தும், மாணவ, மாணவியருக்கான நலத்திட்டங்கள் குறித்தும் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்தும், அமைச்சர், விரிவாக ஆய்வு செய்தார்.

ஆளில்லா உளவு ஹெலிகாப்டர்: எம்.ஐ.டி., மாணவர்களின் கண்டுபிடிப்பு
           சென்னை எம்.ஐ.டி., அண்ணா பல்கலை ஆராய்ச்சி மாணவர்களின் கண்டுபிடிப்பான ஆளில்லா உளவு ஹெலிகாப்டரை போல, தமிழக போலீஸ் துறையில் பயன்படுத்துவதற்காக, மூன்று ஹெலிகாப்டர்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

          எம்.ஐ.டி., அண்ணா பல்கலையின் ஏரோ இன்ஜினியரிங் ஆராய்ச்சி மாணவர்களின் "தக்ஷா" குழுவை சேர்ந்த உதவி பேராசிரியர் செந்தில்குமார் தலைமையில், மாணவர்கள் "தக்ஷா" என்ற பெயரில் ஆளில்லா உளவு ஹெலிகாப்டர் கண்டுபிடித்துள்ளனர். இது அமெரிக்க பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சி பிரிவு சார்பில் நடந்த கண்டுபிடிப்புகள் போட்டிகளில் பங்கேற்ற 153 நாடுகளில், முதலிடம் பெற்றது.

             உதவி பேராசிரியர் செந்தில்குமார் கூறியதாவது: ஆறு ஆண்டுகளாக செய்த ஆராய்ச்சியின் மூலம் "அன்மேன்டு ஏரியல் வெகிக்கிள்" (ஆளில்லா பறக்கும் வாகனம்) உருவாக்கினோம். இதன் எடை 6 கிலோ. "ரிமோட்" மூலம் இயக்கலாம். அதிகபட்சமாக ஆறு கி.மீ., தூரம் பறக்கும். தொடர்ந்து ஒரு மணி நேரம் பறக்கும் அளவில் பேட்டரி திறன் கொண்டது.

                இதில் சிறிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பகல் மற்றும் இரவிலும் படமெடுக்கலாம். இதன்மூலம், ராமேஸ்வரம் "டிவி" டவரில், உப்புத்தன்மை நிறைந்த கடல்காற்றால் ஏற்பட்ட அரிப்பு தன்மையை, 500 மீட்டர் உயரத்தில் பறக்கவிட்டு, கேமரா மூலம் கண்டறியப்பட்டது. பின் கல்பாக்கம், கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடலோர காவல் படைக்காக உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டது.

               கேதர்நாத் வெள்ளத்தின் போதும் இதை பயன்படுத்தி, எங்கெங்கு ரோடு சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடித்து அரசுக்கு தெரிவித்தோம். திருவண்ணாமலை ஜோதி, மதுரையில் கிரானைட் குவாரி உட்பட பல இடங்களில் ஆளில்லா உளவு ஹெலிகாப்டர் மூலம் போட்டோக்கள் பதிவு செய்யப்பட்டது.

              தெர்மல் "கேமரா" மூலம் காடுகளில் இருட்டில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளையும் கண்டுபிடிக்க முடியும். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் அமெரிக்கா ராணுவத்தினர், எங்கள் படைப்பை பாராட்டினர்.

              தமிழக அரசின் உத்தரவுப்படி பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாளில், இந்த ஹெலிகாப்டரை பயன்படுத்தி, பல இடங்களில் கூடிய கூட்டம், வாகனங்கள் வந்ததையும், அருகில் உள்ள கிராமங்களில் இருந்த நிலையையும் போலீசார் கண்காணித்தனர்.

              போலீஸ் துறைக்கு, இதுபோல் மூன்று ஹெலிகாப்டர் தயாரித்து வழங்க உள்ளோம். சிலநேரங்களில் டாக்டர்கள், விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள், தானம் செய்பவர்களின் உறுப்புகளை கொண்டு வந்தால் காப்பாற்றி விடுவோம் என கூறும்பட்சத்தில், இந்த ஆளில்லா ஹெலிகாப்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

              இந்தியாவில் முதன்முறையாக கண்டுபிடித்துள்ள இந்த ஆராய்ச்சிக்கு தமிழகம் மற்றும் மத்திய அரசு நிதி வழங்கினால், மேலும் விரிவாக்கம் செய்யும் திட்டம் உள்ளது, என்றார்.

திறந்தநிலை பல்கலையில் நேரடி கல்வி முறையில் பி.எச்டி.,
           தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக, நடப்பு கல்வியாண்டில், நேரடி கல்வி முறையில், எம்.பில்., மற்றும் பி.எச்டி., பட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள், தொலைதூர கல்வி முறையில் படிக்கின்றனர்.

           தமிழகத்தில், அண்ணாமலை, மதுரை, திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட, பத்து பல்கலைக்கழகங்களில் தொலைதூர கல்வி வழங்கப்படுகிறது. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதில், இளங்கலை, முதுகலை ஆய்வு படிப்புகளும் வழங்கப்பட்டு வந்தன.

              இந்நிலையில், தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், ஒரு பல்கலைக்கழகத்தில், ஒரு ஆண்டிற்கு 500க்கும் மேற்பட்ட ஆய்வு பட்டங்கள் வழங்கப்பட்டன. தரம் குறைந்த கல்வி வழங்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.,) தொலைநிலை கல்வியில் எம்.பில்., மற்றும் பி.எச்டி., பட்டங்கள் வழங்க தடை விதித்தது.

              இதையடுத்து, 2008 முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகத்திலும், தொலைதூர கல்வி மூலம் எம்.பில்., மற்றும் பி.எச்டி., பட்டம் வழங்குவது தடை செய்யப்பட்டது.

                  தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், நேரடியாக எம்.பில்., மற்றும் பி.எச்டி., வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இப்பல்கலையில், தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், உளவியல், கல்வியியல், குற்றவியல் உள்ளிட்ட, 14 துறைகளில், ஆய்வு படிப்புகள் துவங்கப்படுகின்றன. ஆண்டு கட்டணம், 5,000 ரூபாய். இதற்கான விண்ணப்ப வினியோகம் துவங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர், 5ம் தேதி.

                       இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் கூறியதாவது: திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் படித்தால், வேலை கிடைக்காது என்ற தவறான கருத்து மக்கள் மத்தியில் உள்ளது. இக்கருத்தை மாற்ற வேண்டிய பொறுப்பு, பல்கலைக்கழகத்தின் முன் பெரும் சவாலாக உள்ளது.

               தற்போது அறிமுகப்படுத்தியுள்ள நேரடி ஆய்வு பட்டம், பல்கலைக்கழகத்தின் உயர்வுக்கு பெரிதும் உதவும். உளவியல், பொது அரசியல் உள்ளிட்ட அரிய பட்டங்கள் இங்கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம், ஆராய்ச்சி பட்டத்தை மாணவர்கள் இங்கு எளிதில் மேற்கொள்ள முடிகிறது. எம்.பில்., - பி.எச்டி., ஆய்வு படிப்புகளில் சேர உள்ள மாணவர்கள் நுழைவு தேர்வு எழுத வேண்டும். தேர்வில் வெற்றி பெற்ற தகுதியானவர்களுக்கு, இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும். இவ்வாறு, சந்திரகாந்தா கூறினார்.

No comments:

Post a Comment