Monday, August 5, 2013


ஆன்லைனில் வேலைவாய்ப்பக பதிவு: நேரில் வரத்தேவையில்லை

             தொழிற்கல்வி மற்றும் முதுநிலை பட்டதாரிகள், கல்வித் தகுதியை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (மதுரை) "ஆன்லைனில்" பதிவு செய்யலாம். சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்த அலுவலகத்தின் கிளை, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக மாடியில் உள்ளது.




             மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தினர், இங்கு பதிவு செய்ய வேண்டும். இதனால், பதிவு செய்வோருக்கு அலைச்சல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க "ஆன்லைன்" பதிவு திட்டம் நடைமுறையில் உள்ளது.

              இருப்பினும், பலர் இம்முறையை அறியவில்லை. புதிதாக பதிவு செய்வோர், www.tnvelaivaaippu.gov.in என்ற முகவரியில் சென்று, "நியூ யூசர் ஐ.டி., ரெஜிஸ்ட்ரேசன்" என்பதை "கிளிக்" செய்து விபரங்களை பதிவு செய்யலாம்.

          பழைய பதிவுதாரர்கள், "யூசர் ஐ.டி.," யாக தங்கள் பதிவெண்ணையும், "பாஸ்வேர்டு" ஆக, பிறந்த தேதியையும் பதிவு செய்து, புதுப்பித்தல், கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம். இதில் "யூசர் நேம்" இடத்தில் பதிவு எண்ணை ஆண்டுடன் இணைத்து, "ஆண், பெண்" என்பதன் முதல் எழுத்தை சேர்த்து 16 இலக்கமாக மாற்றி, பதிய வேண்டும்.

              உதாரணமாக, "1998எம்டி1928" என்ற பதிவு எண் கொண்டவர், "யூசர் ஐ.டி.," யில் "எம்டிபி1998எம்00001928" என பதிவு செய்து, அவரது பிறந்த தேதியையும் பதிய வேண்டும். "ஏற்கனவே, பதிவு செய்து குறித்த காலத்திற்குள், புதுப்பிக்கத் தவறியவர்கள், 18 மாத கால அவகாச சலுகையில், ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம். இதற்காக, அலுவலகத்திற்கு நேரில் வரத்தேவையில்லை" என வேலைவாய்ப்பு அலுவலர் எம்.கருணாகரன் தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளுக்கு 12% சேவை வரி: வருமான வரித்துறை நோட்டீஸ்

             நாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான தனியார் பள்ளிகளுக்கு, 12 சதவீத சேவை வரி செலுத்துமாறு அறிவுறுத்தி, வருமான வரித் துறை, நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாணவர்களிடம், எந்தெந்த தலைப்புகளின் கீழ், கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அவை அனைத்திற்கும், வரி செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

            இந்த கூடுதல் வரியையும், மாணவர்களிடமே வசூலிக்க வேண்டியிருக்கும். பெற்றோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, தனியார் பள்ளி நிர்வாகிகள், வரும், 7ம் தேதி, பெங்களூருவில் கூடுகின்றனர்.

              நடப்பு ஆண்டுக்கான மத்திய அரசு பட்ஜெட்டில், தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரி விலக்கு சலுகைகள் திரும்ப பெறப்பட்டு, சேவை வரி விதிக்கப்பட்டது. வரி விலக்கு வாபஸ், இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துள்ளதை சுட்டிக்காட்டி, 12 சதவீத சேவை வரி செலுத்துமாறு, நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு, வருமான வரித்துறை, நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

           தமிழகத்தில் உள்ள 4,000 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், சேவை வரி செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  மத்திய அரசின் இந்த நெருக்கடியால், நாடு முழுவதும், தனியார் பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து, விவாதித்து, முடிவு எடுப்பதற்காக, வரும், 7ம் தேதி, பெங்களூருவில், அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

              இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது: மாணவர்களுக்கான கல்வி கட்டணம், நோட்டு புத்தக கட்டணம், வாகன கட்டணம், கராத்தே கட்டணம், நடனம் கற்றுக்கொடுத்தால், அதற்கு வசூலிக்கப்படும் கட்டணம் என, ஒன்று விடாமல், அனைத்து இனங்களுக்கும், தனித்தனியே வசூலிக்கப்படும் கட்டணத்தில், 12 சதவீதத்தை, சேவை வரியாக செலுத்த வேண்டும் என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

               நாடு முழுவதும் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. இது, எங்களுக்கு, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சராசரியாக, ஒவ்வொரு பள்ளியும், 1 லட்சம் ரூபாய் முதல், 5 லட்சம் ரூபாய் வரை, வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

            இதனால் ஏற்படும் நஷ்டத்தை சரிசெய்ய, கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை, எங்களுக்கு ஏற்படும். இதனால், கடைசியில், பெற்றோர் பாதிக்கப்படுவர். இதுகுறித்து, விவாதித்து, முடிவெடுக்க, வரும், 7ம் தேதி, பெங்களூருவில், தென் மாநில அளவிலான சங்க நிர்வாகிகள் கூடி, விவாதிக்க உள்ளோம். அதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

              முதற்கட்டமாக, இந்த வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என, வலியுறுத்தி, 50 லட்சம் பெற்றோர் மற்றும் எம்.பி.,க்களிடம் கையெழுத்தை பெற்று, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்திடம் வழங்க, முடிவு எடுத்துள்ளோம். இவ்வாறு, நந்தகுமார் கூறினார்.

விரிவுரையாளர் காலியிடம் நிரப்ப கோரிய வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

             அரசு உதவி பெறும் கல்லூரிகளில், காலியாக உள்ள, 3,000 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்பக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், உயர் கல்வித் துறைக்கும், நோட்டீஸ் அனுப்ப, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

           மதுரை காமராஜ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலர், சுப்புராஜ், தாக்கல் செய்த மனு: கடந்த, 2011, மே மாதம், சட்டசபையில், உயர் கல்வி அமைச்சர், "அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 3,120 காலியிடங்கள் உள்ளன; இவற்றை விரைந்து நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படும்" என, அறிவித்தார்.

                       ஓராண்டுக்குப் பின், காலியிடங்கள் குறித்து, உயர் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. கல்வித் துறையின் திட்டப்படி, தேர்வு நடவடிக்கைகளை துவக்குவதற்குப் பதில், ஒரு குழுவை, கல்லூரி கல்வி இயக்குனரகம் அமைத்தது. காலியிடங்களை நிரப்ப, கல்லூரி நிர்வாகத்தையும் அனுமதிக்கவில்லை.

           அவ்வப்போது ஓய்வு பெறுபவர்களும் அதிகரிப்பதால், காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இந்த கல்வியாண்டும் துவங்கி விட்டதால், தேர்வு நடவடிக்கைகளுக்கான அறிகுறி தென்படவில்லை. ஆசிரியர் பற்றாக்குறையால், மாணவர்கள் தான் பாதிக்கப்படுவர்.

                   காலியிடங்களை முடிவு செய்ய, கல்லூரி கல்வி இயக்குனரகம் தான், தகுதி வாய்ந்தது. காலியிடங்களை முடிவு செய்து விட்டால், முன் அனுமதியின்றி, விளம்பரங்களை வெளியிட்டு, நியமனங்களை, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மேற்கொள்ளலாம்.

               சட்டப்படி, அரசு விதிகளின்படி, நியமனங்கள் முடிந்த பின், பல்கலைக் கழகம் மற்றும் இணை இயக்குனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும். எனவே, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள, காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

                இம்மனு, நீதிபதி அரிபரந்தாமன் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசு மற்றும் உயர் கல்வித்துறைக்கு, நோட்டீஸ் அனுப்ப, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டார்.
சதுரங்க போட்டிகள் நடத்த பள்ளிகளுக்கு அரசு உத்தரவு
             "அனைத்து வகை பள்ளிகளிலும், வரும், 23ம் தேதி முதல், அக்., 22ம் தேதி வரை, பல்வேறு நிலைகளில், பள்ளி மாணவர்களுக்கிடையே சதுரங்கப் போட்டிகளை நடத்த வேண்டும்" என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.




         பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள உத்தரவு: மாணவர்களின் திறமையையும், ஆற்றலையும் வளப்படுத்துவதற்கும், அவர்களின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்துவதற்கும், சதுரங்க விளையாட்டை அறிமுகப்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

         அதன்படி, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், தமிழ்நாடு சதுரங்க சங்கத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம், மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது. வரும், 12ம் தேதி முதல், 18ம் தேதி வரை, சதுரங்க விளையாட்டு குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

          வரும், 23ம் தேதி, பள்ளி அளவில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, போட்டிகள் நடத்த வேண்டும். பின், படிப்படியாக கல்வி மாவட்ட அளவிலான போட்டி, வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள், மண்டல அளவிலான போட்டிகள் என, வரும் அக்., 22ம் தேதி வரை, பல்வேறு நிலைகளில், போட்டிகளை நடத்த வேண்டும்.

              மாநில அளவிலான போட்டியை, நவம்பர் மாதம் நடத்த வேண்டும். மண்டல அளவில், முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர், வயது பிரிவு வாரியாக, மாநில போட்டிகளில் பங்கேற்கலாம். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment