Saturday, August 3, 2013

news

முதுகலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி : தோல்வியை குறைக்க அதிரடி நடவடிக்கை

             பிளஸ் 2 தேர்வில், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களில், மாணவர்கள் அதிகளவில், தோல்வி அடைவதை தவிர்க்கும் வகையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கும் பணியில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது.



        முக்கிய பாடங்களில் தோல்வி : ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட சில முக்கிய பாடங்களில், மாணவர்கள், அதிகளவில் தோல்வி அடைவதை, கல்வித்துறை கண்டறிந்துள்ளது.

          இதையடுத்து, பாடப் புத்தகங்களை எழுதிய ஆசிரியர் குழு மூலம், முதுகலை ஆசிரியர்களுக்கு, டி.பி.ஐ., வளாகத்தில், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:

             ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில், தோல்வி அதிகமாக உள்ளது. இந்த பாடங்களுடன், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணக்குப் பதிவியல் ஆகிய பாடங்களை எடுக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு, கடந்த மாதம், 30ம் தேதி முதல், பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, ஒரு மாவட்டத்திற்கு, இரண்டு பேராசிரியர்கள், இரண்டு முதுகலை ஆசிரியர்கள், ஒரு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர் என, ஐந்து பேருக்கு, பாடத்திட்டங்களை எழுதிய ஆசிரியர் குழுவினர், பயிற்சி அளிப்பர். பாடத்திட்ட குழுவினர் பாடங்களில், கடினமான பகுதி எது, அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும், தேர்வுகளில், அந்த பகுதியில் இருந்து, எந்தெந்த வகையில் கேள்விகள் வரலாம், அதற்கு, எந்த வகையில் பதிலளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிமுறைகளை, பாடத்திட்ட குழுவினர் விளக்குகின்றனர்.

           மாவட்டத்திற்கு, ஐந்து பேர் வீதம், 160 பேர், பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ளனர். ஆக., 15ம் தேதி வரை, தொடர்ந்து பயிற்சி நடக்கிறது. அதன்பின், இந்த ஐவர் குழு, மாவட்டங்களுக்குச் சென்று, அங்குள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும். இது, தோல்வி சதவீதத்தை, கணிசமாக குறைக்க, கை கொடுக்கும் என, நம்புகிறோம். இவ்வாறு, இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.
ஆதார் அட்டை பிழைகளை ஆன்லைனிலேயே சரி செய்யலாம்!

             ஆதார் அட்டையில் உள்ள பிழைகளை ஆன்லைனிலேயே பிழை திருத்தம் செய்யும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.


         இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் அட்டை மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது பிழை இருந்தாலோ அல்லது மாற்றம் செய்ய வேண்டி இருந்தாலோ, அந்த மாற்றங்களை ஆன்லைன் மூலம் செய்ய முடியும்.

             http://uidai.gov.in/update-your-aadhaar-data.html என்ற இணைய முகவரிக்குள் நுழைந்து மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் புதுப்பித்து (update) பின்பு, ஆவணங்களை பதிவேற்றம் (document upload) செய்ய வேண்டும்.
ஏடிஎம் சேவை: வங்கிகளுக்கு புதிய உத்தரவு
             ஏடிஎம் பயன்படுத்துவோரின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 


         ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை எனும் பட்சத்தில் அந்த தகவல் திரையின் வழியாக முன் கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துக்கும் குழப்பத்துக்கும் உள்ளாவது தவிர்க்கப்படும். மேலும் ஏடிஎம் மையங்களில் பிரத்யேக குறியீட்டு எண் தெளிவாக தெரியும்படி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

             ஏடிஎம் சேவையில் குளறுபடி அல்லது சிக்கல் எதுவும் ஏற்பட்டால் அதை புகாராக தெரிவிக்க இது வசதியாக இருக்கும். மேலும் வாடிக்கையாளர்கள் புகார் செய்ய வசதியாக உரிய படிவங்கள் ஏடிஎம் மையங்களில் வைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர ஏடிஎம் சேவைகள் தொடர்பான புகார்களை பெறும் வங்கி அலுவலர்களின் பெயர்களும் தொலைபேசி எண்களும் மையத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதோடு வாடிக்கையாளர்கள் தொலைபேசி வழியாக புகார் தெரிவிக்க வசதியாக கட்டணமற்ற குறைதீர்ப்பு பிரிவு எண்ணும் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

             வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே ஏடிஎம்மை பயன்படுத்த அனுமதிப்பட்ட வேண்டும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதன் மூலம் மோசடி நோக்கில் ஏடிஎம்மை பயன்படுத்துவது தடுக்கப்படும். மின்னணு முறை பரிமாற்ற முறை குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
பி.எட்., தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 94 சதவீதம்
          பி.எட்., படிப்பு தேர்வு முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

      2013 மே - ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வுக்கான முடிவுகள் பல்கலைக்கழகத்தின் www.tnteu.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

          இத்தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதினர். இவர்களில் 94 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறினார்.
இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களை தரம் உயர்த்தி பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்துவது அரசின் கொள்கை முடிவிற்குட்ப்பட்டவை இணை இயக்குநர் தகவல்
B.Ed Result| B.Ed Regular Result May/June 2013| Results for B.Ed.Degree Examinations - May/June 2013
பி.எட்., படிப்பிற்கு 6ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்

        பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 6ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை வழங்கப்படுகின்றன.


         தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 3,000 பி.எட்., இடங்களும், தனியார் கல்லூரிகளில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எட்., இடங்களும் உள்ளன.

          அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள இடங்கள், ஒற்றை சாரள முறையில், பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். தனியார் கல்லூரிகள், விருப்பப்பட்டு ஒப்படைக்கப்படும் இடங்களும், கலந்தாய்வு மூலமாகவே நிரப்பப்படுகின்றன.

          பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, கல்லூரி கல்வி இயக்ககம், நேற்று அறிவித்தது. படிப்பிற்கான விண்ணப்ப படிவம், 6ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை வழங்கப்படும். சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும், காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 3:00 மணி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

          சென்னையில், திருவல்லிக்கேணி, லேடி வெலிங்டன் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும், சைதாப்பேட்டையில் உள்ள கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும், விண்ணப்பங்களை பெறலாம்.

          விண்ணப்ப கட்டணம், 300 ரூபாய்; எஸ்.சி., - எஸ்.டி., மாணவருக்கு, 175 ரூபாய்.  விண்ணப்ப கட்டணத்தை, பணமாகவோ, "டிடி&'யாகவோ செலுத்துவோர், "செயலர், தமிழ்நாடு பி.எட்., அட்மிஷன், சென்னை - 5" என்ற பெயரில், விண்ணப்பத்தை பெறலாம். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், விண்ணப்பங்களை, ஜாதி சான்றிதழ் நகலை செலுத்தி, பெற்று கொள்ளலாம்.

          மருத்துவம், பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை ஒழுங்குப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை போன்று, தனியார் கல்வியியல் கல்லூரிகளிலும் ஒழுங்குபடுத்த, திட்டமிடப்பட்டுள்ளது.

           இதையடுத்து, தனியார் பி.எட்., கல்லூரிகளில், மாணவர் சேர்க்கையை கண்காணிக்க, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி அல்லது மூத்த கல்வியாளர் தலைமையில், குழு அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது.

          இதன் மூலம், தனியார், பி.எட்., கல்லூரிகளில் விருப்பம் போல் மாணவர்களை சேர்ப்பதும், பி.எட்., படிக்க தகுதியில்லாத பட்ட படிப்பு அல்லது முதுகலைப் பட்ட படிப்பில், மாணவர்களை அட்மிஷன் செய்வதும், கட்டுப்படுத்தப்படும். கல்லூரிகளுக்கு செல்லாமலே, போலியாக வருகை பதிவு வழங்குப்படுவதற்கும், முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

          பி.எட்., படிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்த பிறகு, டி.இ.டி., தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், பி.எட்., படிப்பில், புதிய பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், "கல்வியியல் புதுமை மற்றும் பாடத்திட்ட மேம்பாடு" என்ற பாடத் திட்டமும், வரும் கல்வியாண்டு முதல், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

           மாணவர்களின் திறனை மேம்படுத்த, செய்முறை தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறையிலும், மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய உத்தேச விடைகளில் குளறுபடி - நாளிதழ் செய்தி

      முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ-ஆன்சர்), ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட நிலையில், அதில் ஏராளமான தவறுகள் உள்ளன.


        ஆசிரியர் தேர்வு வாரியம், ஜூலை 21ல், முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வை நடத்தியது. கடந்த, 29ம் தேதி, இதற்கான, கீ-ஆன்சர் வெளியிடப்பட்டது. தமிழ்ப் பாடத்திற்கான விடைகளில், ஏராளமான தவறுகள் உள்ளன.

        வரிசைக் குறியீடு, "டி" வினாத்தாளில், (தமிழ் பாடம்) வினா எண், 53ல், "அடிகள் நீரே அருள்க என்ற கூற்றுக்கு உரியவர்?" என்ற கேள்விக்கு, சரியான விடை, சாத்தனார்; ஆனால், இளங்கோ என, உள்ளது.

        வினா எண், 105ல், "தளிர் அடி மென்நகை மயிலைத்தாது அவிழ்தார்க் காளைக்கு" - இவ்வடிகளில் அமைந்துள்ளது என்பதற்கான சரியான விடை, உவமை; ஆனால், அடைமொழி என, உள்ளது.

          வினா எண், 126ல், "கட்டளைக் கலித்துறையில் அமைந்த யாப்பு நூல்" என்ற கேள்விக்கு, சரியான விடை, யாப்பருங்கலக் காரிகை; ஆனால், யாப்பருங்கல விருத்தியுரை என, தவறாக உள்ளது.

            இது போல, பல விடைகள் தவறுதலாக வெளியிடப்பட்டு உள்ளதால், தேர்வர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "தேர்வு வாரியம் வெளியிட்ட, கீ-ஆன்சரில் தவறு இருந்தால், ஆகஸ்ட 5ம் தேதிக்குள் தெரியப்படுத்தலாம். இதுபோன்ற புகார்களை வைத்து, அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்" என்றார்.

                ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வில், தமிழ் பாடத்தில், 44 வினாக்கள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன. ஆங்கிலம் மற்றும் தமிழில் கேட்கப்பட்ட, ஒரே வினாக்களுக்கு, விடை மாறியிருந்தது. இதுபோன்ற குளறுபடி அரங்கேறிய நிலையில், கீ-ஆன்சர் வெளியிட்டதிலும், தேர்வு வாரியம் தடுமாறி இருப்பது, தேர்வர்களை வெறுப்படையச் செய்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களோடு ஜாதி பெயர்களா? ஐகோர்ட் நோட்டீஸ்

         தமிழகத்தில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பெயர்களில், ஒட்டியிருக்கும் ஜாதி பெயர்களை, நீக்கக் கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட ஐகோர்ட், விசாரணையை, செப்டம்பருக்கு தள்ளிவைத்துள்ளது.



      சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர், எஸ்.சரவணன் என்பவர், தாக்கல் செய்த மனு: ஜாதி முறையை ஒழிக்க வேண்டும் என்றால், மக்களுக்கு கல்வியறிவு புகட்டப்பட வேண்டும். தெருக்களின் பெயர்களில் இருந்த ஜாதி பட்டங்களை நீக்கும்படி, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உத்தரவிட்டார்.

           ஜாதி வன்முறையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, போக்குவரத்துக் கழகங்களின் பெயர்கள், 1997ல் மாற்றப்பட்டன. "மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, வெள்ளாளர் மகளிர் கல்லூரி, நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, சிக்கையா நாயக்கர் கல்லூரி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி, யாதவர் கல்லூரி, மதுரை சிவகாசி நாடார் கல்லூரி" என, பல கல்லூரிகளின் பெயர்களில், ஜாதியின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளன.

          பள்ளிகளைப் பொறுத்தவரை, சவுராஷ்டிரா பள்ளி, நாடார் சரஸ்வதி பள்ளி, அரசு கள்ளர் பள்ளி, ராமசாமி செட்டியார் பள்ளி, சி.பி.ராமசாமி அய்யர் பள்ளி என, பள்ளிகளின் பெயருக்குப் பின்னும், ஜாதி பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

             மக்கள் நல அரசானது, ஜாதியின் பெயரில், பள்ளிகள், கல்லூரிகளை நடத்தக் கூடாது. தலைவர்களின் பெயர்கள் இருப்பதற்கு ஆட்சேபனை இல்லை; ஆனால், அவர்களின் பெயருக்குப் பின், ஜாதி பெயரையும் இணைப்பது, அப்பாவி மக்களின் மனதில் ஜாதிய முறையை புகுத்துவது போலாகும்.

         பள்ளிக் குழந்தைகளின் மனதில் பதிய ஆரம்பித்தால், இந்த சமூகத்தில், ஜாதி முறையை ஒழிக்க முடியாது. பள்ளிகள், கல்லூரிகளை, அரசு நடத்துவதற்கு, சட்டம் அதிகாரத்தை அளிக்கிறது. ஜாதி பெயரில், கல்வி நிறுவனங்களை நடத்த அனுமதிக்கவில்லை.

          எனவே, அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் ஒட்டியிருக்கும், ஜாதி பெயர்களை நீக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

              இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, "முதல் பெஞ்ச்" முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு, "நோட்டீஸ்" அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, செப்., 10ம் தேதிக்கு, "முதல் பெஞ்ச்" தள்ளிவைத்தது.

No comments:

Post a Comment