Sunday, November 10, 2013

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை மனு கொண்டுவருபவர்களுக்கு உடனடி தீர்வு கம்ப்யூட்டர் உதவியுடன் அந்த நிமிடமே பதில்
ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மனு கொண்டுவருபவர்களுக்கு கம்ப்யூட்டர் உதவியுடன் உடனடியாக பதில் அளிக்கிறார்கள். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் செய்கிறது. அதுமட்டுமல்ல அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்கிறது. மேலும் அரசு கலை கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர்களை தேர்வு செய்கிறது. இப்படியாக வருடம் முழுவதும் ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை நடத்தி வருகிறது.

இப்போது ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக விபுநய்யர் உள்ளார். உறுப்பினர் செயலாளராக தண்.வசுந்தராதேவியும், உறுப்பினர்களாக க.அறிவொளியும், தங்கமாரியும் உள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில் சிலர் மதிப்பெண் குறைவாக இருக்கிறது என்றும், சிலர் விடை சரியாக இல்லை என்றும் புகார் தெரிவித்தவண்ணம் தினமும் வருகிறார்கள்.

குறை தீர்க்கும் மையம்

அவ்வாறு வருபவர்களுக்கு சரியான முறையில் பதில் அளிப்பதற்காக தலைவர் விபுநய்யர் ஒரு குறைதீர்ப்பு மையத்தை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த மையம் ஆசிரியர் தேர்வு வாரிய நுழைவு வாயில் அருகே உள்ளது.

இதற்காக லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் திலகவதியும், கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் செந்தில்வேலும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதில் ஆசிரியர் செந்தில்வேல் ஆசிரியர் தேர்வு வாரிய நுழைவு வாயிலில் இருக்கிறார். கோரிக்கை கொண்டுவருபவர்களிடம் மனுக்களை பெறுகிறார். ஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்த மார்க் உள்ளது என்று கூறினால் உடனே அவரை அருகே உள்ள குறை தீர்க்கும் மையத்திற்கு அழைத்துச்செல்கிறார்.

அங்கு ஆசிரியர் திலகவதி உடனடியாக கம்ப்யூட்டர் உதவியுடன் அந்த நபரின் விடைத்தாளை எடுத்து காண்பித்து பார்க்கவைக்கிறார்.

திருப்தி அடைகிறார்கள்

கடந்த 2 நாட்களாக இந்த மையம் செயல்பட்டு வருகிறது. இது தொடர்ந்து செயல்பட உள்ளது. கடந்த 2 நாட்களில் 13 பேர் மதிப்பெண் வித்தியாசம் என்று கோரி வந்தனர். அந்த நிமிடமே கோரிக்கை மனு கொண்டுவந்தவர்களை கம்ப்யூட்டர் முன் அமர்த்தி பதில் அளிக்கப்படுகிறது. குறைதீர்க்கும் மையத்தில் பார்த்த பின்னர் அவர்கள் திருப்தியுடன் செல்கிறார்கள்.

மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ள விடைகளில் சில தவறு உள்ளன என்று பலர் மனு கொடுத்துள்ளனர்.

செல்போனில் தெரிவிக்கலாம்

இந்த குறை உள்பட மொத்தம் 300–க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன. சிலர் தொலைபேசியில் தங்களது குறைகளை தெரிவிக்கிறார்கள். அவர்களின் தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொண்டு பின்னர் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து பதில் அளிக்கப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்பாக எந்த சந்தேகமாக இருந்தாலும் நேரில் வரலாம். அல்லது 7373008134 மற்றும் 7373008144 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொள்ளலாம்.
பணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் இறந்தால், அவர்களது வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க உத்தரவு

எம்.சுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விரம்: திருவண்ணாமலை மாவட்டம் அகரம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சத்துணவு சமையலராக எனது தாய் பணிபுரிந்தார். கடந்த 2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி பணியிலிருக்கும் போது அவர் இறந்தார். அரசு பணியின் போது எனது தாய் இறந்ததால், கருணை அடிப்படையில் அந்த வேலையை எனக்கு வழங்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன்.

அதில், சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தேன். மாவட்ட ஆட்சியரும் அந்த மனுவை ஏற்றுக் கொண்டு 2009-ஆம் ஆண்டு அரசுக்கு  பரிந்துரைத்தார். ஆனால், சமையலர் அல்லது சமையல் உதவியாளர் பணியில் தான் நியமிக்க முடியும், சத்துணவு அமைப்பாளராக நியமிக்க முடியாது எனக் கூறி சமூக நலத்துறை எனது கோரிக்கையை மறுத்து விட்டது. அதனால், கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் வேலை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நடந்து வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இறந்த அரசு ஊழியர்களின் பதவியைப் பொறுத்து அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்கக் கூடாது. வாரிசுகளின் தகுதி அடிப்படையில் அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அதனால், மனுதாரின் தகுதி அடிப்பைடையில் 8 வாரங்களுக்குள் அவருக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வழங்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் பள்ளிகள்
மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. ஓட்டுச் சாவடியாக செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், தங்களது பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து ஒவ்வொரு வட்டார தொடக்க கல்வி அலுவலகத்திலும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக குடிநீர், மின்சாரம், கழிப்பறை வசதி உள்ளாதா? எந்த மாதிரியான கட்டடம், மராமத்து பணி தேவையா என்பது குறித்து விளக்கமும் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் கேள்விக்கு ஆசிரியர்கள் எழுத்து பூர்வமாக பதில் கொடுத்துள்ளனர்.

ஓட்டுச்சாவடியில் வாக்களிக்க வரும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் தேர்தல் கமிஷன் கேள்விகள் கேட்டுள்ளது. ஜனவரிக்குள், பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை செய்து முடிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

இதையடுத்து லோக்சபா தேர்தலுக்கு பள்ளிகளை தொடக்க கல்வித்துறையினர் தயார்படுத்தி வருகின்றனர்.
சென்னை பல்கலை: இளங்கலை படிப்புக்கான கால அட்டவணை வெளியீடு
சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்புக்கான கால அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

பி.ஏ., பி.எஸ்சி, பி.காம்.,(கோ-ஆப்ரேஷன்ஸ்), பி.சி.எஸ், பி.காம்.,கார்போரெட் சிக்ரேட்டரிஷிப், பி.லிட், பி.எஸ்சி., விசுவல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட படிப்புகளுக்கான (2005-06) கல்வியாண்டில் விண்ணப்பித்தவர்கள் கால அட்டவணையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கால அட்டவணையை பார்க்க www.ideunom.ac.in என்ற இணையதளத்தை காணலாம்.
சிறப்பு கட்டணத்தை ஈடுசெய்ய அரசு பள்ளிகளுக்கு ரூ.52 லட்சம் ஒதுக்கீடு
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் இருந்து பெறப்படும் சிறப்பு கட்டணத்தை (ஸ்பெஷல் பீஸ்) ரத்து செய்த ஈரோடு மாவட்டத்துக்கு, 52 லட்சம் ரூபாயை அரசு வழங்கி உள்ளது.


தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் மற்றும் நிதியுதவி பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளிடம் மிக குறைந்த கட்டணம் சிறப்பு கட்டணமாக பெறப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தில் இருந்து பள்ளிகளுக்கு தேவையான சிறுசிறு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள பள்ளிகளிலேயே அந்தந்த தலைமையாசிரியர் இந்நிதியை கையாள அரசு அனுமதி வழங்கி இருந்தது.

அரசு பள்ளிகள் மாநகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் ப்ளஸ் 2 வரை சேர்க்கப்படும் மாணவர்கள் மற்றும் பள்ளியில் தொடர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகளிடம் பெறப்பட்டு வரும் சிறப்பு கட்டணம் 2008-09 ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டன.

அரசே முழு கட்டணத்தையும் மாணவர்களுக்காக ஏற்றுக் கொண்டு, பள்ளிகளுக்கு ஏற்படும் நிதியிழப்பை ஈடு செய்ய, சிறப்பு கட்டணத்தை ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு அரசு வழங்கி வருகிறது.

தமிழகம் முழுவதும், 2011-12ம் ஆண்டு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும், 21 கோடி ரூபாயும், மாநகராட்சி பள்ளிகளுக்கு 50 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது. இதேபோல், 2012-13ம் ஆண்டுக்கு 20.50 கோடி ரூபாயும், 2013-14ம் ஆண்டுக்கு, 20.50 கோடி ரூபாயும் அரசு ஒதுக்கியது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு, இந்தாண்டுக்கான சிறப்பு கட்டணம் வழங்குவதற்கான ஆணை தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 192 அரசு, மாநகராட்சி மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 2012-13ம் ஆண்டுக்கு 54 லட்சம் ரூபாயும், 2013-14ம் ஆண்டுக்கு 52 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம், ஐந்து லட்சத்துக்கும் மேலான மாணவ, மாணவிகள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், சைக்கிள், ப்ளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு லேப் டாப், ஒன்று முதல், ப்ளஸ் 1 வரை புத்தகப் பை, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டி, ஒன்று முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு, இரண்டு செட் இலவச சீருடை வழங்கப்படுகிறது.

தவிர, முதல் வகுப்பிலிருந்து, ப்ளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ், கலர் கிரையான்ஸ், கலர் பென்சில்கள் போன்ற, 16 வகையான இலவசப்பொருள்கள் அரசு வழங்கும் நிலையில், மாணவர்கள் செலுத்தி வந்த சிறப்பு கட்டணத்தையும் அரசு ரத்து செய்துள்ளது. அதனால் ஏற்படும் நிதியிழப்பை பள்ளிகளுக்கு வழங்கி அடிப்படை வசதிகள் தடையின்றி வடக்க வழி செய்துள்ளது.

இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால், மாணவ, மாணவிகளுக்கு குடிநீர், கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகளை தொய்வின்றி மேற்கொள்ள முடியும், என, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment