மொஹரம் விடுமுறை 14ஆம் தேதிக்கு பதிலாக 15ஆம் தேதிக்கு மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு:
மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 14ம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.
பிறை தென்படாததால் நவம்பர் 15ம் மொஹரம் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதனால் 14ஆம் தேதிக்கு பதிலாக 15ஆம் தேதிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
|
தமிழக அமைச்சர்கள் இலாகா மாற்றம்:
பள்ளிக் கல்வித் துறையுடன், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறையில் பொறுப்பு வகித்திருந்த அமைச்சர் கே.சி.வீரமணி, இனி பள்ளிக்கல்வியுடன் தொல்லியல் துறை, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் கலாச்சாரத் துறையையும் அவர் கவனிப்பார்.
|
டி.இ.டி. தேர்வு: தேர்ச்சி பெறாதவர்களை குறி வைத்து உலா வரும் ஊழல் கும்பல்கள்:
தமிழ்நாடு முழுவதும் டி.இ.டி. தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் வேலை கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வெற்றி பெறாதவர்களையும் வெற்றி பெறவைக்கும் முயற்சியில் தமிழ்நாடு முழுவதும் ஊழல் கும்பல் ஒன்று முழு முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 17, 18ம் தேதியில் டி.ஆர்.பி. மூன்றாவது முறையாக டி.இ.டி. தேர்வை நடத்தியது. இதில் முதல் தாள் தேர்வை 2.62 லட்சம் பேரும்,இரண்டாம் தாளை 4 லட்சம் பேரும் எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் தயாராக இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.தேர்வு எழுதிய 6.6 லட்சம் பேரில் 27 ஆயிரத்து92 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 4.09 சதவீதம் தேர்ச்சியாகும். கடந்த ஆண்டை விட 1.1 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும், இரண்டாம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் 15 ஆயிரம் பணியிடங்கள் வரை காலிப்பணியிடங்கள் இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் 10 ஆயிரத்து 500 இடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. தொடக்கல்வித்துறையில் ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்ச்சி பெற்றவர்களில் இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டையும் சேர்த்து மொத்தம் 15 ஆயிரம் காலிப்பணியிடங்கள் வரை நிரப்பபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம். ஆனால் அரசு தரப்பிலும், கல்வித்துறை மற்றும் டி.ஆர்.பி. சார்பில் இதுவரை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை திட்டவட்டமாக வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் டி.ஆர்.பி.யின் வெளிப்படைதன்மையின்மையை சாதகமாக்கி கொண்டு ஒரு சில ஊழல் கும்பல்கள் 1 அல்லது 4மார்க் வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக தமிழ்நாடு முழுவதும் ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது.
இதைப்போல் பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வுக்கு வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்களிலும் குளறுபடி செய்து மதிப்பெண்களை கூட்டி போட செய்யமுடியும் என்று ஒரு கும்பல் களமிறங்கியுள்ளது. இதனால் முறையாக படித்து தேர்ச்சி பெற்று இருப்பவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
ஏற்கனவே காலிப்பணியிடங்களை விட கூடுதல் தேர்ச்சி சதவீதம் பெற்றுள்ள நிலையில் இப்படி ஒரு அதிர்ச்சி தகவல் மேலும் அவர்களை அச்சத்துக்குள்ளாக்கி இருக்கிறது. காரணம் டி.ஆர்.பி., இதுவரை 3 டி.இ.டி. தேர்வுகளை நடத்தி முடித்துள்ளது. இதில்3 தேர்வுகளிலும் கேள்விகள் எடுப்பதில் குளறுபடி, தேர்ச்சியில் குளறுபடி, சரியான விடைகள் வழங்காததில் குளறுபடி என்று20க்கும் மேற்பட்ட வழக்குகளை சந்தித்துள்ளது. இன்னும் ஒரு சில வழக்குகளுக்கு முடிவு எட்டவில்லை.
தற்போது வெளியிட்டுள்ள டி.இ.டி. தேர்விலும் சரியான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் வழங்கவில்லை என்று ஏராளமானோர் புகார் தெரிவித்துவருகின்றனர். இப்படிபட்ட சூழ்நிலையில் ஊழல் கும்பலால் அரசும், டி.ஆர்.பி.யும் கெட்ட பெயர் எடுக்காமல் இருக்க தேர்வு முறையில் ஒரு வெளிப்படைதன்மை இருக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
|
ஆசிரியர் தகுதி தேர்வால் மாணவர்களின் கல்வி பாதிப்பு:
ஆசிரியர் தகுதித்தேர்வால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவருகிறது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் பெற தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் 5 ஆண்டிற்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பின் போது தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் கடந்த டிசம்பரில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தின் போதே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில் நிரந்தரம் இல்லாமல் பணியாற்றி வந்த சுமார் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு செல்வதை நிறுத்தினர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்டில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு தற்போது முடிவு வெளியடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் சுமார் 15 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய தேர்வு முடிவில் இதே அளவிலேயே தேர்ச்சி விகிதம் இருப்பதால் இவர்கள் அரசு பள்ளிகளிலேயே நியமனம் செய்யப்படுவர். இதனால் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியும் என்பதால் தேர்ச்சியடைந்தோர் அரசு பள்ளிகளிலேயே பணிபுரிய விரும்புவர். அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு செல்வார்களா என்பது கேள்விக்குறியே.
இதனால் இப்பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்பு அறிவித்தது போல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்று 5 ஆண்டுகளுக்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சியடைய வேண்டும் என்பதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனர்.
|
Public Services – Equivalence of Degree – various educational qualifications possessed by the candidates as equivalent to the courses offered by the various Universities – Recommendation of Equivalence Committee –Orders – issued.
|
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: பி.எட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட்., நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதத்தில் பி.எட்-எஸ்இ., படிப்பில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை அறிய www.tnou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
|
தேசிய கல்வி தினம்: அபுல் கலாம் ஆசாத்தை நினைவு கூர்வோம்:
இந்தியாவில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், கல்வி துறை அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளையே, ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.
1888ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி மௌலானா கைருதுனுக்கும், அலியாவுக்கு மகனாக பிறந்தார் மௌலான அபுல் கலாம் ஆசாத். அவரது கல்வியறிவை கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் கற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்வி அமைச்சராக பொறுப்போற்றார். 1947 முதல் 1958 வரை கல்வி அமைச்சர் பதவியில் இருந்தார்.
சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார். ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார்.
வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார். உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார்.
"மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள்" என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத். அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார்.
தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார். 1951ல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மும்பை, சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐஐடி.,க்கள் அமைக்கப்பட்டன. 1955ல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது.
நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை...ஆரம்பப் பள்ளிகளில் உள்ளது என்றார். நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழி நடத்திச் சென்றார்.
அனைத்து மாணவர்களுக்கும் சாதி, மத, இன பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் ஆசாத். 14வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார்.
மெளலானா அபுல் கலாம் ஆசாத் தனது 69ம் வயதில் தில்லியில் காலமானார். இந்திய நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான "பாரத ரத்னா" இவரது மறைவுக்கு பின் 1992ல் வழங்கப் பட்டது.!
|
ஒரு பெண் குழந்தைக்கு யுஜிசி வழங்கும் உதவித்தொகை:
வீட்டில் ஒரு பெண் குழந்தைக்கு முதுகலை பட்ட படிப்பு படிக்க கல்வி உதவித்தொகையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
ஒரு குடும்பத்தில் வேறு எந்தக் குழந்தைகளும் இல்லாமல் ஒரே ஒரு பெண் குழந்தையாகவோ அல்லது இரட்டை பெண் குழந்தைகளாகவோ பிறந்து, 2013-14 கல்வியாண்டில் நேரடி முதுநிலை பட்டப் படிப்பு முதலாம் ஆண்டில் சேர்ந்திருப்பவர்கள் இந்த கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இதற்கு www.ugc.ac.in/sgc என்ற யுஜிசி இணைய தளத்தில் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 9ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். யுஜிசி நியமித்துள்ள செயற்குழு இறுதி செய்யும் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
|
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு அரசு அறிவித்துள்ள மாற்றங்கள்:
தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் பெறும் மதிப்பெண்களே அடுத்தடுத்த உயர்கல்விகளுக்கு வழிகாட்டுகிறது. வரும் மார்ச் முதல்
நடக்க இருக்கும் பொதுத்தேர்வுகளில் தற்போது பல்வேறு மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு தேர்வெழுதும் மாணவரிடம் மெயின் சீட் வழங்கப்பட்டு, கூடுதலாக எழுதுவதற்கு அடிசனல் சீட்கள் அடுத்தடுத்து வழங்கப்படும். ஆனால் தற்போது 12ம் வகுப்பிற்கு 40பக்கங்களும், 10ம் வகுப்பிற்கு 30 பக்கங்களும் கொண்ட மொத்தமாக பைன்ட் செய்த கோடிங் ஷீட் பண்டல் வழங்கப்படும். இதனால் கூடுதல் பேப்பருக்கு மாணவர் எழுந்து நிற்பதும்,ஆசிரியர் கையெழுத்துப் பெற்று ஒவ்வொரு முறையும் பேப்பர் வழங்குவதும் இருக்காது. இதனால் மாணவர், ஆசிரியர் நேர விரயம் தடுக்கப்படுவதுடன், ஒரு மாணவரது அடிசனல் ஷீட்டை வாங்கி மறைத்து வைத்து மற்றொரு மாணவர் காப்பியடிப்பதும் தடுக்கப்படும்.
இதேபோல் ஒரு தேர்வு மையத்திற்கு அதிகபட்சம் 400 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத முடியும். அதற்கும் மேல் மாணவர்கள் இருந்தால் அருகாமை பள்ளி தேர்வு மையத்திற்கு மாற்றப்படுவர். அல்லது அதே பள்ளியில் கூடுதல் மாணவர்களுக்கென மற்றொரு தேர்வு மையம் ஏற்படுத்தப்படும். இதுதவிர, முன்பு தேர்வு மையத்திற்கு வரும் ஒவ்வொரு வினாத்தாள் கட்டிலும், குறைந்தது நூறு வினாத்தாள்கள் இருக்கும். தேர்வு மைய அதிகாரிகள் இதனைப் பிரித்து, ஒவ்வொரு அறையிலும் இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்குவர். ஆனால் இனிமேல், ஒரு அறைக்கு 20 மாணவர்களுக்கு மட்டுமே தேர்வெழுத இடம் ஒதுக்கப்படும். ஒவ்வொரு வினாத்தாள் கட்டிலும் 20வினாத்தாள்களே இருக்கும். இதனால் வெளியில் உடைக்கப்பட்டு,வினாத்தாள் அவுட் ஆகி விட்டது என்ற குற்றச்சாட்டுகள் வராது.
|
உலக செஸ் போட்டி: மாணவ, மாணவிகள் பங்கேற்பு:
சென்னையில் துவங்கிய உலக அளவிலான செஸ் போட்டியில், ஈரோடு மாவட்டத்தின் சார்பில் 24 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.தமிழக அரசு பள்ளி மாணவர்களின் திறமையும், ஆற்றலையும் வலுப்படுத்தவும், சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும், ஏழு முதல் 17 வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லும் மாணவர்களுக்கு, செஸ் விளையாட்டு போட்டிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
பள்ளிகளில் செஸ் விளையாட்டு மேம்பாட்டுக்காக, 39.47 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியது.பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, குறுமைய அளவிலும், குறுமைய அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு, யூனியன் அளவிலும், யூனியன் அளவில் வெற்றி பெற்றவர்கள், கல்வி மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் வருவாய், மண்டல அளவில் வெற்றி பெற்று, உலக செஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெறுவர். ஈரோடு மண்டலத்தில் மட்டும், 24 மாணவ, மாணவிகள் உலக செஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
சென்னையில் நடக்கும் செஸ் போட்டியில், 24 மாணவர்களும் பங்கேற்று விளையாடியதாக, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சித்தையா தெரிவித்தார்
|
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டி.என்.பி.எல்.,லில் கல்விச் சுற்றுலா:
டி.என்.பி.எல்., நிறுவனத்தினருக்கும், அரசு கல்வி நிறுவனங்களுக்கும் இடையில் ஒரு நல்லுறவை வளர்க்கும் விதமாக, நிறுவனத்தைச் சுற்றி அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ப்ளஸ் 1 பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கு, காகித ஆலையைச் சுற்றிப்பார்க்க "கல்விச் சுற்றுலா" என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் காலை, 10.30 மணி முதல், மதியம் 2.30 மணி வரை, காகித ஆலையை சுற்றுபார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் புன்னம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரிடம் காகிதம் தயாரிப்பது பற்றிய விளக்கமும், காகித நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும், காகித நிறுவனத்தின் பொது மேலாளர் (மனிதவளம்) பட்டாபிராமன் கூறினார்.
அதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம், பெருந்துறை கொங்கு இன்ஜினியரிங் கல்லூரியின் நிர்வாகம் மற்றும் மேலாண்மைத் துறையைச் சார்ந்த பேராசிரியர் ஞானஜோதி திறன் மேம்பாட்டு வகுப்பு நடத்தினார். இந்த ஆண்டில் புகளூர், நொய்யல், புன்னம், வாங்கல் பகுதியில் அமைந்துள்ள, ஆறு அரசினர் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
வாரந்தோறும் இச்சுற்றுலாவிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் வந்து செல்ல ஏதுவாக பேருந்து வசதி மற்றும் ஆலை வளாகத்தில் தேநீர் வசதி மற்றும் மதிய உணவும் வழங்க நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. சுற்றுலாவின் இறுதியில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களும் நினைவுப் பரிசாக வழங்கப்படுகிறது.
|
No comments:
Post a Comment