Sunday, December 29, 2013

துணை கலெக்டர் உள்பட 4 பதவிகளுக்கான குரூப்–1 முதல் நிலை தேர்வு,


துணை கலெக்டர் உள்பட 4 பதவிகளுக்கான குரூப்–1 முதல் நிலை தேர்வு, 2014 ஏப்ரல் 26–ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாட்டில் காலியாக உள்ள துணை கலெக்டர் பதவி(3 இடம்), துணை போலீஸ் சூப்பிரண்டு பதவி(33), உதவி கமிஷனர் பதவி(33), கிராமப்புற வளர்ச்சி துறை உதவி இயக்குனர் பதவி(10) உள்பட 4 உயர் பதவிகளுக்கான 77 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் முடிவு செய்து உள்ளது.

இதற்கான முதல் நிலை தேர்வை 2014 ஏப்ரல் 26–ந் தேதி நடத்த உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net என்ற இணையதளங்கள் வாயிலாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்ச வயது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று சட்டம் பயின்றவர்களுக்கு 1 ஆண்டு வயது வரம்பு சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 28–ந் தேதி கடைசி நாள் ஆகும்.

தமிழக அரசு ஆணையின்படி, இந்த தேர்வில், தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குரூப்–1 முதல்நிலை தேர்வானது 3 மணி நேரம் நடைபெறுகிறது.

இதில் 150 பொது அறிவு வினாக்கள், 50 திறனாய்வு வினாக்கள் என மொத்தம் 200 கொள்குறி(Objective) வகை வினாக்கள் கேட்கப்படும்.

குரூப்–1 முதல்நிலை தேர்வானது, சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், அரியலூர், திருச்சி, சிதம்பரம், கோவை, ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாகர்கோவில், நாகப்பட்டினம், நாமக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை உள்பட 33 மையங்களில் நடைபெற உள்ளது.

தேர்வு கட்டணமாக 125 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இ–மெயில் முகவரி மற்றும் கைபேசி எண்களை தவறாமல் குறிப்பிட வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
CLICK HERE FOR ALL STUDY MATERIALS

No comments:

Post a Comment