வி.ஏ.ஓ., தேர்வு முடிவை வெளியிட தடை கோரி மனு
வி.ஏ.ஓ. தேர்வு முடிவை வெளியிட தடை கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
முதுகுளத்தூர் அருகே கீழகன்னிசேரி சரவணன் உட்பட, 4 பேர் தாக்கல் செய்த மனு: வி.ஏ.ஓ.,க்கள், 3488 பேரை நியமனம் செய்ய, 2011 பிப்., 20 ல் தேர்வு நடந்தது. இதில், ஆதி திராவிடர்களுக்கான, 1077 பின்னடைவு பணியிடங்கள் அடங்கும். நாங்கள் தேர்வு எழுதினோம். 2011 ஜூலை, 19 ல் முடிவு வெளியிடப்பட்டது.
பின்னடைவு பணியிடங்களில், 270 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். பணியில் சேராதவர்கள், பணியிலிருந்து விலகியவர்கள், வேறு வேலைகளுக்குச் சென்றவர்களால் ஏற்படும், காலிப் பணியிடங்களில் எங்களை நியமிப்பதாக, அரசு தெரிவித்தது. மேலும், 1870 வி.ஏ.ஓ.,க்களை நியமிக்க, 2012 ஜூலை, 9 ல் அரசு அறிவிப்பு வெளியிட்டது.
ஏற்கனவே, பணியில் சேராமல் ஏற்பட்ட, காலி இடங்களையும் சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். குரூப் 2 தேர்வில், ஏற்கனவே வி.ஏ.ஓ.,தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் பங்கேற்றுள்ளனர். இதனால், காலிப் பணியிடங்கள் ஏற்படும். முதலில், வி.ஏ.ஓ., தேர்வு முடிவு வெளியிட்டால், எங்களது உரிமை, பணிவாய்ப்பு பாதிக்கப்படும்.
குரூப் 2 தேர்வு முடிவை முதலில் வெளியிட வேண்டும். வி.ஏ.ஓ.,தேர்வு முடிவை வெளியிட, தடை விதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

|
பள்ளி கல்வித்துறையின் விஷன் 2024: அரசு பள்ளிகளில்100% தேர்ச்சி
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 2024ம் ஆண்டில், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டுவதற்கு, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அரசு, தனியார், உதவிபெறும் பள்ளிகள் என, ஒட்டுமொத்தமாக, 55 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், 1.35 கோடி மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 5.5 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பல ஆண்டுகளாக இருந்து வந்த கல்விமுறை, முந்தைய தி.மு.க., ஆட்சியில் மாற்றப்பட்டு, சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது.
அ.தி.மு.க., அரசு, இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, 1 முதல் 8ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறை திட்டத்தையும், தொடர் மதிப்பீட்டு முறை திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளது. கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம், தொடர்ந்து ஒரே அளவில் இருந்து வருகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதம், 85 முதல், 87 வரை இருந்து வருகிறது. இதிலும், தனியார் பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி கணிசமாகவும், அரசுப் பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சி குறைவாகவும் உள்ளது. மேலும், தென் மாவட்டங்கள், கல்வி தரத்தில் உயர்ந்தும், வடமாவட்டங்கள் தாழ்வான நிலையிலும் உள்ளன.
இந்த முரண்பாடுகள் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து, கடந்த பொதுத்தேர்வு தேர்ச்சியின் அடிப்படையில், பள்ளிக் கல்வித்துறை, விவரமாக ஆய்வு நடத்தி உள்ளது. ஒட்டுமொத்த தேர்ச்சியில், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைவதற்கான காரணங்களை ஆய்வு செய்ததில், தேர்ச்சி குறைந்த அனைத்துப் பள்ளிகளிலும், ஆசிரியர் பற்றாக்குறை அல்லது ஏற்கனவே உள்ள பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.
பிளஸ் 2 தேர்ச்சி குறித்த ஆய்வு விவரம், தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, கணிதப் பாடத்தில், 10.8 சதவீதம் பேரும், வணிகவியல் பாடத்தில், 8.9 சதவீதம் பேரும் தோல்வி அடைந்துள்ளனர். பாட வாரியாக, அரசுப் பள்ளி மாணவர்கள் அடைந்துள்ள தோல்வி குறித்து, கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலப் பாடத்தில் தான், மிகக் குறைவான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
தமிழில், 0.8 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில், 2.20 சதவீதம் பேரும் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திலும், மிகக் குறைவாக, 0.8 சதவீத மாணவர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளனர். 2,243 அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பெற்ற சராசரி மதிப்பெண்கள், 682. அரசுப் பள்ளி மாணவர்களில், 77 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். அதுவே, தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம், 93.6 ஆக உள்ளது.
இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது, இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு எடுத்துவரும் தொடர் சீர்திருத்த நடவடிக்கைகளால், அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து வருகிறது. கடந்த பிளஸ் 2 தேர்வில், 325 அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளை மிஞ்சி, 93.6 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.
தேர்ச்சி சதவீத முரண்பாடுகளை களைந்து, 2024ம் ஆண்டு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி மற்றும் கல்வி தரத்தில், சரிசமமான நிலையை ஏற்படுத்த வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப, சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள், வரும் கல்வியாண்டு துவங்குவதற்கு முன் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் பாதிப்பை தவிர்க்க, தற்காலிகமாக, பெற்றோர்-ஆசிரியர் கழகம் சார்பில், ஆசிரியரை நியமித்துக்கொள்ள, பள்ளி நிர்வாகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திறமையான ஆசிரியர் பயிற்றுனர்களை, ஆசிரியர் பணிக்கு மாறுதல் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி குறைந்த அரசுப் பள்ளிகளில், பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு, தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது உடன், பாட நிபுணர்களின், வழிகாட்டுதல்களும் அளிக்கப்படும். இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், இலக்கை எட்ட முடியும் என, நம்புகிறோம். இவ்வாறு, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


|
உடற்கல்வி ஆசிரியர் 1,000 பேர் நியமனம்
கல்வித்துறையில், நான்காவது நாளாக நேற்று நடந்த பணி நியமன கலந்தாய்வில், உடற்கல்வி ஆசிரியர், 1,025 பேர் உட்பட, 1,453 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
கடந்த, 21ம் தேதி, அமைச்சுப் பணியில் இருந்து, தகுதி வாய்ந்தவர்களுக்கு, முதுகலை ஆசிரியர் பணி வழங்குவதற்கான கலந்தாய்வு நடந்தது. 22ம் தேதி, ஓவிய ஆசிரியர் நியமன கலந்தாய்வும்; 23ம் தேதி, காவலர் மற்றும் துப்புரவு பணியாளர் நியமன கலந்தாய்வும் நடந்தது. நான்காவது நாளான நேற்று, 1,025 உடற்கல்வி ஆசிரியர், கலை ஆசிரியர், 304 பேர், தையல் ஆசிரியர், 84 பேர் மற்றும் இசை ஆசிரியர், 40 பேர் உட்பட, 1,453 பேருக்கான நியமனம் நடந்தது.
அந்தந்த மாவட்ட தலைமை இடங்களில், இணையதளம் வழியாக, கலந்தாய்வு நடந்தது. சென்னை மாவட்டத்தில், உடற்கல்வி ஆசிரியர், 31 பேர், இசை ஆசிரியர், இரண்டு, ஓவிய ஆசிரியர், நான்கு, தையல் ஆசிரியர், மூன்று பேர் என, 40 ஆசிரியர் பணியிடங்கள், ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்கான கலந்தாய்வு, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.
"மாநிலம் முழுவதும், அனைத்து பணி நியமனங்களும் நடந்து முடிந்தன; 1,453 பேருக்கும், சம்பந்தபட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பணி நியமன உத்தரவுகளை வழங்கினர்&' என, பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

|

|
No comments:
Post a Comment