வாசித்து மகிழ்வோம்
அரசு மேல் நிலைப் பள்ளி,சத்தியமங்கலம்
அடுத்தவர்
பொருளுக்கு ஆசைப்பட்டால்...
இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன.
ஒருநாள், இரை தேட அவை இரண்டும்
வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின்
கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.
சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது.
கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, "குருவி அக்கா. எங்கள்
வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே
போய்விடு" என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.
"போடி போ. உன்னால்
முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப்
போகமாட்டேன்" என்று குருவி மறுத்து விட்டது.தூக்கணாங்குருவி அங்கிருந்து
வருத்தத்துடனும், யோசனையுடனும்
பறந்து போனது.
சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து
"அப்படிப்போடு...........அப்படிப்போடு" என்று ஜாலியாகக் பாடிக்
கொண்டிருந்தது.
திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும்
ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின்
வாசல் குறுகிக் கொண்டே போனது.
முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று
தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே
தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப்
பூசிவிட்டுப் பறந்து போயின.அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று
தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.
அம்மா சொல் கேள்!
செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை
மேய்த்துக்கொண்டு வந்தவன்,
மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல்
வாசித்துக்கொண்டிருந்தான்.புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து
கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப்
பார்த்தது.வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல
பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, "உனக்கு என்னவேண்டும்?" என்று கேட்டது.ஓநாயும்
"நண்பா, நண்பா...இங்கே
இளசான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப்
பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று
தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கெல்லாம் அந்த யோகம்
கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை....." என்று வருத்தத்துடன்
கூறியது."அப்படியா! நீ
புல்லா சாப்பிடுவாய்? நீ
மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?" என்று ஆச்சரியத்துடன்
கேட்டது ஆட்டுக் குட்டி."சேச்சே...அதெலாம்
சுத்தப் பொய்!" என்றது ஓநாய்."அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம்
இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச்
சுற்றலாம்!" என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக
நுழைந்து, ஓநாயின் பக்கம்
போயிற்று."உடனே ஓநாய்
அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத்
தெரியவில்லை. அது போகட்டும், பரவாயில்லை...அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை
கேட்டிருந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது
அல்லவா?
அன்பின் மதிப்பு
குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த
படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள்
வந்துகொண்டிருந்தனர்.
ஒருநாள், சில பெரிய
மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்துப்
பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே
வந்து நின்றான்.அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன்
கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அறிவித்தன.அவன்
மன்னனிடம், "அரசே........உங்கள்
உடல் தேறவேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் படைத்தேன். அந்தப்
பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். அம்மன் பிரசாதத்தைச்
சாப்பிட்டால் எந்த நோயும் பறந்து ஓடிவிடும்" என்றான்.
அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப் போன நாற்றம்
அடித்தது. அங்கிருந்த பிரமுகர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். முகம்
சுளித்தார்கள். அரசனோ, பிரசாதத்தைப்
பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில்
இருந்து முத்துமாலையைக் கழற்றி எடுத்து, அந்த விவசாயிக்கு பரிசளிக்க அளித்து அனுப்பினான்.
மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், "அரசே, கெட்டுப் போன பொங்கலுக்கா
முத்து மாலை பரிசு?"
என்று கேட்டார். மன்னனோ, "அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான்
சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று விரும்பி கள்ளங்கபடமற்ற மனதுடன் தன்
கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான். அவனது அன்பு உண்மையானது.
போலித்தனம் இல்லாதது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த
முத்துமாலைகூட அவனது அன்புக்கு ஈடாகாது" என்று கூறினான்.நமது அன்பு உண்மையாக
இருந்தால், கடவுளே கையைக்
கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய
வந்து நிற்பார்.
No comments:
Post a Comment