Tuesday, June 25, 2013

நிறைய மதிப்பெண் வேண்டுமா?
கோடை விடுமுறை முடிந்து, மாணவர்கள் புதிய கல்வி ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளனர். சென்ற ஆண்டு படித்ததை விட, இந்தாண்டு நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம், ஆசை மாணவர்களிடம் இருக்கும். அதற்கு எப்படி தயாராகப் போகிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது.
ஒன்றாம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை, படிப்பு கடினமாக தோன்றுவதற்கு காரணம், தேர்வுகளும் தொடர்ந்து வரும் முடிவுகளும். நமது கல்வி இதுவரை, மதிப்பெண் முறையை வைத்து தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. மார்க் அதிகம் எடுத்தால் தான் சமுதாயத்தில் மதிப்பு என்ற நிலை உள்ளது. எப்படி படிக்க வேண்டும்:

* ஒவ்வொரு நாளும் ஆசிரியர் நடத்தும் பாடங்களை, அன்றே படிக்கம் பழக்கத்தை கடைபிடித்தால் அதிக மதிப்பெண் எடுக்கலாம்.

* புத்தகத்தை எடுக்கும் போது, புன்னகையுடன் எடுங்கள். புத்தகத்தை விரும்பி எடுத்தால் தான் நீண்ட நேரம் படிக்க தோன்றும். பெற்றோர், ஆசிரியர் வற்புறுத்தலுக்காக, புத்தகத்தை எடுத்தால் நன்றாக படிக்க முடியாது. மனப்பாடம் செய்யாமல் புரிந்து படித்தால், அதிக காலம் நினைவில் நிற்கும்.

* சில பாடங்கள் நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருக்கும். அவற்றை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டு பாருங்கள். அது ஆர்வத்தையும், அதிலிருந்து புதிதாக மேலும் சில விஷயங்களை கற்றுக்கொள்ளவும் தூண்டும்.

* ஒரு பாடத்தை ஆசிரியர் நடத்தும் முன்பே, வாசித்துப் பாருங்கள், சில பகுதி புரியும்; சில பகுதிகள் புரியாது. புரியாதவற்றை குறித்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் ஆசிரியர் பாடம் நடத்தும் போது, நீங்கள் புரிந்து கொண்டது சரிதானா என சோதித்துப் பாருங்கள். புரியாதவற்றை ஆசிரியர் நடத்தும் போது அறிந்து கொள்ளுங்கள். ஒரு பாடம் நடத்துவதற்கு முன், அந்த பாடத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் இருப்பதற்கு பதில், சில பகுதிகள் தெரிந்து பாடத்தை கவனிக்கும் போது, கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும். கேள்வி கேட்கவும் தோன்றும்.

* ஒவ்வொரு மாணவருக்கும், ஒரு விதமான படிக்கும் முறை இருக்கும். சிலர் நடந்துகொண்டே படிப்பர். சிலர் சப்தமாகவும், சிலர் மனதுக்குள்ளேயும், சிலர் அதிகாலையிலும், சிலர் இரவிலும், சிலர் குழுக்களாகவும் படிப்பர். எந்த முறை உங்களுக்கு ஒத்து வருகிறதோ, அதைத் தேர்ந்தெடுத்து படியுங்கள்.

* படித்தவற்றை எழுதிப் பாருங்கள். 10 முறை படிப்பது, ஒருமுறை எழுதிப்பார்ப்பதற்கு சமம். தொடர்ந்து பல மணி நேரம் படிப்பதை விட, சிறிது நேரம் விளையாடுவது, சாப்பிடுவது, இசை கேட்பது என செய்து விட்டு மீண்டும் படித்தால், புத்துணர்ச்சியோடு படிக்கலாம்.

* நம்மால் முடியாது, நமக்கு படிப்பு வராது, குறைந்த மதிப்பெண்களே எடுக்க முடியும், என எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள். ஆசிரியரிடம் சந்தேகங்களை கேட்பதற்கு தயங்கக் கூடாது. நன்றாக படிக்கும் மாணவர்களிடமும் சந்தேகத்தை கேளுங்கள். ஒரு பாடம் புரியவில்லை என்றால், விட்டுவிட்டு அடுத்த பாடத்துக்கு செல்லாமல் மீண்டும் மீண்டும் படித்து பாருங்கள், எளிதாக புரியும்.

* டிக்ஷனரி பயன்படுத்தும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். ஏதாவது வார்த்தை புரியாமல் இருந்தால், விட்டுவிடாமல் அதில் பார்த்துக் தெரிந்து கொள்ளலாம். தினமும் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

கல்வி ஆண்டின் தொடக்க நாளில் இருந்து படித்தால், ஆண்டின் இறுதியில் கண்டிப்பாக வெற்றிக்கோட்டை எட்டலாம்.
01.04.2013 க்கு முன்னர் நிதியுதவி பள்ளியில் பணிபுரிந்து, பணி இடைமுறிவு இன்றி தற்போது அரசு பள்ளியில் பணியில் சேர்ந்து இருந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தில் தொடரலாம்.
திட்டம் இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவிற்கு உட்பட்டது - அரசு இணை செயலாளர்




அரசுப் பணியாளர் ஒருவர் பிற துறை / பிற மாநில அரசு / மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பித்தல் சார்பான விளக்கம்

          "ஆசிரியர் அல்லது அரசூழியர் ஒருவர் வேறு துறைப் பணிக்கான தகுதி பெற்றிருந்து அதே மாநில அரசின் பிற துறைப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அவர் நியமன அலுவலரிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும். பிற மாநில அரசின் பணிக்கும் மத்திய அரசுப் பணிக்கும் விண்ணப்பிக்கத் துறைத்தலைவரிடம்/ அரசிடம் தடையின்மைச் சான்று பெற வேண்டும்" என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஒழுங்காற்றுச் சட்டம் கூறுகிறது.
 
        NET, SLET, TNTET, TNPSC தேர்வுகள், TRB தேர்வு, துறைத் தேர்வு போன்ற தேர்வுகள் எழுத அலுவலகத் தலைவரிடம் அனுமதி பெற வேண்டும்.

         உயர்கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள நியமன அதிகாரியிடம் அனுமதியும் தடையின்மைச் சான்றும் பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வேறு பணிக்காகத் தெரிவு செய்யப்படும் நேர்வில், தற்போதுள்ள பணியிலிருந்து விடுவிப்புப் பெறவும் முந்தைய பணிக்காலத்தைப் புதிய பணிக்காலத்துடன் சேர்த்துக் கொள்ளவும் சிக்கல் ஏற்படாமல் சுலபமாக அமையும்.

தொடக்கக் கல்வித் துறை:
அலுவலகத் தலைவர்- உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்.
நியமன அலுவலர்- மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்.
துறைத் தலைவர்- இயக்குநர்.

பள்ளிக் கல்வித் துறை:
அலுவலகத் தலைவர்- தலைமையாசிரியர்.
நியமன அலுவலர்- மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
துறைத் தலைவர்- இயக்குநர்.

குறிப்பு:
        ஒரு பணியிலிருந்து வேறு பணிக்கு நியமனம் மூலம் செல்கையில் முந்தைய பணிக்காலம் மட்டுமே இறப்பு மற்றும் ஓய்வுக்காலப் பலன்கள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்றவற்றின் கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும். முந்தைய சம்பளம் எந்த விதத்திலும் கருதப்படமாட்டா. அதாவது புதிய பணியில் நுழைவுநிலை ஊதியம் மட்டுமே வழங்கப்படும். ஊக்க ஊதிய உயர்வுக்குத் தகுதி இருப்பின் பெறலாம். ஒத்த பணியெனில் தேர்வுநிலை, சிறப்புநிலைக்குத் தகுதியுள்ள முந்தைய பணிக்காலம் எடுத்துக் கொள்ளப்படும். பழைய பணியிலிருந்து விடுவிப்பானவுடன் மீள்உரிமை துண்டிக்கப்படும். அதாவது ஒருவேளை புதிய பணியைத் தொடர்ச்சியாகச் செய்ய இயலாத நேர்வில் எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் பழைய பணிக்கு வந்து சேர எவ்வித வாய்ப்பும் வழங்கப்படாது. மீண்டும் போட்டித் தேர்வில் தேர்ச்சி அல்லது வேலைவாய்ப்பகப் பதிவு சீனியாரிட்டிப்படி தான் நியமனம் பெற முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

ஆங்கில பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் துவக்கம்

        "பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில், அடுத்த மாதத்தில் இருந்து, கல்லூரி மாணவர்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி துவங்கும்" என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

        தமிழகத்தில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், 160 விடுதிகளில் தங்கி, படிக்கின்றனர். இவர்களில், இளங்கலை முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களின், ஆங்கில பேச்சுத் திறனை வளர்க்கும் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முடிவு செய்தது.

         ஒரு மாணவருக்கு, 2,800 ரூபாய் வீதம், 6,500 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, 1.83 கோடி ரூபாய், ஒதுக்கப்பட்டு உள்ளது. பயிற்சி அளிக்க, ஏழு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

         அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அடுத்த மாத துவக்கம் வரை, மாணவர் சேர்க்கை நடக்கும் என தெரிகிறது. "முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்த உடன், ஆங்கில பயிற்சி வகுப்பு துவங்கப்படும்" என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment