Tuesday, January 22, 2013


புதிய சம்பளப் பட்டியல் சம்பந்தப்பட்ட மென்பொருள் (நியூ வெர்சன் 9.0) பெற அலுவலர்களுக்கு அழைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தானியங்கி கருவூல பட்டியல் ஏற்பளிப்பு திட்ட புதிய மென்பொருளை செவ்வாய்க்கிழமை (ஜன. 22) பெற்றுக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அகமது வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பட்டியல் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் அலுவலகங்களின் சார்பில் கணினி மூலம் தயாரிக்கப்பட்டு, மாவட்டக் கருவூலம், சார்நிலைக் கருவூலம் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்தப் பணிக்கான இதுவரை பயன்படுத்தப்பட்ட மென்பொருளின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. (நியூ வெர்சன் 9.0). 

இதை அரசு அலுவலகங்களின் பயன்பாட்டிற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்துகிறார்.இந்த மென்பொருளைப் பெற்றுக் கொள்ள, மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலம் மூலம் பணம் பெறும் அனைத்துத் துறை அலுவலர்களும் பென் டிரைவ் அல்லது சி.டி. யுடன் வந்து பெற்றுக் கொள்ளலாம்.
"நலத்திட்ட ஆசிரியர் பணியிடம் வேண்டும்" - Dinamani

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு பள்ளியிலும் நலத்திட்ட ஆசிரியர் பணியிடத்தை உருவாக்கவேண்டும் என  தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


  இச்சங்கத்தின் மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் வேலூர் ஆசிரியர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் டி. மனோகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் புண்ணியகோட்டி, பொருளாளர் வேதக்கண்தனராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:   மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை 100 சதவீதம் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கவேண்டும். மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு புதிதாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

  ஒவ்வொரு பள்ளிக்கும் தனியாக ஒரு நலத்திட்ட ஆசிரியர் பணியிடம் உருவாக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான அரசாணை 720-ல் திருத்தம் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
  இதேபோல ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் வேலூர் முஸ்லிம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  மாவட்டத் தலைவர் சிவராமன் தலைமை வகித்தார். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய நடைமுறையை கொண்டுவர வேண்டும், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை கால முறை ஊதியம் பெறும் வகையில் மாற்றவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதுமுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெறாமல் நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களின் ஒப்புதலை ரத்து செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதுமுள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் ( Aided School), சிறுபான்மை (Minority School) மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைத்தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டுமென குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சட்டத்தின் அடிப்படையில், 23-8-2010லிருந்து, அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் நியமனத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தால் அந்த நியமனத்தை ரத்து செய்து, அதுதொடர்பான ஆணையினை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அனுப்ப வேண்டும்.

மேலும் அது தொடர்பான விவரங்களையும், ரத்து ஆணையின் நகலினையும் தொலைநகலி மூலம் தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிப்பு

தேசிய சர்வேயின்படி, நாடு முழுவதும் மொத்தம் 23 கோடி குழந்தைகள், 13 லட்சம் பள்ளிகளில் பயில்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

பல்வேறான அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், 22.8 கோடி மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 1 முதல் 12ம் வகுப்பு வரை, 13.67% சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டில், 20.3 கோடி மாணவர்களே பள்ளிகளில் சேர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்களின் பள்ளி சேர்க்கை விகிதம் 19.1% அதிகரித்துள்ளது. சேர்க்கை விகிதங்கள் இவ்வாறு இருக்க, கிராமப்புற பள்ளிகளில், ஐந்தில், ஒன்றுக்கு குடிநீர் வசதியில்லை. பத்தில், 3 பள்ளிகளில் சிறுநீர் கழிக்கும் வசதியில்லை. ஏறக்குறைய பாதி பள்ளிகளில், விளையாட்டு மைதான வசதியில்லை.

அதேசமயம், இவற்றில் பல சிக்கல்களும் உள்ளன. பெண் குழந்தைகளின் கல்வியானது, தொடக்க கல்விக்குப் பிறகு, அதிகளவில் தடைபடுகிறது என்றும் அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் டியூஷன் எடுக்க தடை

மாணவர்களுக்கு டியூஷன்  எடுக்க புதிய ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் முதல் கட்டமாக ஜூலை மாதம் நடந்தபோது 2,800 பேர் தேர்ச்சி பெற்றனர். இரண்டாவதாக நடந்த துணைத் தேர்வில் 17,000 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 19,343 பேருக்கு பணி வழங்கப்பட்டது.  

 இவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையங்களில்(டயட்) இந்த பயிற்சி இன்று தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது.

இது தொடர்பாக  பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு:  அனைத்து மாணவர்களிடமும் அன்புடன் பழகுதல், வேறுபாடு பார்க்காமல் நடுநிலையுடன் நடத்தல், மாணவர்களுக்கு எந்த வகையிலும் அச்சுறுத்துதல் ஏற்படாத வகையில் நடத்தல், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அச்சுறுத்துவதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

மாணவர்களுக்கு கற்பிக்கும் போது நிகழும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து அவர்களுடன் எப்படி உரையாடுவது, சக ஆசிரியர்களிடம் கண்ணியமாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்வது, உள்ளிட்டவை சொல்லித்தர வேண்டும்.

 ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் யாரிடமும் நன்கொடை வாங்கக் கூடாது, மாணவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு டியூஷன் நடத்தக் கூடாது, பள்ளியில் உடன் பணியாற்றுவோர் மீதும், உயர் அதிகாரிகள் மீதும் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில் படிக்கும் பழக்கம் சிறப்பானது

அதிகாலையில் படிக்கும் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சிறந்த கல்விக்கு இது அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என, இலக்கியப் பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசினார்.


சென்னிமலை ஸ்ரீராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டுவிழா, கல்லூரித் தாளாளர் மக்கள் ஜி.ராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது விழாவில், நெல்லை கண்ணன் பேசியது:

இப்போதைய சமூக வாழ்க்கையில் மனிதர்களைச் சுற்றிலும் பல்வேறு தீமைகள் நிறைந்து கிடக்கின்றன. இவைகளில் இருந்து தப்பித்து வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் அன்பு, உண்மை, நேர்மை, ஒழுக்கம் போன்ற நல்ல பழக்கங்களை வாழ்க்கையோடு இணைத்துக் கொள்ள வேண்டும்.

இறை நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதன் மூலமாக தவறான பழக்கங்கள் ஏற்படாமல் காத்துக் கொள்ள முடியும். தாய், தந்தையரை மதிப்பதும், ஆசிரியரிடம் பணிவு கொள்வதும் சமூகத்தில் மதிப்பையும், வாழ்க்கையில் உயர்வையும் ஏற்படுத்திக் கொடுக்கும். எந்த ஒரு செயலையும் மகிழ்ச்சியுடனும் ஈடுபாட்டுடனும் செய்ய மாணவப் பருவத்திலேயே கற்றுக்கொள்ள வேண்டும். கல்வியைச் சுமையாக நினைக்காமல் வாழ்க்கையின் ஒருபகுதியாக நினைக்க வேண்டும். அதிகாலை நேரத்தில் கற்கும் கல்வி, ஆழ்மனதில் நிரந்தரமாகப் பதியும். அதிகாலையில் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என்றார்.

சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்க துணை இயக்குநர் பி.எம்.கவிமணி, எம்.பி.எம்.ஜெ. பொறியியல் கல்லூரித் தாளாளர் வசந்தா சுத்தானந்தன், குமாரவலசு ஊராட்சித் தலைவர் சத்தியபாமா, ஸ்ரீராஜீவ் காந்தி பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாக இயக்குநர் ஷோபனா ராஜன், பொருளாளர் செந்தில், முதல்வர் நரேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
1.21 லட்சம் மாணவர்களுக்கு கணித உபகரணப் பெட்டி

நாகை மாவட்டத்தில் 457 பள்ளிகளைச் சேர்ந்த 1.21 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள் வழங்கப்படவுள்ளன என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.


நாகை மாவட்டம், கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மு. ஆசியா மரியம் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் மேலும் பேசியது : 

நாகை மாவட்டத்தில் 457 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 1.21 லட்சம் பேருக்கு அரசின் விலையில்லா கணித உபகரணப் பெட்டிகள் வழங்கப்படவுள்ளன. இப்பணி, ஜன. 21-ம் தேதிக்குள் முடிவடையும்.

மாணவ, மாணவிகள் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் அறிவுரைகளைப் பின்பற்றி, நற்பண்புகளை வளர்த்துக் கொண்டு, கல்வியில் சிறந்து விளங்கி, வாழ்வில் உன்னத நிலையை அடைய வேண்டும். இதற்கு, ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார் அமைச்சர்.

இதைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா கணித உபகரணப் பெட்டிகளை அமைச்சர் வழங்கினார். 

வேதாரண்யம் எம்எல்ஏ என்.வி. காமராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஏ.கே. சந்திரசேகரன், வருவாய்க் கோட்டாட்சியர் வே. மணிகண்டன், முதன்மைக் கல்வி அலுவலர் மா. ராமகிருஷ்ணன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment