Tuesday, January 15, 2013

PONGAL SEITHIGAL

இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்!: முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல் என்று முதலமைச்சர் ஜெயலலிதா பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தில்’உலகெங்கும் வாழும் தமிழர்கள் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில், அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிகவும்  மகிழ்ச்சி அடைகிறேன்.

சாதி வேறுபாடுகளை மறந்து சகோதரத்துவத்துடன், பொங்கும் மகிழ்ச்சியை வெளிக்காட்டும் விதத்தில் கரும்பு, மஞ்சள், வாழை ஆகிய விளை பொருட்களை வைத்து, புதுப் பானையில் அரிசியிட்டு, “பொங்கலோ பொங்கல்” என்று மகிழ்ச்சிக் குரலிட்டு இறைவனை வணங்கி கொண்டாடும் பண்டிகை  பொங்கல் பண்டிகை ஆகும்.

சுழன்றும்ஏர்ப்  பின்னது  உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
- எனும் வள்ளுவர் குறளிற்கேற்ப, உலகில் மக்கள் பல தொழில்கள் செய்து வந்தாலும்
உழவுத் தொழிலே முதன்மையானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் போற்றப்படுகிறது.  இத்தகைய பெருமைக்குரிய உழவர்களின் நலனை பேணிக் காத்திடவும், உழவர்களின் வருமானத்தை பெருக்கிடவும், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திடவும் பல்வேறு சீரிய திட்டங்களை உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் இன்புற்று கொண்டாடி மகிழ்ந்திட தமிழக அரசு சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக மக்களுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.

இல்லங்கள் தோறும் பொங்கட்டும் பொங்கல்!
இதயங்கள் தோறும் தங்கட்டும் இன்பங்கள்!
என்று மனமார வாழ்த்தி, என் அன்பிற்குரிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
- என்று வாழ்த்துக் கூறியுள்ளார்.
கம்ப்யூட்டர் இங்கே... ஆசிரியர்கள் எங்கே? - Vikatan
விசித்திரப் போராட்டம் இது கம்ப்யூட்டர் யுகம். ஆனால், கணினிக் கல்வி படித்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பே தற்சமயம் இல்லை. இது பற்றிப் பேசிய கோவையைச் சேர்ந்த விஜய் ஆனந்த், ''கணினி அறிவியல் பிரிவில் ஆசிரியர் படிப்பான பி.எட் முடித்து விட்டு 1993 முதல் இன்று வரையில் 10ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கிறோம்.
 
 
ஆனால், எங்களுக்கான பணி இடங்களை அரசு இன்னமும் உருவாக்கவே இல்லை. அனைத்து எம்.எல்.ஏ-களுக்கும் கம்யூட்டர்கள் தரப்பட்டு இருக்கின்றன. 68 லட்சம் மடிக்கணினியை மாணவர்களுக்கு வழங்க முடிவெடுத்து இருக்கிறார்கள். 
 
இப்படி கணினி யுகத்துக்குள் அரசு புகும் வேளையிலும் கணினி படித்த எங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது விசித்திரமாகவும் வேதனையாகவும்இருக்கிறது. இப்போது, அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் பாடத் தை நடத்துவதற்குத் தகுதியான ஆசிரியர்கள் இல்லை. ஆனாலும், அரசு எங்களை நியமிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆசிரியர் தகுதித் தேர்வுகளை, ஆசிரியர் தேர்வாணையம்தான் நடத்துகிறது. இதில் மேல்நிலை வகுப்பு ஆசிரியர் தேர்வுகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. 
 
கம்ப்யூட்டர் புரட்சி நடந்துவரும் சூழலிலும், எங்களைப் போன்ற ஆசிரியர்களைப் புறக் கணித்தால், கணினிக் கல்வி எப்படிச் சாத்தியம் ஆகும்.கடந்த தி.மு.க. ஆட்சியில் கம்ப்யூட்டரில் டிப்ளமோ படித்தவர்களை விதிவிலக்காக ஆசிரியர் வேலைக்குத் தேர்ந்து எடுத்தார்கள். பிறகு, அவர்களையே நியமனம் செய் வதற்காக தகுதித்தேர்வு நடத்தினார்கள். அந்தத் தேர்வில் தோல்வி அடைந்த 667 பேர் இப்போதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். 
 
இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. பள்ளிக் கல்விக்கு இந்த ஆண்டு சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாயை பட்ஜெட்டில் அரசு ஒதுக்கி இருக்கிறது. அதோடு, பள்ளிகளில் கணினி வழிக்கல்வி என்றும் சொல்லி இருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கினால்தான் கணினி வழிக்கல்வி சாத்தியம். இதைக் கருத்தில் கொண்டு பணியிடங்களை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்'' என்றார்.
பள்ளிக்கூடத் தேர்தல்- நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள்


      'நல்லாசிரியர் விருது ' என ஆண்டுதோறும் அரசு , ஆசிரியர்களுக்கு விருது வழங்குகிறது.
 
       மாணவர்களே நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுத்தால் எப்படி இருக்கும் என்னும் சிந்தனையைச் செயல்படுத்திய அனுபவமே இந்தப் புத்தகம் . கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் , தாங்கள் படித்த 12-ஆம் வகுப்பு வரையிலான படிப்பில் நல்ல ஆசிரியர்கள் யார் என்ப் பட்டியலிடுகிறார்கள், ஏன் அவர்கள் தங்களுக்கு நல்ல ஆசிரியர் என்பதனை விளக்கி எழுதிக் கொடுக்கின்றார்கள். எப்படி எல்லாம் அந்த ஆசிரியர்கள் , தாங்க்ள் முன்னேற உதவி புரிந்தார்கள் என்பதனை மாணவ, மாணவிகளே விவரிக்கும் விதத்தை ஒரு அத்தியாயமாக இந்த நூலின் ஆசிரியர் பேரா. ந.மணி குறிப்பிட்டிருக்கின்றார்.

          மாணவர்களால் தேர்ந்த்டுக்கப்பட்ட நல்லாசிரியர்களை தான் வேலை பார்க்கும் கல்லூரிக்கு வரவழைத்து, அவர்களிடம் படித்த மாணவ, மாணவிகளால் சிறப்பு செய்ய்ச்சொல்லி, நினைவுப்பரிசினை அளிக்கின்றார்கள், அந்த ஆசிரியர்களின் நெகிழ்ச்சி, அந்த மாணவ மாணவிகளின் வார்த்தைகளை அந்த ஆசிரியர்கள் எவ்வளவு பெருமையாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதனை விவரிக்கின்றார். பின்னர் அவர்களைப் பேட்டி எடுக்கின்றார். கல்வி சம்பந்தப்பட்ட ,புகழ்பெற்ற புத்தகங்களைப் படித்தவர்கள் அல்ல அவர்கள், ஆனால் டோட்டாசான், எனக்குரிய இடம் எங்கே ,பகல் கனவு, ஏன் டீச்சர் என்னைப் பெயிலாக்கினீங்கே போன்ற கல்வி குறித்த நூல்களைப் படித்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கின்றார்கள், பேரா. ந,மணியும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச்சேர்ந்த பொறுப்பாளர்களும் .நிறையத் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொள்ளும் ஒரு கருத்தரங்கத்தில் கல்வி சம்பந்தப்பட்ட நூல்களின் கண்காட்சியை வைக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான நூல்கள் விற்கும் என்று நிறையச்செல்வு செய்து வைத்த கண்காட்சியில் வெறும் 54 ரூயாக்கு புத்தகங்கள் விற்கின்றது. நொந்து போகிறார்கள் பேரா. ந.மணியும் ,மற்ற பொறுப்பாளர்களும்.

        இன்றைய ஆசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள் , நன்றாகப் பாடம் நடத்துபவர் மட்டுமே நல்லாசிரியரா? உலக விசயங்களை, நாட்டு நடப்புகளை, நல்ல புத்தகங்களை மாணவர்கள் மத்தியில் சொல்ல் வேண்டாமா? போன்ற கேள்விகளை எழுப்புகின்றார். சமூக அக்கறையில்லாமல் ஆசிரியர்கள் இருக்கும் காரணம் என்ன? அதை எப்படி மாற்றலாம் போன்ற கருத்துக்களை பேரா. ந. மணி குறிப்பிட்டிருக்கின்றார்.

          சிறிய புத்தகம் , 48 பக்கம் உள்ள புத்தகம்தான் இது, ஆனால் மிக ஆழமான புத்தகம். மாணவர்களை, ஆசிரியர்களை உளவியல்ரீதியாக ஆராய்ந்துள்ள புத்தகம்.மிகப் பொறுப்போடு சமூக அக்கறையோடு எழுதப்பட்டுள்ள புத்தகம். கல்வி சம்பந்தப்பட்ட சில நூல்களை புத்தகத்தில் குறிப்பிடுகின்றார் ஆசிரியர். அவற்றில் டோட்டாசான், எனக்குரிய இடம் எங்கே போன்ற புத்தகங்களெல்லாம் நான் மிகவும் நேசிக்கும் புத்தகங்கள். அதிலும் குறிப்பாக டோட்டாசான். எனது நண்பன் இரா.சீனிவாசனும், நானும் மதுரை ஸ்பார்க சென்டர் பார் ஐ.ஏ.எஸ். ஸ்டடிஸ் சார்பாக பல கல்லூரிகள், பள்ளிகளில் மாணவ , மாணவிகளுக்கு வழகாட்டுதல் வகுப்புகள் நடத்தியிருக்கின்றோம். ஒருமுறை சீனி சொன்னான்,நேரு, நீ எந்தத் தலைப்பில் பேசினாலும், டோட்டாசான் புத்த்கத்தைத் தொடாமல் ,அதைப்பத்திப் பேசாமல் நீ பேச நான் பார்க்கவில்லை என்றான். அந்த அளவிற்கு என்னை மிகவும் ஈர்த்த புத்தகம் .மாணவ, மாணவிகள் மத்தியில் ,ஆசிரியர்களிடத்தில் பேசுகிறேன் என்றால் கட்டாயம் டோட்டாசான் என் பேச்சில் இருக்கும். முத்ல் சில பக்கங்களில், ஒரு ரவுடியைபோல நான் மாணவர்களை அடக்கி வந்திருக்கிறேன் என்னும் பேரா.நா.மணியின் சுய விமர்சனம் படிக்கும் எந்த ஒரு ஆசிரியரையும் யோசிக்க வைக்கும்.20 ரூயாயில் மாற்றி யோசிக்க வைக்கும் புத்தகம், வாங்கிப் படித்துத்தான் பாருங்களேன்.
 
பள்ளிக்கூடத் தேர்தல்- நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள்
 
ஆசிரியர் : பேரா. நா.மணி
 
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்,சென்னை-18.

தேர்வுவாரியம் மூலம் தேர்வான 20ஆயிரம் ஆசிரியர்களின் பெயர்நீக்கம்

            அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 20 ஆயிரம் பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது.

        இதற்கான பட்டியலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அனுப்ப உள்ளது.  அரசு பணிகளுக்கு அல்லது ஆசிரியர் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோரின் பட்டியல் மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கு அனுப்பப்பட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள பதிவு மூப்பு பட்டியலில் இருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்படும். இவ்வாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக அரசு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக ஆசிரியர் பதவிக்கு தேர்வாவோரின் பட்டியல் மாநில, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன.

           அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேரவு மூலமாக ஏறத்தாழ 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும், 3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணையினை வழங்கினார். பணி நியமன ஆணை பெற்ற பெரும்பாலானோர் பணியில் சேர்ந்து விட்டனர்.  இந்த நிலையில் மேற்கண்ட 20 ஆயிரம் ஆசிரியர்களின் பெயர்களை பதிவு மூப்பு பட்டியலில் இருந்து நீக்குவதற்காக அதற்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம், வேலைவாய்ப்பு பயிற்சி துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

        பெயர் நீக்க பட்டியல் கிடைக்கப் பெற்றதும் சம்பந்தப்பட்ட மாநில வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படும். முதுநிலை பட்டாதாரியாக இருந்து பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்ந்தவராக இருந்தால் அவர்களின் துறை தலைவரிடம் இருந்து தடையின்மை சான்று பெற்று முதுநிலை கல்வி தகுதிக்கான பதிவு மூப்பை தக்கவைத்துக் கொள்ளலாம். இதற்கிடையே புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையை வாங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

TET சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகம்


TET சான்றிதழ் இது போன்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

          ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.          தேர்வு எழுதியவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சி பெற்ற தாள், விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

            ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு ஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற 18,600 பேருக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

           இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 18,600 பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சென்றுள்ளனர். வெறும் 7 பேர் மட்டும் தங்களுக்குச் சான்றிதழே போதும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.

             இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

             2010 ஆகஸ்ட் 21-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

           ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆண்டுகள் வரை இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.

           தமிழிலேயே விவரங்கள்: ஆசிரியர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இனி அந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

            அதேபோல், ஒவ்வொரு ஆசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், தகுதியான படிப்புகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆசிரியர் தேர்வுக் கொள்கையும் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

                    தகுதியில்லாதவர்களும், வேறு படிப்புகளைப் படித்தவர்களும் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து ஏமாற்றமடைவதைத் தவிர்க்கவும், ஆசிரியர் தேர்வில் குழப்பங்களைக் களையவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
            ஆன்-லைன் வழியில் விண்ணப்பம்: அடுத்து நடைபெற உள்ள அனைத்துவித ஆசிரியர் தேர்வுகளும் இனி ஆன்-லைன் மூலமாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஜூன் மாதத்தில் அடுத்த தேர்வு
             அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

 ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

 ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?
      ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:
 இடைநிலை ஆசிரியர்கள் - 2,210
 பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532
 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
 உதவிப் பேராசிரியர்கள் - 1,063
 சிறப்பாசிரியர்கள் - 841
 
மே மாதத்தில் சேர்க்கை: மெட்ரிக் பள்ளிகளுக்கு உத்தரவு

        தமிழகத்தில், அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும், 2013-14ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, மே மாதம் முதல் மேற்கொள்ள வேண்டும் என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் வசுந்தராதேவி (பொறுப்பு) உத்தரவிட்டுள்ளார்.

         இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்திற்கு உட்பட்டு செயல்படும் அனைத்து மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2013-14ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை, மே மாதத்திற்கு முன் மேற்கொள்ளக் கூடாது.

          சில பள்ளிகள் டிசம்பர் முதல் சேர்க்கை நடத்துவதாக தெரிகிறது. இதுகுறித்து ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகங்கள், இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும்.
விதிமுறைக்கு முரணாக செயல்படும் பள்ளிகள் மீது நேரடி கவனம் செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்திலும் இதுதொடர்பான அறிவிப்பு வைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புதுடில்லி: - 33 ஆயிரம் சிறுவர்கள் மீது 2011ம் ஆண்டில் வழக்குப்பதிவு


          இந்தியாவில் கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் சுமார் 33 ஆயிரம் சிறுவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

          இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், சிறார்கள், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது, சமீபகாலமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், 2011ல், மட்டும், 16லிருந்து, 18 வயதுக்குட்பட்ட, 33 ஆயிரம் சிறார்கள் மீது, குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
          இவற்றில் பெரும்பாலானவை, கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகள். அதிகபட்சமாக, 1,419, பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
            மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தான், சிறார்கள் மீது, அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகளுக்கு பேச்சுப்பயிற்சி கருவி கண்டுபிடிப்பு


        ஆட்டிசம் பாதித்த குழந்தைகள், பிறந்து நான்கு வயது வரை சரியாக பேசாது; பார்வை நேரடியாக இருக்காது; பிடிவாதமாக இருக்கும்; எந்த பொருளை பார்த்தாலும் உடனே கேட்கும்; சில குழந்தைகளுக்கு, எச்சில் ஒழுகும்; அதிகம் பாதித்த குழந்தைகள், நிமிர்ந்து நடப்பதற்கே சிரமப்படும்.

          சில குழந்தைகள் பேசியதையே திரும்ப திரும்ப பேசும்; எதற்கு எடுத்தாலும் கோபப்படும்; குழந்தைகளின், இது போன்ற நடவடிக்கைகளை வைத்தே, ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் என்று பெற்றோர்கள் தெரிந்து கொள்ளலாம். குழந்தைகளின் மூளை, சரியான வளர்ச்சி அடையாததால், இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

           ஆட்டிசம் என்பது நோயல்ல, இதை சரிசெய்து விடலாம் என்று மூளை நரம்பியல் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூளை நரம்புகளை தூண்டும் விதமான பயிற்சி அளித்து, இந்த குழந்தைகளின் குறைகளை சரிசெய்து விடலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

           தற்போது, ஆட்டிசம் பாதிப்பு ஏற்பட்டு, பேச்சு திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக, பேச்சுபயிற்சி கருவியை, சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர் அஜித் நாராயணன் கண்டு பிடித்துள்ளார். இக்கருவி குறித்து, ஆட்டிசம் மற்றும் கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான, சிறப்பு பள்ளி - 
சங்கல்ப், இயக்குனர் சுலதா அஜித் கூறியதாவது:

         சென்னை அண்ணா நகரில் இயங்கி வரும், எங்கள் பள்ளியில், ஆட்டிசம் மற்றும் கற்றலில் குறைபாடுள்ள, 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களில், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவர் அஜித் நாராயணன் உருவாக்கி உள்ள, "அவாஸ்&' எனும், கருவியைக் கொண்டு, பேச்சு பயிற்சி அளிக்க உள்ளோம்.

          இந்தியளவில், ஸ்பீச் தெரபி அளிக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள நிலையில், இக்கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, 19ம் தேதி, சென்னை, சேத்துபட்டு, லேடி ஆண்டாள் பள்ளியில், கர்நாடக இசைக் கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீயின் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளோம். இவ்வாறு சுலதா அஜித் கூறினார்.
 
காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு: கிராமத்து இளைஞர் அசத்தல்


      "காற்று இருந்தால்தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்," என பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து இளைஞர் கூறுகிறார்.

         சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன், 38. இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காற்றாலையை, காற்று இல்லாமல் இயக்க முடியும் என்பதை, இவர், சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை கிண்டியில், மத்திய அரசுக்கு சொந்தமான காப்புரிமை நிறுவனத்தில் பதிவு செய்து, காற்றாலை செயல்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இதற்காக, இவர் காப்புரிமை பெற்றுள்ளார்.

         இரண்டு ஆண்டாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக கூறும் அவர், மேலும் கூறியதாவது: சேலம் மாவட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு வரை படித்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக, மேலும் படிக்க முடியாமல், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.

         தற்போது காற்றாலையை, காற்று இல்லாமலே இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளேன். இரண்டு ஆண்டாக இதற்காக முயற்சி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளேன். நாகர்கோவில், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
காற்று வீசும் காலத்தில் மட்டுமே, காற்றாலையில் இருந்து, மின்சாரம் பெற முடியும். மற்ற காலங்களில் காற்றாலையில் உள்ள இறக்கைகள் சுற்றாது. தற்போது, காற்றாலையில், மூன்று இறக்கைகள் உள்ளது. என்னுடைய தொழில்நுட்பப்படி, காற்றாலையில் நான்கு இறக்கைகள் பொருத்த வேண்டும். மேலும், கீழும் உள்ள இரண்டு இறக்கையின் நடுவில், ஹீலியம் வாயுவை நிரப்ப வேண்டும்.

        காற்றாலையின் இரு பக்கமும் உள்ள இரண்டு இறக்கைகளின் அளவு ஒரே சீராக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். ஹீலியம் வாயு நிரப்பப்பட்டுள்ள ஒரு இறக்கையில் இருந்து, கீழுள்ள இறக்கைக்கு வாயு செலுத்தப்படும் போது, எடை தாங்காமல், கீழுள்ள இறக்கை மேல் நோக்கி தள்ளப்படும். இதனால், இறக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலத்தொடங்கும்.

          ஹீலியம் வாயு, தானியங்கி சென்சார் மூலம், இரண்டு இறக்கைகளிலும் மாறி மாறி செலுத்தப்படுவதால், இறக்கைகள் தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும். இதனால் காற்று இல்லாமலும், மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஹீலியம் வாயு ஆபத்து இல்லாதது.

          நான் கண்டுபிடித்த தொழில் நுட்பத்தை, சென்னை, கிண்டியில் உள்ள மத்திய அரசின் காப்புரிமை நிறுவனத்தில், வரை படங்களின் மூலமும், எழுதியும் காண்பித்தேன். என் கண்டுபிடிப்புக்கு, மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது. ஓராண்டுக்குள், நான் அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளித்து காட்ட வேண்டும்.

          நான் விசைத்தறி தொழிலாளியாக இருப்பதால், போதிய பணம் என்னிடம் இல்லை. காற்றாலை அதிபர்கள் என்னை நாடினால், காற்றாலையை காற்று இல்லாமல் இயக்கும் முறையை விளக்கிக் காட்டுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
 
லஞ்சம், கெடுபிடி அதிகரிப்பு: பள்ளிகளை விற்க தனியார் திட்டம்

     தமிழகத்தில் அதிகரித்துவிட்ட லஞ்சம் மற்றும் கெடுபிடியால், பாதிக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் நடத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதில் பலரும் தங்களது பள்ளியை விற்கவும், மூடவும் தயாராகி வருகின்றனர்.
 
        தமிழகத்தில் சமீப காலமாக தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது வரை, சி.பி.எஸ்.சி., பள்ளிகள் உள்பட, 15 ஆயிரம் பள்ளிகள் தனியார் வசம் உள்ளன. இவற்றில், 1,000 பள்ளிகள் பிரபலமான பள்ளிகளாகவும், 3,000 பள்ளிகள் வரை, லாபத்தில் இயங்கும் பள்ளிகளாகவும் உள்ளன.
         மீதமுள்ள பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவு, அரசின் கெடுபிடி, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பிரச்சனைகளால், பள்ளி நடத்துவதே சவாலான விசயமாக மாறியுள்ளது. பள்ளி அங்கீகாரத்துக்கு, ஐந்து லட்சம் வரையிலும், சி.பி.எஸ்.சி., பள்ளியாக இருந்தால், 35 லட்ச ரூபாயும் வரையும் லஞ்சமாக வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
           அதுமட்டுமின்றி, உள்ளூர் கட்சி பிரமுகர்களையும் கவனித்து, அவர்களின் பரிந்துரையும் அங்கீகாரத்துக்கு அவசியம். அதுமட்டுமின்றி, தாசில்தார், தீயணைப்புத் துறையினரிடம் சான்றிதல், கட்டிட உரிமை சான்று, கட்டிட உறுதிச்சான்று, சுகாதாரச் சான்று உள்ளிட்ட ஒவ்வொன்றுக்கும், பல லட்ச ரூபாய் வரை லஞ்சமாக தர வேண்டியுள்ளது.

           கட்டாயக் கல்விச்சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், 25 வகையான புது விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு வகுப்பறைக்கும், ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவர்கள், எட்டாம் வகுப்பு வரை, 35 மாணவர்கள், அதற்கு மேல், 40 மாணவர்கள் வீதம், ஐந்து வகுப்பறைகள் மட்டுமே நடத்த வேண்டும். வாகனங்களை இயக்குவதற்கு பல்வேறு கெடுபிடிகளையும் அரசு விதித்துள்ளது.
          தமிழ்நாடு நர்ஷரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறியதாவது: இன்றைய நிலவரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர் எண்ணிக்கை இருந்தால் மட்டுமே பள்ளியை இயக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
           நவீன கட்டிடம், புதிய வசதி, வாகன வசதி, பிரபலமான பெயர் ஆகியவை இருந்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை உள்ளது. இவை இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது. அரசு தரப்பிலும், பலவித நெருக்கடிகள் உருவாகியுள்ளன.
           நல்ல ரிசல்ட் கொடுத்தால் மட்டுமே மாணவர் சேர்க்கை இருக்கும். ஆனால், டெட் தேர்வு எழுதி, 80 சதவிகித திறமையான ஆசிரியர்கள் திடீரென அரசுப்பணியில் சேர்ந்துவிட்டனர். இதனால் ஆசிரியர் பற்றாக்குறையும் உருவாகிவிட்டது. மேலும், ஆசிரியர்களுக்கு அதிக அளவில் சம்பளம், இ.எஸ்.ஐ., - பி.எஃப்., உள்ளிட்ட சலுகைகளும் வழங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
             அதிகமாகிவிட்ட மின்கட்டணம், அதிகாரிகளுக்கு லஞ்சம் என, பல மடங்கு செலவு அதிகமாகி விட்டதால், பள்ளியை நடத்துவது பெரும் சிரமமான விசயமாக மாறிவிட்டது. குறிப்பாக, 500க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள நர்சரி பள்ளிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
               இதில் பெரும்பாலானோர் பள்ளிகளை மூடவும், விற்கவும் தயாராகிவிட்டனர். பள்ளிகள் நடத்துவதை விட, திருமண மண்டபமோ, வணிக வளாகமோ நல்ல லாபத்தை தரும் என்ற முடிவுக்கு பலரும் வந்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment