தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) 36-வது புத்தகக் காட்சி சுமார் ஒரு கோடி புத்தகங்களுடன் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 11) தொடங்குகிறது.
இது குறித்து பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலர் எஸ்.வைரவன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:
சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் அறிவுத் திருவிழாவான புத்தகக் காட்சி, இந்த ஆண்டு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்பயிற்சிக் கல்லூரி மைதானத்தில் ஜனவரி 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை 13 நாள்கள் நடைபெறுகின்றன.
கண்காட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி தொடங்கி வைக்கிறார். பபாசி விருதுகளை செய்தித் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்குகிறார். மாநகர மேயர் சைதை துரைசாமி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
36-வது புத்தகக் காட்சி சுமார் 1.80 லட்சம் சதுரஅடி பரப்பளவில் 750 அரங்குகளுடன் நடைபெறுகிறது. இதில் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகம், கேரளம், ஆந்திரம், வட மாநிலங்கள், ஜப்பான் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இருந்தும் 250 தமிழ்ப் பதிப்பாளர்கள், 127 ஆங்கிலப் பதிப்பாளர்கள், 37 ஊடகப் பதிப்பாளர்கள், 36 புரவலர் அரங்குகள் என 450 பங்கேற்பாளர்கள் 750 அரங்குகளில் புத்தகங்களை விற்பனைக்கு வைக்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கப்படுகிறது. தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் என 14 பேர்களின் பெயர்களில் அரங்கு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாசகர்கள் தங்களுக்குத் தேவையான நூல்கள் எங்கு கிடைக்கும் என்பது உள்ளிட்ட விவரங்களை தொடுதிரை மூலம் தெரிந்து கொள்ளலாம். காட்சி நடைபெறும் அனைத்து நாள்களிலும் தினசரி மாலை 6 மணி முதல் 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டி மண்டபம், கவியரங்கம், இலக்கிய சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
வாசகர்களுக்கு 6 இடங்களில் நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. பெரியவர்களுக்கு நுழைவுக் கட்டணம் ரூ.5 வசூலிக்கப்படுகிறது. 12 வயதுக்குள்பட்டவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். மாணவ-மாணவிகளுக்காக சுமார் 5 லட்சம் இலவச அனுமதிச் சீட்டுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. வார நாள்களில் பகல் 2.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. வழக்கம்போலவே அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
புத்தகக் காட்சியில் ரூ.5 முதல் ரூ.50 ஆயிரம் விலையிலான நூல்கள், சுமார் 5 லட்சம் தலைப்புகளில் ஒரு கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. நிகழாண்டில் சுமார் 12 லட்சம் வாசகர்கள் புத்தகக் காட்சிக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர். சங்கத்தின் பொருளாளர் ஏ.ஆர்.வெங்கடாசலம், துணைத் தலைவர்கள் எம்.சுப்பிரமணியம், ராம.லட்சுமணன், முன்னாள் தலைவர் சேது.சொக்கலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
பபாசி விருது பெறுபவர்கள் அறிவிப்புபுத்தகக் காட்சியில் பபாசி விருது பெறுபவர்களை சங்கத்தின் நிர்வாகிகள் புதன்கிழமை அறிவித்தனர்.
அதன்படி, பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது நர்மதா பதிப்பகத்தின் டி.எஸ்.ராமலிங்கத்துக்கு வழங்கப்படுகிறது. பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது தமிழ்நாடு புக் ஹவுஸின் ஜெ.சிதம்பரம் பிள்ளைக்கும், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருது குழந்தைகளுக்கான எழுத்தாளர் எஸ்.லீலாவுக்கும், சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான ஆர்.கே.நாராயணன் விருது மு.சிவலிங்கத்துக்கும் வழங்கப்படுகிறது. அதேபோல் பபாசியின் சிறந்த நூலகர் விருதுக்கு டி.கே.திருவேங்கடமணியும், சிறப்பு விருதுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பாளர்களும், நெல்லை சு.முத்து வழங்கும் சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான விருதுக்கு காலேப் எல்.கண்ணனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கவியரங்கில் வாலி, உரையரங்கில் வைகோகாட்சியில் தினசரி நடைபெறும் கவியரங்கம், உரையரங்கம், பட்டி மண்டபம் போன்றவற்றில் பங்கேற்க உள்ளவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிஞர் வாலி கவியரங்கிலும், வைகோ, எஸ்.ராமகிருஷ்ணன், நடராஜ் ஐ.பி.எஸ்., சகாயம் ஐ.ஏ.எஸ்., பிரபஞ்சன், ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்டோர் உரையரங்குகளிலும் பங்கேற்கின்றனர்.
No comments:
Post a Comment