Thursday, December 13, 2012


butterflyஇன்று (13.12.2012) நியமன ஆணை பெற்ற அனைத்து இடைநிலை , பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களையும் 17.12.2012 அன்றே பணியில் சேர உத்தரவு


   நம் இணையதளத்தில் அறிவித்ததைப்போலவே 17.12.2012 அன்றே அனைத்து ஆசிரியர்களையும் பணியிடங்களில் பணியமர்வு பெற பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 14.12.12 அன்றே பணியேற்க உத்தரவிடப்படும் என்று பெரும்பாலோனோர் எதிர்பார்த்தபோதும், அதற்கான சூழல் சாத்தியங்கள் மிகக்குறைவாக இருந்ததால் நம் இணையதளத்தில் 14 அல்லது 17 என தெரிவித்திருந்தோம். மேலும் ஆசிரியர் தகுத்திதேர்வினை மத்திய அரசு அறிவித்தது முதல்
மாநில அரசு அரசாணை வெளியிட்டது முதற்கொண்டு ஆசிரியர் தகுத்தேர்வின் முக்கியத்தும் மற்றும் தேவையை அறிந்தது இது சார்ந்த ஆனைத்து நிகழ்வுகளையும் நம் இணையதளம் சரியான தகவல்களாக  உடனுக்குடன் அளித்தது பலருக்கு சிறு உதவியாக இருந்ததில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

மேலும், இந்த 21,000 ஆசிரியர்களின் பணியமர்வு இணையவழி கலந்தாய்வு என்பது முதல் அனைத்து தேதிகள் , வழுகாட்டுதல்கள் போன்ற பல தகவல்களை நமக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் இந்நேரத்தில் தனது www.dhilipteacher.blogspot.com தனது நன்றியினை பதிவு செய்கிறது.

butterflyஆசிரியர் தேர்வில் சலுகை கோரி வழக்கு: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


ஆசிரியர் தகுதித் தேர்வில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கக் கோரிய வழக்கில், ஒரு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பழனிமுத்து தாக்கல் செய்த பொதுநல மனுவில், மத்திய அரசு வகுத்துள்ள விதிப்படி, பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்துக்கு நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பல மாநிலங்களில் 5 முதல் 10 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படுவதாகவும், தமிழகத்தில் அதேபோல வழங்கியிருந்தால், இந்த பிரிவுகளைச் சேர்ந்த பலருக்கும் ஆசிரியர்கள் பணி கிடைத்திருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு, ஒரு வாரத்துக்குள் பதிலளிக்கும்படி, பள்ளிக் கல்வித் துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், ஆசிரியர் நியமனம் தொடர்பாக இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

butterflyபணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்!


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற, 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
சமீபத்தில், TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகமெங்கும் நடைபெற்றது.
இதில் வெற்றிபெற்ற 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவும், 92 லட்சம் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவும், சென்னை நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வி கல்லூரி திடலில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்புரையாற்றிய ஜெயலலிதா, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு தமது அரசு ஆற்றிவரும் சீரிய பங்கினைப் பற்றி விரிவாக குறிப்பிட்டார். அவற்றில், எப்போதும் இல்லாத வகையில், பள்ளி கல்விக்கு, ரூ.14,553 கோடி ஒதுக்கியது, 1 முதல் 12ம் வகுப்பு வரை கட்டணமில்லா கல்வி மற்றும் மாணவர் இடைநிற்றலை தவிர்க்க, 10 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, ரூ.5000 ஊக்கத்தொகை திட்டம் போன்ற முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்ட முதல்வர், "மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களைப் படிக்க, பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்" என்றார்.

இதுமட்டுமின்றி, ஆசிரியர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக பேசிய முதல்வர், "ஆசிரியப் பணி என்பது ஒரு அறப்பணி. பிற பணிகளைவிட, உயர்ந்த ஸ்தானம் கொண்டப் பணி. எனவே, ஆசிரியர்கள், தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு, சிறந்த மாணவர்களை சமூகத்திற்கு உருவாக்கித் தர வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார். 


விழாவில், மாவட்டத்திற்கு தலா 1 ஆசிரியருக்கு பணி நியமன ஆணையையும், 16 மாணவர்களுக்கு, விலையில்லா கல்வி உபகரணங்களையும் முதல்வர் வழங்கினார். இதர ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை, அந்த விழா அரங்கிலேயே, அமைச்சர்கள் வழங்கினார்கள்.

butterflyசிறந்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான NCERT விருதுக்கு விண்ணப்பங்களை வரவேற்று பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு


butterflyசிறுபான்மையினர் மாணவ/ மாணவியர்களுக்கான தொழிற்கல்வி / தொழில்நுட்ப கல்வி உதவித்தொகைக்கான கடைசி நாள் 31.12.12


butterfly"மாணவர்களை பள்ளியில் சேர்க்க மாற்று சான்றிதழ் வேண்டாம்"


கல்வி உரிமை சட்டத்தின்படி, 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், இடைநின்று, வேறு பள்ளியில் சேரும் போது, அவர்களிடம், பள்ளி மாற்றுச் சான்று கேட்டு, கட்டாயப்படுத்தக் கூடாது. வயதை நிரூபிக்கவும் சான்று கேட்க கூடாது என்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 13 வயதுக்கு உட்பட்டோர், 8ம் வகுப்பு வரை படிக்க வேண்டும். பள்ளி படிப்பை தொடர முடியாதவர்கள், பிழைப்பிற்காக இடம் மாறியவர்கள், இச்சட்டத்தால் பலன் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. 

புதிய சட்டப்படி, "13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், இடை நின்று, வேறு பள்ளியில் சேரும் போது, அவர்களிடம், பள்ளி மாற்றுச் சான்று கேட்டு, கட்டாயப்படுத்தக் கூடாது. வயதை நிரூபிக்கவும் சான்று தேவையில்லை. பெற்றோர் உறுதி மொழியை, வயது சான்றிதழாக ஏற்று, தேர்வுக்கு முதல் நாள் கூட சேர்க்கலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை உடனடியாக அமல்படுத்த, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இச்சட்டத்தின் படி, பிழைப்பிற்காக வெளி மாவட்டங்களில் குடியிருப்போர், தங்கள் குழந்தைகளை, வசிக்கும் பகுதி பள்ளிகளிலே சேர்க்க, வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

butterflyஒன்றரை ஆண்டுகளில் 28 ஆயிரம் பேர் தேர்வு: டி.ஆர்.பி


"ஒன்றரை ஆண்டுகளில், 10 வகை தேர்வுகளை நடத்தி, 28 ஆயிரம் பேர், அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" என ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டி.ஆர்.பி வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டு, மே முதல், நடப்பு ஆண்டு டிசம்பர் வரை, 10 வகையான தேர்வுகள் நடத்தப்பட்டன.
சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், இடைநிலை, முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு, 28,414 பேர், தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

butterflyதேர்வுகளும், தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையும் வருமாறு:

இடைநிலை ஆசிரியர் - 9,689
சிறப்பு ஆசிரியர் - 1,555
பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்கள் - 13,074
கம்ப்யூட்டர் ஆசிரியர் - 192
சத்துணவு பணியாளர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் - 136
முதுகலை ஆசிரியர் - 3,438
உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் - 34
பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் - 151
பாலிடெக்னிக் கல்லூரி - உதவி பேராசிரியர் - 131
சட்ட கல்லூரி விரிவுரையாளர்கள் - 14

butterflyஆதிவாசி மாணவர்களுக்காக ஆசிரியர்கள் சேவை



தேனி மாவட்டத்தில், ஆதிவாசி மாணவர்களை, தினமும் பள்ளிக்கு அழைத்து வர, ஆசிரியர்கள் இருவர் இலவச டூ வீலர் சர்வீஸ் நடத்தி வருகின்றனர்.

பெரியகுளம் சத்யா நகர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் 38 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில், 21 பேர் வனப்பகுதியில் 5 கி.மீ., தூரம் உள்ள ஆதிவாசி மக்கள் வசிக்கும் செல்லாக்காலனி கிராமத்தை சேர்ந்தவர்கள். 

இப்பகுதி மாணவர்கள் போக்குவரத்து வசதி இல்லாததால், பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டது. ஆதிவாசி மக்களும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் அக்கரை செலுத்துவதில்லை. 

ஒருநாள் குழந்தைகள் வீட்டில் இருந்தால் கூட, தங்களுடன் வேலைக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். இதனால் செல்லாக்காலனி மாணவர்கள் வராவிட்டால் பள்ளியே வெறிச்சோடி விடும். இதனை உணர்ந்த ஆசிரியர்கள் இருவரும், காலையில் பள்ளி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பள்ளிக்கு வந்து விடுகின்றனர்.

பள்ளியில் இருந்து டூ வீலரில் ஆதிவாசி காலனிக்கு சென்று அங்குள்ள மாணவர்களை தங்கள் டூ வீலரில் ஏற்றி பள்ளிக்கு அழைத்து வருகின்றனர். தினமும் காலையில் 4 முறை, மாலை 4 முறை என பள்ளிக்கும், ஆதிவாசி காலனிக்கும் இலவச டூ வீலர் சர்வீஸ் நடத்துகின்றனர். 

ஆண்டு முழுவதும் இவர்களின் சேவை தொடர்கிறது. இதற்கு ஆகும் செலவுகளையும், சிரமத்தையும் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை.

இதுபற்றி ஆசிரியர் செல்லத்துரை கூறியதாவது: நாங்கள் அழைத்து வராவிட்டால் ஆதிவாசி மாணவர்கள், பள்ளிக்கு வராமல் படிப்பை நிறுத்தி விடுவார்கள். படிப்பு பாழாகி விடக்கூடாது என்பதற்காக, நாங்கள் தினமும் இந்த இலவச சேவையை செய்து வருகிறோம் என்றார்.

butterfly8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் சான்றிதழ் இன்றி தவிப்பு


   தமிழகம் முழுவதும், 8ம் வகுப்பு தனித் தேர்வு முடிவுகள் வெளியாகி, மூன்று மாதங்களாகியும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இது, தேர்வு எழுதியவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

"அடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருப்பதால், சான்றிதழ் தேவை" என, தேர்வு எழுதியவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகளில் சேர்ந்து படிக்க முடியாதவர்களுக்கும், படிப்பை பாதியில் விட்டவர்களுக்கும், படிக்கும் வாய்ப்பை தருவதற்காக, ஆண்டுதோறும் நேரடியாக, 8ம் வகுப்பு நேரடி தனித் தேர்வை, அரசு தேர்வுத்துறை நடத்துகிறது.
ஆண்டுதோறும், நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில், தேர்வு நடைபெறும்; ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதுவர். ரயில்வே துறையில், "கலாசி" வேலையில் சேர, துப்புரவுப் பணியாளர்கள், பதிவு எழுத்தராகப் பதவி உயர்வு பெற, ஓட்டுனர் உரிமம் பெற என, பல நிலைகளில், எட்டாம் வகுப்பு தேர்வு அவசியம். 

இதற்காகவே, படிக்காமலிருந்த ஆயிரக்கணக்கானோர், எட்டாம் வகுப்பு தனித் தேர்வு எழுதுகின்றனர். நேரடியாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுதினால், தேர்ச்சி, தோல்வி என, தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டியிருக்கும். 

இதை தவிர்க்க, கடந்த ஆண்டு, எட்டாம் வகுப்பு நேரடி தனித் தேர்வை, ரத்து செய்ய, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதும், அரசு வழக்கம் போல், எட்டாம் வகுப்பு தனித் தேர்வு நடத்த, உத்தரவு பிறப்பித்தது. 

அதன்படி, கடந்த ஆண்டுக்கான எட்டாம் வகுப்பு நேரடித் தேர்வு, கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது; செப்டம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், பத்தாம் வகுப்பு தேர்வுக்கு, விண்ணப்பிக்க உள்ளவர்கள், செய்வதறியாது தவித்து வருகின்றனர். 

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "தேர்வு முடிவுகளை கணினியில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க, தேதி அறிவிப்பதற்கு முன்பாக, சான்றிதழ் வழங்கப்படும்" என்றனர்.

butterfly

"பேருந்து படிக்கட்டில் தொங்கினால் பள்ளியில் இருந்து நீக்கலாம்"


"பேருந்து படிக்கட்டுகளில், மாணவர்கள் பயணித்தால், அவர்களின் பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதுவே, அடுத்தடுத்து நீடித்தால், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டு, அந்த மாணவர்களை, பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்கலாம்" என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த, 10ம் தேதி, சென்னை, பெருங்குடி அருகில், கந்தன்சாவடி உள்ளது. மாநகர போக்குவரத்து  பேருந்து, சாலையில் வந்து கொண்டிருந்த போது, செங்கல் லாரி, பின்னோக்கி வந்து மோதியது. இதில், பேருந்தின் பின்புற படிக்கட்டில் பயணித்த மாணவர்கள், நான்கு பேர், உடல் நசுங்கி இறந்தனர். 

இச்சம்பவம் குறித்து, தானாக முன்வந்து, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி பாஷா அடங்கிய, "முதல் பெஞ்ச்" வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு பிளீடர் வெங்கடேஷ் ஆஜராகினர். போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் கருணாசாகர், போக்குவரத்து துறையின், முதன்மை செயலரின் அறிக்கை, தாக்கல் செய்யப்பட்டது.

அட்வகேட் ஜெனரலின் வாதத்துக்குப் பின், "முதல் பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், எடுக்கப் போகிற நடவடிக்கைகள்,போக்குவரத்து முறையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், படிக்கட்டுகளில் பயணிப்பவர்களுக்கு நேரும் விபத்துகளைக் குறைக்கும் வகையிலும் இருக்கும்.

இந்த நடைமுறைகள் பற்றி, பத்திரிகைகளிலும், "டிவி" சேனல்களிலும், விரிவாக விளம்பரப்படுத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். பஸ் படிக்கட்டுகளில், பயணிக்கும் பள்ளி மாணவர்கள், சிறுவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளி, கல்லூரிகள் செல்லும் குழந்தைகளின் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

எந்த மாணவராவது, படிக்கட்டில் பயணித்தது தெரிந்தால், அந்த மாணவனின் பெற்றோருக்கு மட்டுமல்லாமல், அவர் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரிக்கும் தெரியப்படுத்த வேண்டும். அந்த மாணவன், இரண்டாவது, மூன்றாவது முறையும், அவ்வாறு படிக்கட்டில் பயணித்தால், அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்தி விட்டு, பள்ளியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கலாம். 

இந்த வழக்கு, ஜனவரி 2ம் தேதிக்கு, தள்ளிவைக்கப்படுகிறது. எடுக்கப்பட்ட நடவடிக்கையின் முன்னேற்றம் பற்றி, அன்று, போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர், அரசின் முதன்மை செயலர், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டுள்ளது.

butterflyபிளஸ் 2 தேர்வு: மார்ச் 1ம் தேதி துவங்க வாய்ப்பு


    ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கி மூன்றாம் வாரம் வரை நடைபெறும். 2013ம் ஆண்டில் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு, இப்போதே தேர்வுத்துறை அதிகாரிகள், இயக்குனர் வசுந்தராதேவி தலைமையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தி, அரசின் கருத்தை கேட்டுள்ளனர். மார்ச் 1 அல்லது 4ம் தேதி துவங்கும் வகையில் அட்டவணை தயாரித்துள்ளனர். அரசின் ஒப்புதல் கிடைத்ததும், அட்டவணை குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் கருத்து கேட்கப்படும். 

தேர்வு காலத்தில் விழாக்களோ அல்லது விடுமுறை நாட்களோ அல்லது மாணவருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏதாவது உள்ளதா என கண்டறிந்து கருத்துக்களை தெரிவிப்பர். அதனடிப்படையில் மாற்றங்கள் இருந்தால் செய்யப்பட்டு பொதுத் தேர்வு கால அட்டவணை முடிவு செய்யப்படும். 

பெரும்பாலும் மார்ச் 1ம் தேதி அடிப்படையில் உள்ள கால அட்டவணை இறுதி செய்யப்படலாம் என கருதப்படுகிறது.

No comments:

Post a Comment