Thursday, December 27, 2012


ஸ்மார்ட்டாகும் அரசுப் பள்ளிகள்!

கல்விதான் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம். உலகத்தை மாற்றுவதற்கு அதைப் பயன்படுத்தலாம்!' 

                                                                                               - நெல்சன் மண்டேலா-


தனியார் பள்ளிகளுக்குச் சற்றும் சளைக்காமல் பலவகையான புதுமையான தொழில்நுட்பங்களை அரசுப் பள்ளிகளிலும் அமல்படுத்தி வருகிறது தமிழக அரசு. இதற்காக கல்வித் தகவல் மேலாண்மைத் திட்டம் (Educational Management Information System)என்னும் புதிய திட்டத்தை சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கார்டு (Smart Card) Gனப்படும் நவீன சிறப்பு அடையாள அட்டைகள் பயன்படுத்தப்படவுள்ளன.

அது என்ன ஸ்மார்ட் கார்டு? நாம் செல்போனில் பயன்படுத்தும் சிம் கார்டுகளைப்போல சிறிய அளவில் இருக்கும் இந்த ஸ்மார்ட் கார்டுகளில் எண்ணற்ற தகவல்களைப் பதிவு செய்யலாம். ஒரு மாணவரைப் பற்றிய எல்லா விவரங்களையும் உள்ளடக்கிய இந்த மின்னட்டை ஒரு சிறப்பு அடையாள அட்டையாகும்.

தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஸ்மார்ட் கார்டு தரப்படவுள்ளது. இதில் அந்த மாணவரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், முகவரி, பள்ளிச் சேர்க்கை விவரம், தேர்ச்சி விவரங்கள், மாணவர்களின் ரத்த வகை போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். குடும்பச் சூழ்நிலை காரணமாக அந்த மாணவர் வேறு பகுதிக்கு இடம் பெயர நேர்ந்தால், அங்கிருக்கும் அரசுப் பள்ளியில் சேர ஸ்மார்ட் கார்டில் இருக்கும் தகவல்களே போதுமானதாக இருக்கும். அரசின் நலத்திட்டங்களுக்குத் தகுதியான மாணவர்களைக் கண்டறியவும், இலவச மடிக் கணினித் (லேப்டாப்) திட்டம் போன்ற நலத் திட்டங்கள் மாணவர்களைச் சென்றடைவதை உறுதிசெய்யவும் இந்த ஸ்மார்ட் கார்டுகள் பெரிதும் உதவும்.

இந்தத் திட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளிலும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் மொத்தம் 91,54,741 மாணவர்கள் பயனடைவர். கடந்த நவம்பர் மாதம் 22-ஆம் நாள் தலைமைச் செயலகத்தில் ஒரு மாணவிக்கு இந்த ஸ்மார்ட் கார்டு அட்டையை வழங்கி, முதல்வர் ஜெயலலிதா திட்டத்தைத் தொடங்கிவைத்தார். முதல்கட்டமாக திருச்சி மாவட்டத்திலுள்ள ஐந்து பள்ளிகளுக்கு இந்த அட்டைகள் வழங்கப்பட்டு, திட்டத்திற்கான வெள்ளோட்டம் நடைபெற்றது.

மாணவரின் உடல்நலம், மருத்துவ விவரங்கள் அடங்கிய ஹெல்த் கார்டு (Health Card), இந்த ஸ்மார்ட் கார்டுடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது. மாணவருக்கு அவசரச் சிகிச்சை தேவைப்படும் நேரங்களில் இது பெரிதும் உதவும். இதுதவிர, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படும், ‘எளிமையாக்கப்பட்ட செயல்வழிக் கற்றல் முறை’ (Simplified Activity Based Learning) எனப்படும் புதிய முறையும் தற்போது அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த புதியப் திட்டங்கள் அரசுப் பள்ளிகளில் கல்வி வசதிகளைப் பெரிதும் மேம்படுத்தும் என்பது உறுதி.

No comments:

Post a Comment