"அரசு பள்ளிகளை மாணவர்கள் தேடி வரும் விதத்தில், கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்த வேண்டும்" என, ஆர்.எம்.எஸ்.ஏ., உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதியப்பன் அறிவுறுத்தினார்.
அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம், மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பள்ளி வளர்ச்சி குழுக்களுக்கான பயிற்சி முகாம் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் போஜன், சரஸ்வதி, சிதம்பரநாதன் முன்னிலை வகித்தார்.
ஆர்.எம்.எஸ்.ஏ., உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோதியப்பன் பேசியதாவது: "தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், வார்டு உறுப்பினர், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர், சமூக ஆர்வலர் என ஐந்து பேர் கொண்ட அமைப்பாக பள்ளிகளில் மேலாண்மை குழு உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி வளர்ச்சியை மேம் படுத்துதல், தேவையான உள்கட்டமைப்பு வசதியை உருவாக்குவது, இக்குழுவின் முக்கிய பணி. மாணவர் களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் அரசு தரப்பில் 14 வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மாணவர்கள் கல்வி பெறுவதில் பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் குறிப்பிட்ட தூரங்களுக்குள் பள்ளிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு பள்ளிகளை மாணவர்கள் தேடி வரும் விதத்தில் கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை ஆசிரியர்கள் இன்னும் மேம்படுத்த வேண்டும். கற்பதில் உள்ள இடர்பாடுகளை அகற்ற வேண்டும். இதற்கு திட்டமிடல் மிகவும் அவசியம்." இவ்வாறு, அவர் பேசினார்.
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த கருத்தாளர்கள் இளங்கோ ஜெயபிரபு, மகாலட்சுமி, சுகுணா ஆகியோர், மேலாண்மை வளர்ச்சி குழு பணிகள் குறித்து பயிற்சியளித்தனர். பள்ளி முன்னேற்ற திட்டம் குறித்த குழு விவாதம் நடந்தது. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த பள்ளி வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற பயிற்சி முகாம், அடுத்தடுத்து நடத்தப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment