Thursday, January 23, 2014

சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற 80 சதவீத பேர்களுக்கு பணிவாய்ப்பு : இணை இயக்குனர் பேட்டி

"ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற, 80 சதவீதம் பேர்களுக்கு, பணி வாய்ப்பு கிடைக்கும், என, மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் பாலமுருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில், 6.6 லட்சம் ஆசிரியர்கள் எழுதினர். இதில், தாள்-1ல் 12,600 ; தாள்-2ல் 12 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றனர். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றுகள் சரிபார்க்கப்படும். 

மாவட்டந்தோறும் ஜன.,20 முதல் 27 வரை இப்பணி நடக்கிறது. அனைவருக்கும் பணி கிடைக்குமா என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டுள்ளது.சிவகங்கையில், ஆய்வுக்கு வந்த, மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் பாலமுருகன் கூறுகையில், " ஆசிரியர் தேர்வு வாரிய வழி காட்டுதல் படி, சான்று சரிபார்த்தல் பணி நடக்கிறது. கல்வி தகுதிப்படி, "வெய்ட்டேஜ்' மதிப்பெண்கள் வழங்கி, இறுதி பட்டியல் தயாரித்து ஒப்படைக்கப்படும்.

பின்னர் இனசுழற்சி முறையில் பணி நியமன பட்டியல் வெளியாகும். சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்று, இறுதி பட்டியலில் இடம் பெற்ற 80 சதவீத ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும்,” என்றார்.

தொழில் வரி 30 சதவீதம் உயர்வு, மாத ஊதியம் ஈட்டுவோர் அதிருப்தி

செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கட்டாயமில்லை: டி.ஆர்.பி., முடிவால் நிம்மதி

"ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, "செமஸ்டர்' வாரியாக மதிப்பெண் சான்றிதழ்கள் கட்டாயமில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில், கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பி.எட்., பட்டதாரிகளுக்கு, ஜன.,23 மதியம் முதல், சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடக்கிறது. 

தேர்ச்சி பெற்றவர்களுக்கு டி.ஆர்.பி., யால் அனுப்பப்பட்ட உத்தரவில், "சான்றிதழ் சரிபார்ப்பின்போது, பட்டப் படிப்பின் "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றிதழ்கள் கொண்டு வரவேண்டும்' என நிபந்தனை விதிக்கப்பட்டது. வழக்கமாக, அரசு பணி நியமனங்களுக்கு, "டிகிரி' சான்று மற்றும் இறுதி மதிப்பெண் சான்றிதழ்களே கேட்கப்படும். "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்று, இதுவரை கேட்டதில்லை. டி.இ.டி.,யில் இதுவரை தேர்வு செய்யப்பட்டவர்களிடமும், இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டது.

ஆனால், தற்போது டி.ஆர்.பி.யால் பிறப்பிக்கப்பட்ட, புதிய உத்தரவால் டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றோர், பல்கலைகளில், "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றிதழ் கேட்டு குவிந்தனர். "காணவில்லை' என, போலீசில் புகார் செய்து, நாளிதழ்களில் விளம்பரம் செய்து, பின், பல்கலைகளில் 3,000 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தினால் மட்டுமே, "டூப்ளிகேட்' செமஸ்டர் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறும் நிலை இருந்தது. இதுகுறித்து டி.ஆர்.பி.,க்கு புகார்கள் சென்றன. இதன் அடிப்படையில், "சான்றிதழ் சரிபார்ப்பில் "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றிதழ்கள் கேட்பதை கட்டாயப்படுத்த வேண்டாம்' என, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரையில் கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்களின், "10+2+3' என்ற ஆர்டரில், ஆண்டுகள் மாறியிருக்கும் பட்சத்தில்தான் "செமஸ்டர்' வாரியான மதிப்பெண் சான்றுகள் தேவைப்படும். முறையான ஆர்டரில் படித்து, சான்றிதழ் பெற்றவர்களுக்கு "டிகிரி' மற்றும் இறுதி மதிப்பெண் சான்றிதழ்கள் போதுமானது' என்றார்.டி.ஆர்.பி.,யின் இந்த உத்தரவால், ஜன.,23 ல், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கும் பட்டதாரிகள், நிம்மதி தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment