Thursday, July 4, 2013

news

அப்பழுக்கற்ற சேவை புரிந்ததற்காக ரூ.2000 பரிசுத் தொகை

           அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அப்பழுக்கற்ற 25 வருடம் சேவை புரிந்ததற்காக வழங்கப்படும் ரூ.2000/-க்கான பரிசுத் தொகை வழங்க மாவட்ட / நியமன அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.

மாநில நல்லாசிரியர் விருது: இணையத்தில் விண்ணப்பம் வெளியீடு

               மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம், முதன்முறையாக பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் இந்தாண்டு வெளியிடப்பட்டுள்ளது.
 
                   மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில நல்லாசிரியர் விருதுகள் அறிவிப்பும் வெளியாகவுள்ளது. இதற்காக, தகுதியான ஆசிரியர்கள் ஜூலை 12க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

                       இருபது ஆண்டுகளாக பணிபுரிந்த ஆசிரியர்கள், பணிக்காலத்தில், எந்த குற்றச்சாட்டிற்கும் ஆளாகாமல், மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கும் வகையிலும், தேர்ச்சி விகிதத்தை அதிகரித்தும் காட்டியிருக்கும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், விருதுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழாசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் 15 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

               விருதுக்கு விண்ணப்பிக்க முன்பு அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்படும். அரசியல் பின்னணி உள்ளவர் மட்டுமே விண்ணப்பங்களை பெற முடிந்த நிலைகூட இருந்தது. தகுதி இருந்தும் பலர் விண்ணப்பிக்காமல் விடுவர்.

                        தற்போது, இணையதளத்தில் வெளியிட்டுள்ளதால் தகுதி உள்ளவர்கள் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய முதல்வர், தலைமை ஆசிரியர்கள் குழு ஆக., 10ம் தேதிக்குள் பரிசீலனை செய்து, கல்வித்துறைக்கு அனுப்ப இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.

                பட்டதாரி ஆசிரியர் சங்க செயலாளர் முருகன், "விருதுக்குரிய விண்ணப்பங்கள் கிடைக்காமல் தகுதியுள்ள பலர் விண்ணப்பிக்காமல் விடுவர். தற்போது அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்,&'&' என்றார்.

                  உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக சட்ட செயலாளர் வெங்கடேஷ், "பள்ளிக்கல்வி துறையின் நடவடிக்கையால் தகுதியுள்ள ஆசிரியர்கள் பயனடைவர். கல்வி மாவட்டத்திற்கு மூன்று விருதுகள் என்பதை மாற்றி, நான்கு விருதுகளாக அறிவிக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்" என்றார்.
 
பள்ளி மாணவரை அலட்சியப்படுத்தும் பேருந்து ஊழியர்கள்: நீதிமன்றத்தில் வழக்கு

            இலவச பாஸ் வைத்துள்ள மாணவர்களை, புறக்கணிக்கும் நோக்கில் செயல்படும், அரசு பேருந்து ஊழியர்களுக்கு எதிராக, மதுரை ஐகோர்ட் கிளையில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

              மதுரை வழக்கறிஞர் ஞானகுருநாதன் என்பவர், மதுரை ஐகோர்ட் கிளையில், தாக்கல் செய்துள்ள பொது நல மனு: போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் பாதிக்கும் என்பதால், இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவர்களை, அரசு பேருந்துகளில் முறையாக ஏற்றுவதில்லை.

                    பேருந்து நிறுத்தத்தை விட்டு, சற்று தள்ளி நிறுத்துகின்றனர். மாணவர்கள், புத்தகப் பைகளுடன் ஓடிச் சென்று, பேருந்துகளில் ஏறுகின்றனர். புதுக்கோட்டை, கல்குறிச்சியில், அரசு பேருந்து நிற்காததால், பள்ளி செல்லும் அவசரத்தில், பால் வேனில் மாணவர்கள் பயணித்தனர். இது விபத்துக்குள்ளாகி, ஏழு பேர் பலியாயினர். இது பற்றி, தினமலர் நாளிதழில், செய்தி வெளியானது.

              புதுக்கோட்டை சம்பவம் போல, மற்ற இடங்களிலும் நடக்கின்றன. இலவச பாஸ் திட்டத்தை, சரியாக அமல்படுத்துவது அரசின் கடமை. மாணவர்களை அலட்சியப்படுத்தும், அரசு பேருந்து டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                     கடந்த, 2010ல், ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற வழக்கு ஒன்றில், கடுமையான நடவடிக்கை எடுப்பதாக, உத்தரவை பிறப்பித்து உள்ளது. கிராமங்கள், நகரங்களில் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும், அரசு பேருந்துகளை நிறுத்தி, மாணவர்களை ஏற்றிச் செல்ல உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

                            நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் அடங்கிய, அமர்வு முன், மனு விசாரணைக்கு வந்தது. போக்குவரத்துக் கழக பொது மேலாளரை, ஒரு எதிர் மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை, அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
 
மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண்: அங்கீகாரம் இல்லாததால் மாணவர்கள் தவிப்பு

               பிளஸ் 2 தேர்வு மறுகூட்டலில், கூடுதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் பெயரை, மாநில தரப் பட்டியலில், பள்ளிக் கல்வித்துறை சேர்க்காததால், அரசின் சலுகைகளைப் பெற முடியாமல், மாணவர்கள் தவிக்கின்றனர்.

              பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், 16 ஆயிரம் பேர், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்திருந்தனர். அதில், 1,400 பேருக்கு, 10 மதிப்பெண்கள் வரை, கூடுதலாக கிடைத்தது. 1,000 பேருக்கு, மதிப்பெண்கள் குறைந்திருந்தது.

              மறு மதிப்பீட்டில், மதிப்பெண் மாறிய மாணவர்களுக்கு, திருத்திய மதிப்பெண் பட்டியலை, கடந்த மாதம், 15 ம் தேதி, பள்ளிக் கல்வித்துறை வழங்கியது. ஆனால், மாநில தகுதிப் பட்டியலை திருத்தாததால், பல மாணவர்கள், அரசின் சலுகைகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

              பிளஸ் 2 தேர்வில், 1,175 மதிப்பெண்கள் பெற்றிருந்த, கடலூர் மாணவர், அர்ஜுன் தன்ராஜ், மறுகூட்டலில், 1,180 மதிப்பெண்கள் பெற்றார். இவர், மாவட்ட அளவில், முதலிடத்தையும், மாநில அளவில், 10ம் இடத்தையும் பிடித்தார். 1,174 மதிப்பெண்கள் பெற்றிருந்த, கடலூர் மாணவி தீபிகா, மறு மதிப்பீட்டில், 1,177 மதிப்பெண்கள் பெற்று, மாவட்டத்தில் மூன்றாம் இடத்திற்குத் தகுதி பெற்றார்.

               இவர்களின் கூடுதல் மதிப்பெண்களை ஏற்று, மாநில மற்றும் மாவட்ட தகுதி பட்டியலை திருத்தம் செய்யாததால், தனியார் அமைப்புகள் வழங்கிய பரிசுகளை, பெற முடியவில்லை.

               மாணவர் அர்ஜுன் தன்ராஜ், பிற்பட்டோர் பிரிவில், மாவட்டத்தில் முதலிடம் பிடித்திருந்தார். அவரது மதிப்பெண் பட்டியலில், 1,180 மதிப்பெண் என, இருந்தது. ஆனால், பிற்பட்டோர் நலத்துறை அலுவலருக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சமர்ப்பித்த பட்டியலில், அர்ஜுன் தன்ராஜ், 1,175 மதிப்பெண்கள் என, குறிப்பிட்டிருந்தது. தங்கள் பிள்ளைகள் பெற்ற அங்கீகாரத்தை நிலைநாட்ட, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம், பெற்றோர், போராடி வருகின்றனர்.
 
இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலைகழகத்தின் மதுரை மண்டலம் மாற்றம்
               இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் மதுரை மண்டலத்தில் உள்ள தென்மாவட்டங்கள் திருவனந்தபுரத்துடன் இணைக்கப்பட உள்ளதால் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். தொடர்ந்து மதுரை மண்டலத்திலேயே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

           இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் மூலம் அஞ்சல்வழியில் பல்வேறு பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மூலம் நிர்வாகிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

                   தற்போது பி.எட் படிப்பு இந்த பல்கலைக்கழகம் வழங்குகிறது. 5 ஆண்டுகள் ஆசிரியர் பணி செய்தவர்கள் நுழைவுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பயின்று பட்டம் வாங்க வேண்டும் (கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தால் 10 மாதம் மட்டுமே) மதுரை இந்திராகாந்தி திறந்த வெளி பல்கலைக் கழக மண்டல அலுவலகம் இயங்குகிறது.

                 இதில் பயின்ற மாணவர்கள் மே மாதம் நடக்கும் பி.எட் செமினார் வகுப்புகள் படிப்பதற்கான கல்லூரிகளை தேர்ந்தெடுப்பதற்குரிய கவுன்சிலிங், தேர்வு கட்டணம் செலுத்துதல், உட்பட அனைத்து தேவைகளுக்கும் மதுரையில் உள்ள மண்டல அலுவலகத்தைபயன்படுத்தி வருகின்றனர்.

                   இந்த ஆண்டு முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் மதுரை மண்டலத்தில் இருந்து பிரிந்து திருவனந்தபுரத்தில் இணைக்கப்பட்டிருப்பதுடன் விண்ணப்ப கட்டணமும் 500 ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

                   மதுரை மண்டலத்தை எளிதில் தொடர்பு கொண்டு தேர்வு, ரிசல்ட், அட்மிசன் உட்பட அனைத்து சந்தேகங்களும் போனிலும் நேரிலும் கேட்டு தெளிவடைந்து வரும் தபால் வழி மாணவர்கள் திருவனந்தபுரத்தில் இயக்கப்பட்டால் இரண்டாம் தரகுடிமக்களாக நடத்தப்படும் கசப்பான நிலை ஏற்படும், தொடர்ந்து மதுரை மண்டலத்திலேயே இயக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
ஆன்-லைனில் ஆசிரியர் பயிற்சி சேர்க்கை: 8ம் தேதி கலந்தாய்வு

             "ஆசிரியர் பட்டயப் பயிற்சி, முதலாம் ஆண்டு சேர்க்கை கலந்தாய்வு, வரும், 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை, ஆன்-லைன் வழியில் நடக்கும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.

              மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் இளங்கோவன் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் உள்ள, 539 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், நடப்பு ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஆன்-லைன் வழியில், வரும், 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கும்.

              இந்த பயிற்சியில் சேர, 4,430, மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், மாணவர், 429 பேர்; மாணவியர், 4,001 பேர். கலந்தாய்வில், 17,045 இடங்கள் உள்ளன. மாணவ, மாணவியர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், "ரேங்க்&' பட்டியல் தயாரிக்கப்பட்டு, இடஒதுக்கீடு அடிப்படையில், மாணவர் சேர்க்கப்படுவர்.

                மாணவர்களுக்கு, விரைவில், அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். "ரேங்க்" பட்டியல் மற்றும் மாவட்டங்களில், கலந்தாய்வு நடக்கும் இடங்கள் உள்ளிட்ட விவரங்கள், www.tnscert.orgஎன்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

              பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மாற்றுத் திறனாளிகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் பேரன், பேத்திகள், முன்னாள் ராணுவத்தினரின் மகன், மகள் போன்ற சிறப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள், அதற்கான சான்றிதழ்களையும், கலந்தாய்வின் போது சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

                     விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கையை விட, நான்கு மடங்கு இடங்கள் அதிகமாக இருப்பதால், அனைத்து மாணவ, மாணவியருக்கும், இடம் உறுதி. எனினும், விண்ணப்பித்த மாணவர்களிலேயே, அதிக மாணவர்கள், "ஆப்சென்ட்" ஆவற்கும் வாய்ப்பு உள்ளது. 3,000 முதல் 3,500 இடங்கள் வரை பூர்த்தியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

                     ஜூலை 8ம் தேதி - சிறப்பு பிரிவினர் / சிறுபான்மை மொழியில் பயில விண்ணப்பித்துள்ளோர் /ஆங்கில மொழியில் பயில விண்ணப்பித்துள்ளோர்

ஜூலை 9ம் தேதி - தொழிற்பிரிவு மாணவர்கள்

ஜூலை 10, 11ம் தேதி- கலைப்பிரிவு மாணவர்கள்

ஜூலை 12, 13, 15ம் தேதி - அறிவியல் பிரிவு மாணவர்கள்.


நெய்வேலியில் இன்று (04.01.2013) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

               மத்திய அரசு NLC 5% பங்குகள் தனியாருக்கு விற்கப்படுவதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கங்கள் மற்றும் அனைத்து வர்த்தக அமைப்புகள் சார்பாக வேலைநிறுத்தம் நடத்தப்படுவதால், நெய்வேலியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 

Equivalence of Degree - GOs


             பொதுப் பணிகள் - அஸ்ஸாம் மாநில பல்கலைக்கழகம் வழங்கிய பி.எட்., மற்றும் பல்வேறு பல்கலைகழகங் -களால் வழங்கப்படும் இளநிலை / முதுகலை பட்டங்கள் இணையாக கருதி தமிழக அரசு உத்தரவு.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) - தகவல்கள், அலுவலகத்தில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள், கணக்குகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் 
மாநிலம் முழுவதும் 82 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்பு

                  தமிழகம் முழுவதும், வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு, 82.02 லட்சம் பேர், வேலைக்காக காத்திருப்பதாக, வேலை வாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

             தமிழகத்தில், நடப்பு ஆண்டு, ஜூன், 30ம் தேதி நிலவரப்படி, வேலை வாய்ப்புக்காக காத்திருப்போர் பற்றிய விவரங்களை, வேலை வாய்ப்பு இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 40.78 லட்சம் பெண்கள் உட்பட, மொத்தம், 82.02 லட்சம் பேர் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

                இதில், பிற்படுத்தப்பட்டோர் - 34.40 லட்சம்; மிக பிற்படுத்தப்பட்டோர் - 18.90 லட்சம்; ஆதிதிராவிடர் - 18.32 லட்சம்; பழங்குடியினர் - 34,024 பேர் இடம் பெற்றுள்ளனர். சிறப்பு பிரிவின் கீழ், பர்மாவில் இருந்து தாயகம் திரும்பியோர் - 1,089; இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர் - 2,416; மாற்றுத்திறனாளிகள் - 1,05,770 பேரும் உள்ளனர்.

                பட்டதாரிகள் - 14.3 லட்சம்; முதுநிலை பட்டதாரிகள் - 6.09 லட்சம் பேரும் இப்பட்டியலில் உள்ளனர். இதில், 28 ஆயிரம் மருத்துவர்; 3.17 லட்சம் இன்ஜினியர்களும் அடங்குவர்.

No comments:

Post a Comment