Friday, March 29, 2013


10-ம் வகுப்பு தமிழ் 2-ம் தாள் தேர்வு வினா எண்.38 எழுத முயற்சித்திருப்பின் அவ்வினாவிற்குரிய முழுமதிப்பெண் 5 வழங்க உத்தரவு. - One India Tamil - Paper 

           10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று நடைபெற்ற தமிழ் 2ஆம் தாள் தேர்வில், வினாத்தாளுடன் இணைத்து கொடுக்க வேண்டிய படிவம் கொடுக்கப்படாததால் பல பள்ளிகளில் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் வினாவினை எழுத முயற்சித்திருந்தால் முழு மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுகள் துறை இயக்குனர் அறிவித்துள்ளார். 

                    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது. இதில் வினாத்தாளின் 6வது பக்கத்தில் 5 மதிப்பெண்களுக்கு படிவம் நிரப்பும் பகுதி கொடுக்கப்படும்.

                இந்த பகுதியில், விண்ணப்ப படிவம் ஒன்று கேள்வித்தாளுடன் இணைத்து கொடுப்பது வழக்கம். ஆனால், பெரும்பாலான தேர்வு மையங்களில் இந்த படிவம் கொடுக்கப்படாததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், அரசு தேர்வுகள் துறை இயக்குநர், மாணவர்கள் விடைத்தாள்களிலேயே படிவத்திற்கான பதிலை நிரப்ப வேண்டும் என அனைத்து தேர்வு கண்காணிப்பாளர்களுக்கும் அறிக்கை வெளியிட்டார்.

                     அவ்வாறு முழுமையான பதிலை நிரப்பாவிட்டாலும் வினாவினை எழுத முயற்சித்திருந்தால்கூட 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் குழப்பமோ, கவலையோ அடையத் தேவையில்லை என்றும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் கூறியுள்ளார்.

டாக்டர்,செவிலியர்,ஆசிரியர்பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கே.பி.முனுசாமி

                சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் சவுந்திர ராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ.), ஆறுமுகம் (இந்திய கம்யூ.), என்.ஆர்.ரங்கநாதன் (காங்) ஆகியோர் கவன ஈர்ப்பு கொண்டு வந்தனர். அவர்கள் கூறும் போது, தமிழக அரசு அலுவலகங்களில் அதிகரித்து வரும் காலி பணியிடங்களை பூர்த்தி செய்து நிர்வாக பணிகளை தொய்வின்றி நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்கள். 
          இதற்கு பதில் அளித்து நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:- 

               அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்களை நிரப்பும் அமைப்புக்களான தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமம், வேலை வாய்ப்பகங்கள், தேர்வு குழுக்கள் ஆகியவை மூலம் போட்டி தேர்வு, நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு காலி பணியிடங்களில் நியமனம் செய்யப்படுகின்றனர். மேலும் ஒவ்வொரு பதவிக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நியமன முறைகள் மூலம், பதவிகள் நிரப்பப் பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், வேலை வாய்ப்பகம் மூலம் அரசு துறைகளில் 54,420 பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன. 

             தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 13,581 பணியிடங்களும் மற்ற கல்லூரிகளில் 64,435 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. 16,793 சத்துணவு அமைப் பாளர்கள், சமையல், சமையல் உதவியாளர் பணியிடங்களும் 11,803 அங்கன் வாடி பணியாளர் பணியிடங்களும் நிரப்பப் பட்டுள்ளன. அரசு போக்குவரத்து கழகங்களில் 16,963 பணியிடங் களும் கூட்டுறவு நியாய விலை கடைகளில் 6,307 பணியிடங்களும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5,489 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மற்றும் பல்வேறு அரசு துறை நிறுவனங்களில் 3717 பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. 

                         மேலும் 22,269 ஆசிரியர் பணியிடங்களும், 1091 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4,042 பணியிடங்களும், கூட்டுறவு வங்கிகளில் 3607 பணியிடங்களும், தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 10,105 காலி பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவ பணி கழகத்தால் 2,159 மருத்துவர்கள், 4 ஆயிரம் செவிலியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. எனவே காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணி தொடர்ந்து நடைபெறுவதால் நிர்வாக பணிகள் தொய்வின்றி நடக்கிறது. ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் அதிகப்படியான காலி பணியிடங்களை இந்த அரசு நிரப்பி உள்ளது. இதனால் அரசு நிர்வாகமும் சரியாக நடைபெறுகிறது. 

இவ்வாறு அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.

இளநிலை உதவியாளர் பணியிடங்கள்: பரிந்துரைக்கப்பட உள்ளவர்கள் பட்டியல் வெளியீடு
 
          
             மாநகராட்சி இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்காக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தியில்:-
 
 
          சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட 40 இளநிலை உதவியாளர் காலி பணியிடங்களுக்கு பதிவு மூப்பு உள்ளவர்களை, சாந்தோம் வேலை வாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்ய உள்ளது.இளங்கலை பட்டம் பயின்று, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள். அதன் படி, 1-8-2012 தேதியில் 30 வயதுக்குள்பட்ட சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை. பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டவர்களின் உத்தேசப் பட்டியல் சாந்தோம் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

 
              பரிந்துரைக்கப்பட்டவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் வரும் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்.

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் மீண்டும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்

           "டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், தமிழ் மொழித்திறன் பகுதிக்கு, மீண்டும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, தேர்வாணையத்திற்கு, கடிதம் மூலமாக வலியுறுத்தி உள்ளோம்,' என, சட்டசபையில், பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.


              டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு, புதிய பாடத்திட்டங்கள், சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில், குரூப்-2, குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ., ஆகிய தேர்வுகளில், தமிழ் மொழித்திறன் பாடப் பகுதிகளுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டும், நீக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தன.

               குரூப்-2 தேர்வில் இருந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழித்தாள் பகுதி நீக்கப்பட்டு, 200 கேள்விகளும், பொது அறிவு பாடங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. குரூப்-4 தேர்வில், மொழித்தாள் பகுதிக்கான கேள்விகள் எண்ணிக்கை, 100ல் இருந்து, 50 ஆக குறைக்கப்பட்டுள்ளன.

              வி.ஏ.ஓ., தேர்வில், மொழித்தாள் கேள்விகளின் எண்ணிக்கை, 100ல் இருந்து, 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற மாணவர்கள், பெரிதும் பாதிக்கப்படுவர் என்றும், தமிழ் மொழித்திறனுக்கான முக்கியத்துவத்தை குறைக்கக் கூடாது என்றும், பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.

             இந்நிலையில், இந்த பிரச்சனை, சட்டசபையில், நேற்று எதிரொலித்தது. மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., சவுந்திரராஜன் ஆகியோர், தமிழ் மொழித்திறன் முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருப்பது குறித்து, கேள்வி எழுப்பினர்.

               இதற்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் கூறுகையில், "தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழித்திறன் பகுதிக்கான முக்கியத்துவத்தை குறைக்கக் கூடாது என்றும், அதற்குரிய முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தேர்வாணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளோம்" என, தெரிவித்தார்.

             இதற்கு, "ஏற்கனவே இருந்த நிலையை, உறுதி செய்ய, நடவடிக்கை எடுத்தால் போதும்" என, சவுந்திரராஜன் தெரிவித்தார்.

                  இதுகுறித்து, தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணனிடம் கேட்ட போது, "எந்தெந்த தேர்வுகளில், தமிழ் மொழிக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது என்பது குறித்து, ஆய்வு செய்து வருகிறோம். இந்தப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. எனவே, தற்போதைய நிலையில், எதுவும் கூற முடியாது" என, தெரிவித்தார்.

               இந்த விவகாரத்தில், முதல்வரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே, தேர்வாணையத்திற்கு, அமைச்சர் கடிதம் எழுதியிருப்பார் என, துறை வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே, போட்டித் தேர்வுகளில், தமிழ்மொழி பகுதிக்கான கேள்விகள், பழையபடி மீண்டும், பாடத்திட்டத்தில் இடம்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

                  பாடத்திட்டத்தில் மீண்டும் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பான முடிவுக்கு, தேர்வாணைய உறுப்பினர்கள், முறைப்படி ஒப்புதல் அளிக்க வேண்டும். எனவே, இந்த ஒப்புதலை பெற்றபின், உரிய தகவல், தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் என, கூறப்படுகிறது.

               அதன்பின், சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா, அறிவிப்பை வெளியிடுவார் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment