நம்புங்கள்... இதுவும் ஓர் இந்திய கிராமமே!
ஒரு கனவு கிராமத்தின் கதை இது. ஒரு கிராமம் எப்படி இருக்க வேண்டும் என்று நூறு வரிகளில் ஒரு கட்டுரை எழுதுங்களேன். நிச்சயம், உங்கள் கட்டுரையில் உள்ள நல்ல விஷயங்கள் அனைத்தையும் கொண்டிருப்பதோடு, உங்கள் கற்பனையைத் தாண்டிய அம்சங்களுடன் அழகுற விளங்கும் அந்தக் கிராமம்.
ஆந்திராவின் தலைநகர் ஹைதரபாத்தில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவியில் அமைந்துள்ளது, கங்காதேவிபள்ளி என்ற அந்த உன்னத கிராமம். தடையில்லா மின்சாரம், அறிவியல் தொழில்நுட்ப ரீதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, உள்ளூருக்குச் சொந்தமான கேபிள் டிவி சேவை, மிகச் சிறந்த சாலை வசதிகள்... இப்படி அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாகவும் சிறப்பாகவும் கொண்டிருக்கிறது அந்தக் கிராமம். கிராம மக்களின் ஒற்றுமை, கட்டுப்பாடு, உறுதியான நடவடிக்கைகள், சிறப்பான நிர்வாகம் ஆகியவற்ற்றால்தான் இது சாத்தியமாயிற்று. சுமார் 1,300 பேர் மக்கள்தொகையைக் கொண்ட இந்தக் கிராமத்தில் 100 சதவீத கல்வி அறிவு காணப்படுகிறது. கடந்த 2000-ல் இருந்து இந்த ஊரில் உள்ள பள்ளியில் இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை - பூஜ்ஜியம். தங்கள் கிராமத்துக்கென சுகாதாரம், தண்ணீர், கேபிள் வசதி, கல்வி என பல்வேறு தேவைகளுக்கும் 24 சமூக அமைப்புகளைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு அமைப்பில் உள்ளவர்களும் தங்களது துறை சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்வது, தொடர்ந்து நிர்வகிப்பது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வர். இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம்... இங்கு திருமணமான 35 வயதுக்கு உட்பட்ட தம்பதியருக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் எவருக்குமே இல்லை. பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே வேண்டிய அனைத்து அடிப்படை மருத்துவ தேவைகளும் கிடைக்க வழிவகுக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு ரெகுலரான மருத்துவப் பரிசோதனை, ஊட்டம் மிகுந்த உணவுகள் அளித்தல் முதலான அனைத்து நடவடிக்கைகளும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. ஆண் - பெண் பாலின விகிதம் சரிசமமாக உள்ளது. தன் குடும்பப் பொருளாதாரத் தேவைகளுக்கு உறுதுணைபுரியும் வகையில், ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து பெண்கள் சேர்ந்து சுய உதவிக் குழுக்களை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திடமும் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் சேமிப்பு உள்ளது. அனைத்துக் குடும்பத்தினருக்கும் எல்.ஐ.சி. பாலிசி உண்டு. வேளாண் நிபுணர்களின் உதவியுடன் அதிகபட்ச மகசூலைப் பெறும் வகையில் விவசாயத்தைச் செய்து வருகிறார்கள். குடும்பங்களில் நடக்கும் சச்சரவுகளைத் தீர்ப்பதற்கும் ஓர் அமைப்பு உள்ளதாம். மத்திய, மாநில அரசுகளின் மூலம் கிடைக்கும் நுகர்வுப் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுவதில் இருந்து எந்த ஒரு நிர்வாகத்திலும் ஊழலையோ லஞ்சத்தையோ இங்கே பார்க்கவே முடியாது. எல்லாவற்றுக்கும் உச்சமாக, மதுவின் வாடைத் தெரியாத ஊர் இது. மது உள்ளே நுழைவதைத் தடுப்பதற்கென்றே ஒரு பாதுகாப்புப் படை உள்ளதாம். "எங்கள் கிராமத்தின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியக் காரணமே ஒற்றுமைதான். சாதி, மதம், அரசியல் கொள்கை என பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும், ஒற்றுமையுடன் கூடிய இதயத்தைக் கொண்டிருப்பதே எங்கள் கிராமத்தின் சிறப்பு" என்கிறார் சுய உதவிக் குழுவின் உறுப்பினர் ஒருவர். "சமூக முன்னேற்றத்தின் தேவையை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல்படுவதுதான் இந்தச் சாதனைகளுக்கான அடித்தளம்" என்கிறார் எஸ்.எஸ்.ரெட்டி. இவர் தமது பால விசாகா சோசியல் சர்வீஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் இந்தக் கிராமத்துக்கு உதவி வருபவர். பீமா கிராம் விருது பெற்ற இந்தக் கிராமத்தின் தலைவர் ராஜமெளலி, தனது கிராமத்தின் முன்னேற்றத்துக்கான காரணங்கள் குறித்து விளக்குவதாக அண்மையில் நேபாளத்துக்கு அழைக்கப்பட்டார். "சரியான காரணத்துக்காக, எங்கள் கிராமம் பெரிய அளவில் பிரபலம் அடைந்திருக்கிறது. எங்களின் ஒழுக்கமும் நேர்மையும்தான் சாதனைகளுக்கு வித்திட்டுள்ளது. இதற்கு ஓர் எளிய உதாரண நிகழ்வைச் சொல்கிறென். ஒரு முறை வறட்சி காரணமாக, வேளாண் கடன்களை மத்திய அரசு ரத்து செய்தது. அப்போது, எங்கள் கிராம விவசாயிகள் தாங்கள் பெற்ற 40 லட்ச ரூபாய் கடன் தொகையை அப்படியே திருப்பிச் செலுத்தினர்" என்று நெகிழ்வுடன் சொல்கிறார் ராஜமெளலி. தங்கள் கிராமம் பிரபலம் அடைந்ததும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு அதிகாரிகள், கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஊடகத்துறையினர், சுற்றுலாப் பயணிகள் இங்கு படையெடுக்கத் தொடங்கினர். இதையடுத்து, தங்கள் கிராமத்தைப் பார்வையிடும் குழுக்களிடம் இருந்து ரூ.1,600 கட்டணம் வசூலித்து, அவர்களுக்கு முழுமையான வழிகாட்டுதல் அளிக்க முடிவு செய்யப்பட்டது. அந்தத் திட்டமும் அமல்படுத்தப்பட்டு, அதில் இருந்து வரும் நிதியை நலப் பணிகளில் செலவிடப்படுகிறது. இப்போது அந்தக் கிராமத்துக்கு தினமும் இரண்டு குழுவினர் பார்வையிட வருகிறார்களாம். கங்காதேவிபள்ளி கிராமத்துக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமும் உள்ளது. அதில், தங்கள் கிராமம் பற்றிய ஆய்வுக் கட்டுரையையும் அவர்கள் வெளியிட்டுள்ளார். அந்தத் தளம் http://www.gangadevipally.org . உண்மையில் ஓர் உதாரண கிராமம்தானே! - சரா |
No comments:
Post a Comment