Friday, March 1, 2013

Posted: 01 Mar 2013 04:07 PM PST


    தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது. 

           2012-13 ஆண்டிற்கான  உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் (வ.எண் 1முதல் 104 வரை) பரிசீலிக்கப்பட்டு, மேலும் 07.11.2012ன் படி  திருத்திய முன்னுரிமை பட்டியலில் உள்ள 1 முதல் 94 வரையுள்ள நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு இந்த உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.
 
Posted: 01 Mar 2013 05:25 AM PST


      ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, முதுகலை ஆசிரியர் பணிக்கு, இரண்டாவது பட்டியலில் தேர்வு பெற்றவர்களுக்கு, இம் மாதம் 5ல் கவுன்சிலிங் நடக்கிறது.ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கடந்தாண்டு முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு, 2308 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் பெற்றனர். 

     இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில், கடந்த ஆண்டு முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் சேராமல் இருந்தவர்களையும், கூடுதல் காலி பணியிடங்களையும் கணக்கிட்டு, இரண்டாவது தேர்வு பட்டியல், கடந்த ஜனவரி 18ல் வெளியிடப்பட்டது. இதில், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு, பிப்.,20 ல் கவுன்சிலிங் நடந்தது. பள்ளிக் கல்வித் துறையில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில், மார்ச் 5 ல் கலந்தாய்வு நடக்கிறது. அன்று காலையில், அந்தந்த மாவட்டத்திற்குள்ளும், மதியம் பிற மாவட்டங்களுக்குள்ளும் கலந்தாய்வு நடக்கிறது.தேர்வு செய்யப்பட்ட, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உரிய சான்றுகளுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும், என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
 
Posted: 01 Mar 2013 06:44 AM PST


சமூகத்தில் புரளிகளுக்கு என்று ஒரு இடம் எப்போதும் உள்ளது என்பது உண்மைதான்.

அதற்காக எதற்கெல்லாம் புரளியை கிளப்புவது என்பது  கிடையாது போல...

அதற்குள்ளாக TNTET தேர்வுநாள்... ஆன்லைன் அப்லை செய்ய நாள் என்று ஒரு பட்டியலுடன் பரவிக் கொண்டிருக்கிறது அந்த குறுஞ்செய்தி.. அதில்..



ஆசிரியர் தகுதித் தேர்வு 2013
ONLINE APPLY DATE :- 13.03.2013   - 23.4.2013
EXAM DATE :- 9.6.2013
VACANT POSITION  
D.TEd - 2639 
TAMIL - 891
 ENGLISH -2654
MATHS -4096
SCIENCE - 6518
SOCIAL SCIENCE - 1530 

என்று தட்டி விட்டிருக்கிறார்கள் யாரோ..


இது புரளி என்பதற்கான காரணங்கள்...
ஆன்லைனில் பதிவு செய்வதால்  இடையில்  இரண்டு மாத இடைவெளி என்பது தேவையில்லாத ஒன்றாக மாறிவிடும்.

 
குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு நாள் சென்ற ஆண்டு TET தேர்விற்காக ஒதுக்கப்பட்ட தேர்வு நாளுடன் ஒத்து வருகிறது..

சமூக அறிவியல் பாடத்திற்குதான் இருப்பதிலேயே அதிக ஆசிரியர்கள் தேவை உள்ளதாக இதற்கு முன்னர் அதிகார பூர்வமான செய்திகள் வெளி வந்துள்ளது..

எனவே இந்த குறுஞ்செய்தியை நம்பவேண்டாம் எனவும்..

அதிகாரபூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் வரை காத்திருக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

முடிந்தவரை மே மாதம் இறுதிக்குள்ளாக தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகளே வெளியாகும் என்பதுதான் கல்வியாளர்களின் கருத்து...
 
பெட்ரோல் விலை உயர்வு லிட்டருக்கு ரூ.1.40 உயர்த்தப்பட்டது

          பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.40 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
          சென்னையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டர் ஒன்று ரூ.72.15க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வை அடுத்து இனி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.73.65க்கு விற்கப்படும்.
 
 

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம், மக்களிடையே ஆசிரியர்கள் விழிப்புணர்வு

         அரசுப்பள்ளிகளில், கல்விக்கானஅனைத்து தேவைகளையும் அரசுஇலவசமாக வழங்க உள்ளது குறித்துமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கை அதிகரிக்க பள்ளி ஆசிரியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
 
 
          அரசு தொடக்கப்பள்ளிகளில், செயல்வழி கற்றல் முறையும், நடுநிலைப்பள்ளிகளில் படைப்பாற்றல் கல்வி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.தற்போது, மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையில், முப்பருவ கல்விமுறையும் நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், நடுநிலைப்பள்ளிகளுக்கு கம்ப்யூட்டரும், டிவி மற்றும் டிவிடியும்,பள்ளிகல்வித்துறை சார்பில், லேப்-டாப் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான குடிநீரும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அரசுபள்ளிகளின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் வசதி,சீருடையில் மாற்றம் போன்றவற்றினால், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.அரசுப்பள்ளிகளில், போதுமான வசதிகளை மேம்படுத்தவும், மாற்றங்களை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும் என கல்வியாளர்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
              இந்நிலையில், தமிழக அரசு 2012-13ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், பள்ளி கல்வித்துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ததுடன், பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளது.அதில் மாணவர்கள் பயன்பெறும் வகையில், புத்தகங்கள் முதல் காலணி வரை அனைத்தும் நடப்பு கல்வியாண்டு முதல் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது.
 
                  தற்போது, பள்ளிகள் துவங்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு முப்பருவ கல்வி முறை பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திபள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் முயற்சியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பெற்றோருக்கு சுமையில்லாமல்,அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளிகளில்விழிப்புணர்வு பேரணி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
           மேலும், பள்ளிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பிளக்ஸ் போர்டுகள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதில், அரசின் திட்டங்கள், பள்ளியின் செயல்பாடுகள், இலவச கட்டாய உரிமைச் சட்டம், பள்ளிகளிலுள்ள வசதிகள் உள்ளிட்டவைவிளக்கமாக தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள் ளது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவர்களை திட்டினால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

            மாணவ-மாணவிகளை கன்னத்தில் அறையக்கூடாது. கம்பால் அடிக்கக் கூடாது என்று ஏற்கனவே சட்டம் உள்ளது. மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்த கூடாது என்று தடை விதித்து இருப்பது போல மனதளவிலும் துன்புறுத்தக்கூடாது என்று தற்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
 
           கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி மாணவ- மாணவிகள் மனம் புண்படும்படி ஆசிரியர்கள் பேசக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சிறிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை முட்டாள் என்பது போன்ற வார்த்தைகளால் திட்டக்கூடாது என்று சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

          முட்டாள் என்று திட்டும் ஆசிரியர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகளிடம் அன்பாக பழக வேண்டும். இதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கலாம் என்று மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை கருத்து தெரிவித்துள்ளது.

           இதற்கிடையே மாணவ குழந்தைகளை திட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற புதிய சட்டத்துக்கு ஆசிரியர்கள் மத்தியில் பரவலாக எதிர்ப்பும் ஆதரவும் கிடைத்துள்ளது.
தேர்வு நேரத்தில், "மெடிக்கல் லீவ்' : அரசு பள்ளி மாணவர்கள் பாதிப்பு

          தேர்வு நேரத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர், தங்கள் குழந்தைகளுக்காக, "மெடிக்கல் லீவ்' போடுவதால், பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
 
 
             தமிழகத்தில், ப்ளஸ் 2 தேர்வு, இன்று தொடங்கி, மார்ச், 27ம் தேதி வரையும்; 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 27ம் தேதி முதல், ஏப்., 12ம் தேதி வரையும் நடக்கிறது. இந்த நேரத்தில், தேர்வுப் பணிக்காக பெரும்பாலான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், அரசு பள்ளிகளில் ஒன்றிரண்டு ஆசிரியர்களே இருக்கும் நிலை காணப்படும். இதில், ப்ளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களின் பெற்றோராக உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள், ஒரு மாதம் வரை மெடிக்கல் லீவ் எடுத்து, குழந்தைகளை தேர்வுக்கு தயார் செய்கின்றனர். ஒவ்வொரு பள்ளியிலும், இதுபோன்ற காரணங்களுக்காக, ஒன்றிரண்டு ஆசிரியர்கள் மெடிக்கல் லீவில் சென்றுள்ளதால், துவக்கப் பள்ளிகளும் கடும் பாதிப்பை சந்திக்கின்றன.

             இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: தேர்வு நேரங்களில் அவசியமான காரணம் இல்லாவிடில், மெடிக்கல் லீவ் அனுமதிக்கக் கூடாது என, அரசின் அறிவிப்பு இருந்தும், தொடக்கக் கல்வியில், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களும்; பள்ளிக் கல்வியில், பள்ளியின் தலைமை ஆசிரியர்களும், "சரிகட்டப்' பட்டு, விடுமுறை வழங்கி விடுகின்றனர். தங்கள் குழந்தையின் படிப்புக்காக விடுமுறை எடுக்கும் இவர்கள், மற்ற குழந்தைகள் படிப்பு பாதிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் இருப்பது, வேதனையளிக்கிறது. தேர்வு நேரத்தில், அதிலும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நேரத்தில், ஆசிரியர்களுக்கு மெடிக்கல் லீவ் வழங்குவதை தடுத்து நிறுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை அவசியம்

           அரசு தொடக்கப்பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இருந்தும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
          மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொடக்க பள்ளிகளின் நிலை நாளுக்கு நாள் மாறி வருகிறது. பெரும்பாலான தொடக்க பள்ளிகளில் புதிய வகுப்பறை, காம்பவுண்ட் சுவர், கம்ப்யூட்டர், விளையாட்டு உபகரணம் என எஸ்.எஸ்.ஏ., நிதியில் கீழ், அனைத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மட்டக்கண்டி அரசு தொடக்க பள்ளியில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மாணவர்கள் குறைந்து வருவது ஆசிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.

             இது குறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில், " கல்வித்துறை அதிகாரிகள் எவ்வளவு தான் அறிவுரை கூறினாலும், பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களின் சேர்க்கையில் போதிய அக்கறை காட்டுவதில்லை என்பது தான் உண்மை. சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு ஆசிரியர்கள் நேரடியாக சென்று பெற்றோரை சந்தித்து பேசி குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். ஒரு ஆசிரியர் 5 மாணவர்களை கட்டாயமாக பள்ளியில் சேர்க்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,'' என்றார்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கும் கவுன்சிலிங் முறையில் இடமாறுதல் வழங்க வேண்டும் மாநில சங்க கூட்டத்தில் தீர்மானம்

                 பள்ளிக்கல்வித்துறையில் கற்பித்தல் பணியையும், நிர்வாக பணியையும் ஒரே அலுவலர் மேற்கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளையும் தேக்க நிலையையும் களைய ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் கல்வி அதிகாரிகள்
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அமைச்சு பணியாளர்களை கொண்ட சீரமைப்புக்குழுவை ஏற்படுத்த அரசை கேட்டுக்கொள்வது.
 
        அமைச்சு பணியாளர்களுக்கான இணை, துணை இயக்குனர் பணியிடங்களையும், இணை இயக்குனர்களுக்கான நேரடி உதவியாளர் பணியிடங்களையும் அரசாணைப்படி நிரப்ப வேண்டும். ஆசிரியர்களை போன்று பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்களுக்கும் கவுன்சிலிங் முறையில் இடமாறுதல் வழங்க வேண்டும். ஆய்வக உதவியாளர்களுக்கு இடையே உள்ள தர ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய வேண்டும்.

10ம் வகுப்பு தேர்வு: மாணவர்களை விட மாணவியர் குறைவு

           வரும், 27ம் தேதி முதல், ஏப்., 12 வரை நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, 10.68 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். கடந்த ஆண்டை விட, 17,916 பேர், கூடுதலாக எழுதுகின்றனர். இவர்களில், 16,362 பேர் மாணவர்; மாணவியர், 1,554 பேர்.

       
               முந்தைய பொதுத் தேர்வை, 10 லட்சத்து, 50 ஆயிரத்து, 922 பேர் எழுதினர். இந்த ஆண்டு, 10 லட்சத்து, 68 ஆயிரத்து, 838 பேர் எழுதுகின்றனர். இவர்களில், மாணவர், 5 லட்சத்து 43 ஆயிரத்து, 152 பேர்; மாணவியர், 5 லட்சத்து, 25 ஆயிரத்து 686 பேர்.

             தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து, 11,344 பள்ளிகளில் இருந்து, 10.68 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதுகின்றனர். 3,012 மையங்களில், தேர்வுகள் நடக்கின்றன. இந்த தேர்வை, தனித்தேர்வாக, 53,120 பேர் எழுதுகின்றனர். இவர்களையும் சேர்த்தால், மொத்த தேர்வர்களின் எண்ணிக்கை, 11.21 லட்சமாக உள்ளது.

               கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, 5 லட்சத்து, 26 ஆயிரத்து, 790 மாணவர், தேர்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டு, 5 லட்சத்து, 43 ஆயிரத்து 152 பேர் பங்கேற்கின்றனர். 5 லட்சத்து, 24 ஆயிரத்து 132 மாணவியர், முந்தைய தேர்வை எழுதிய நிலையில், இந்த ஆண்டு, 5 லட்சத்து, 25 ஆயிரத்து, 686 பேர் மட்டுமே எழுதுகின்றனர்.

               மாணவர் எண்ணிக்கை அதிகரித்த அளவிற்கு, மாணவியர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. 1,554 பேர் மட்டுமே, இந்த ஆண்டு கூடுதலாக எழுதுகின்றனர். ஆரம்ப வகுப்புகளில், மாணவியர் அதிகளவில் பள்ளிகளில் சேர்கிற போதும், அவர்கள் அனைவரும், 10ம் வகுப்பு வரை, பிளஸ் 2 வரை தொடர்கின்றனரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

         கிராமப்புறங்களில், அதிகமான மாணவியர், படிப்பை பாதியிலேயே கைவிடும் நிலை உள்ளது. இதன் காரணமாகவே, மாணவியர் எண்ணிக்கை, கணிசமாக குறைந்துள்ளது. பெண் கல்விக்காகவும், இடைநிற்றலை, முற்றிலுமாக தடுத்து நிறுத்தவும், மத்திய, மாநில அரசுகள், பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன. அப்படியிருந்தும், மாணவியர் எண்ணிக்கை சரிந்திருப்பது, கல்வித்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
7,91,924 மாணவர்கள் எழுதும் பிளஸ் 2 தேர்வு துவங்கியது!

         தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்கியது. தமிழகத்தில், 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.
இந்த தேர்வு , மார்ச், 27ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


          மாணவர்கள் கேள்வித்தாள் படித்து பார்ப்பதற்கு வசதியாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தேர்வு மதியம் 1.15 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

         பிளஸ் டூ தேர்வை தொடர்ந்து, தேர்வு மையங்கள் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு தடா: மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு

         பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர், மின்தடையின்றி தேர்வெழுத, தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

           தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்கி, மார்ச், 27ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில், 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

           தேர்வு மையங்களில் மாணவருக்கு தேவையான குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, அந்தந்த தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.

           மின்தடை காரணமாக மாணவர்களின் கவனம் சிதறக்கூடாது என்பதில் கல்வித்துறை அதிகாரிகள் மிகவும் கவனமாக இருக்கின்றனர். இதற்காக, தேர்வு மையங்களில் டீசல் ஜெனரேட்டர் வாடகைக்கு வாங்கி வைக்கப்பட்டுள்ளது.
.
           ஜெனரேட்டர்கள் சரியாக இயங்குகிறதா? என்று, ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், தமிழ்நாடு மின்வாரியம், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களிடம், தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகள் குறித்த பட்டியலை கேட்டுள்ளது.

             பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளுக்கு உட்பட பகுதியில் மட்டும், காலை, 10 மணி முதல், மதியம், 1 மணி வரை, தடையில்லாத மின்சாரம் வழங்க திட்டமிட்டு, தேர்வுமைய பள்ளிகளின் பட்டியலை மின்வாரியம் வாங்கியதாக கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

           மின்வாரிய வட்டாரத்தில் விசாரித்தபோது, "தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது உண்மை. முன்கூட்டியே அறிவித்து, மின்சாரம் தரமுடியாமல் போய்விட்டால், அரசுக்கு பெரிய கெட்ட பெயர் ஏற்படும். முழுமையாக செயல்படுத்த பிறகு, தடையில்லா மின்சாரம் கொடுத்தோம் என்று அரசு அறிவிக்கும்" என்றனர்.

         இவர்களின் கூற்றின்படியே, தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டால், மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வெழுவர் என்பது நிதர்சனமான உண்மை. இதேபோல, பிளஸ் 2 மாணவர் மட்டுமல்லாது, எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களும், தேர்வுக்கு படிக்க, இரவு முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் என்று மாணவரும், பெற்றோரும், மின்வாரியத்துக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுக்கின்றனர்.

சென்னை பல்கலை தொலைதூர கல்வி இளங்கலை தேர்வு முடிவு


       சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியின், இளங்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன.


            சென்னை பல்கலை, தொலைதூர கல்வியின், பி.ஏ., - பி.காம்., உள்ளிட்ட இளங்கலை படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தேர்வு முடிவுகளை, www.unom.ac.inஇணையதளம் மூலம் மாணவர்கள் பெறலாம்.

           தேர்வு மதிப்பெண் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், www.ideunom.ac.inஎன்ற இணையதளத்திலிருந்தும் விண்ணப்பங்களை, பதிவிறக்கம் செய்து, மார்ச், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, தொலைதூர கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆரம்ப கல்வியில் அறிவியல் ஊக்குவிப்பு அவசியம்


        ஆரம்ப கல்வியிலேயே அறிவியலை போதித்தால் ஆர்வம் அதிகரிக்கும் என, தேசிய அறிவியல் தின நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.

      ஊட்டி ரேடியோ வானியல் மையத்தில், நேற்று, தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. மைய தலைவர் டாக்டர் மனோகரன் வரவேற்று பேசுகையில், "மாணவ, மாணவியர் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. அறிவியல் ஆராய்ச்சியில் அதிகளவு மாணவர்கள் ஈடுபட வேண்டும்.


           அதிகளவு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் உருவாக வேண்டும். அதற்கேற்ப கல்வி முறை இருக்க வேண்டும். ஆரம்ப கல்வியிலேயே அறிவியலை போதித்தால் ஆர்வம் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க மட்டும் கல்வி, என்ற நிலை மாற வேண்டும்.

            அறிவியல் சார்ந்த பல துறைகளில் வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன. இந்த விழிப்புணர்வை மாணவ, மாணவியர் பெற வேண்டும்,&'&' என்றார்.
.
             சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, இந்திய அணுசக்தி கழக முன்னாள் தலைவர் சீனிவாசன் பேசுகையில், "பிரிட்டன், பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுகல் உட்பட வெளிநாடுகளில் வசிப்போருக்கு அறிவியல் குறித்த விழிப்புணர்வும், தொலைநோக்கு சிந்தனையும் அதிகம். அதேபோல், நம் மாணவர்களும் அதிகளவு ஆராய்ச்சிகளில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும்" என்றார்.

அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ரூ.2,000 கோடியில் தனி நிதியம்


          மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தாக்கல் செய்த நிதியறிக்கையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கு, வரும் நிதியாண்டில், 6,275 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்வெளித் துறைக்கு, 5,615 கோடியும், அணுசக்தித் துறைக்கு, 5,880 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

          ஏழை மற்றும் சாதாரண மக்களின் மேம்பாட்டிற்கான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு, 2,000 கோடியில் தனி நிதியம் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

              பல்கலை மேம்பாடுக்கு ரூ.100 கோடி: அலிகார் முஸ்லிம் பல்கலை, பனாரஸ் இந்து பல்கலை, சமூக அறிவியலுக்கான டாடா கல்வி நிறுவனம், கலை மற்றும் பாரம்பரிய கலாச்சாரத்திற்கான தேசிய அறக்கட்டளை ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக, தலா, 100 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
 

No comments:

Post a Comment