Thursday, March 21, 2013

பகுதி நேர கணினி ஆசிரியர்கள் அரசு துறை தேர்வுகளை எழுதலாமா?

           எழுதலாம். அரசு பணியே கிடைக்காதவர்கள் கூட தம் வீட்டு முகவரியை கொண்டு துறை தேர்வுகளை எழுதலாம். 

               பகுதி நேர ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் அல்லது தொடக்க கல்வி துறை எனில் உதவி தொடக்க கல்வி அலுவலர் அனுமதியுடன் துறை தேர்வுகளை எழுதலாம். பின்னர் முழு நேர பணியாளராக ஆனதும் பணிப்பதிவேடு துவங்கிய பின்னர் அதில் தங்கள் துறைதேர்வு முடிவுகளை பதிவு செய்து கொள்ளலாம். 


                   குறிப்பு:   தாங்கள் பணிபுரியும் பள்ளி முகவரியை கொண்டே தேர்வு எழுத வேண்டும். தங்கள் பள்ளி அமைந்துள்ள மாவட்டத்தின்  தேர்வு மையத்தில் தான் தேர்வு எழுத வேண்டும். மற்ற மாவட்டத்தில் தேர்வு எழுத வேண்டாம்.


TET Study Material



Prepared By
Mr. K. PremKumar, 
BT Asst in Maths,
Thirumangalam,
Madurai.


குரூப்-1 தேர்வு வயது வரம்பை 45 ஆக உயர்த்த கோரிக்கை

         "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் -1 தேர்வுக்கான வயது வரம்பை, 45 ஆக உயர்த்த வேண்டும்" என, மார்க்., கம்யூ., கட்சி கூறியுள்ளது.


          இதுகுறித்து, கட்சியின் மாநில செயலர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: குரூப் -1 தேர்வு எழுத பொதுப் பிரிவினருக்கு 30 என்றும், இதர பிரிவினருக்கு 35 எனவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

          குரூப் -1 தேர்வு ஆண்டுதோறும் நடைபெறுவதில்லை. இதனால், முதல்முறை தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் தேர்வு எழுத வயது வரம்பு தடையாக அமைகிறது. கேரளா, குஜராத், அசாம், திரிபுரா, அரியான மாநிலங்களில், குரூப் -1 தேர்வுக்கான வயது வரம்பை, 40 முதல், 50 வயதாக நிர்ணயித்துள்ளனர்.

               எனவே, பின்தங்கிய பகுதியிலிருந்து போட்டியிடும் இளைஞர்களின் நலன் கருதி, குரூப் -1 தேர்வுக்கான வயது வரம்பை, 45 ஆக உயர்த்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும். இவ்வாறு, ராமகிருஷ்ணன் கூறியள்ளார்.

தமிழ் மொழித்தாள் தேர்வு: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

         சிறுபான்மை மொழிகளை, தாய்மொழியாகக் கொண்ட பட்டதாரிகளுக்கான, தமிழ் மொழித்தாள் தேர்வு, மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது. இதில், 10 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். ஒரு வாரம் வரை, இந்த தேர்வுகள் நடக்கும் என்றும், தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.



           தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளை, தாய் மொழியாகக்கொண்ட மக்கள், அதிகளவில் வசிக்கின்றனர். சிறுபான்மை மொழிகளை, தாய் மொழியாகக் கொண்ட பட்டதாரிகள், தமிழக அரசு பணிகளுக்கு செல்ல வேண்டும் எனில், டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், தமிழ் மொழித்தாள் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்.

                  இந்த தேர்வு, நேற்று, பல்வேறு மாவட்டங்களில் துவங்கியது. கிருஷ்ணகிரி, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், இந்த தேர்வுகள் நடக்கின்றன. இதில், 10 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாகவும், ஒரு வாரம் வரை, இந்த தேர்வுகள் நடக்கும் என்றும், தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

பாகிஸ்தான் சிறுமி மலாலா பிரிட்டன் பள்ளியில் சேர்ப்பு

        தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் சிறுமி மலாலா, பிரிட்டனில் உள்ள பள்ளியில், தன் படிப்பை தொடர்கிறாள்.


           பெண்கள் கல்வி உரிமை குறித்து இணையதளத்தில் எழுதியதால், கடந்த ஆண்டு, தலிபான்களால் சுடப்பட்ட, பாகிஸ்தான் பள்ளி மாணவி, மலாலா யூசுப், 15, சிகிச்சைக்காக, பிரிட்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

          அங்கு, தலை மற்றும் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்காக, அவருக்கு சிசிச்சை அளிக்கப்பட்டது. உடல் நலம் தேறிய மலாலா,கடந்த மாதம் டிஸ்சார்ஜ் ஆனாள். தற்போது, பிரிட்டனின், பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்க்பாஸ்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், சேர்க்கப்பட்டுள்ளாள்.

         "பாகிஸ்தானில் உள்ள தோழிகளை பிரிந்தாலும், பிரிட்டனில் புதிய தோழிகள் கிடைப்பர் என நம்புகிறேன்" என, அவர் தெரிவித்துள்ளாள்.

             பிரிட்டன் பள்ளியில், மலாலா கல்வியை தொடர்வது குறித்து, முன்னாள் பிரதமரும், ஐ.நா., கல்வி பிரிவின் தூதருமான, கார்டன் பிரவுன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
 
சத்துணவில் விதவிதமான உணவு விநியோகம்: மாணவர்கள் உற்சாகம்

         சத்துணவில், விதவிதமான உணவு வகைகள் வழங்கும் திட்டம், மாவட்டத்திற்கு ஒரு இடம் என, தமிழகம் முழுவதும், 32 இடங்களில் முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.


           தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும், 43 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 50.14 லட்சம் மாணவ, மாணவிகள், மதிய உணவுத் திட்டத்தில், சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர். 30 ஆண்டுகளாக சாதம், சாம்பார் என, சாப்பிட்டு வருவதால், மாணவர்களிடையே சத்துணவு மீதான ஆர்வம் குறைந்து, சரியாக சாப்பிடுவதில்லை என, கூறப்பட்டது.

           இதையடுத்து, காலத்திற்கேற்பவும், குழந்தைகளின் விருப்பத்துக்கு ஏற்பவும், உணவு முறையில் மாற்றம் கொண்டு வரும் முயற்சியில் அரசு இறங்கியது. நிபுணர்கள் ஆலோசனைப்படி, சத்துணவு திட்டத்தில், 13 வகையாக உணவு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.

          இதன்படி, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், விதவிதமான உணவு வழங்கும் திட்டம், நேற்று தொடங்கியது. திட்டத்தை, சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதி தொடங்கி வைத்தார். மேயர் சைதை துரைசாமி, சமூகநலத்துறை செயலர் பஷீர்அகமது, மாநகராட்சி ஆணையர் விக்ரம்கபூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

               வழக்கமாக சாதம், சாம்பார் என, சாப்பிட்ட மாணவர்கள், நேற்று வழங்கிய தக்காளி சாதம், மிளகுத்தூள் முட்டையை விரும்பி சாப்பிட்டனர். சத்துணவு திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "சத்துணவில் விதவிதமான உணவு வழங்கும் திட்டம், மாவட்டத்திற்கு ஒரு மையம் என, 32 இடங்களில் முன்னோடியாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் அறிந்தபின், எல்லா இடங்களிலும் செயல்படுத்தப்படும்" என்றார்.

              புதிய திட்டத்தின் படி முதல் வாரம், மூன்றாவது வாரத்தில் வழங்கப்படும் உணவு வகைகள்:
திங்கள்: காய்கறி பிரியாணி; மிளகுத்தூள் முட்டை
செவ்வாய்: கொண்டக்கடலை புலாவ், தக்காளி முட்டை மசாலா
புதன்: தக்காளிசாதம், மிளகுத்தூள் முட்டை
வியாழன்: சாதம், சாம்பார், வேகவைத்த முட்டை
வெள்ளி: கறுவேப்பிலை சாதம் (அ) கீரைசாதம்- முட்டை மசாலா, வறுத்த உருளைக்கிழங்கு.
இரண்டாவது, நான்காவது வாரத்தில் வழங்கப்படும் உணவு வகைகள்:
திங்கள்: சாம்பார் சாதம், வெங்காயம், தக்காளி முட்டை மசாலா
செவ்வாய்: மீல்மேக்கருடன், காய்கறி கலவை சாதம், மிளகுத்தூள் முட்டை
புதன்: புளிசாதம், தக்காளி முட்டை மசாலா
வியாழன்: எலுமிச்சை சாதம், தக்காளி முட்டை மசாலா, சுண்டல்
வெள்ளி: சாதம், சாம்பார், வேகவைத்த முட்டை, உருளைக்கிழங்கு பொறியல்
இதனிடையே, தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு, புதிய வகை உணவுகள் வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. விரைவில், இது நடைமுறைக்கு வர உள்ளது.
நாள் உணவு வகைகள்

திங்கள்: தக்காளி சாம், வேகவைத்த முட்டை
செவ்வாய்: கலவை சாதம், சுண்டல்
புதன்: காய்கறி புலாவ் சாதம், வேகவைத்த முட்டை
வியாழன்: எலுமிச்சை சாதம், வேகவைத்த முட்டை
வெள்ளி: கலவை சாதம்
மார்ச் 21ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதை அடுத்து பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் அலுவலக தலைமையகத்தில் இருக்க உத்தரவு.

          மார்ச் 21ஆம் தேதி தமிழக அரசு சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதை அடுத்த துறை சார்ந்த அனைத்து விவரங்களும் தாயாற்படுத்தி வைத்து கொள்ளவும், பட்ஜெட் நடக்கும் நாளன்று அனைத்து இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் அவர்களின் அலுவவலக தலைமை இடத்தில் இருக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
 
               மேலும் பட்ஜெட் நடக்கும் நாட்களில் அலுவலர்கள், எவ்வித வெளி பயணம் மேற்கொள்ள கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் CCE செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் அறிமுகம்

              அரசு / ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் CCE சார்பான பதிவேடுகள் மற்றும் மதிப்பெண் அட்டைகள் ஆகியவற்றில் ஆசிரியர்களின் சுமையை குறைப்பது மற்றும் CCE செயல்திறன் பற்றி அறிய "BEE EDUSYS" என்ற நிறுவனம் மூலம் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் ஒரு மாவட்டத்திற்கு 2 அரசு பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுத்து தமிழக முழுவதும் 64 பள்ளிகளுக்கு, இச்செயல்திறன் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
 

             இம்மென்பொருள் படிப்படியாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு / நகராட்சி / ஊராட்சி பள்ளிகளில் நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மென்பொருள் மூலம் FORMATIVE ASSESSMENT மற்றும் SUMMATIVE ASSESSMENT மதிப்பெண்கள் பதிவு மற்றும் தர மதிப்பீடு பிரித்தல் போன்ற பணிகள் செய்ய உதவியாக இருக்கும்.

               மேலும் மென்பொருள் முழுமையாக அனைத்து பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஆசிரியர்களுக்கு முப்பருவ முறையில் உள்ள CCE சார்பான எழுத்து பணிகள் பெரும் பங்கு குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சில பள்ளிகளால் பெற்றோர் குழப்பம் முப்பருவ பாடத்திட்டத்தில் ஆண்டு இறுதித்தேர்வு எப்படி?

           தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் அமலில் உள்ள நிலையில் மாணவர்களின் கல்விச் சுமை மற்றும் நோட்டுப் புத்தக சுமைகளை குறைக்க முப்பருவ பாடத்திட்டம் நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
 
                    ஆண்டு பாடங்களை மூன்று பருவங்களாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியாக பாடபுத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட 2 பருவ தேர்வுகளிலும் அதற்குரிய பாடத்திட்டங்களே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.இந்த நிலையில் மூன்றாம் பருவத்திற்கான தேர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. 
 
                   ஆண்டு இறுதித் தேர்வான இந்த தேர்வை நடத்தும் சில பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு முழு பாடத்திட்டங்களையும் கற்று வரவேண்டும், அதற்கேற்ப கேள்விகள் கேட்கப்படும் என வாய்மொழியாக அறிவித்துள்ளதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். சில பள்ளிகள் முழு ஆண்டுக்கான பாடத்திட்டங்களையும் தொகுத்து மாணவர்களுக்கு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:அரசு அறிவித்தப்படி பள்ளிகளில் முப்பருவ பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ஆண்டு இறுதித் தேர்வுகளை நடத்த வேண்டும். 
 
              முதல் மற்றும் 2ம் பருவ பாடத் திட்டங்கள் முடிக்கப்பட்டு விட்டன. இனிமேல் அதிலிருந்து கேள்வி கேட்க கூடாது. அரசு உத்தரவை எல்லா பள்ளிகளும் கடுமையாக கடைபிடிக்க வேண்டும். இதை யாராவது மீறுவதாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

பகுதி நேர கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க கோரிக்கை

          தமிழக அரசின் ஆணைப்படி 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பகுதிநேர கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
 
                ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி பாடம் கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி இது போன்ற பணியிடங்களுக்கு பதிவு மூப்பு, போட்டி தேர்வு அடிப்படையில் நிரப்புவது வழக்கம். இதில் கடந்த ஒரு ஆண்டுகளாக பள்ளியில் பகுதி நேர கணினி பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசை கேட்டு கொள்கிறோம் என்று ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் மாற்றம்: பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

          பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, கணித வினாத்தாளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்த சுற்றறிக்கை, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


           தமிழகத்தில், கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதில், அறிவியல் பாடத் தேர்வில் செய்முறை அமல்படுத்தியதோடு, வினாத் தாள்களிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டிருந்தது.

                பாடப் புத்தகத்தில் இருப்பதை, அப்படியே கேட்காமல், "கிரியேட்டிவிடி"யை அதிகரிக்கும் வகையில், பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதிலும், கணிதப் பாடத்தில், 12 மதிப்பெண்களுக்கு, இந்த வகையிலான கேள்விகளுக்கு, கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால், கடந்த ஆண்டு, 100 சதவிகித மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை, கணிசமாக குறைந்தது.

                    இந்நிலையில், நடப்பாண்டில் கணித விடைத்தாளில் மாற்றம் வரும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகளுக்கு, அதிகாரபூர்வ சுற்றறிக்கை வராத காரணத்தால், அவை உண்மையா அல்லது, கடந்த ஆண்டு போலவே, வினாத்தாள் வந்து விடுமோ என்ற பயம், மாணவர்களிடையே எழுந்தது.

            தற்போது, அனைத்து பள்ளிகளுக்கும், இம்மாற்றம் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில் கணிதப்பாடம், "ஏ" பிரிவில் கேட்கப்படும், ஒரு மதிப்பெண் வினாக்கள் 15ம், புத்தகத்தில் எடுத்துக்காட்டு வினா மற்றும் புத்தக வினாவில் இருந்தே, கேட்கப்படும்.

               "பி" பகுதியான இரு மதிப்பெண் வினாவில், "கிரியேட்டிவ்" வினாவாகவும், கட்டாய வினாவாகவும் இருந்த, 30வது வினா, நடப்பாண்டில் புத்தகத்தில் உள்ள வினாவாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பதில் வினா எண் 16 முதல், 29 வரை உள்ள, இரு மதிப்பெண் வினாக்களில் இரண்டு வினாக்கள், "கிரியேட்டிவ்" வினாவாக கேட்கப்படும்.

                  இதே போல், பிரிவு, "சி" யில் கட்டாய வினாவாகவும், கிரியேட்டிவ் வினாவாகவும் இருந்த, 45 வது வினா, தற்போது புத்தகத்தில் உள்ள வினாவாக கேட்கப்படும். இதற்கு பதில் வினா எண், 31 முதல், 44 வரை உள்ள வினாக்களில் இரண்டு வினாக்கள், "கிரியேட்டிவ்" வினாவாக கேட்கப்படும்.

                அதே போல், கடந்த ஆண்டில், மெய்யெண்கள், இயற்கணிதம், ஆயத்தொலைவுகள், அளவியல் பாடங்களில் இருந்து மட்டுமே, "கிரியேட்டிவ்" வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.
 
             தற்போது அனைத்து பாடங்களில் இருந்தும், "கிரியேட்டிவ்" வினாக்கள் கேட்கப்படும் என்பது உள்ளிட்ட ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

                   தற்போது கட்டாய வினாக்களில், "கிரியேட்டிவ்" வினாக்கள் இல்லாததால், புத்தகத்தில் உள்ள வினாக்களை கொண்டே, 100 சதவிகித மதிப்பெண் எடுக்க முடியும் என்ற நிலை உள்ளதால், நடப்பு கல்வியாண்டில், நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பவர்களின் எண்ணிக்கை, அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கற்பதை உங்கள் குழந்தை அனுபவிக்க வேண்டும்!..

          நாம் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களை கற்கிறோம். கற்றல் செயல்பாடானது 24x7 என்ற தொடர்ந்த செயல்பாடாக நம் வாழ்வில் இடம்பெற்ற ஒன்று என்பதை புரிந்துகொள்பவரே புத்திசாலி.


           ஒரு மனிதனுக்கு கற்றல் என்பது அவன் கருவறையில் இருக்கையிலேயே தொடங்கி விடுகிறது. அவனின் மரணம் வரையில் அது நீடிக்கிறது.

           படித்தல் என்பது புத்தகப் படிப்பில் மட்டுமே அடங்கியது என்று நாம் நினைத்தால், உண்மையிலேயே சோர்ந்து விடுவோம். ஆனால், கற்றல் என்பது பரந்த அளவிலானது மற்றும் அது வெறும் புத்தகத்திற்குள் மட்டும் அடங்கியதன்று.

               நாம் ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களைப் பார்க்கிறோம். உதாரணமாக, புதிய புத்தகம், புதிய திரைப்படம், புதிய பணி அனுபவம் மற்றும் புதிய பயணம் போன்ற அனைத்துமே கற்றல் செயல்பாடுகள்தான். நாம் இதற்கு முன்பு அறிந்திராத ஒன்றை, தற்போது புதிதாக அறிந்து கொள்வதே கற்றல் எனப்படும். ஆனால், விஷயம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அந்த விஷயம் வாழ்வுக்கும், சிந்தனைக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

           தங்கள் குழந்தையின் கற்றல் செயல்பாட்டை எவ்வாறு மேம்படுத்தலாம் என்ற கவலை அனைவருக்குமே இருக்கும். அதற்கான வழிமுறைகள் பல இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றைப் பற்றி இங்கே காண்போம்.

கவலையின்றி படித்தல்
ஒரு குழந்தை ஒரு புத்தகத்தைப் படிக்கிறதென்றால், அதை மனப்பாடம் செய்ய வேண்டுமே என்ற கவலையின்றி படித்தல் வேண்டும். ஒரு விஷயத்தை புதிதாக அறிந்துகொள்கிறோம் என்ற எண்ணம் மட்டுமே அந்தக் குழந்தைக்கு இருக்க வேண்டும். மனப்பாடம் செய்ய வேண்டுமே என்ற நெருக்கடியானது, ஒரு குழந்தைக்கு கவலையை உண்டாக்கி, அந்த விஷயத்தை அது அனுபவித்துப் படிப்பதை தடை செய்துவிடும்.

              மேலும், ஒரு விஷயத்தை அனுபவித்துப் படிக்கும்போது, இயல்பாகவே, அந்த விஷயத்தின் பெரும்பகுதி நினைவில் பதிந்துவிடும். எனவே, மனப்பாடம் என்ற ஒரு செயல்பாட்டை குழந்தையிடம் திணிக்கக்கூடாது.

 சுந்திரமான மனம்
"கலங்கிய நீரை தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருந்தால், அது எப்போதுமே தெளியாது. ஆனால், அதை அப்படியே தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டால், படிப்படியாக தெளிந்துவிடும்" என்பது புகழ்பெற்ற தாவோயிச தத்துவம். அதுபோல்தான் நமது மனமும். அதற்கு தொந்தரவும், நெருக்கடியும் தராதவரை, அது சிறப்பாக செயல்படும். எனவே, உங்கள் குழந்தையை தொந்தரவு செய்யாமல், எந்த செயலையும், சுதந்திரமாக செய்யவிடுங்கள்.

             அந்த வகையில் உங்கள் குழந்தை ஒன்றை படித்துமுடித்தப் பிறகு, அதை திரும்பவும் அதனிடம் கேட்கவும். அப்போது, தான் படித்த விஷயத்தை, அதனுடன் தொடர்புடைய அம்சங்களுடன் இணைத்து சொல்லும் திறனை உங்கள் குழந்தைப் பெறும். உதாரணமாக, ஒரு கதையைப் படித்திருந்தால், அதனோடு தொடர்புடைய கதாப்பாத்திரங்கள் மற்றும் பிற கருத்தாக்கங்களுடன் இணைத்து சொல்லும். இதன்மூலம், அந்த கதையானது, குழந்தையின் நினைவில் நீண்டகாலம் மறக்காமல் பசுமையாக நிலைத்திருக்கும்.

               மூளையிலுள்ள சைனாப்டிக் இணைப்புகள் தூண்டப்படுகையில் அல்லது இருக்கும் இணைப்புகள் வலுப்படுத்தப்படுகையில், நினைவுகள் உருவாகின்றன. இந்த வகையில், ஒரு குழந்தை, தான் படித்ததை ஒவ்வொரு முறை நினைவுகூறும்போதும், அந்த இணைப்புகள் வலுவடைகின்றன.

              எனவே, அழுத்தமற்ற சூழலில், ஒரு விஷயத்தை ஆழமாக புரிந்து படிக்கையில், அது நல்ல முறையில் நினைவில் நிற்கிறது. ஆனால், இந்த செயல்பாடானது, தேர்வு நெருங்கும் சமயத்தில் பின்பற்றத்தக்கதல்ல. ஒரு புதிய கற்றல் செயல்பாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை.

இலக்கு மதிப்பெண் அல்ல...
மூளையின் இயல்பான செயல்பாட்டு அடிப்படையில் ஒரு விஷயத்தை கற்பதானது, மகிழ்ச்சியைத் தரும். அந்த செயல்பாட்டின் அடிப்படையிலேயே, உங்கள் குழந்தைக்கு பயிற்சியளிக்க வேண்டும். இதன்மூலம், வெறும் பள்ளி பாடப்புத்தகத்தோடு உங்கள் குழந்தை முடங்கிவிடாது.

             வெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே பழக்கப்படுத்தப்பட்ட மற்றும் மதிப்பிடப்படும் குழந்தைகள், தங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையில் பெரிதாக எதையும் சாதித்ததில்லை. அவர்களால் சாதிக்கவும் முடியாது. ஆனால், அறிவின் உண்மையான ஆழத்தைத் தேடி, படிப்பதற்கு பழக்கப்படுத்தப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில அதிகமாக சாதிப்பார்கள்.

                  இதுபோன்ற பயிற்சிகளால், ஒரு குழந்தை அதிகபட்ச மதிப்பெண்களைப் பெறாமலும் போகலாம். ஆனால், அவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைவார்கள். ஏனெனில், இந்திய கல்வித்திட்டமானது, முழு அறிவுத்திறனை பரிசோதிக்கும் செயல்பாடாக இல்லை. இயல்பான மற்றும் ஆர்வத்துடன் கூடிய கற்றலே, குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உகந்தது.

கல்வித்துறையில் விரைவில் 500 இளநிலை உதவியாளர் நியமனம்

           பள்ளி கல்வித்துறையில், விரைவில், 500 இளநிலை உதவியாளர்கள், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


             டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப்-4 தேர்வில் இருந்து, இளநிலை உதவியாளர்கள், 500 பேர், பள்ளி கல்வித்துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பெயர் பட்டியல், பள்ளி கல்வித் துறையிடம் வழங்கப்பட்டுள்ளன.

                இதை தொடர்ந்து, அரசின் அனுமதியை பெற்று, மிக விரைவில், "ஆன்-லைன்" கலந்தாய்வு வழியில், 500 பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

"போட்டி தேர்வுகளில் தமிழ் மொழியை புறக்கணிக்கவில்லை"

          டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது போல் பேசுவது தவறு. தமிழ் மொழியை புறக்கணித்து, தமிழக அரசுப் பணிகளுக்கு, பணியாளர்களை தேர்வு செய்ய முடியாது" என, புதிய பாடத்திட்டங்களை உருவாக்கிய முன்னாள் தலைவர் நட்ராஜ் கூறினார்.


              தேவையில்லாத இலக்கணப் பகுதிகளை மட்டும் நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக, தமிழக கலாசாரம், பண்பாடு, கிராம நிர்வாகம் உள்ளிட்ட தேவையான பகுதிகளை சேர்த்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

             குரூப்-1, குரூப்-2, குரூப்-4, 8, வி.ஏ.ஓ., உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான புதிய பாடத் திட்டங்களை, டி.என்.பி.எஸ்.சி., கடந்த 13ம் தேதி இரவு வெளியிட்டது. குரூப்-2 தேர்வில் இருந்த தமிழ், ஆங்கிலம் மொழித்தாள் நீக்கப்பட்டு, 200 கேள்விகளும், பொது அறிவு பாடத்திற்கு ஒதுக்கப்பட்டன.

               குரூப்-4 தேர்வில், மொழித்தாள் பகுதியில், கேள்விகளின் எண்ணிக்கை, 100ல் இருந்து, 50 ஆக குறைக்கப்பட்டு, பொது விழிப்புத்திறன் என்ற பகுதி சேர்க்கப்பட்டது. பல லட்சம் பேர் எழுதும், வி.ஏ.ஓ., தேர்வில், மொழிப் பாடத்திற்கான கேள்வி, 100ல் இருந்து, 30 ஆக குறைக்கப்பட்டது. இதற்குப் பதிலாக, கிராம நிர்வாகம், புதிதாக சேர்க்கப்பட்டது.

             தேர்வாணையத்தின் இந்த நடவடிக்கையால், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் குறைந்து விட்டது எனவும், இதனால், கிராமப்புற தேர்வர்கள், கடுமையாக பாதிக்கப்படுவர் எனவும், கருணாநிதி, வைகோ உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

               தேர்வில், தமிழ் மொழிக்கான முக்கியத்துவத்தை குறைக்கக் கூடாது என்றும், பழைய நிலை தொடரவும், அவர்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரம், தேர்வர்கள் மத்தியிலும், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

                இந்நிலையில், தேர்வாணையத்தின் புதிய தலைவராக பதவி ஏற்ற நவநீதகிருஷ்ணன், புதிய பாடத்திட்ட பிரச்னை குறித்து, தீவிரமாக பரிசீலித்து வருவதாக, தெரிவித்தார். இதனால், மீண்டும் பழைய கேள்வி அமைப்பு முறைகளே அமல்படுத்தப்படுமா என்றும், எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

                இது போன்ற சூழலில், பாடத் திட்ட சர்ச்சை குறித்து, பாடத் திட்டத்தை உருவாக்கியவரும், தேர்வாணையத்தின் முன்னாள் தலைவருமான நட்ராஜிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:

                பாடத்திட்டத்தை முழுவதுமாக படித்து புரிந்து கொள்ளாதவர்கள் தான், தேவையற்ற சர்ச்சைகளை கிளப்புகின்றனர். பல்வேறு துறைகளுடன் ஆலோசனை நடத்தி, ஆறு மாதங்களுக்கு மேலாக உழைத்து, காலத்திற்கு ஏற்ப, புதிய பாடத் திட்டங்களை உருவாக்கினோம்.

                  எந்த தேர்வு பாடத் திட்டத்திலும், தமிழ் மொழிக்கான முக்கியத்துவத்தை குறைக்கவில்லை; தமிழ் மொழியை புறக்கணிக்கவும் இல்லை. இதை, அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். போட்டித் தேர்வு என்பது, அனைத்து தேர்வர்களுக்கும் சம நிலையை கொண்டதாக இருக்க வேண்டும்.

                தமிழ் பாடத்திற்கு ஒரு வகை கேள்விகள், ஆங்கிலப் பாடத்திற்கு ஒரு வகை கேள்விகள் கேட்பது, எந்த வகையில் நியாயம்? தமிழ் மொழியிலும், ஆங்கில மொழியிலும், இலக்கணங்கள், அதிகளவு இடம் பெறுகின்றன.

                அரசுப் பணிகளில் சேர்பவர்களுக்கு, அடிப்படை இலக்கணங்கள், மிகவும் முக்கியமா அல்லது, தமிழகத்தின் கலாசாரம், பண்பாடு, தொன்மை, மாநிலத்தில் ஓடும் ஆறுகள், நதிகள் குறித்த விவரங்கள் போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமா? இலக்கணப் பகுதிகளை குறைத்துவிட்டு, அதற்குப் பதிலாக, தமிழக கலாசாரம், பண்ப
...

No comments:

Post a Comment