Tuesday, March 5, 2013

ஆங்கிலத்தில் அசத்தும் அரசுப் பள்ளி

பள்ளிகளில் கற்பித்தல் மட்டுமல்லாமல், பழகும் முறைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தால், மாணவர்களின் திறமைகள் மிளிரும் என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறது ஒரு தனியார் அமைப்பின் ஆய்வு.
"கல்வி முறையில் மாற்றம் தேவை":
கல்வி கற்பிக்கும் முறையை மாற்றினால் எந்தக் குழந்தையும் கல்வியில் சிறந்து விளங்க வைக்க முடியும் என நிரூபித்திருக்கிறது டீச் ஃபார் இந்தியா அமைப்பு. கற்பித்தலில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த ஆய்வுக்காக கடந்த 8 மாதங்களாக சென்னையில் உள்ள 7 மாநகராட்சிப் பள்ளிகளில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் முடிவை மாநகராட்சி அதிகாரிகள், கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் ஊடகங்களுக்கு எடுத்துக் காட்டும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. டீச் ஃபார் இந்தியா அமைப்பின் மூலம், கற்றுக் கொண்டதை இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் உற்சாகமாக வெளிப்படுத்தினர்.

ஆங்கிலத்தில் அசத்தும் அரசுப் பள்ளி:
டீச் ஃபார் இந்தியா அமைப்பின் வகுப்புகள் 7 மாநகராட்சி பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு வகுப்பின் மூலம் திறமையை வெளிப்படுத்துவது, ஒழுக்கம், கீழ்படிதல் ஆகியவற்றில் மாணவர்கள் சிறந்து விளங்குவதாக தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த மாணவர்களிடம் தமிழில் கேள்வி கேட்டால் கூட ஆங்கிலத்தில்தான் பதில் கிடைக்கிறது. சரியோ, தவறோ ஆங்கிலத்தை பேசத் தொடங்கும்போதுதான் அதனை பழக முடியும் என்பதால் மாணவர்களை அவ்வாறு ஊக்குவிப்பதாக டீச் ஃபார் இந்தியா ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கணக்கு, அறிவியல் போன்ற பாடங்களை கற்பிப்பதிலும் வித்தியாசமான முறைகளைப் பின்பற்றுவதால் மாணவர்களிடம் நல்ல மாற்றங்களை காண முடிகிறது.

அரசுப் பள்ளியை விரும்பும் பெற்றோர்:
கற்பித்தல் முறையில் மட்டுமல்லாமல், மாணவர்களிடம் பழகும் அணுகுமுறையிலும் கடைப்பிடிக்கப்பட்ட புதிய உத்திகளால், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் திறமைகள் வெளிப்படுகின்றன. இந்த இனிய மாற்றங்களின் விளைவாக, சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக இந்த வருடம் ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா என்பதே தற்போதைய கேள்வி.


மனம் தளராமல் நின்று கொண்டே தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவி


        வினோதமான உடல்நல குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள, பிளஸ் 2 மாணவி, நின்று கொண்டே தேர்வு எழுதுகிறார்; அவரால் உட்கார முடியாது என்பதால், நின்றே தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெற்றுள்ளார்.

           மும்பையில், வாசி பகுதியைச் சேர்ந்த பிரவினாவின் மகள், ஹெமிதா ஷா, பிளஸ் 2 படிக்கிறார். சிறு வயது முதலே, "மஸ்குலர் டிஸ்ட்ரோபி" எனப்படும், உடல் தசை குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர், 18 வயதான போதிலும், சிறுமி போலவே காணப்படுகிறார்.


         இவரால், சில நிமிடங்களுக்கு கூட, தானாக உட்கார்ந்து எழ முடியாது. படிப்பது, சாப்பிடுவது எல்லாம் நின்று கொண்டே தான். பிளஸ் 2 தேர்வு நடந்து வருகிறது. அதில், அவர் அனைத்து தேர்வுகளையும் நின்று கொண்டே தான் எழுதி வருகிறார்.

         இதுகுறித்து, பெண்ணின் தாய் பிரவினா கூறியதாவது: பிறக்கும் போது என் மகள் ஹெமிதா நன்றாக தான் இருந்தார். இரண்டு வயதாக இருக்கும் போதுதான், அவளுக்கு இந்த பிரச்னை இருப்பது தெரிய வந்தது. எனினும், பிரச்னையை படிப்படியாக சரி செய்து விடலாம் என, மருத்துவர்கள் கூறினர்.
அவளுக்கு, ஆறு வயது இருக்கும் போது, ஏற்பட்ட விபத்து, பிரச்னையை பெரிதாக்கி விட்டது. ஏற்கனவே நடக்க முடியாமல் இருந்த என் மகளை, உறவினர் ஒருவர் தூக்கி வைத்திருந்தார். திடீரென அவரை யாரோ பின்னிருந்து தள்ளிவிட்டனர்; கீழே விழுந்ததில், அவரும், ஹெமிதாவும் காயமடைந்து விட்டனர்.

             அதற்கு பிறகு பிரச்னை பெரிதாகி, தானாக நடக்க முடியாத நிலைக்கு ஆளாகி விட்டாள். எனினும், அவளுக்கு ஊக்கம் மட்டும் அதிகம். எதைப் பற்றியும் கவலைப்படாமல் படித்து வருகிறாள்.இவ்வாறு, பிரவினா கூறினார்.
ஹெமிதா, தன் ஆசிரியர்கள் பற்றி கூறுகையில், "எனக்கு இருக்கும் இந்த நோயை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் என்னையும், சக மாணவியர் போலவே நடத்துவதால், எனக்கு நோயின் தாக்கம் தெரிவதில்லை. ஆசிரியர்கள், உடன் படிக்கும் மாணவியர் அளிக்கும் ஊக்கத்தால் தான் என்னால், இந்த அளவுக்கு வர முடிந்தது" என்றார்.

             மஸ்குலர் டிஸ்ட்ரோபி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, எலும்பு வளர்ச்சி சரியாக இருக்கும்; தசைகள் வளர்ச்சி போதுமான அளவில் இருக்காது.மூன்று லட்சம் பேரில், இரண்டு அல்லது மூன்று பேருக்கு இந்நோய் ஏற்படுவது உண்டு; எனினும், பெண்களுக்கு பெரும்பாலும் வருவதில்லை. ஹெர்மிதா போன்ற ஒரு சிலர், இந்நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
7வது சம்பள கமிஷன் அமைக்க திட்டமா?

7வது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயன் மீனா லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் 6வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள்
ஜனவரி 2006 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது, 7வது சம்பள கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனால் பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது என கூறினார்.
2009-க்கு பிறகு நியமிக்கப்பட்ட 18000 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் SSTA சார்பில் 280 ஆசிரியர்கள் வழக்கு தொடுப்பு.

மேல்நிலைத் தேர்வு, மார்ச் 2013 - தேர்வு நாள் 25.03.2013 அன்று TYPEWRITING பாடத் தேர்வை BATCHES அமைத்து நடத்த அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.

தமிழகத்தில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் ஒரே சமயத்தில் சம்பளம் : புதிய சாப்ட்வேர் அறிமுகம்

புதிய சாப்ட்வேர் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த 5 வருடங்களாக இசிஎஸ் (ECS) முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இம்முறையில் அரசுத் துறைகள், பள்ளிகள் சம்பளப் பட்டி யலை சிடி மூலம் கருவூலத்தில் கொடுத்து விட வேண்டும். கருவூல அதிகாரிகள் ஒப்புதல் அளித்தவுடன் அந்த பட்டியல் அந்தந்த மாவட்ட பாரத ஸ்டேட் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் வங்கிகள் மூலம் அனைத்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சேமிப்பு கணக்கில் சம்பளம் போய் சேர்ந்துவிடும். இதனால் பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் உடனடியாக சம்பளம் கிடைத்து விடும். ஆனால் மற்ற வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஓரிரு நாட்கள் தாமதமாக சம்பளம் கிடைக்கும். இந்த தாமதத்தை தவிர்க்க புதிதாக ‘பேரோல் 9.0’ (PAYROLL 9.0) என்ற சாப்ட்வேரை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த சாப்டுவேரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிக்க வேண்டும். அரசு ஊழியர்கள்
எந்தெந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறார­களோ் அந்த வங்கியின் எம்ஐசிஆர் (MICR) கோடு நம்பரும் ஏற்றப்பட வேண்டும். பின்னர் அந்த சம்பளப் பட்டியலை கருவூலத்தில் கொடுக்க வேண்டும். கருவூல அதிகாரி ஒப்புதல் அளித்தவுடன் பாரத ஸ்டேட் வங்கிக்கு சம்பளப் பட்டியல் அனுப்பி வைக்கப்படும்.
அதன்பிறகு அந்த சம்பளப் பட்டியல் அனைத்தும் சென்னையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் சிசிபிசி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து அனைத்து ஊழியர்களின் சேமிப்பு கணக்கிலும் ஒரே சமயத்தில் சம்பளம் ஏற்றப்படும். இதன் மூலம் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே நாளில் சம்பளம் கிடைத்துவிடும். இதன் மூலம் சம்பள பட்டுவாடாவில் தேவையற்ற தாமதம் தவிர்க்கப்படும்.
பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினால், சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும் - அமைச்சர் வைகைச் செல்வன்

பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினால், சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும் என அமைச்சர் வைகைச் செல்வன் கூறினார். மாநில பள்ளி கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நேற்று முதல் முறையாக அமைச்சர் வைகைச்செல்வன் விருதுநகர் மாவட்டம் வந்தார்.
விருதுநகர் விருந்தினர் மாளிகையில் அவருக்கு கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. எஸ்பி மகேஸ்வரன், டிஆர்ஓ ராஜூ, ஆர் டிஓ குணசேகரன், திட்ட அலுவலர் பிரபாகரன் மற் றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து விருதுநகர் கேவிஎஸ் மேல் நிலைப்பள்ளியில் கல்வித் துறை உயர் அதிகாரி கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பே சுகையில், `விருதுநகர் மாவட்டம் அரசு பொதுத் தேர்வுகளில் கடந்த 25 ஆண்டுகளாக முதலிடம் பெற்று, கல்வியில் முதன் மை மாவட்டமாக திகழ்கிறது.
ஆசிரியர்கள் அர்ப்பணி ப்பு உணர்வுடன் பணியாற்றினால் சிறந்த மாணவர் களை உருவாக்க முடியும். கல்வித்துறை அதிகாரிகள் அரசு பள்ளிகளில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும்.தமிழக முதல்வர் கல்விக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்துள்ளார். தமிழகத்தை கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றிட ஆசிரியர்கள், அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண் டும் என்றார். கூட்ட த்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விருதுநகரில் எம்ஜிஆர் சிலை, அருப்புக்கோட்டையில் அண்ணா சிலை, காமராஜர் சிலை, தேவர் சிலை, எம்டிஆர் சிலை, பா ளையம்பட்டியில் பெரும் பிடுகு முத்தரையர் சிலைகளுக்கு அமைச்சர் மாலை அணிவித்தார். யூனியன் தலைவர் யோகவாசுதே வன், தொகுதி செயலாளர் சிவசங்கரன், மாவட்ட எம் ஜிஆர் இளைஞரணி துணை தலைவர் எகியா கான், அதி முக பிரமுகர் சங்கரலிங்கம், ஒன்றிய செயலாளர் கொப்பையராஜ், நகர செயலாளர் கண்ணன், விருதுநகர் ஒன்றிய கவுன்சிலர்கள் அழகர்ராஜ், கந்தவேல், சுப்பு ராஜ், அரசு ஒப்பந்தகாரர் தேவதுரை, புளியம்பட்டி திருநகரம் சாலியர் உறவின்முறை தலைவர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்பு ஆத்திபட்டியில் நடை பெற்ற தமிழக அரசின் இல வச பொருட்கள் வழங்கும் விழாவில் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்து கொண்டார்.
பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம் நடக்கும் போது பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம் நடக்கும் போது பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சேலத்தில் நடந்த விழாவில் செம்மலை எம்.பி., பேசினார். தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கம் சார்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி
அறிவிப்பு மாநாடு சேலத்தில் நேற்று நடந்தது. சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் ராமர் தலைமை வகித்தார். பொருளாளர் முருகேசன், ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பெரியசாமி வரவேற்றார்.
அதிமுக அமைப்பு செயலாளரும் எம்.பி.யுமான செம்மலை சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியது: தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட போது இத்திட்டம் 2014ம் ஆண்டுடன் முடிந்து விடும். அதன்பின், பகுதி நேர ஆசிரியர்களுக்கு வேலை இருக்காது என எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர்.
ஆனால் மத்திய அரசு, எஸ்.எஸ்.ஏ. திட்டத்தை 2017ம் ஆண்டு வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள் யாரும் கவலைப்பட வேண்டும். அப்படியே, எஸ்.எஸ்.ஏ. திட்டம் நின்று போனாலும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உங்களை தத்தெடுத்துக் கொள்ளும். பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படும் போது, பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதல்வர் ஜெயலலிதா உங்களுக்கு அரணாக இருப்பார்.
அதே நேரம், நீங்களும் உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். தகுதித்தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் என்பவரும் மாணவர்கள்தான். அதனால், ஆசிரியர் பணியில் சேர்ந்துவிட்டோம் என்பதற்காக படிப்பதை நிறுத்தி விடக்கூடாது. தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். மாணவர்கள் உங்களை பார்த்து கற்றுக் கொள்ளும் வகையில் நீங்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 16549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமித்து முதல்வர் உத்தரவிட்டார். இதில், சேலத்துக்கு 763 பணியிடங்கள் கிடைத்தது. சமீபத்தில் 1800 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், சேலத்துக்கு 77 பணியிடங்கள் கிடைத்தது. இந்த அரசு, ஆசிரியர்களுக்கு பக்கபலமாக இருக்கும். இவ்வாறு செம்மலை எம்.பி., பேசினார்.
சேலம் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன், துணை மேயர் நடேசன், ஆத்தூர் எம்எல்ஏ மாதேஸ்வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங்க நிர்வாகிகள் சுந்தர், கணேஷ், அருள், வேல்முருகன், இளவரசன், செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: தமிழ் வினா - விடை: மேரிகியூரி

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு மார்ச் 8ம் தேதி நடைபெறுகிறது.தகுதியுடைவர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு மார்ச் 8ல் நடைபெற உள்ளது.
இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் தலைமையாசிரியர்கள், அந்தந்தந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு ஆன்லைன் வழியாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை: 6வது பட்டமளிப்பு விழாவிற்கு விண்ணப்பம் வரவேற்பு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 6வது பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பட்டம், பட்டயச் சான்றிதழ் ஆகிய படிப்புகளுக்கு பட்டம் வழங்க உள்ளது. விண்ணப்பிப்பவர்கள் கட்டணத் தொகையை "செலான்" மூலமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியிலுள்ள 30843228843 எண்ணிட்ட தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் கணக்கிலோ அல்லது இந்தியன் வங்கியிலுள்ள 6051265828 எண்ணிட்ட கணக்கிலோ செலுத்தி செலுத்துச் சீட்டின் பல்கலைக்கழகத்துக்குரிய பகுதியை மட்டும் இவ்விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டம்.

விழா தேதிய நாளிதழ்களிலும், பல்கலைக்கழக வலைத்தளத்திலும் தெரிவிக்கப்படும். செலுத்தி தொகையை எந்தவிதக் காரத்தினாலும் திருப்பித் தரவோ அல்லது அடுத்த பட்டமளிப்பு விழாவிற்கு பயன்படுத்தவோ முடியாது என்று தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2: பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு வினாத்தாளில் இருந்து 29 கேள்விகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வின் தமிழ் முதல் தாளில் கடந்த ஆண்டு கேட்கப்பட்ட 29 கேள்விகள் மீண்டும் இந்தாண்டும் கேட்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கியது. முதல் தேர்வாக தமிழ் முதல் தாள் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. அப்போது கேள்வித் தாளை பெற்ற பல மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வில் தமிழ் முதல் தாளில் கேட்கப்பட்ட 29 கேள்விகள், இந்தாண்டும் திரும்பவும் கேட்கப்பட்டதுதான் காரணம்.

தமிழ் முதல் தாள் கேள்விகள் மொத்தம் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதில் ஒரு மதிப்பெண் முதல் பத்து மதிப்பெண் வரையிலான கேள்விகளாக மொத்தம் 50 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வுக்காக கேள்வித் தாள் தயாரிக்கும்போது கடந்தாண்டு கேட்கப்பட்ட ஒரு சில கேள்விகள் மீண்டும் கேட்கப்படும்.

ஆனால் இந்தாண்டு மொத்தம் 50 கேள்விகளில் 29 கேள்விகள் கடந்தாண்டு கேட்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் நூறு மதிப்பெண் கொண்ட கேள்வித் தாளில் 63 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கடந்தாண்டு கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

29 கேள்விகள் மீண்டும் கேட்கப்பட்டு இருந்தாலும் கேள்வித் தாள் தேர்வுக்கு முன்னதாக வெளியாகவில்லை என்ற காரணத்தால் மறுதேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு கல்லூரி விடுதியில் சூரிய மின்சக்தி விளக்கு வசதி

 தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி விடுதிகளுக்கு சூரிய ஒளி மின்விளக்கு வசதி ஏற்படுத்த ஆறு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மின்வெட்டு பிரச்னையால், தொழில் துறையினர் மட்டுமின்றி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பிரச்னையை உணர்ந்த தமிழக அரசு, அரசு கல்லூரி விடுதிகளில் சூரிய ஒளி மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படும்; தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளித்தது. அப்பணிக்காக 60 கோடி ரூபாயும் ஒதுக்கியது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பிற்படுத்தப்பட்டோர், சமூக நலத்துறை விடுதிகளில் உள்ள மின்சார வசதி, மாணவர்கள் எண்ணிக்கை, அறைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, உடுமலை அரசு கலை கல்லூரி விடுதிகளில் சூரிய ஒளி மின்வசதி ஏற்படுத்த தலா மூன்று லட்சம் வீதம் ஆறு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்லூரி பேராசிரியர்கள் கூறுகையில்,"சூரிய ஒளி மின்சாரம் பெறுவதற்கான கட்டமைப்பு, அரசு கல்லூரி விடுதிகளில் ஏற்படுத்தப்பட உள்ளன. எட்டு முதல் 15 விளக்குகள் அமைக்க முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பணிகள் நடந்து வருகின்றன" என்றனர்.

கடந்த 2012 துவக்கத்தில், அரசு மருத்துவமனைகளில் சூரிய ஒளி மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்படும். அதற்கான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பொதுப்பணித்துறை, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சூரிய ஒளி மின் விளக்குகள் இன்னும் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் 20 ஆயிரம் கல்லூரிகளை இணைக்கும் சாப்ட்வேர்

நாடு முழுவதும் உள்ள, 20 ஆயிரம் கல்லூரிகளை இணைக்கும், வீடியோ கான்பரன்ஸ் சாப்ட்வேர், விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதனால், தொலை தூரங்களில் உள்ள கல்லூரிகளுக்கும், நல்ல தரமான கல்வி சாத்தியமாகும்.

கேரளாவின் கொல்லம் நகரிலுள்ள, அம்ரிதா பல்கலைக் கழக மாணவர்கள், "ஏ-வியூ" என்ற சாப்ட்வேரை உருவாக்கியுள்ளனர். இந்த சாப்ட்வேர் மூலம், நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும், வீடியோ கான்பரன்ஸ் தொழில்நுட்பத்தில் இணைக்க முடியும்.
ஒரு பகுதியில் உள்ள கல்லூரியில் நடத்தப்படும் பாடத்தை, வீடியோ கான்பரன்ஸ் தொடர்பில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் பார்த்து படிக்க முடியும். இந்த சாப்ட்வேர் அறிமுக நிகழ்ச்சி, சில நாட்களுக்கு முன், டில்லியில், உயர்கல்வித் துறை செயலர் அசோக் தாக்குர் தலைமையில் நடந்தது.
அதில், 60 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்றனர். முதற்கட்டமாக, புதுச்சேரி பல்கலைக்கழகம் உட்பட, 450 பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள், "ஏ-வியூ" வீடியோ கான்பரன்ஸ் சாப்ட்வேரில் இணைக்கப்பட்டு உள்ளன. விரைவில், நாடு முழுவதும் உள்ள, 20 ஆயிரம் கல்லூரிகளையும், இந்த சாப்ட்வேர் இணைக்கும்.
இதன் மூலம், மாணவர்களுக்கு திறமையான கல்வி கிடைக்கும் என, கூறப்பட்டு உள்ளது. தகுதியான, தரம் வாய்ந்த பேராசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் இந்த நேரத்தில், "ஏ-வியூ" வீடியோ கான்பரன்ஸ் சாப்ட்வேர், தொலை தூரத்தில் உள்ள, போதிய திறன் இல்லாத கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment