Tuesday, March 19, 2013


பிளஸ் 2 இயற்பியல் தேர்வு கேள்வியில் குழப்பம்

          பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் ஒரு கேள்வி ஆங்கிலத்தில் சரியாகவும், தமிழில் தவறாகவும் உள்ளதால், 5 மதிப்பெண்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படுமோ, என மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

           பிளஸ் 2 இயற்பியல் பொது தேர்வில் பகுதி 3ல், ஐந்து மதிப்பெண்களுக்கான கேள்விகளில் 62வது கேள்வி "ரேடானின் தத்துவம் யாது? அதன் பயன்பாடுகள் யாவை?" என்றும் ஆங்கிலத்தில் "ஸ்டேட் பிரின்ஸ்பல் ஆப் ரேடார். வாட் ஆர் தி அப்ளிகேசன்ஸ் ஆப் ரேடார்" என கேட்கப்பட்டுள்ளது. இக்கேள்வியால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

             இதுகுறித்து இயற்பியல் ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: "ரேடான்" என்பது தனிமத்தை குறிக்கும். "ரேடார்" என்றால் கருவியை குறிக்கிறது. இதில் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விதான் சரி. அதன்படி பதில் எழுதினால் தான் 5 மதிப்பெண் கிடைக்கும்.

              ஆனால், தமிழ் வழிக்கல்வி மாணவர்கள் பலர் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டுள்ளதை பார்த்திருப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது. இதனால், 5 மதிப்பெண் குறைந்து "கட் ஆப்" மதிப்பெண் பாதிக்கும் என, மாணவர்கள் அச்சப்படுகின்றனர், என்றார்.

வேதியியல் வினாத்தாள் எளிது: சென்டம் அதிகரிக்கும்

         பிளஸ் 2 வேதியியல் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது என்பதால், பிற பாடங்களை காட்டிலும் வேதியியல் பாடத்தில், "சென்டம்" எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால், பொறியியல், மருத்துவ மாணவர்களுக்கு, எதிர்பார்க்கும் கட்- ஆப் மதிப்பெண் பெற, வேதியியல் தேர்வு ஓரளவு கை கொடுக்கும், என்ற நம்பிக்கை உள்ளதாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

          தேர்வு குறித்து தேனி மாணவர்கள், ஆசிரியர் கருத்து: எஸ்.லாவண்யா (பி.சி.,கான்வென்ட் மேல் நிலைப்பள்ளி,தேனி): வேதியியல் வினாத்தாள் மிகவும் எளிது. கேள்வித்தாளை பார்த்தவுடன் நம்பிக்கை பிறந்தது. பகுதி-1ல், ஒரு மார்க் கேள்விகளில் பாதி, பாட புத்தகத்தில் உள்ள வினாக்களில் இருந்து தான் வந்தன.

              மீதமுள்ள கேள்விகள், முந்தைய பொது தேர்வு வினாத்தாள்களில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. பகுதி இரண்டில், 3 மார்க் வினாக்களும் எளிதாக இருந்தன. வினா வங்கியில் இருந்து தான் கேட்கப்பட்டிருந்தன. பகுதி மூன்றில், 5 மார்க் கேள்விகள் அடிக்கடி வகுப்பு தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள்.

           "தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சியில் வழங்கிய, பரீட்சையில் வரும் கேள்விகள் மற்றும் "புளூ பிரின்ட்" புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கட்டாயமாக எழுத வேண்டிய, கடைசி கணக்கு கேள்வியும் மிகவும் எளிது.

                  கே.விஜயகுமார் (நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி) : வேதியியல் வினாத்தாள் எளிமையாக இருந்ததால், நம்பிக்கை பிறந்துள்ளது. ஒரு மார்க் கேள்விகள், சமன்பாடு, சிந்திந்து பதில் அளிக்கும் வகையில் இல்லாமல், மிகவும் எளிதாக இருந்தது.

             3 மார்க் வினாக்களில், கரிம வேதியியலில் இருந்து கடினமான சமன்பாடுகளை கேட்காமல், இலகுவாக பதில் அளிக்கும் வகையில் இருந்தது. வினாத்தாள் அமைப்பின் படி (புளூ பிரின்ட்) அனைத்து பகுதிகளிலும் இருந்தும், கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

                    5 மார்க் கேள்வியில், வினை வகையின் முக்கிய சிறப்பு பண்புகள் விவரி? என்ற கேள்வி, 10 மார்க் கேள்வியில் கேட்கப்பட வேண்டிய, 5 மார்க் கேள்வியில் கேட்கப்பட்டுள்ளது. பிரிவு-இ பகுதியில் படம் வரைந்து, விளக்கும் கேள்விகள் அதிகம் கேட்கப்படாததால், நேரம் மிச்சமானது.

           மொத்தத்தில் முந்தைய பொதுத் தேர்வு வினா வங்கிகளை படித்தவர்களுக்கு, இந்த தேர்வு மிகவும் எளிது.

              ஏ.அய்யப்பன் (முதுகலை வேதியியல் ஆசிரியர், அரசு மேல்நிலைபள்ளி, சிலமலை): வேதியியலில் தேர்ச்சி பெறுவது கடினம், என நினைத்த மாணவர்கள் கூட, அதிக மார்க் எடுக்கும் வகையில் கேள்விகள் இருந்தன. பள்ளிகளில், அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் தான் கேட்கப்பட்டிருந்தன.

                கரிம, கனிம, வேதியியல் பகுதிகளில் இருந்து, வினாத்தாள் அமைப்பின் படி கேட்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் ஏற்ற வகையில், வினாத்தாள் அமைந்திருந்தது. கேள்வி-46 ல், "கிளிசரோஸ்" என்றால் என்ன? என்ற கேள்வி, இதுவரை கேட்கப்படாத மிகவும் எளிதான கேள்வி.

             பொறியியல், மருத்துவம் "கட் ஆப் மார்க்" எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு, வேதியியல் பாடம் கை கொடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

           சி.உமா மகேஸ்வரி (முதுகலை வேதியியல் ஆசிரியர்), ஒத்தக்கடை அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரை: இந்தாண்டு பிளஸ் 2 வேதியியல் தேர்வு வினாக்கள் எளிமையாக இருந்தன. மூன்று, ஐந்து, 10 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

           கடந்தாண்டு மற்றும் அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களே திரும்பவும் வந்திருந்ததால், மாணவர்கள் விடைகளை எளிதாக எழுதினர். குறிப்பாக, 70வது வினா (கட்டாய வினா) மிக எளிதாக இருந்தது.

              வினாக்கள் சுற்றி வளைத்து கேட்காமல், நேரடியாக கேட்டிருந்தனர். குறிப்பாக, இயற்பியல், வேதியியலில் பெரிய வினாக்கள் நேரடியாக கேட்கப்பட்டு இருந்தன. கரிம வேதியியலில் "பிராப்ளம்" எளிதாக இருந்தது. "சாய்ஸ்" வினாக்களும் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் உற்சாகமாக எழுதினர்.

             கடினமான வினாக்கள் இல்லை. ஒருமதிப்பெண் வினாக்களில் சில வினாக்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு லேசான சந்தேகத்தை ஏற்படுத்தியது, என்றனர்.

              வினாக்கள் எளிமை என்பதால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே விடைகளை எழுதினர். இந்தாண்டு கணிதம், இயற்பியல் கஷ்டமாக இருந்ததாக கருதிய மாணவர்கள், வேதியியல் தேர்வில் நூறுசதவீத மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. மொத்தத்தில், சாதாரண மாணவர்களுக்கும் நல்ல மதிப்பெண் கிடைக்கும், என்றார்.

அரசு துறைத் தேர்வுகள் அறிவிப்பு: ஏப்ரல் 15 வரை விண்ணப்பிக்கலாம்

         "அரசு ஊழியர்கள், அலுவலர்கள், துறைத் தேர்வுகளை எழுத, ஏப்ரல், 15ம் தேதி வரை, "ஆன்-லைன்" வழியாக விண்ணப்பிக்கலாம்" என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

        அரசுத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதற்காக, துறைத் தேர்வுகளை எழுதுகின்றனர். ஆண்டுதோறும், மே மற்றும் டிசம்பர் மாதங்களில், இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

          அதன்படி, மே மாதம் நடக்கும் தேர்வுக்காக, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஏப்ரல், 15ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளம் (www.tnpsc.gov.in) வழியாக, துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
 
புதிதாக 20 ஐ.ஐ.ஐ.டி.,கள்: மக்களவையில் மசோதா தாக்கல்

      தற்போதுள்ள, நான்கு, ஐ.ஐ.ஐ.டி.,களுடன், மேலும், 20, இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி கழகங்களை துவக்க வகை செய்யும், மசோதா நேற்று, லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

          காஞ்சிபுரம், குவாலியர், அலகாபாத் மற்றும் ஜபல்பூரில், இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி கழகங்கள் உள்ளன. அவற்றை, தாய் அமைப்புகளாகக் கொண்டு, மேலும், 20 இடங்களில், கூடுதல், தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை துவக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

             அதற்கான மசோதாவை நேற்று, லோக்சபாவில் தாக்கல் செய்த, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்லம் ராஜு, "தகவல் தொழில்நுட்பத்தில், உலகத்தர மனித வளத்தை உருவாக்குவதற்கான முயற்சி இது" எனக் குறிப்பிட்டார்.

மருத்துவம் சார் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

         எம்.எஸ்சி., நர்சிங், எம்.பார்ம்., - எம்.பி.டி., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

          தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் கீழ் இயங்கும், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில், 2013- 14ம் கல்வியாண்டில், எம்.எஸ்சி., நர்சிங், எம்.பார்ம்., - எம்.பி.டி., ஆகிய முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, கல்வி தகுதி, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விவரங்களை, www.tnhealth.orgwww.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பெறலாம்.

பள்ளிகளின் தரத்திற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்க வலியுறுத்தல்

        "தனியார் பள்ளிகள் அனைத்திற்கும், ஒரே விதமான கட்டணங்களை நிர்ணயிக்காமல், தரத்திற்கு ஏற்ப நிர்ணயிக்க வேண்டும்" என, தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.


          கடந்த வாரம் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிகளின் சங்க நிர்வாகிகள், தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு தலைவர் சிங்காரவேலுவை சந்தித்து, அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், நான்கு வகையான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.

             இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் கூட்டமைப்பு நிர்வாகிகள் நேற்று, கட்டண நிர்ணய குழு தலைவரை சந்தித்தனர். அப்போது, "அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், ஒரே வகையான கட்டணங்களை நிர்ணயிக்காமல், "கிரேடு"களுக்கு தகுந்தாற் போல் நிர்ணயிக்க வேண்டும்" என, வலியுறுத்தினர்.

              மேலும், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல்களை, வெளிப்படையாக வெளியிட வேண்டும் எனவும், வலியுறுத்தினர். அதற்கு, சிங்காரவேலு கூறுகையில், "கட்டண விவகாரத்தில், நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் பள்ளிகளின் பெயர் பட்டியல்களை, அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிட, நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

1 comment: