Wednesday, March 13, 2013

ஐ.ஏ.எஸ். தேர்வில் புதிய கட்டுப்பாடு: முதல்வர் எதிர்ப்பு

         ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
          இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக தலையிட்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொண்டுவந்துள்ள பாரபட்சமான கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

           இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் புதன்கிழமை எழுதியுள்ள கடித விவரம்:

             ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். (சிவில் சர்வீஸ்) தேர்வுகளில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் குறித்து தங்களது கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இந்தப் புதிய கட்டுப்பாடுகள் ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவோருக்கு எதிரானதாக உள்ளன.

               குறிப்பாக, சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் கொண்டுவரப்பட்டுள்ள நான்கு முக்கிய மாற்றங்கள் தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் வகையில் உள்ளன.

                   பள்ளிக் கல்வியின் இறுதி வரை தமிழில் படித்து, பட்டப் படிப்பை ஆங்கிலத்தில் படித்த மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளை தமிழில் எழுதலாம் என்ற பழைய முறை இப்போது மாற்றப்பட்டுள்ளது. பட்டப் படிப்பு வரை எந்தவொரு மாணவர் தமிழ் வழியில் பயில்கிறாரோ அவர் மட்டுமே, முதன்மைத் தேர்வில் தமிழில் எழுத முடியும் என்ற புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தமிழக மாணவர்களின் தாய்மொழியான தமிழ் வழியில் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பைப் பறிப்பதாக உள்ளது.

                அதே நேரத்தில், ஹிந்தியில் படித்தவர்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை.

                         இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்கள் தமிழ் பேசும் தேர்வர்களுக்கு மட்டுமன்றி ஹிந்தி மொழி பேசாத அனைத்து மாநில மாணவர்களுக்கும் எதிரானதாகும். மேலும், தாய்மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட கிராமப்புறங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையாகும்.

                    இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு இது எதிரானது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தேர்வு எழுதும் மாணவர்களுடன் ஒப்பிடும்போது தாய்மொழியில் எழுதும் மாணவர்களுக்கு இது பின்னடைவாக இருக்கும். இரண்டாவதாக, பட்டப் படிப்பில் பிரதான பாடமாக தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்து படித்த மாணவர்களால் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வில் விருப்பப் பாடமாக தமிழ் இலக்கியத்தை எடுக்க முடியும். இந்த நிபந்தனை மற்ற பாடங்களுக்கு விதிக்கப்படவில்லை. குறிப்பாக, இளங்கலை கணிதம் படித்த ஒருவர், தனது விருப்பப் பாடமாக வரலாறை எடுக்க முடியும். ஆனால், தமிழ் இலக்கியத்தை எடுக்க முடியாது.

             மூன்றாவதாக, ஒரு குறிப்பிட்ட மொழிப் பாடத்தை தேர்வுக்காக எடுக்க விரும்புவோரில், குறைந்தது 25 பேர் இருக்க வேண்டும். அதற்குக் குறைவாக இருந்தால் அவர்கள் ஹிந்தி அல்லது ஆங்கில மொழிகளில் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வை எழுத முடியும். இந்த விதியானது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அனைவரும் சமம் என்பதற்கு எதிரானதாகும்.

                   நான்காவதாக, இந்திய மொழியில் கட்டாயமாக ஒரு தகுதித் தாளை எழுத வேண்டும் என்கிற விதிமுறை நீக்கப்பட்டு, ஆங்கில மொழியில் கட்டுரை எழுதும் பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஆங்கிலம் படித்த தேர்வர்களுக்கு சாதகமாக இருக்கும். கிராமப்புறங்களில் உள்ள பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் பாதிப்பாக அமையும்.

              மாநில அரசுகளிடம் ஆலோசிக்கவில்லை: சிவில் சர்வீஸ் தேர்வில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மாநில அரசுகளிடம் எந்த ஆலோசனையையும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்ளவில்லை. இது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எதிர்கொள்வதைத் தடுக்கும் நடவடிக்கையாகும்.

                    எனவே, இந்தப் பிரச்னையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு எழுதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படும் விஷயம் என்பதால், இதில் நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகக் கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

பொருளாதாரம் பட்டம் படித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதி இல்லை - TRB விளக்கம்



மாநிலம் முழுவதும் 1000 தொடக்க பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி

              தமிழகம் முழுவதும் 1000 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி முறையை கொண்டுவருவதற்கு பள்ளி கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.கடந்த 2010-11ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது.
 
 
           அனைவருக்கும் ஒரே பாடத்திட் டம் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட இந்த கல்வித்திட்டத்தை தொடர்ந்து அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வியை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் இருந்து, முதற்கட்டமாக 1000 ஆங்கில வழிக்கல்வி தொடங்க உள்ள பள்ளிகளின் பட்டியல் கேட்டு பெறப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் இருந்து 10 அரசுப் பள்ளிகளின் பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பட்டியலில் இருந்து உயர் மட்டக்குழு தேர்வு செய்த பள்ளிகளில், முதற்கட்டமாக ஆங்கில வழிக்கல்வி முறை தொடங்க அரசு உத்தரவிட்டது.

டி.இ.டி - அறிவியல் வினா - விடை


டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: மரம்: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: உடலியல்: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: மாற்றம்: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: ஒளியியல் : அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: ஆற்றலின் வகைகள்: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: செல்லின் அமைப்பு: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: அளவீடுகளும் இயக்கமும்:அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: காந்தவியல்: அறிவியல் வினா - விடை

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: பொருள்களைப் பிரித்தல்: அறிவியல் வினா - விடை



தபால் மூலம் வாக்காளர் அட்டை: தேர்தல் கமிஷன் ஏற்பாடு

      தபால் மூலம் அடையாள அட்டையை வாக்காளர்கள் பெற்றுக் கொள்ள, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.

           தமிழகத்தில், 1993 முதல், போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியை, தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்தது; 2000ல், 100 சதவீதம் நிறைவு செய்து ஒருங்கிணைக்கப் பட்டது. புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் செய்யப்பட்டு, பட்டியல் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், "போட்டோவுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையில், போட்டோக்களை புதியதாக மாற்றிக் கொள்ளலாம்' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதன்படி, புதிய வாக்காளர் அடையாள அட்டை மேம்படுத்தப்பட்டு, பி.வி.சி., (பிளாஸ்டிக் ) அடையாள அட்டைகள் வழங்க உத்தரவிட்டுள்ளது.


                     புதிய அடையாள அட்டை பெறுவதற்கான வழிகாட்டி முறைகளையும், தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதற்காக, ஓட்டுப்பதிவு மையம், பொது சேவை மையம், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் விண்ணப்பம் செய்யலாம். "டூப்ளிகேட்' அடையாள அட்டை பெறுவதற்கு, 25 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதை, விண்ணப்பம் செய்யும் இடங்களிலே பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் பெற விரும்புபவர்கள், விண்ணப்பத்துடன், சுய முகவரியிட்ட, ஸ்டாம்ப் ஒட்டிய கவர்களை வழங்க வேண்டும். புதிய அட்டை தயாரானதும், வாக்காளர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க, தேர்தல் பிரிவு தாசில்தார்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

"பள்ளி, கல்லூரிகளில் என்.சி.சி., விருப்ப பாடமாக சேர்க்க முடிவு"

       "பள்ளி, கல்லூரிகளில், என்.சி.சி., விருப்ப பாடமாக சேர்க்கப்படும். என்.சி.சி., மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பில் சலுகை மதிப்பெண் வழங்கப்படும்" என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்லம் ராஜு தெரிவித்தார்.

       இதுகுறித்து, அவர் கூறியதாவது: பள்ளி, கல்லூரிகளில், என்.சி.சி., விருப்பப் பாடமாக சேர்க்கப்படுவதால், மாணவர்களுக்கு தேசபக்தி உணர்வு ஏற்படுவதுடன், அவர்களின் நடத்தையும், நல்லறிவும் வளர்கிறது. 
           ராணுவ கல்வித் திட்டம் என்பதால், அதைப் படிக்கும் மாணவர்களுக்கு, நல்ல குணாதிசயங்கள் வளரும். ஏற்கனவே சில தன்னாட்சி கல்லூரிகளில், என்.சி.சி., விருப்பப் பாடமாக உள்ளது. 
                யு.ஜி.சி., - ஏ.ஐ.சி.டி.சி., மற்றும் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களைப் பின்பற்றும் அனைத்து பள்ளிகளிலும், என்.சி.சி., பாடத்திட்டம், விருப்பப் பாடமாக அமைய வேண்டும் என்பதே என் விருப்பம். இந்த கல்வியாண்டில், 30 தன்னாட்சி கல்லூரிகள், இதை பின்பற்ற உள்ளன.
என்.சி.சி., மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பில் சில முன்னுரிமைகள் உள்ளன. தேசிய ராணுவ கல்வி நிறுவனம் (என்.டி.ஏ.,), "சி" சான்றிதழ் வைத்துள்ள, என்.சி.சி., மாணவர்களுக்கு சில இடங்களை ஒதுக்கி வைத்துள்ளது. சில தொழிற்கல்வி நிறுவனங்களும், குறிப்பிட்ட பணியிடங்களை, என்.சி.சி., மாணவர்களுக்கு ஒதுக்குகின்றன.
இவ்வாறு, அமைச்சர் ராஜு கூறினார்.

கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு பயிற்சியளிக்க உத்தரவு


               "தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும், கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களை கண்டறிந்து, ஒளி-ஒலி காட்சி மூலம் கற்பிக்க வேண்டும்" என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.


           தூத்துக்குடி டாக்டர் விஜயரங்கன் தாக்கல் செய்த பொது நல மனு: கற்றலில் குறைபாடுள்ள (டிஸ்லெக்சியா) மாணவர்களால் சரளமாக, சத்தமாக பேச முடியாது. புதிய வார்த்தைகளை கற்க முடியாது. உயர்கல்விக்குச் செல்லும் போதும், அதே நிலை நீடிக்கிறது. இதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. 

         அனைத்துப் பள்ளிகளிலும், மருத்துவக்குழு ஆய்வு செய்ய வேண்டும். இம்மாணவர்களுக்கு தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும். பிறமொழிகளில் பயிற்சி அளிக்க வேண்டும். ஒளி - ஒலி காட்சி மூலம் கற்பிக்க வேண்டும். 

     அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. 

       நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், எஸ்.விமலா பெஞ்ச் முன், விசாரணைக்கு மனு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: 

             பள்ளிக் கல்வி செயலாளர், சுகாதாரம் மற்றும் குடும்பநல செயலாளர் மனுவை பரிசீலிக்க வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும், முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, கற்றலில் குறைபாடுள்ள மாணவர்களை கண்டறிய வேண்டும். அவர்களுக்கு ஒளி-ஒலிகாட்சி மூலம் கற்பிக்க நடடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சி.ஏ., தேர்வு இலவச பயிற்சி மையம்: மதுரையில் மார்ச் 20ல் துவக்கம்

     மதுரையில், சி.ஏ., தேர்வுக்கான இலவச பயிற்சி மையம், மார்ச் 20 முதல் செயல்பட உள்ளது. 

       பட்டய கணக்கர் (சி.ஏ.,) படிப்பிற்கு தேர்வு நடத்தி, ஆடிட்டர் அங்கீகாரம் கொடுக்கும் "இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் ஆப் இந்தியா (ஐ.சி.ஏ.ஐ.,)" அமைப்பின் தலைமை அலுவலகம், டில்லியில் உள்ளது; கிளை அலுவலகங்கள், சென்னை, கோவை, மதுரையில் உள்ளன. 

           தென் மாவட்டங்களில், சி.ஏ., படிப்பதற்கு, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையம்  இல்லை. அதிக கட்டணத்தில் பயிற்சி வழங்கும், மையங்கள், சில நகரங்களில் உள்ளன. இந்நிலையில், சி.ஏ., படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, ஐ.சி.ஏ.ஐ., மதுரை கிளையில், சேர்க்கை கட்டணத்துடன், இலவச பயிற்சி மையம் துவக்கப்பட உள்ளது. 

மார்ச் 20ம் தேதி துவங்கும் மையத்தில், புத்தகங்கள், வழிகாட்டுதல்கள் கிடைக்கும். இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பயிற்சி அளிப்பர். ஐ.சி.ஏ.ஐ., மதுரை கிளை, தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: 

       தென் மாவட்டங்களில், முதன் முதலாக, சி.ஏ., தேர்வுகளுக்கு பயிற்சி மையம் துவக்குகிறோம். பி.காம்., முடித்தவர்கள் மட்டுமின்றி, வேறு பாடத்தில் டிகிரி முடித்தவர்களும், சி.ஏ., படிக்கலாம். சி.ஏ., படிப்பதற்கு "ஆன்-லைனில்" விண்ணப்பித்து, சென்னையில் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை மாற்றப்பட்டு உள்ளது. இனி, மதுரை கிளை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம், என்றார்.

           முகவரி: ஐ.சி.ஏ.ஐ., பழைய நத்தம் ரோடு, விசாலாட்சிபுரம், மதுரை. போன்: 98652 54234, 0452-234 3920.

ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான மாற்றங்களை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளிலும் மாற்றம்


         தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப்-1, குரூப்-1ஏ, 1பி, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் மற்றும் இதர தொழில்நுட்ப தேர்வுகளுக்கான தமிழ் பாடத்திட்டத்தினை முற்றிலும் மாற்றி அமைத்து புதிய பாடத்திட்டத்தினை டி.என்.பி.எஸ்.சி. தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
 
              கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரூப் 1 தேர்விற்கான பாடத்திட்டத்தில் மாற்றத்தை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து அனைத்து தேர்வுகளுக்கும் 72 பக்க புதிய பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி நேற்று இரவு வெளியிட்டுள்ளது.

                   எஸ்எஸ்எல்சி தகுதியைக் கொண்டு தேர்வு எழுதும் குரூப்- 4 பணியிடங்கள் மற்றும் விஏஒ தேர்வுகளில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது குரூப் 4 தேர்வில் இதுவரை 100 மதிப்பெண்கள் பொது அறிவு பகுதிக்கும், 100 மதிப்பெண்கள் பொதுத்தமிழுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன. புதிய பாடத்திட்டத்தின் படி பொது அறிவு, புத்தி கூர்மை, சிந்தித்து விடை அளித்தல் ஆகிய பகுதிகளிலிருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். இதற்காக 225 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 50 வினாக்கள் மட்டுமே பொதுத்தமிழில் இருந்து கேட்கப்படும். அதற்கு 75 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  குருப்-2 தேர்விலும் அனைத்து மதிப்பெண்களும் பொது அறிவு பகுதிக்கே ஒதுக்கப்பட்டுள்ளன.

              இதுவரை இடம் பெற்று வந்த பொதுத்தமிழ் பகுதி நீக்கப்பட்டதுடன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் வங்கி போட்டித் தேர்வு போன்று புத்தி கூர்மை, சிந்தித்து விடை அளிக்கும் திறன் ஆகிய புதிய பகுதிகளுக்கு கூடுதல் மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது.

            அதாவது, நேர்முகத்தேர்வு, நேர்முகத்தேர்வு அல்லாதது என இரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. நேர்முகத்தேர்விற்கான பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு என இரண்டு தேர்வுகளும். நேர்முகத்தேர்வு இல்லாத பதவிகளுக்கு ஒரு தேர்வு மட்டும் எழுதினால் போதுமானது.  இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ) தேர்வு குரூப்-1 தேர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது.

               ஐ.ஏ.எஸ் போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்று மாநிலங்களில் பணியில் சேர்பவர்கள் கூட அந்தந்த மாநில மொழிகளில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்திற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது தேர்வாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புதிய தலைவர்  பொறுப்பேற்பு:

இந்நிலையில்,  இன்று பொறுப்பேற்க உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) புதிய தலைவர் ஏ. நவநீதகிருஷ்ணன் மேலும் சில மாற்றங்களை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

UPSC, TNPSC மற்றும் TET உள்ளிட்ட தேர்வுகளில், திறந்தநிலை பல்கலையில் படித்தவர்கள் அதிகளவில் அரசு பணிகளுக்கு தேர்வு

         யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., டி.இ.டி., உள்ளிட்ட தேர்வுகளில், திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்தோர் அதிகளவில் தேர்வாகி உள்ளனர்" என, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.
 
 
             தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின், 6வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. துணைவேந்தர் சந்திர காந்தா, வரவேற்புரையாற்றினார். கவர்னர் ரோசய்யா, தலைமை தாங்கினார்.

           விழாவில், 35,432 பேருக்கு இளங்கலை பட்டமும்; 6,176 பேருக்கு முதுகலை பட்டமும்; 377 பேருக்கு, எம்.பில்., பட்டமும்; 5,937 பேருக்கு பட்டய சான்றிதழும்; 198 பேருக்கு முதுகலை பட்டய சான்றிதழும் வழங்கப்பட்டன.

              உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது: வெளிநாடுகளில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படிப்பது, பெருமையாக கருதப்படுகிறது. பிரிட்டிஷ் திறந்தநிலை பல்கலைக்கழகம் உலகப் புகழ் பெற்றது.

                   பட்டமளிப்பு விழாவில், பொதுவாக, ஒரே வயதினரை மட்டுமே பார்க்க முடியும். ஆனால், இங்கு இளைஞர்கள், நடுத்தர மற்றும் முதியவர்கள் என, அனைவரையும் காண முடிகிறது. வாழ்நாள் முழுவதும் ஒருவர் கற்பதற்கான வாய்ப்பை, திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்குகிறது.

            திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் படித்த பலர், யு.பி.எஸ்.சி., - டி.என்.பி.எஸ்.சி., - டி.இ.டி., தேர்வாகி உள்ளனர். இவ்வாறு பழனியப்பன் கூறினார்.

            பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா கூறுகையில், "மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பல்நோக்கு பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இணையவழி மாணவர் சேர்க்கை மற்றும் குறுஞ்செய்தி முறையில், தகவல் பரிமாற்ற முறையை அறிமுகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது" என்றார்.

பிளஸ் 2 இயற்பியல் எளிமை; பொருளாதாரம் கடினம்

          பிளஸ் 2 பொதுத்தேர்வில் நேற்று நடைபெற்ற இயற்பியல் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேருவதற்கு இயற்பியல் முக்கியப் பாடமாக கருதப்படுகிறது.
 
             தமிழகம் முழுவதும் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இதில் தொழில்படிப்புகளில் சேருவதற்கான முக்கியப் பாடத் தேர்வுகள் நேற்று தொடங்கின.

           இயற்பியல் தேர்வில் மற்ற வினாக்கள் எளிதாக இருந்தபோதிலும் சில ஒரு மதிப்பெண் வினாக்கள் தங்களை குழப்பம் அடையச் செய்யும் வகையில் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

           குறிப்பாக வினாக்கள் 7, 15, 16, 20 ஆகியவை மாணவர்களை சிந்தித்து பதிலளிக்கச் செய்யும் விதமாக கேட்கப்பட்டிருந்தன. இதனால் நிகழாண்டில் ஒரு மதிப்பெண் வினாக்கள் 30-க்கும் சரியான விடையளிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சற்று குறையும் என்கிறார் என்று இயற்பியல் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

             பொருளாதாரம் கடினம்: தமிழகத்தில் நேற்று நடைபெற்ற பிளஸ் 2 பொருளாதாரத் தேர்வில் மாணவர்கள் முழு மதிப்பெண் ("சென்டம்')பெறுவது சற்று கடினம் என்று மாணவர்களும் ஆசிரியர்களும் தெரிவித்தனர். பொருளாதாரத் தேர்வில் 20 மதிப்பெண்கள் பிரிவில் 6 வினாக்களில் 3-க்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டிய நிலையில், வினாக்கள் 76, 79, 80, 81 ஆகியவை எப்போதும் போல வரைபடம், அட்டவணை போன்ற வகையில் இல்லாமல் கட்டுரை வடிவில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது.

           இயற்பியல் தேர்வில் காப்பியடித்ததாக 22 மாணவர்கள் பிடிபட்டனர். பொருளாதாரத் தேர்வில் காப்பியடித்ததாக 23 மாணவர்கள் பிடிபட்டனர். கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் காப்பியடித்ததாக இந்த மாணவர்கள் பிடிபட்டனர்.

மேல்நிலை வரைவு பாடத்திட்டம்: ஏப்ரலில் இணையத்தில் வெளியீடு
3 நபர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் நெல்லையில் 15ம் தேதி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நெல்லையில் வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் பாளையில் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சுடலைமணி வரவேற்றார். மாநில செயலாளர்கள் முருகேசன், மணிமேகலை சிறப்புரை ஆற்றினர்.6வது ஊதிய குழு முரண்பாடுகளை களையும் 3 நபர் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.தேர்தல் வாக்குறுதியின்படி தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட தொகையை 50 ரூபாயாக குறைக்க வேண்டும்.இக்கோரிக்கைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ம் தேதி மாலையில் நெல்லை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தானந்தம் தேவதாஸ், முருகையா, மாவட்ட துணைத் தலைவர் பரமசிவன், நிர்வாகிகள் ஈஸ்வரன், முத்துசாமி, ஜெயசங்கர், மணிமேகலை, பால்ராஜ், பால் ராபர்ட், சுசிகர் சவுந்திரராஜன், ராஜ்குமார், கென்னடி, சுரேஷ் முத்துக்குமார், பவுல், காமராஜ், துரைராஜ், ஜெயக்குமார், அருள் மரியஜான்,அல்போன்ஸ், பிரம்மநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

2 comments: