"அரிதான நாணயங்கள் ஏதேனும் கிடைத்தால், அதை, தயவு செய்து நாணய ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களின் கவனத்திற்கு, கொண்டு செல்லுங்கள். பழைய நாணயங்களை உதாசீனப்படுத்தி, தமிழகத்தின் வரலாற்றை அழித்து விடாதீர்கள்" என, "தினமலர்" நாளிதழ் ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"மெட்ராஸ் காயின் சொசைட்டி" அமைப்பின் சார்பில், "நாணய கண்காட்சி 2013" ராஜா அண்ணாமலைபுரம், குமார ராஜா முத்தையா அரங்கில் நேற்று துவங்கியது. "மெட்ராஸ் காயின் சொசைட்டி" தலைவர் வைத்தியநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
"தினமலர்" நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நாணய கண்காட்சியை, குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது:
தமிழகத்தை பொறுத்தவரை, காசு இயல் அல்லது நாணயவியல் பற்றி, 1984ம் ஆண்டிற்கு பின் தான், வெளியில் தெரிய துவங்கியது. அதற்கு முற்பட்ட காலத்தில், தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்கள் அனைத்தும், ராஜ ராஜன் காலத்து நாணயங்கள் குறித்து, ஏதோ ஒரு பக்கத்தில் மட்டும், தகவல் எழுதியிருப்பர்.
கடந்த, 1984ம் ஆண்டு, நான் மதுரையில் ஒரு நாணயவியல் வியாபாரியிடம், ஒரு சதுர காசை விலைக்கு வாங்கினேன். அதன் முன்புறம் குதிரை இருந்தது. அதன் மேல், "பெருவழுதி" என்று, தமிழ் பிராமி எழுத்து முறையில் குறிக்கப்பட்டிருந்தது. பின்புறம், கோட்டு வடிவத்தில், மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.
"பெருவழுதி" என்ற பெயர், சங்க கால இலக்கியமான, புறநானூற்றில் உள்ளது.
முதன் முதலாக, "பெருவழுதி" என்ற பெயர் பொறித்த, நாணயம் கிடைத்த பிறகு தான், சங்க காலத்தில் மன்னர்கள் நாணயங்களை வெளியிட்டனர் என்ற கீர்த்தி வெளிவந்தது.
உருக்கு ஆலைக்கு விற்றனர்: அதற்கு முன், வரலாற்று நூல் ஆசிரியர்கள், "சேர, சோழ, பாண்யர்கள், சிறு வட்டத்தில் ஆண்ட மன்னர்கள்; அவர்களுக்கு நாணயம் வெளியிடும் தொழில்நுட்பம் கிடையாது; அவர்களுக்கு நாணயத்தின் தேவையும் கிடையாது; பண்ட மாற்று முறைதான் இருந்தது" என்று கூறி வந்தனர்.
ஆனால், இந்த "பெருவழுதி" நாணயம் கிடைத்த பிறகு, அந்த கூற்று மாற்றப்பட்டது. 1987ம் ஆண்டு, கரூர், அமராவதி ஆற்றில் இருந்து, ஏராளமான, பிற்காலத்திய ரோம நாட்டு செப்பு நாணயங்கள், கிரேக்க நாட்டு நாணயங்கள், சேரர் நாணயங்கள் கிடைத்தன.
தகவலறிந்து, நான் அங்கு சென்று பார்த்த போது, கரூர் பஜாரில் உள்ள, சிறு சிறு பாத்திரக் கடைகளில் எல்லாம், அவற்றை குவித்து வைத்திருந்தனர். அந்த நாணயங்கள் குறித்து கேட்ட போது, அவர்கள், "கடந்த ஒரு மாதமாக கிடைக்கிறது. இவற்றில், ஐந்து டன் நாணயங்களுக்கும் மேலாக, திருப்பூர் உருக்கு ஆலைக்கு அனுப்பி வைத்து விட்டோம்" என்று கூறினர்.
அதைக் கேட்டதும் நான், அளவில்லாத துக்கம் அடைந்தேன். முதன் முதலாக, அங்கு தான், சங்க கால சேரர் நாணயங்கள் கிடைத்தன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சோழர், பாண்டிய, மலையமான் காலத்து நாணயங்களும் கிடைத்து விட்டன.
கரூரில் கிடைத்த, பிற்காலத்திய ரோம நாட்டு செப்பு நாணயங்கள், கி.பி., 5ம் நூற்றாண்டை சேர்ந்தவை. அந்த நாணயங்களை சுத்தம் செய்து, ஆய்வு மேற்கொண்டு, நூல் எழுதினேன். அதற்கு முன் இந்தியாவில், அது குறித்து யாரும் நூல்கள் எழுதவில்லை.
பீட்டர் பர்கேஸ் என்ற, ஜெர்மன் பேராசிரியர், என் நண்பர். நான், 1985ம் ஆண்டு முதல், தமிழ்நாடு நாணய சங்கம் ஆரம்பித்து, நடத்தி வந்தேன். ரோம நாட்டு நாணயங்கள் குறித்து, கருத்தரங்குகள் பல நடத்தினேன். பிற்காலத்திய, ரோம நாட்டு செப்பு நாணயங்கள் குறித்த புத்தகங்கள் எதுவும், எழுதப்படவில்லை.
ஆனால், பீட்டர் பர்கேஸின் மாணவர் ஒருவர், இலங்கையில் கிடைத்த ரோம நாட்டு நாணயங்கள் குறித்து, ஆராய்ச்சி மேற்கொண்டு புத்தகங்கள் எழுதினார். அவருக்கு என்னிடம் இருந்த நாணயங்களின் புகைப்படங்களை அனுப்பி, "அவை எந்த காலத்து நாணயங்கள் என்று அடையாளம் காட்டினால், அது குறித்த கட்டுரை எழுத, வசதியாக இருக்கும்" என, கடிதம் எழுதினேன்.
அதற்கு அவர் எழுதிய பதிலில், "உங்களுக்காக நான் எனது நேரத்தை செலவிட வேண்டுமா? இனி இதுபோன்ற கடிதங்களை எழுதாதீர்" என்று கூறியிருந்தார். என் வாழ்நாளில், அது போன்ற அவமானம் அடைந்ததில்லை.
இருப்பினும் விடாப்பிடியாக, பிற்கால ரோம நாட்டு நாணயங்கள் குறித்து எழுத வேண்டும் என்ற ஆசையில், ஆக்ஸ்போர்டு பல்கலை பேராசிரியர் ஒருவரை, தொடர்பு கொண்டேன். லண்டன் சென்று, அவரை சந்தித்தேன். அங்கிருந்த 150 ஆண்டு பழைமை வாய்ந்த இங்கிலாந்து நாட்டு நாணயவியல் சங்க நூலகத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு நூலை என்னிடம் காண்பித்தார்.
அது ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டிருந்தது. அந்த நூலின் பெயரை எழுதி கொண்டு, லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம் நூலகத்திற்கு சென்று, என் நண்பர்கள் உதவியுடன், அந்த நூலின் புகைப்பட பிரதி ஒன்றை பெற்று, இந்தியா திரும்பி, அது குறித்த நூலை எழுதினேன்.
அது தான், நாணயம் குறித்த, என் முதல் ஆங்கில நூல். அந்த நூல், மிக பிரபலமானது. தென்னிந்திய நாணய சங்கம் ஆரம்பித்தோம். அது தமிழகம் முழுவதும், கிளைகளுடன் வளர்ந்துள்ளது.
இப்போதெல்லாம், பழங்கால நாணயங்களே வாங்க முடியாது; நல்ல விலைக்கு போகிறது. நான் வைக்கும் ஒரே கோரிக்கை இது தான். உங்களிடம், அரிதான நாணயங்கள் ஏதேனும் கிடைத்தால், அவற்றை தயவு செய்து, நாணயங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களிடம் காண்பியுங்கள். அல்லது அவற்றின் புகைப்படங்களையாவது கொடுத்து, ஆராய சொல்லுங்கள்.
பழைய நாணயங்களை உதாசீனப்படுத்தி, தமிழகத்தின் வரலாற்றை அழித்து விடாதீர்கள். இவ்வாறு டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.
பிரிகேடியர் பாக்கியநாதன் பேசுகையில், "இந்த சொசைட்டி, 1991ம் ஆண்டு துவக்கப்பட்டது. அதற்கு முன்பாக துவங்கியிருந்தால், நானும் கண்காட்சியில் கலந்து கொண்டிருப்பேன். நான், நாணயங்களின் மகத்துவம் அறிந்தவன். இந்த நாணயங்களை சேகரித்து பாதுகாப்பதன் மூலம், நமது பாரம்பரியத்தையும் காப்பாற்றுகிறோம்" என்றார்.
"மெட்ராஸ் காயின் சொசைட்டி" தலைவர் ராவ், நன்றி கூறினார். நேற்று துவங்கிய இந்த கண்காட்சி, தொடர்ந்து மூன்று நாட்கள் நடக்கிறது. இதில், 65 அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
அவற்றில், பழங்காலத்து நாணயங்கள், பல நாடுகளின் கரன்சிகள், பழங்காலத்து பொருட்கள் உள்ளிட்டவை, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நாணயங்களை சேகரிக்கும் மாணவ, மாணவியருக்கு, இந்த கண்காட்சி, மிகவும் பயனுள்ளதாக அமையும்.
No comments:
Post a Comment