Saturday, April 20, 2013


கல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வு/தேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள்
*மதிப்பெண் பதிவேடு
*தேர்ச்சி தரநிலை விபரப்பட்டியல்
(வகுப்பு வாரி விபரம்,
இன வாரி விபரத்துடன்)
*மக்கள் தொகை பதிவேடு
*மக்கள் தொகை சுருக்கம்
*5+ குழந்தைகள் பெயர்ப்பட்டியல்
*இடைநின்றவர் பெயர்ப்பட்டியல்/இன்மை அறிக்கை
*பள்ளியில்சேராதவர் பெயர்ப்பட்டியல்/ இன்மை அறிக்கை
*மாற்றுத்திறனாளிகள்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
*குழந்தைதொழிலாளர்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
*EER சுருக்கம்
*ஆசிரியர் வருகை பதிவேடு
*2012~2013 ஆசிரியர் விடுப்பு விபரம்
*ஆசிரியர் கோடை விடுமுறைகால முகவரி
தொலைபேசி எண்ணுடன்
*பள்ளி வேலை நாட்கள் விபரம்
*கோடைவிடுமுறை அனுமதி
*தேர்ச்சி சுருக்கம்

1.click here to download the Census Consolidation Model Form
2.click here to download the CCE Final Grade List for Annual Report
3.click here to download the mark register model 
4.click here to download the Abstract of  promotion form
(இது சில மாவட்டங்களில் மாறலாம், மேற்கூறியவைகளில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அல்லது புதிய படிவங்கள் தங்களிடம் இருந்தால் teachertn.com@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்)

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் 8.8%ல் இருந்து 8.7%ஆக குறைப்பு
2013-14ஆம் நிதியாண்டுக்கான பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 01.04.2013 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த வாரம் வெளியிடப்படப்பட்ட  மத்திய நிதி அமைச்சக உத்தரவின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கான பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் பிற ஒத்த வைப்பு நிதிக்கு  2013-14ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.7 சதவீதமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில்(2012-13) பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.8%ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டி விதமானது 01.04.2013ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வுத்தரவானது கீழ்காணும் நிதி அமைப்புகளுக்கு பொருந்தும்:-
1. பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய சேவைகள்).
2. பங்களிப்பு சேம நல நிதியம் (இந்தியா).
3. அனைத்து இந்திய சேவைகள் சேம நல நிதியம்.
4. மாநிலம் ரயில்வே சேம நல நிதியம்.
5. பொது வருங்கால வைப்பு நிதி (பாதுகாப்பு சேவைகள்).
6. இந்திய ராணுவ தளவாட துறை சேம நல நிதியம்.
7. இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் workmen நாட்டின் வருங்கால வைப்பு நிதி.
8. இந்திய கடற்படை கப்பல் பட்டறை workmen நாட்டின் வருங்கால வைப்பு நிதி.
9. பாதுகாப்பு சேவைகள் அதிகாரிகள் சேம நல நிதியம்.
10. ஆயுதப்படைகள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி.
பள்ளி மாணவ, மாணவியருக்காக கோடையில் இளம் விஞ்ஞானி முகாம்

நாடு முழுவதும் மாணவ, மாணவிகளிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் கோடை விடுமுறையில் 'இளம் விஞ்ஞானி முகாமிற்கு தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.


ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் 40 மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கோடை விடுமுறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்து பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி முதல்வர் ஜோசப் நிருபர்களிடம் கூறியதாவது:இளம் வயதிலேயே அறிவியல் ஆற்றல் மிக்க மாணவர்களை இனம் காணும் வகையில் இந்த முகாம் நடக்கிறது. 

 நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மாணவ, மாணவிகளுக்கான கோடை முகாம் மே 6ம் தேதி முதல் 26ம் தேதி வரை 20 நாள் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நடக்கிறது. இதேபோல தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட மாணவ, மாணவிகளுக்கான முகாம் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடக்கிறது.கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு மாணவ, மாணவிகள் அரையாண்டுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் முகாமிற்கு தேர்ந்தெடுக்கப்படுவர். 

ஒரு பள்ளியில் இருந்து இருவர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.இந்த கோடை பயிற்சி முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு அரசின் நிதி ஒதுக்கீட்டை பொறுத்து தொடர் பயிற்சிகளும் அளிக்கப்படும். இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் அந்தந்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மருந்தாகும் உணவு வகைகள்… சில டிப்ஸ்...
1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
3. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

4. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

5. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

6. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

7. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

8. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

9 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

10. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

11. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

12. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

13. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

14. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

15. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

16. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

17. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.
ஏன் குழந்தைகள் விளையாடுகிறார்கள்?

நீங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை நன்கு கவனித்தாலோ அல்லது, அவர்கள் ஏன் விளையாட்டில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைப் பற்றிய அறிக்கைகளைப் படித்தாலோ, உங்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக தெரியவரும். மகிழ்ச்சியான நடவடிக்கை என்பதுதான் அது.
விளையாட்டு என்பது ஒரு புதிய உலகத்தை, குழந்தைகளுக்கு உருவாக்கித் தருகிறது. எனவே, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகள் ஆரோக்கியமான முறையில் விளையாடவும், உடலியக்க நடவடிக்கைகளில் ஈடுபடவும் உற்சாகப்படுத்த வேண்டும்.

உங்கள் குழந்தைகளுக்கு நீங்களே முன்மாதிரி

பெற்றோர்கள்தான், குழந்தைகளின் முதல் முன்மாதிரிகள். அவர்களின் குணநலன்களையே மாதிரிகளாக எடுத்துக்கொண்டு, குழந்தைகள் பின்பற்ற தொடங்குகின்றன. உங்களின் கோபம், குரோதம், எதிர்மறை விஷயங்கள், கோழைத்தனம், தன்னம்பிக்கையின்மை உள்ளிட்ட எதிர்மறை எண்ணங்கள், உங்கள் குழந்தையின் மனதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, குழந்தைகளின் முன்பாக உங்களின் பலவீனங்களை வெளிக்காட்டிக் கொள்ளக்கூடாது. அமைதியுடனும், சுயகட்டுப்பாடுடனும் நடந்துகொள்ளுங்கள்.

நேர்மறையாகவே பேசுங்கள்

தங்களது பெற்றோர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை, எப்போதுமே, குழந்தைகள் ஆர்வத்துடன் கவனிப்பார்கள். எனவே, நமது பேச்சில் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். நாம் நேர்மறை எண்ணங்களை, குழந்தைகளின் முன்பாக வெளிப்படுத்த வேண்டும். தம்மைப் பற்றி மற்றவர்கள், குறிப்பாக பெற்றோர்கள் என்ன கருத்துக்களை(மதிப்பீட்டை) சொல்கிறார்கள் என்பதை வைத்தே, அவர்களின் ஆளுமை வடிவம் பெறுகிறது. எனவே, நேர்மறை விஷயங்களை அதிகம் கேட்கையில், நேர்மறை ஆளுமையை வளர்த்துக்கொள்கிறார்கள்.

முதலில் நாம் ஒரு மனிதர்

ஒரு மனிதர் அரசியல்வாதியாக இருக்கலாம், விஞ்ஞானியாக இருக்கலாம், விளையாட்டு வீரராக இருக்கலாம் அல்லது நடிகராக இருக்கலாம். இது, ஒரு மனிதரின் தொழில்முறை சார்ந்த அடையாளமாகவோ அல்லது பொழுதுபோக்கு சார்ந்த அடையாளமாகவோ இருக்கலாம். ஆனால், இத்தகைய அடையாளங்களையும் மீறி, ஒருவருக்கு மனிதர் என்ற அடையாளமே நிரந்தரமானது மற்றும் முக்கியமானது.

எனவே, உங்களின் குழந்தை, தான் ஒரு மனிதன் என்ற சுயபிம்பத்தை கற்றுக்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும். அதன் திறமை மற்றும் சாதனைகள் மற்றும் தோல்விகள் மற்றும் தவறுகள் போன்றவை, மனிதன் என்ற பிம்பத்தை அழித்துவிடக்கூடாது. இந்த விஷயத்தில், பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.

உங்களின் வாழ்க்கை உங்கள் குழந்தைக்கானதல்ல...

உங்களின் குழந்தைக்கென தனி விருப்பங்கள் மற்றும் ஆசாபாசங்கள் உண்டு. நீங்கள் விரும்புவதையே உங்களின் குழந்தை விரும்பும் என்று எதிர்பார்த்தல் தவறு. அது உங்களின் பிள்ளையாக இருக்கலாம். ஆனால், அதற்கென்று தனி குணாதிசயங்கள் உண்டு. எனவே, உங்களின் லட்சியங்கள் மற்றும் கனவுகளை, உங்கள் குழந்தைகளின் மீது திணிக்கக்கூடாது. இது மாபெரும் தவறு.

சிரிப்பே பெரிய வரம்!

பிற விலங்குகளிடம் இல்லாத, அதேசமயம் மனிதனுக்கு மட்டுமே இருக்கும் ஒரு மிகப்பெரிய அதிசயம் நகைச்சுவை உணர்வு. எனவே, உங்கள் குழந்தை, நகைச்சுவை உணர்வை வளர்த்துக்கொள்வதை உறுதிசெய்வதும் பெற்றோரின் முக்கிய கடமைகளில் ஒன்று. தன் வயதொத்த பிள்ளைகளிடம் சிரித்து விளையாடி மகிழ்வது, குழந்தைகளின் மனவளர்ச்சிக்கு தேவையான ஒன்று. இன்றைய நமது கல்விமுறை, குழந்தைகளின் சந்தோஷ வாழ்வையே அளிப்பதாக உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

அடையக்கூடிய இலக்கு!

சிறுவயதில், குழந்தைகள் தாங்கள் பார்த்ததை, கேட்டதை மற்றும் படித்ததை வைத்து இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளும். சில குழந்தைகள் காலப்போக்கில் அதை மறந்துவிட்டாலும், சில குழந்தைகள் அதையே கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். மேலும், வளர்ந்து பெரியவர்களான மாணவர்களுக்கே, தாங்கள் என்னவாகப் போகிறோம் என்பதைப் பற்றி தெளிவாக இலக்கு நிர்ணயித்துக்கொள்ள முடிவதில்லை.

பலர், தங்களை சுற்றியுள்ள சமூக சூழலுக்கு ஆட்பட்டு விடுகின்றனர். எனவே, ஒவ்வொரு பெற்றோரும், குடும்ப சூழல், குழந்தையின் ஆர்வம், திறன் மற்றும் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றின் அடிப்படையில், சிறப்பான மற்றும் பொருத்தமான ஒரு இலக்கை நிர்ணயிப்பதில் உதவ வேண்டும்.
ஆளுமைத் திறனை வளர்க்கும் நூல்கள்: தமிழ் பல்கலை துணைவேந்தர்
"ஒரு மனிதனின் ஆளுமைத் திறனை வளர்க்கும் வல்லமையும், நெறிப்படுத்தும் தன்மையும், உள்ளத்தில் தன்னம்பிக்கை ஊட்டி தளர்ச்சியை போக்கி, உயர்வை தரும் சக்தி நூல்களுக்கு உள்ளது.
எனவே நூல்களை வாசிக்கும் பழக்கம் அவசியம்," என தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் திருமலை பேசினார்.

தஞ்சையில், அரண்மனைக்கு செல்லும் வழியில் கீழராஜா வீதியிலுள்ள தமிழ் பல்கலையின் பதிப்புத்துறையில் நூல்களுக்கு, 50 சதவீத விலை தள்ளுபடி சலுகை அறிவிப்பு விழா நடந்தது. விழாவில் துணைவேந்தர் திருமலை தலைமை வகித்து பேசியதாவது:

"தஞ்சை தமிழ் பல்கலையின் பதிப்புத்துறையில் இதுவரை, 465 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பதிப்புத்துறைக்கு முதலில் நிதிச்சிக்கல் நிலவியது. துணைவேந்தராக பொறுப்பேற்றதும், தனியாக இத்துறையை பிரித்து, நிதியை கையாள தனி வங்கி கணக்கு துவங்கப்பட்டது. தற்போது, 20 லட்சம் ரூபாய் வங்கியில் இருப்பு உள்ளது. இதன்மூலம் பதிப்புத்துறை நடவடிக்கைளை திறம்பட கொண்டு வழியேற்பட்டுள்ளது.

இதேபோல நூல்களை முன் வெளியீட்டு திட்டத்தில் வெளியிட, ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. நூல்களுக்கு நாம் தரும் விலை என்பது தாள், மைக்கு தரும் விலை தானே தவிர, உண்மையில் நூலுக்கு தருவது அல்ல. புத்தகங்கள் விலை மதிப்பே இல்லாதவை. புத்தகம் தான் ஒரு மனிதனை நெறிப்படுத்தும். வாழ்க்கையில் தளர்வுறும் சமயத்தில் தன்னம்பிக்கை ஊட்டும். ஆளுமை திறனை வளர்க்கும்.

ஈராக் அதிபர் சதாம் உசேன், அமெரிக்கா நாட்டின் உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, அவரிடம் உண்மையை வரவழைக்க அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். எவ்வளவோ விசாரித்தும் சதாம் உசேனிடம் தகவல் ஏதும் பெற முடியவில்லை.

இந்நிலையில் சிறையில் சதாம் உசேன் இருக்கும் சமயத்தில், அவர் என்ன விரும்பி கேட்கிறார்? என கூறும்படி, காவலரிடம் அதிகாரி கேட்டுக்கொண்டார். அதன்படி ஒரு மாதத்துக்கு பின், சதாம் உசேன் காவலரை அழைத்து, ஆங்கில நாவலாசிரியர் எர்னஸ்ட் ஹெமிங் வே எழுதிய, "ஓல்டுமேன் அண்ட் த சி" எனும் புத்தகத்தை வாங்கி வரும்படி கூறியுள்ளார். இதைத் தெரிந்து கொண்ட அதிகாரி, சதாம் உசேனிடம் இனி உண்மையை பெற முடியாது. அவர் மேலும் போராட தயாராகி விட்டார் என்பது, அவர் விரும்பி கேட்ட புத்தகத்தின் மூலம் தெரிந்து விட்டது என, உயரதிகாரிகளுக்கு அளித்தார்.

இத்தகைய புத்தகம், தமிழில் "கடலும், கிழவனும்" எனும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் கிழவன், சுறா மீனை படகில் கட்டி கரைக்கு இழுத்து வருகிறான். இப்படி வரும் வழியில் இறந்த சுறா மீனை, பிற மீன்களை தின்ன முயற்சிக்கின்றன. இதை குத்தீட்டியால் கிழவர் தடுக்கிறார்.

பின் கரைக்கு திரும்பிய பின், சுறாமீன் தலை மற்றும் கட்டப்பட்ட பகுதியை தவிர பிற உடல் பாகங்கள் அனைத்தும் மீன்களால் தின்னப்பட்டு இருந்ததை கிழவர் பார்த்தார். அப்போது, வானத்தை பார்த்து, வழக்கம்போல என்னை அதிர்ஷ்டம் பற்றிக்கொண்டது போலுள்ளது என, கிழவர் கூறி விட்டு, குடிசையை நோக்கி வலைகள், குத்தீட்டியுடன் புறப்பட்டார் என, கதை சம்பவம் விவரிக்கிறது. இதன்மூலம் மறுநாளும் கிழவர் மீன்பிடிக்க கடலுக்கு புறப்படுவார் என, நம்பிக்கையை படிக்கும் வாசகர்களுக்கு ஊட்டுகிறது.

எனவே புத்தகம் வாசிக்கும் பழக்கம் வாழ்க்கையை வளப்படுத்தும். அதனால் வாசிக்கும் பழக்கம் அவசியம். இதை ஊக்கப்படுத்தும் வகையில், பதிப்புத்துறை மூலம் தமிழ்ப் புத்தாண்டு தினமான இன்று முதல், வரும், 28ம் தேதி வரை 15 நாட்களுக்கு, 50 சதவீதம் தள்ளுபடி விலையில், புத்தக விற்பனை நடக்கிறது. இதை வாசகர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடந்தாண்டு தள்ளுபடி விற்பனையில், இரண்டு லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் மூலம் வருவாய் கிடைத்தது. நடப்பாண்டு, மூன்று லட்சம் ரூபாய் புத்தக விற்பனை வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிப்புத்துறைக்கு என, தனி வலைதளம் ஏற்படுத்தப்படும். அதில், நூல்களின் விபரம் தரப்படும்." இவ்வாறு துணைவேந்தர் பேசினார்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே இரண்டாவது வாரத்தில் வெளியிட வாய்ப்பு
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மே 2வது வாரத்தில் வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இதை கணக்கில் வைத்து விடைத்தாள் திருத்தும் பணிகளை தேர்வுத் துறை துரிதப்படுத்தி உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி முடிவடைந்தது.
மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதினர். தனித் தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் எழுதியுள்ளனர். மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 66 மையங்களில் விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த 20-ம் தேதி தொடங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது. தமிழ், ஆங்கிலம் மொழிப்பாடங்களை அனைத்து மாணவர்களும் எழுதியுள்ளனர். அதனால் அந்த பாடங்களில் மட்டும் விடைத்தாள்கள் இரட்டிப்பாக இருக்கிறது. சமூக அறிவியல் பாடங்களையும் அதிக அளவில் மாணவர்கள் எழுதியுள்ளனர். கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், கணினி அறிவியல் உள்ளிட்ட விருப்ப பாடங்களை தேர்வு செய்து எழுதியவர்கள் குறைவான அளவில் உள்ளனர். தற்போதைய நிலையில் கணக்கு, இயற்பியல் உள்ளிட்ட விருப்ப பாடங்களுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி பெருமளவில் முடிந்துவிட்டது. இந்தப் பணி ஓரிரு நாளில் முடிந்துவிடும். ஆங்கிலம், தமிழ், சமூக அறிவியல் பாடங்களின் விடைத்தாள்கள் அதிகமாக இருப்பதால் அவற்றை திருத்தி முடிக்க இன்னும் 5 நாட்கள் தேவைப்படும். இதுவரை திருத்தி முடிக்கப்பட்ட விடைத்தாள்களின் மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்கள் அந்தந்த மையங்களிலேயே சி.டி.க்களில் பதிவு செய்யப்படும். பின்னர் அந்த சி.டி.க்கள் தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். எல்லா சி.டி.க்களும் வந்து சேர்ந்ததும் அவை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள டேட்டா மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் டம்மி எண்கள் நீக்கப்பட்டு, மாணவர்களின் உண்மையான பதிவு எண்கள்படி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கும். அதற்கு பிறகே தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான பிரதிகள் தயாரிக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல் அச்சிடும் பணிகளும் தொடங்கும். அனைத்து பாடங்களின் விடைத்தாள்களை திருத்தி முடித்து, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளை முடிக்க 20 நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது. அதன் பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த ஆண்டு தேர்வு முடிவுகளை முன்னதாகவே வெளியிட தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. அதனால் மே 2வது வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிகிறது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைப்பு
பெட்ரோல் விலை மதிப்புக் கூட்டு வரி தவிர்த்து, லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்கப்படுகிறது. இந்த விலைக் குறைப்பு, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
தொடக்கக் கல்வி - தமிழ்நாடு அமைச்சுப் பணி - வயது முதிர்வு காரணமாக பணியிலிருந்து ஒய்வு பெறும் நாளிலிருந்து 3 மாதங்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களுக்கு அனுப்ப உத்தரவு.
TNPSC துறைத் தேர்வுகளுக்கான விண்ணப்பிக்க கடைசி தேதி 22.04.2013 வரை நீடித்து உத்தரவு.

TNPSC துறைத் தேர்வுகளுக்கான கடைசி தேதி 15.04.2013 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இது குறித்து கடந்த 2 நாட்களாக துறைத் தேர்வுகளுக்கான கடைசி தேதி மேலும் 7 நாட்கள் நீடிக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டிருந்த நிலையில் TNPSC இன்று அதிகாரபூர்வமாக 15.04.2013 நாள் முதல் மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்து உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் துறைத் தேர்விற்கு 22.04.2013 அன்று மாலை 5.45 மணி வரை விண்ணபித்துக் கொள்ளலாம்.   
அரசுக் கட்டுப்பாட்டில் அண்ணாமலைப் பல்கலை: மசோதா தாக்கல்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தை  அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பான மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த மசோதா சட்டமாக நிறைவேறினால் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அதிகாரங்கள் ரத்தாகும், என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகளில் தேங்கும் விடைத்தாள்கள்: ஏமாற்றும் தலைமை ஆசிரியர்கள் - நாளிதழ் செய்தி

பள்ளிகளில் சேரும் பழைய விடைத்தாள்களை, எடைக்கு போட்டு வரும் பணத்தை கணக்கில் கொண்டு வர,பெரியகுளம் கல்வி மாவட்ட நிர்வாகம் புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.
பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 30 அரசு மேல் நிலைப்பள்ளிகள், 40 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில் மாதாந்திர தேர்வு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடக்கிறது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பிற்கு தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது. ஏப்.,20 ல் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு முடிந்துவிடும். முழு ஆண்டு விடைத்தாள்களை தவிர, ஆண்டு தோறும் ஒவ்வொரு பள்ளியிலும் பழைய விடைத்தாள்கள், ஆயிரம் கிலோவுக்கு மேல் சேருகிறது.

மேல் நிலைப் பள்ளிகளில் ஏழு ஆயிரம் கிலோ வரை தேர்வு எழுதிய விடைத்தாள்கள் மற்றும் பழைய புத்தகங்கள் எடைக்கு போடப்படுகின்றன. இதில் கிடைக்கும் வருவாயை, பல தலைமை ஆசிரியர்கள், பள்ளி வளர்ச்சிக்காக பெற்றோர் ஆசிரியர் சங்கம் மேற்பார்வையில், வாலிபால், கூடைப் பந்து, டென்னிஸ், கிரிக்கெட் பேட் உட்பட விளையாட்டு உபகரணங்கள் வாங்குகின்றனர்.

சில தலைமை ஆசிரியர்கள் இதனை பின் பற்றுவதில்லை. பெற்றோர் ஆசிரியர்கள் சங்கத்திற்கு தெரியாமல், கிடைத்த முழுப் பணத்தையும் தங்களது சொந்த செலவிற்காக பயன்படுத்துகின்றனர். இதனை தடுப்பதற்கு விடைத்தாள் விற்பனையில் வெளிப்படை தன்மையை கடைப்பிடிக்க, பெரியகுளம் கல்வி மாவட்ட அலுவலக பணியாளர், தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் நிர்வாகிகள் முன்னிலையில், விடைத்தாள்களை விற்பனை செய்யலாம் என ஆலோசித்து வருகின்றனர்.
அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும் தொழிற்கல்வி பிரிவு கட்டாயம்

அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டு முதல் தொழிற்கல்வி பிரிவு கட்டயாமாக துவக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கணக்கு, அறிவியல், கணக்கு பதிவியல் உள்ளிட்ட குரூப் கட்டாயம் இருக்கும். ஆனால், மாவட்டத்தில் ஒரு சில பள்ளிகளில் தான், தொழிற்கல்வி எனப்படும்"ஒக்கேஷனல் குரூப்" இருக்கும்.

பிளஸ் 2 முடித்தவுடன், நேரடியாக வேலைக்கு செல்லும் வகையில், சுய தொழில் துவங்க தொழிற்கல்வி குரூப்பை அனைத்து பள்ளிகளிலும், கட்டாயம் துவக்க வேண்டும், என மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் இந்த குரூப்பில் படித்து,வேலை வாய்ப்பு பெறும் வகையில், நடைமுறை பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாடத்திட்டம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளிக்கும், புதிய கட்டடம் கட்டுவதற்கும் , தளவாட பொருட்கள் வாங்குவதற்காக, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக மின்னணு பொருட்கள் சரி பார்த்தல், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட 16 வகை பாடப்பிரிவுகள், ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பிரிவு துவக்கப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர்களுக்கு, சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மும்முரம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணி கடந்த, 10ம் தேதி துவங்கி வரும், 27ம் தேதி வரை நடக்கிறது.
அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர், பர்கூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, சூளகிரி, தளி, ஓசூர், கெலமங்கலம் ஆகிய பத்து ஒன்றியங்களிலும் கணக்கெடுப்பும் பணி நடக்கிறது.

வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் இந்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கணக்கெடுப்பில் கண்டறியப்படும் பள்ளி செல்லா குழந்தைகள் இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி முறையான அரசுப்பள்ளிகளில் எவ்வித நிபந்தனையின்றி (டி.சி., தேவையில்லை) வயதின் அடிப்படையில் வகுப்பில் சேர்க்கப்படவுள்ளனர்.

கணக்கெடுப்பில் கண்டறியப்படும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அரசுப்பள்ளி, பகல்நேர பராமரிப்பு மையம், சிறப்பு பள்ளி, வீட்டு கழி கற்றல் மற்றும் இணைப்பு பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்.

மத்தூர் வட்டார வளமையத்தில் கணக்கெடுக்கும் பணி வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகன் தலைமையில் நடந்தது. மத்தூர் கீழ் வீதியில் பள்ளி இடைநின்ற மீனா 12, சினேகா 9 ஆகிய இரு குழந்தைகள் கண்டறிப்பட்டு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு பணியில் மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்றுனர் அருண்குமார், ஆசிரிய பயிற்றுனர்கள் வசந்தி, பசுபதி, சாந்தி, பெருமாள், செண்பகவள்ளி, மத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியமேரி ஆகியோர் ஈடுபட்டனர்.
ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்: துணைவேந்தர்

ஆசிரியர் கல்வி பாடத்திட்டத்தில், விரைவில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான கருத்தாய்வுக் கூட்டம் ஏப்ரல் 17ல் துவங்குகிறது என தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் கூறினார்.
மதுரையில் நமது நிருபரிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில், ஆசிரியர் கல்வி பாடத் திட்டங்கள் 5 ஆண்டுகளுக்கு பின் மாற்றியமைக்கபடவுள்ளது. புதிய பாடத்திட்டங்கள், தற்கால கல்வி முறைக்கு ஏற்ப மாற்றப்படும். இதற்காக கல்வியாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் சென்னையில் ஏப்.,17 முதல் 19 வரை நடக்கிறது.

அடிப்படை வசதிகள் இல்லாத பி.எட்., கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதில், சில கல்லூரிகள் மட்டுமே பதில் அளித்துள்ளன. அனைத்து கல்லூரிகளும் பதில் அளித்தவுடன், என்ன வகையான நடவடிக்கை எடுப்பது குறித்து "சிண்டிகேட்" கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும், என்றார்.
உயர் கல்விக்கு ரூ.3,226 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் சம்பத் தகவல்

"தமிழக அரசின் சார்பில் உயர் கல்விக்காக 3,226 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என அமைச்சர் சம்பத் கூறினார்.
விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா மற்றும் மரக்கன்று நடும் விழா நேற்று தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் வரவேற்றார்.

கலெக்டர் கிர்லோஷ்குமார் தலைமை தாங்கி பேசுகையில், "உலக நடப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காகத்தான் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்கள் பயன்பெறுவதற்காக அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் 117 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இது தவிர அரசு பொறியியல் கல்லூரி ஒன்றும், தொழில்நுட்ப கல்லூரி 2ம், கலைக்கல்லூரி 3ம் உள்ளன. இதில் படிக்கின்ற மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்" என்றார்.

அமைச்சர் சம்பத் மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினி வழங்கிப் பேசுகையில், "முதல்வர் அறிவித்த திட்டத்தின்படி கடலூர் மாவட்டத்தில் இதுவரை 27 ஆயிரத்து 389 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. முதல்வர் தொலைநோக்கு பார்வையோடு தனிநபர் வருமானத்தை அதிகரிக்கவும், வறுமையை அறவே ஒழிக்கவும், தொழில் துறையில் முன்னேற்றமடையச் செய்யவும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார்.

நாடு வளர்ச்சி பெற வேண்டுமானால் மாணவர்களின் பங்குதான் அதிகம் என்பதால்தான் அவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. உயர் கல்விக்காக 3,226 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் திட்டக்குடியில் அரசு கலைக்கல்லூரி துவங்கப்படவுள்ளது" என்றார்.
மலை கிராமப் பள்ளியைப் புறக்கணிக்கும் ஆசிரியர்கள்: மாணவர்களின் எதிர்காலம் - Dinamalar

மலை கிராமத்தில் உள்ள பள்ளிக்கு ஆசிரியர்கள் வர மறுப்பதால், அங்குள்ள மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டத்தில் உள்ள மலை கிராமம் பெரியமலையூர். நத்தம்-செந்துறை சாலையில் உள்ள அய்யனார்புரம் பகுதியில் இறங்கி 7 கிலோ மீட்டர் தூரம் ஒத்தையடிப் பாதையில் நடந்து சென்றால், கரந்தமலையில் அமைந்துள்ள பெரியமலையூர் கிராமம் வருகிறது. இந்த கிராமத்துக்கு இரு சக்கர, 4 சக்கர வாகனங்களில் செல்ல முடியாது.
 இந்த கிராமத்தைச் சுற்றி, சிறியமலையூர், வலசை, பள்ளத்துக்காடு ஆகிய கிராமங்களும் உள்ளன. இந்த 4 கிராமங்களிலும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பெரியமலையூரில் மட்டும் சுமார் 1,200 பேர் வசிக்கின்றனர்.
 இந்தப் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு பெரியமலையூரில் ஓர் அரசுப் பள்ளியும், வலசை மற்றும் சிறியமலையூரில் தலா ஒரு தனியார் பள்ளியும் உள்ளன.
பெரியமலையூரில் இருப்பது அரசு நடுநிலைப் பள்ளி. நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி என்ற பெயரில் செயல்படும் இந்தப் பள்ளியில் சுமார் 115 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆனால், அவர்களுக்குக் கற்றுத் தர ஆசிரியர்கள்தான் வருவதில்லை என்பதே அங்குள்ள மக்களின் ஒட்டுமொத்தப் புகார்.
தரத்தில் நடுநிலைப் பள்ளியாக இருந்தாலும், அந்தப் பள்ளி ஒரே அறையில்தான் செயல்படுகிறது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும், அந்த அறையிலேயே அமர்ந்திருக்கின்றனர். பள்ளிக்கு ஒரு தலைமையாசிரியர் மற்றும் இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமையாசிரியராக இருக்கும் காந்திமதி பள்ளிக்கு வருவதேயில்லை என்றும், மற்ற ஆசிரியர்கள், தங்கள் விருப்பத்தின்பேரில், வாரத்தில் ஓரிரு நாள்களே வந்து செல்வர் என்றும், அப் பகுதியைச் சேர்ந்த ஜி.சின்ராசு, பி.முருகன், மு.சின்னன் ஆகியோர் தெரிவித்தனர். அந்த ஓரிரு நாளிலும் காலை 12 மணிக்கு பள்ளிக்குவரும் ஆசிரியர்கள், ஒருமணி நேரம் இருந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி விடுவர். அரசு ஊதியம் பெறும் இவர்கள், பள்ளியில் பாடம் நடத்துவதே கிடையாது என்றும் தெரிவித்தனர்.
பள்ளியைத் திறந்துவைத்து, மாணவர்களை அமைதியாக அமரவைக்கும் பொறுப்புக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த வே.நாச்சம்மா என்பவரை தலைமையாசிரியை காந்திமதி நியமித்துள்ளதாகவும், அதற்காக ரூ.2 ஆயிரம் வரை அவருக்கு ஊதியமாக ஆசிரியர்களால் வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
 இதுகுறித்து அந்தப் பகுதியின் ஊராட்சித் துணைத் தலைவர் என். தங்கராஜ் தெரிவித்தது:
 அரசிடம் ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மாதத்தில் 8 நாள்கள் (வாரத்தில் 2 நாள்) மட்டுமே பள்ளிக்கு வருகின்றனர். சாலை வசதி இல்லாததால், தங்களால் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்துவர முடிவதில்லை என்பதே அவர்கள் கூறும் காரணம்.
 எங்கள் பகுதியில் உள்ள குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டுமானால், 7 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று, அடிவாரத்தில் உள்ள பள்ளிகளில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் நடக்கச் சிரமப்படுவதால், நத்தம், செந்துறை, கோபால்பட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிகளின் விடுதியிலும் தங்கிப் படிக்க வேண்டிய நிலையும் உள்ளது என்றார்.
 தலைமையாசிரியரால் நியமிக்கப்பட்ட நாச்சம்மா கூறியது:
 ஆசிரியர்கள் வரும்வரை நான்தான் பள்ளியைத் பார்த்துக் கொள்வேன். இதற்கு ஊதியமாக ரூ.2 ஆயிரம் கிடைக்கும். தலைமையாசிரியராக காந்திமதி என்பவரும், சிவக்குமார், முருகேசன் ஆகிய இரு ஆசிரியர்களும் உள்ளனர் என அவர் தெரிவித்தார்.
 அங்குள்ள பொதுமக்கள் கூறும்போது, மலை கிராமத்தில் வந்து எந்த அதிகாரியும் சோதனை செய்ய மாட்டார் என்ற காரணத்தால், பெரும்பாலான நாள்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதே கிடையாது. நாங்கள்தாம் படிக்கவில்லை, எங்கள் பிள்ளைகளாவது படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால், தற்போது குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது என்றனர்.
 நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வியறிவு பெற வேண்டும் என்ற நோக்கில் மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் கோடிக் கணக்கில் கல்விக்காக நிதி ஒதுக்கீடுசெய்து, பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகின்றன. ஆனால், அந்த நோக்கம் இதுபோன்ற ஆசிரியர்களால் சிதைக்கப்படுகிறது.
 14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்பக் கூடாது, அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தும் அரசுகள், பள்ளிக்கு முறையாக வராத ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கிறது என அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களான சி.பழனி, பி.பாக்யராஜ், எஸ்.முருகன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
 இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பா.சுகுமார் தேவதாசிடம் கேட்டபோது: கிராமங்களில் உள்ள மாணவர்களும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே, அரசு பள்ளிகளைக் கட்டி, ஆசிரியர்களையும் நியமித்து வருகிறது. ஆனால், சாலை வசதி இல்லை எனக் கூறி, பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதற்கு எந்த ஆசிரியருக்கும் அனுமதி இல்லை.
 அதேபோல், அந்தந்த வட்டார உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்டோரும் இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள்தாம், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு ரகசியமாகச் சென்று, ஆசிரியர்கள் குறித்தும், பள்ளியின் தரம் குறித்தும் ஆய்வுகள் நடத்த வேண்டும்.
 பெரியமலையூர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களிடம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மூலம் விசாரணை நடத்தப்படும். பணிக்கு வராத நாள்களுக்கான ஊதியத்தைப் பிடித்தம்செய்து, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment