Monday, April 8, 2013

CCE GRADING SHEET WITH FORMULA FOR 

YEAR END RESULTS 2012-2013


           கல்வி ஆண்டின் முடிவில் மாணவர்களுக்கு தேர்ச்சி அறிக்கை தயார் செய்யவும் 

           உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் ஒப்புதல் பெறவும் தயார் செய்ய வேண்டிய படிவத்தை பெற இங்கே சொடுக்கவும்.  படிவத்தை முழுவதுமாக படிக்க இஸ்மாயில்மற்றும் வானவில் எழுத்துருக்களை பயன்படுத்தவும் 

 
அரசு பள்ளியில் "செஸ்' விளையாட்டு : தயார் நிலையில் சதுரங்க பலகைகள்

               தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில், சதுரங்கம் (செஸ்) பலகைகள் விரைவில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு மற்றும் உதவி பெறும் துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் அறிவுத்திறன், சிந்தனைத்திறன் தூண்டும் வகையில் மாணவர்களுக்கு "செஸ்' விளையாட்டு கற்றுத்தர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

                     இதற்காக, "செஸ்' போர்டுகள் வாங்க, தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி, 2012-13ம் கல்வியாண்டுக்கு தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும், 7 முதல், 17 வயது வரையுள்ள மாணவ, மாணவியருக்கு சதுரங்க (செஸ்) விளையாட்டுக்கான பலகைகள் வழங்குவதற்கு, 39.47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. "செஸ்' விளையாட்டு திட்டத்தை செயல்படுத்த கொள்முதல் குழு ஏற்படுத்தி ஆணை வெளியிடப்பட்டது. கொள்முதல் குழு தலைவராக, மாவட்ட கல்வி அலுவலரும், உறுப்பினர் செயலராக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரும், உறுப்பினர்களாக முதன்மை கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ.,) உடற்கல்வி இயக்குனர் நிலை-1 (மேல்நிலைப்பள்ளி), தலைமையிட மாவட்ட கல்வி அலுவலர், மண்டல உடற்கல்வி அலுவலர், மண்டல உடற்கல்வி ஆய்வாளர், தலைமையிட உதவி தொடக்கக்கல்வி அலுவலர், தலைமையிட பஞ்., யூனியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், தலைமையிட பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

             தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு இந்த, "செஸ்' போர்டுகள் விரைவில் வழங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள, 1,300க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு, வழங்குவதற்காக, 1,342 "செஸ்' போர்டுகள் கடந்த வாரம் வாங்கப்பட்டுள்ளன. இவை விரைவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட உள்ளன.

               "செஸ்' போர்டுகளுக்கு முகப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோ இடம் பெற்றுள்ளது. பள்ளி மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு வழங்கும், 14 வகையான நலத்திட்ட உதவிகள் குறித்த, "சக்கரம்' இடம் பெற்றுள்ளது.

ஆன்லைனில் "அப்ஜெக்டிவ் டைப்' தேர்வு : டி.என்.பி.எஸ்.சி., செயலர் தகவல்

              "அப்ஜெக்டிவ் டைப்' தேர்வுகளை ஆன்லைனில் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக,'' டி.என்.பி. எஸ்.சி., செயலர் விஜயகுமார் கூறினார். உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு "ஆன்லைன்' மூலம் இன்று நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மையங்களை ஆய்வு செய்ய, அருப்புக்கோட்டை சவுடாம்பிகா இன்ஜி., கல்லூரி வந்த அவர் கூறியதாவது: உதவி புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு நாளை (இன்று) 28 மையங்களில், ஆன்லைன் மூலம் நடக்கிறது. 

             10 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். சென்னை,மதுரை போன்ற மாநகரங்களில் நடந்த இத்தேர்வு , தற்போது மாவட்டங்களில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை மற்றும் சிவகாசியில் நடைபெற உள்ளது. இந்த தேர்வு முறையில், ஆன்லைனில் விடையளித்த அன்றே, மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். தேர்வு நேரமாக 3 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வுகளை ஒன்றரை மணி நேரத்திலே முடித்து விடலாம். மீதமுள்ள நேரத்தில் சரி பார்த்து கொள்ளலாம்.

                   இந்தியாவிலே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தான், அதிக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தேர்வு முறைகளும் வெளிப்படையாக உள்ளன. தேர்வு எழுதிய வினா மற்றும் விடைதாள் வெளியிடப்படுகிறது. அதற்கான "கீ ஆன்சர்' ரும் வெளியிடப்படுகிறது. விண்ணப்பதாரர் இதை சரிபார்த்து தவறு இருந்தால், 7 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். காலிபணியிடங்களை வைத்து தான்,தகுதி அடிப்படையில் கவுன்சிலிங் நடைபெறுகிறது.

                    எந்தவித முறை கேடு ஏற்பட வாய்ப்பு இல்லை. நகர்புற மாணவர்களுக்கு நிகராக கிராமபுற மாணவர்களும் டி.என்.பி.எஸ்.சி., மூலம் ,அதிகமாக தேர்வாகின்றனர். வரும் காலங்களில் "அப்ஜெக்டிவ் டைப்' உள்ள தேர்வுகளை ஆன்லைனில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன - அண்ணா பல்கலை

              வரும் கல்வி ஆண்டில், பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இம்மாதம், 22ம் தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளன. இதற்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. 


               பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி, மும்முரமாக நடந்து வருகின்றன. 8.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ள இந்த தேர்வின் முடிவுகள், மே இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக, மே 10ம் தேதி முதல், 15ம் தேதிக்குள் வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு மட்டும், வழக்கத்திற்கு மாறாக, மே 22ம் தேதி வெளியிடப்பட்டன. பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, எல்லாமே தள்ளிப்போயின.


             இந்த ஆண்டு அதுபோல் நடக்காது என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, மே 15ம் தேதிக்குள், தேர்வு முடிவை வெளியிட்டுவிடுவோம் என, துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு (ஏ.ஐ.சி.டி.இ.,), நாடு முழுவதும், ஆகஸ்ட் 1ம் தேதி, பொறியியல் வகுப்புகள் துவங்க வேண்டும் என, தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில், செப்டம்பர் முதல் தேதி தான், வகுப்புகள் துவங்குகின்றன. ஜூலை இறுதி வரை, கலந்தாய்வு நடப்பது தான், இதற்கு காரணம். ஏ.ஐ.சி.டி.இ., வழிகாட்டுதலின்படி, இந்த ஆண்டு, ஆகஸ்ட் 1ம் தேதியில், முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும், முன்கூட்டியே எடுக்கப்பட உள்ளன.


              2.5 லட்சம் விண்ணப்பங்கள் : கடந்த ஆண்டு, 2 லட்சத்து 28 ஆயிரத்து 964 விண்ணப்பங்கள், விற்பனை ஆகின. இந்த ஆண்டு, கூடுதலாக, 20 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை, தேவைப்படலாம் என, அண்ணா பல்கலை எதிர்பார்க்கிறது. எனவே, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சிடப்பட்டுள்ளன.


               அண்ணா பல்கலை வட்டாரம் கூறியதாவது: இம்மாதம், 22ம் தேதி முதல், விண்ணப்பங்களை வழங்க திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு முடிவு, ஒருசில நாட்கள், முன்னதாகவே வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், கால அவகாசம் கிடையாது. 22ம் தேதி முதல், மே 15 வரை வழங்கலாம் என, திட்டமிட்டுள்ளோம். எனினும், இந்த கால அட்டவணை, ஒரு சில நாட்கள் முன்னதாகவோ, சில நாட்கள் தள்ளிப்போகவோ நேரிடலாம். மாணவர்கள், விண்ணப்பங்கள் மூலமாகவும், "ஆன்-லைன்' மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.


                  இரண்டு லட்சம் இடங்கள் : கடந்த ஆண்டு, கலந்தாய்வு துவங்கிய நேரத்தில், 1.73 லட்சம் இடங்கள், கலந்தாய்வு ஒதுக்கீட்டில் இருந்தன. பின், 30க்கும் மேற்பட்ட புதிய கல்லூரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி கொடுத்ததன் காரணமாக, கலந்தாய்வு இடங்கள், மேலும் சிறிது அதிகரித்தன. எனினும், 1 லட்சத்து 20 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பின. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பவில்லை.


               இந்த ஆண்டு, 2 லட்சம் இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்ப கிடைக்கும் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. வழக்கம்போல், இந்த ஆண்டும், 50 ஆயிரம் இடங்கள் வரை, காலி ஏற்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. கலந்தாய்வு துவங்கியதும், முதலில், அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலையின் உறுப்பு கல்லூரிகளில் உள்ள இடங்கள் மள, மள என, நிரம்பி விடுகின்றன.


                   அதன்பின், சென்னையைச் சுற்றியுள்ள முன்னணி கல்லூரிகளைத் தான், மாணவர்கள் தேர்வு செய்கின்றனர். மாநிலத்தின் கடைகோடிகளில் உள்ள கல்லூரிகள், போதிய உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேலைவாய்ப்பு வசதிகள் இல்லாத கல்லூரிகளை, மாணவர்கள், சீண்டுவதில்லை. இந்த ஆண்டு, கணித தேர்வு, கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதனால், "சென்டம்' சரியவும் வாய்ப்பு இருப்பதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதால், "கட்-ஆப்' மதிப்பெண்களும், குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
பழங்குடியினருக்கு கல்வி அளிக்கும் கல்லூரி மாணவர்கள்

              இந்தியாவின் பழங்குடி இனங்களில் ஒன்று குறவர் இனம். குறவர்கள், தங்களது தனித் தன்மையான சில பழக்க வழக்கங்களால், சமுதாய நீரோட்டத்தில் கலந்தும் கலக்காமலும் உள்ளனர். அவர்களது நிலையை மாற்ற, கல்வியால் மட்டுமே முடியும் என்ற நோக்கில், குறவர் குடும்ப குழந்தைகளுக்கு, கல்வி பயிற்சி கொடுத்து வருகிறது.

              "ரீயூனிட் டூ ரீடிபைன் இந்தியா" (ஆர்.ஆர்.ஐ.,) என்ற தொண்டு நிறுவனம். அதன் செயலர் அகிலனிடம் உரையாடியதில் இருந்து...

கல்வி பயிற்சிக்கு குறவர்களை தேர்ந்து எடுத்ததன் பின்னணி என்ன?
 
             சுதந்திரம் அடைந்து, 66 ஆண்டுகள் ஆகியும், பல்வேறு சமூக மாற்றங்கள் வந்த போதிலும், தங்களது வாழ்க்கை முறையை மாற்றி கொள்ளாதவர்கள் குறவர்கள் மட்டுமே.தங்களது தொழிலுக்கு ஏற்ப இடம்பெயர்வதால், அவர்களின் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கே வாய்ப்பிருக்காது. அவர்களின் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற உந்துதலில், குறவர்களின் வாழ்விடங்களை கண்டறிந்து, முகாம்கள் நடத்தினோம்.

          இதற்காக, பல ஆண்டுகள் முயன்றும், ஒருங்கிணைக்க முடியவில்லை. திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூர் கிராமத்தில், அதிகளவு குறவர்கள் தங்குவதாக கேள்விப்பட்டு, கிராம தலைவரின் உதவியோடு, விழிப்புணர்வு முகாம் நடத்தினோம். அவர்களின், 65 குழந்தைகள் தற்போது பள்ளிக்கு செல்கின்றனர்.

எந்த விதத்தில் அவர்களின் ஒத்துழைப்பு இருந்தது?
 
              துவக்கத்தில், பெரும் சிரமமாக இருந்தது. குறவர்கள் இடம் பெயர்வதற்கு காரணமே, குடியிருக்க நிரந்தர இடமும், வருமானம் தரும் நிலையான தொழிலும் இல்லாதது தான். கிராம தலைவர் உதவியோடு, அந்த கிராமத்தில், 100 குடும்பங்கள் தங்க, அரசின் இலவச வீடுகள் கட்டி தரப்பட்டன. தோட்டம், கிராம வேலைகளில் ஈடுபடுத்தி வருமானத்தை ஏற்படுத்தி கொடுத்ததால், இடம் பெயரும் எண்ணத்தை கைவிட்டனர்.

                   குழந்தை வளர்ப்பு முறை, தன் சுத்தம் ஆகியவற்றை எடுத்து கூறினோம். நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தாலும், தொடர் முயற்சியால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஒத்துழைத்தனர்.கிராம பள்ளி தலைமையாசிரியர் உதவியோடு, 65 மாணவர்கள் படிக்கின்றனர். ஒரு கிராமத்தில் உள்ள, 100 குடும்பங்களில் கல்வியை கொண்டு வருவதற்கே, 3 ஆண்டுகளாகி விட்டன.

சிறப்பு வகுப்புகளின் அம்சங்கள்?
 
               எழுதக் கற்பித்தல், பின் எழுத்து கூட்டி வாசிப்பு, செய்தித் தாள் வாசிப்பு என, பல கட்டங்களாக கற்பித்தல் நடக்கிறது. ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு, ஆடியோ உதவியுடன் ஆங்கில வார்த்தை உச்சரிப்பு கற்று தரப்படுகிறது.எளிமையான ஆங்கில வார்த்தைகள், அவற்றின் பொருள் ஆகியவை கற்று கொடுக்கப்படுகின்றன. மாதந்தோறும் தேர்வு நடத்தி, பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, பல நாட்கள் அலுவலக விடுப்பு எடுத்து, தொடர்ச்சியாக மாணவர்களை ஒன்றிணைத்ததால், முயற்சிக்கு வெற்றி கிடைத்தது.

இந்த முயற்சிக்கான உந்துதல் என்ன?
 
           எங்கள் அமைப்பில், 10 பேர் மட்டுமே உறுப்பினர்கள். கல்லூரியில் படிக்கும் போதே, சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருந்தது. தற்போது ஒவ்வொரு துறையிலும் உள்ள, நண்பர்களின் உதவியோடு, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

 
              கடந்த, 2009ல் இந்த அமைப்பை துவக்கினோம். தற்போது சென்னை மட்டுமின்றி, கோவை, சேலம், டில்லி ஆகிய இடங்களிலும், எங்கள் அமைப்பு செயல்படுகிறது.குறவர் இனம் மட்டுமின்றி, ஏழை குழந்தைகளுக்கும் கல்வி கற்பிக்கும் முயற்சியில், இந்த அமைப்பை சேர்ந்த, 500 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், கல்லூரி மாணவர்கள் தான்.rrindia.org என்ற இணையதளத்தில் எங்கள் செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம்.

இயற்கை உணவும் நோயற்ற வாழ்வும்


பழங்களின் மருத்துவ குணங்கள்:-

1.செவ்வாழைப்பழம்: கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்

2.பச்சை வாழைப்பழம்: குளிர்ச்சியை கொடுக்கும்

3.ரஸ்தாளி வாழைப்பழம்: கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
4.பேயன் வாழைப்பழம்: வெப்பத்தைக் குறைக்கும்

5.கற்பூர வாழைப்பழம்: கண்ணிற்குக் குளிர்ச்சி

6.நேந்திர வாழைப்பழம்: இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்

7.ஆப்பிள் பழம்: வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது

8.நாவல் பழம்: நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்

9.திரட்சை: 1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்

10.மஞ்சள் வழைப்பழ: மலச்சிக்கலைப் போக்கும்

11.மாம்பழம்: மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்

12.கொய்யாப்பழம்: உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படுத்தும்.

13.பப்பாளி: மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.

14.செர்ரி திராட்சை: கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.

15. பேரீச்சம் பழம்: இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும். எலும்புகளை பலப்படுத்தும்.

ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்: ஏப்ரல் 19 வரை கோரிக்கைகளை அனுப்பலாம்


            சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கான குறைதீர் கூட்டம்  மே 15-ம் தேதி நடைபெற உள்ளது.
 
 
           இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விருப்பமுள்ள ஓய்வூதியதாரர்கள், தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை வரும் 19-ம் தேதிக்குள் அனுப்புமாறு  மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

         இது குறித்து மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

           ஓய்வூதியதாரர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவர்களுக்கான குறைதீர்க் கூட்டம் மே 15-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

                சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட  ஆட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 32, ராஜாஜி சாலை, சென்னை-1 என்ற முகவரிக்கு ஏப்ரல் 19ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

              ஓய்வூதியதாரர் பெயர், முகவரி, தொலைபேசி எண், ஓய்வு பெற்றபோது பணிபுரிந்த அலுவலகம், ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதிய புத்தக எண் உள்ளிட்ட  விவரங்களை கடிதத்தில் குறிப்பிட வேண்டும்.

200 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்: அண்ணா பல்கலை அதிரடி

            போதிய ஆசிரியர் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத, 200 பொறியியல் கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு, அண்ணா பல்கலை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
 
 
               பொறியியல் கல்லூரிகளில், போதிய மற்றும் தகுதியான ஆசிரியர்கள் உள்ளனரா, நல்ல உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா என்பதை கண்டறிய, அண்ணா பல்கலை, ஒரு குழுவை நியமித்தது. இக்குழு, 520 பொறியியல் கல்லூரிகளையும் ஆய்வு செய்ததில், 200 பொறியியல் கல்லூரிகளில், ஆசிரியர்கள் இல்லாததும், போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாததையும் கண்டறிந்தது.

            குழுவின் அறிக்கை அடிப்படையில், சம்பந்தபட்ட, 200 பொறியியல் கல்லூரிகளிடம், விளக்கம் கேட்டு, அண்ணா பல்கலை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை குறித்தும், கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லாதது குறித்தும், விளக்கம் அளிக்க வேண்டும் என, நோட்டீசில், பல்கலை கேட்டுக்கொண்டுள்ளது.

               ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு), பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு, குறைந்தபட்சம், மாதம், 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என, தெரிவித்துள்ளது. ஆனால், இதைவிட, பல கல்லூரிகள் குறைவான சம்பளம் வழங்குவதால், சம்பளம் அதிகம் கிடைக்கும் கல்வி நிறுவனங்களுக்கு, ஆசிரியர்கள் சென்று விடுகின்றனர்.

                மேலும், பலர், தனியார் நிறுவனங்களில் வேலையில் சேர்ந்து விடுகின்றனர். இதன் காரணமாக, பல பொறியியல் கல்லூரிகளில், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.

           அண்ணா பல்கலை வட்டாரம் கூறுகையில்,"நாங்கள் தெரிவித்துள்ள குறைகளை, உடனடியாக சரிசெய்யும் பணியில், கல்லூரி நிர்வாகங்கள் ஈடுபட வேண்டும்" என, தெரிவித்தன.

          மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்குவதற்கு முன், ஆசிரியர் பற்றாக்குறையை சரி செய்யவும், போதிய வசதிகளை ஏற்படுத்திவிடவும், கல்லூரி நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளன.

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு குளறுபடிகளை நீக்க என்ன வழி?

           பாதிப்புகளை சீர்செய்ய, அரசு பல நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், எதிர்காலத்தில், இதுபோல நடக்காமல் இருக்க, தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் வேண்டும் என, கல்வியாளர்கள் குரல் கொடுக்கின்றனர். அவர்களின் கருத்துக்கள் இதோ:
 
 
          அனந்த கிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலை: தேர்வு முறைகளில், சீர்திருத்தங்கள் கொண்டு வந்தால் தான், இதுபோன்ற குளறுபடிகளை முற்றிலும் களைய முடியும். தற்போது, பள்ளிக் கல்வித் துறையில், தேர்வுகளை நடத்த தனித் துறை உள்ளது. இத்துறையை, தனி தேர்வு ஆணையமாக மாற்றவேண்டும்.

             தேர்வு நடத்துவதற்கு, உரிய பயிற்சிகளை, ஆணையத்தின் அதிகாரிகள், ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும். அரசியல் கலப்பு இல்லாத, உயர்ந்த பட்ச ஆணையமாக, தேர்வு ஆணையம் இருக்க வேண்டும். தற்போதுள்ள, தேர்வு துறை அதிகாரிகளின் கவனக்குறைவு, அலட்சிய போக்குகள், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்குகிறது.

            பொதுத் தேர்வு என்பது, இன்றைய போட்டி உலகில், மிக முக்கியமான ஒன்று. இளைஞர்களின் எதிர்காலத்தை, நிர்ணயிக்கும் நிலையில், பொதுத் தேர்வுகள் அமைந்துள்ளன. கஷ்டப்பட்டு, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். மாணவர்களோடு, பெற்றோரும் சேர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

            இந்நிலையில், பொதுத் தேர்வுகளை மிகுந்த எச்சரிக்கையுடன் நடத்த வேண்டும். அதற்கு, தனி ஆணையம் மிக முக்கியமானது.மேலும், வினாத் தாள்கள் அமைப்பு முறை, விடை அளிக்கும் முறை ஆகியவற்றிலும் மாற்றங்கள் தேவை. இதோடு, விடைத் தாள் திருத்தும் முறையிலும் மாற்றங்கள் அவசியம். விடைகளை, ஓரிரு ஆசிரியர்களைக் கொண்டு தயார் செய்யாமல், பல ஆசிரியர்களிடம் விடைகளைப் பெற்று, பொதுவான விடைகளை உருவாக்க வேண்டும்.

              இவற்றை, மேலெழுந்தவாரியாக செய்யாமல், அடிப்படையிலிருந்து செய்யவேண்டும். ஆன்-லைன் போன்ற, நவீன தேர்வு முறைகளை நடத்தலாம் என, ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், அதற்கான வசதிகள் மற்றும் கணினி அறிவு, மாணவர்கள் மத்தியில் இல்லை.

              ஜெயபிரகாஷ் காந்தி, கல்வியாளர்: பொதுத்தேர்வு வினா தாள்கள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்ல, வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனங்களைப் போல சிறப்பு வாகனங்களை பயன்படுத்த வேண்டும். இதற்கு, போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

                  தபால் மூலம், வினா மற்றும் விடைத்தாள்கள் அனுப்புவதை முழுமையாக நிறுத்த வேண்டும். விடைத் தாள்களை, "ஸ்கேன்" செய்து, ஆசிரியர்களுக்கு அளித்து, திருத்தும் முறையை, அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்தது. ஆனால், இதற்கு கூடுதல் காலம் பிடிப்பதோடு, செலவும் அதிகரிக்கிறது. "ஸ்கேன்" செய்யும் விடைத் தாள்களை திருத்துவதிலும், ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால், இம்முறையை அண்ணா பல்கலைக் கழகம் கைவிட்டது.

            இந்நிலையில், இப்போதைக்கு, வினா மற்றும் விடைத் தாள்களை,  பாதுகாப்பாக கொண்டு செல்ல, சிறப்பு வாகனங்களை அமர்த்துவது தான், தேர்வுத்துறை முன் உள்ள, உடனடித் தீர்வு. காணாமல் போன, கிழிந்துபோன விடைத் தாள்களுக்காக, உடனடியாகத் தேர்வு நடத்த முடியாது.

                   ஒரு தேர்வு நடத்த, 21 நாள்களுக்கு முன், "நோட்டீஸ்" அளிக்க வேண்டும். எனவே, முதல் தாளின் மதிப்பெண்ணை இரண்டாம் தாளுக்கு அளிப்பதாக, அரசு எடுத்துள்ள முடிவை, தற்போதைக்கு வரவேற்று தான் ஆக வேண்டும். தேர்வு முறையில், நவீன முறைகளை அறிமுகம் செய்வதன் மூலம், இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படுத்த முடியும் என்கின்றனர்.

             ஆனால், "ஆம்", "இல்லை" போன்ற கேள்விகளுக்கும், "டிக்" செய்யும் கேள்விகளுக்கு வேண்டுமானால், ஆன்-லைனில் தேர்வு எழுத முடியும். கட்டுரைகள் போன்ற நீண்ட பதில்களை எழுதும் தேர்வுகளை, ஆன்-லைனில் எழுத முடியாது.

              இளங்கோவன், தலைவர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம்: பொதுத் தேர்வுகளில் நடந்து வரும் குளறுபடிகளுக்கு, முழுக்க முழுக்க கல்வித்துறை தான் காரணம். தேர்வு முறைகளில் நடக்கும் ஊழல்களால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. காணாமல் போன, கிழிந்து போன விடைத்தாள்களுக்கு, மற்றொரு தேர்வின் மதிப்பெண்ணை அளிப்பதாக, அரசு அறிவித்துள்ளது.

                  ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன், 10ம் வகுப்புத் தேர்வில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்றால், பிளஸ் 2 படிப்பை, அவர் எந்த பள்ளியில் படிக்க விரும்புகிறாரோ, அங்கு படிக்கலாம். கல்விச் செலவை அரசே ஏற்கிறது. இந்நிலையில், காணாமல் போன, கிழிந்துபோன விடைத் தாள்களால், தாழ்த்தப்பட்ட மாணவர் பாதிக்கப்பட்டால், யார் பொறுப்பேற்பது? தேர்வு மையங்கள் அமைப்பதில், பெரும் லஞ்சம் விளையாடுகிறது.

               தனியார் பள்ளிகளின் வசதிக்கேற்ப, பணம் பெற்றுக் கொண்டு, தேர்வு மையங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதில், அரசியல் தலையீடு மிக அதிகம். ஒரு மையத்தின் விடைத்தாளை, தபால் மூலம் அனுப்புவதால், பெரும் செலவு அரசுக்கு ஏற்படுகிறது. இத்தொகையில், தனி வாகனம் அமைத்து, ஒவ்வொரு மையத்திலிருந்தும், விடைத்தாள்களைத் திரட்டி, தமிழகத்தில், எந்த மூலையில் விடைத்தாள் திருத்தும்
மையம் அமைக்கப்பட்டாலும், கொண்டு செல்ல முடியும். பாதுகாப்பாகவும்
இருக்கும்.

              இந்நிலையில், தேர்வு முறையில் உள்ள, பழங்காலத்து நடைமுறைகளை மாற்றி, அடிப்படை சீர்திருத்தங்களை கொண்டு வரவேண்டும். தேர்வு மையங்கள் அமைப்பதில், கடும் விதிகளை பின்பற்ற வேண்டும். எம்.பி., - எம்.எல்.ஏ., உள்ளாட்சி தேர்தல்களை எப்படி நடத்துகிறார்களோ, அதுபோல, பொதுத்தேர்வுகளையும் நடத்த வேண்டும்.

              பிரின்ஸ் கஜேந்திர பாபு,பொது செயலர், பொது பள்ளிக்கான மாணவர் மேடை: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், விடைத் தாள்கள் காணாமல் போனது, கிழிந்து போனது ஆகிய காரணங்களுக்காக, ஒரு தேர்வின் மதிப்பெண்ணை, காணாமல் போன விடைத் தாளுக்கான தேர்வுக்கு அளிப்பதை ஏற்க முடியாது. மறு தேர்வு நடத்த, பள்ளிக் கல்வித் துறைக்கு இருக்கும் சோம்பேறித் தனத்தையே இது காட்டுகிறது.

             இலக்கியம் தொடர்பான பாடத்தில், ஒரு மாணவன் ஆர்வமுடன் இருப்பான். இலக்கணம் தொடர்பான பாடம் அவனுக்கு எட்டிக்காயாகக் கூட இருக்கலாம். இந்நிலையில், ஒரு தேர்வின் மதிப்பெண்ணைக் கொண்டு, அம்மாணவனுக்கு அடுத்த தேர்வுக்கு மதிப்பெண் வழங்குவது, மாணவனின் ஆர்வத்தை, சீர்குலைக்கும். மேலும், மோசடியாக தேர்வில் வெற்றி பெறவும் இது வழி வகுக்கும்.

               தேர்வில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது, அதுகுறித்து தெளிவான முடிவை எடுக்க, பள்ளிக் கல்வித் துறையில், ஆய்வுத் துறை ஒன்று அவசியமாகிது. இத்துறையை உடனடியாக, அரசு ஏற்படுத்த வேண்டும். மேலும், விடைத் தாள்களை தபால் மூலம் அனுப்புவதைக் கைவிட்டு, ஒவ்வொரு தேர்வு மையத்திலிருந்து, விடைத் தாளை சேகரித்து, விடைத்தாள் திருத்தும் மையத்துக்குக் கொண்டு செல்ல, பொறுப்பாளர் ஒருவரை, அரசு நியமிக்க வேண்டும்.

              இதன்மூலம், விடைத் தாளை பாதுகாப்பாக கையாள முடியும். தற்போது நடந்துள்ள குளறுபடிகளுக்கு, தேர்வு முறையில், நவீன முறையை புகுத்தலாம் என்றால், அதற்கான கட்டமைப்பு வசதிகள் பள்ளிகளில் இல்லை. குறிப்பாக, ஆன்-லைன் தேர்வை எழுத, மாணவர்களுக்கு, கணினி அறிவும் இல்லை. இந்த இரண்டையும், ஆரம்பக் கல்வி முதல் மாணவர்களுக்கு அளித்தால் மட்டுமே, தேர்வில் நவீன முறையை புகுத்த முடியும்.
 

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு சேர்க்கை நடக்குமா?


            இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில், தமிழக அரசு தீவிரம் காட்டியுள்ள நிலையில்,அரசின் முயற்சிக்கு எதிராக, தனியார் பள்ளிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
 
 
              "சட்டத்தின் படி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் இயங்கக் கூடாது. அதன்படி, 2,000 பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்க, முதலில் நடவடிக்கை எடுத்துவிட்டு, அதன்பின், இட ஒதுக்கீட்டு விவகாரத்திற்கு அரசு வரட்டும்" என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார், ஆவேசமாக தெரிவித்தார்.

           இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், ஏழை, எளிய, பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில், ஆரம்ப நிலை வகுப்பு சேர்க்கையில், 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

                இந்த இட ஒதுக்கீட்டில் சேரும் குழந்தைக்கான கல்வி கட்டணச் செலவை, அரசிடம் இருந்து, தனியார் பள்ளிகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டே, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், எந்த பள்ளிக்கும், அரசு, கல்வி கட்டணத்தை திருப்பித் தரவில்லை என, தனியார் பள்ளிகள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

              இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், 25 சதவீத இட ஒதுக்கீட்டை, முழுமையான அளவில் அமல்படுத்த, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தலைமையில், கண்காணிப்பு குழுவை அமைத்து, ஒட்டுமொத்த செயல்பாடுகளையும், அதிகாரிகள் கண்காணிக்கவும், அரசு உத்தரவிட்டு உள்ளது.

            25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நடக்கும் மாணவர் சேர்க்கைப் பணிகளை, மே, 3ம் தேதி ஆரம்பித்து, 20ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அரசின், இந்த நடவடிக்கைக்கு, தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள், எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

                   இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது: ஆர்.டி.இ., சட்டத்தின்படி, கடந்த ஆண்டே, தனியார் பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், அதற்கான கட்டணத்தை, ஒரு பைசாவைக் கூட, தமிழக அரசு திரும்பத் தரவில்லை.

           இந்நிலையில், வரும் கல்வி ஆண்டிலும், 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், மாணவர் சேர்க்கையை நடத்திட, பல்வேறு கடுமையான உத்தரவுகளை, அரசு பிறப்பித்துள்ளது. ஆர்.டி.இ., (கல்வி உரிமை சட்டம்) சட்டத்தின்படி, அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் இயங்கக் கூடாது.

              ஆனால், இட பிரச்னைகள் காரணமாக, 1,000 பள்ளிகளும், வேறு காரணங்களுக்காக, 1,000 பள்ளிகளும், அங்கீகாரம் இல்லாமல் இயங்குகின்றன. இந்த பிரச்னையை தீர்ப்பதற்கும், அங்கீகாரம் கொடுப்பதற்கும், முதலில், அரசு நடவடிக்கை எடுத்துவிட்டு, அதன்பின், இட ஒதுக்கீட்டின் கீழ், சேர்க்கை நடத்தும் விவகாரத்திற்கு வர வேண்டும்.

              பள்ளிகளுக்கு அங்கீகாரத்தை கொடுக்காமல், அந்த பள்ளிகளில், ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கையை மட்டும் நடத்தலாமா? மேலும், ஆறு வயது முதல், 14 வயது வரை உள்ளவர்கள் தான், இந்த சட்டத்தின் கீழ் வருகின்றனர். அதன்படி, எல்.கே.ஜி., வகுப்பு, இந்த சட்டத்தின் கீழ் வராது. இதை, டில்லி ஐகோர்ட்டும் தெரிவித்துள்ளது. ஆனால், எல்.கே.ஜி., சேர்க்கையில், இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, கூறுவதை ஏற்க முடியாது. இவ்வாறு நந்தகுமார் கூறினார்.

                இதனால், அரசின் முயற்சிக்கு, தனியார் பள்ளிகள் தரப்பில், எந்த அளவிற்கு ஒத்துழைப்பு கிடைக்கும் என்பது, கேள்விக்குறியாக உள்ளது.

"குரூப் - 4" சான்று சரிபார்ப்பு


No comments:

Post a Comment