தமிழ், ஆங்கில திறமையை சோதிக்க தேர்வு
மாணவன் தேர்ச்சி பெறாவிட்டால் ஆசிரியருக்கு ஊதிய உயர்வு ரத்து- தினகரன் நாளிதழ் செய்தி
மாணவனுக்கு தமிழ், ஆங்கிலப்புலமை இல்லையென்றால் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் அதிகபட்ச தண்டனையாக ஆசிரியர்களின் ஊதிய உயர்வு ரத்து செய்யப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் ஏராளமான ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், வேலை கிடைத்த ஆசிரியர்களின் நிலைமை அதைவிட பரிதாபமாக உள்ளது. கல்வி தரத்தை உயர்த்தும் எண்ணத்தில் அரசு எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியதுதான். ஆனால், அரசு பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் கல்வியை தரம் உயர்த்த முயல் வது இயலாத காரியம் என்கின்றனர் கல்வியாளர்கள்.
இந்த கோடை விடுமுறையையாவது சந்தோஷமாக கழிக்கலாம் என்று கருதிய ஆசிரியர்களுக்கு கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, வரும் 2013,14ம் கல்வி ஆண்டில் ‘பேஸ் லைன் சர்வே’ என்ற கணக்கெடுப்பை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இது 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே நடத்தப்படவுள்ளது.
மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் வாசிக்கும் திறன், கணக்கு பாடத்தில் கூட்டல், கழித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அடங்கிய தேர்வு, கல்வி ஆண்டின் தொடக்கத்தில் வைக்கப்படவுள்ளது. இதில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு கற்று கொடுத்த ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரித்துள்ளது. அதிகபட்ச தண்டனையாக ஆசிரியர்களின் ஊதிய உயர்விலும் ‘கை’ வைக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை வரும் கல்வி ஆண்டில் அதிகரிக்க, கல்வித்துறையில் அரசு செய்து வரும் இலவச சீருடை, நோட்டு புத்தகம் உள்ளிட்ட நலத்திட்டங்களை பெற்றோரிடம் கூற வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு சுத்தமாக வர வேண்டும். அப்படி வரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஆசிரியர், பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்வித்துறையின் இந்த அறிவிப்பு ஒட்டு மொத்த தலைமை ஆசிரியர்களையும். ஆசிரியர்களையும் கதி கலங்க வைத்துள்ளது. இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் கல்வித்துறை உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அறிவிப்புகளை தற்போது, மாவட்ட வாரியாக கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment