"இணையதள தகவல்களை நம்பி, வெளிநாடுகளில் படிக்க செல்ல கூடாது" என, வெளிநாட்டு படிப்புக்கான மையம் நடத்தும் பால் செல்லக்குமார் கூறினார்.
சென்னையில் நேற்று நடந்த தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், "வெளிநாட்டில் மேற்படிப்புக்கான சாதக, பாதகங்கள்" குறித்து அவர் பேசியதாவது:
கடந்த 1970ல், 10 சதவீதம் மாணவர்கள், சொந்த செலவில் வெளிநாட்டு சென்று கல்வி கற்றனர். தற்போது, 90 சதவீதம் மாணவர்கள் சொந்த செலவிலும், 10 சதவீதம் பேர் வங்கி கடனில், படிக்க செல்கின்றனர். வெளிநாட்டு சென்று கல்வி கற்கும் மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும், இரண்டு லட்சம் பேர், உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்றனர்.
சீனாவுக்கு அடுத்து, இந்தியர்கள் தான் அதிகமாக, வெளிநாடு சென்று படிக்கின்றனர். வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் மோசமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. வெளிநாட்டு சென்று படிக்கும் மாணவர்கள், பல்கலைக்கழகங்களை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் படித்தால் மட்டுமே, 100 சதவீத வேலை கிடைக்கும்.
வெளிநாட்டு பல்கலைக்கழகம் குறித்து, இணையதளங்களில் தரும் தகவல்களை நம்பி, வெளிநாடு செல்ல கூடாது. பல்கலைக்கழகம் குறித்து முழுவதும் விசாரித்து விட்டு செல்ல வேண்டும்.
ஐ.ஏ.எஸ்., தேர்வை, 5 லட்சம் பேர் எழுதி, 2 சதவீதம் பேர், மெயின் தேர்வுக்கு செல்கின்றனர். ஐ.ஐ.டி.,யில், 4.50 லட்சம் பேர் எழுதி, 2 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுகின்றனர். ஐ.ஐ.எம்.,ல் 2 லட்சம் பேர் எழுதி, 1.5 சதவீதம் மாணவர்களே தேர்ச்சி பெறுகின்றனர்.
ஜப்பானில், 4,000 பல்கலைக்கழகமும், அமெரிக்காவில் 3,700 பல்கலைகழகமும், சீனாவில் 2,500 பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஆனால், இந்தியாவில் 560 பல்கலைகளே உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தகுதியான பல்கலைக்கழகங்கள் இல்லை.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில், இளங்கலை பட்டம் படிக்க, 15 லட்சம் வரையும், முதுகலை பட்டம் படிக்க, 40 லட்சம் ரூபாய் வரையும் செலவாகிறது. பிரான்ஸ், ஹங்கேரி பான்ற நாடுகளில், கல்விக் கட்டணங்கள் குறைவு. இவ்வாறு, பால் செல்வக்குமார் பேசினார்.
"பயோ டெக்னாலஜி மற்றும் பயோ இன்ஜினியரிங்" படிப்புகள் குறித்து, டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை, பயோ டெக்னாலஜி துறை தலைவர் ரமா வைத்தியநாதன் பேசியதாவது:
உயிரிலையும், தொழில்நுட்பத்தையும் இணைந்து செயல்படும் அறிவியலின் பிரிவே பயோ டெக்னாலஜி. செல்களையும், பாக்டீரியாக்களைவும் தொழில் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த பயோ டெக்னாலஜி உதவுகிறது. மரபியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, இம்யூனாலஜி, வைராலஜி, வேதியியல், பொறியியல் போன்ற பல தரப்பட்ட பாடங்கள் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளாக இத்துறை அபரிமிதமான வளர்ச்சி பெற்று வருகிறது. பயோ டெக்னாலஜி ஆராய்ச்சியில், இந்தியா 12வது இடத்தில் உள்ளது. வேதியியல், டெக்ஸ்டைல்ஸ், லெதர், மருத்துவம், பொறியியல், உணவு பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளுக்கு அடிப்படையாக பயோ டெக்னாலாஜி உள்ளது. இவ்வாறு, ரமா வைத்தியநாதன் பேசினார்.
கப்பல் படிப்பில் சாதிக்கலாம்:
கடல்சார் அறிவியல் படிப்பில் வாய்ப்புகள் குறித்து, நரசய்யா பேசியதாவது: ஒரு நாட்டின் பொருளாதாரம், அந்நாட்டின் வணிகத்தை பொறுத்துள்ளது. வணிகம் செய்ய, கடல் வழி போக்குவரத்து சிறப்பானது. சேரர், சோழர், பாண்டியர் வாழ்ந்த காலத்தில், தமிழகம் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கியது.
இந்தியாவின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக, கடல் வணிகம் உள்ளது. அயல்நாட்டு கப்பல் நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலானோர், இந்தியர்கள். கப்பல் படிப்புக்கு, தனிச் சிறப்பு உண்டு. கப்பல் படிப்பில், கடின உழைப்பை செலுத்தினால், அதிக சம்பளம் பெறலாம். சர்வதேச அளவில், கப்பல் வணிகத்தில், சிறப்பாக செயல்படும் முதல், 20 நாடுகளில், இந்தியாவும் ஒன்று.
இந்தியாவில், கப்பல் படிப்புக்கான தேர்வு, அரசால் நடத்தப்படுகிறது. இதில், தேர்ச்சி பெற்றால், உலகில் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம். கப்பல் கடலில் இருக்கும் போது, பெறும் வருமானத்திற்கு, வருமான வரி கிடையாது. அரசு நிறுவனத்தில் கப்பல் படிப்பில், பெண்கள் சேர்ந்தால், அவர்கள் பாதி கட்டணம் செலுத்தினால் போதும்.
சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில்நுட்பம், கப்பல் படிப்பில் மட்டும் உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.
அனிமேஷன் துறையில் இந்தியாவுக்கு 2ம் இடம்:
அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் துறையின் வாய்ப்பு குறித்து, வல்லுநர் வரன் பேசியதாவது: அனிமேஷன் என்றால் சினிமா சார்ந்தது என, பலர் நினைக்கின்றனர். இது, தவறு. பன்முக துறைகளில், அனிமேஷன் வளர்ச்சிகண்டு வருகிறது. தற்போது, பள்ளி, கல்லூரி கல்வி முறையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கானொலி காட்சி மூலம் பாடம் சொல்லி கொடுக்கப்படுகிறது.
சென்ற நிதியாண்டில், அனிமேஷன் துறை, 18 சதவீதம் வளர்ச்சிகண்டுள்ளது. உலகில், அதிக அனிமேஷன் நிறுவனங்களை கொண்ட பட்டியில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில், இந்தியா உள்ளது. நம் நாட்டின் அனிமேஷன் துறையில், செலவு குறைவாகவும், தரமாகவும் உள்ளதால், ஹாலிவுட் சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அன்னிய நிறுவனங்கள் அவற்றின், நேரடி கிளைகளை இந்தியாவில் திறக்கின்றன.
அனிமேஷன் துறையை பொருத்தவரை மதிப்பெண் அவசியமல்ல. படைப்பாற்றல், சிந்திக்கும் திறன் மட்டும் இருந்தால் போதும், இதில் சாதிக்கலாம்.
No comments:
Post a Comment