Thursday, February 14, 2013பிளஸ் 2 செய்முறை தேர்வு மையங்களில் மின்தடைக்கு விலக்கு


      பிளஸ் 2 மாணவர்களுக்கு எழுத்து தேர்வுகள் மார்ச் 1ல் துவங்குகிறது. முன்னதாக, அறிவியல், கணக்கு பதிவியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கான செய்முறை தேர்வு பிப்.,1 ல் துவங்கியது. தற்போது நடக்கும் செய்முறை தேர்வில், இயற்பியல் பாடத்தில் அளவீடுகளை குறிக்கவும், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திற்கும் மின்சாரம் அவசியம்.

         எனவே, செய்முறை தேர்வு நடக்கும் மையங்களில், தடையில்லா மின்சாரத்திற்கு ஏற்பாடு அரசு செய்து தர வேண்டும் என, தினமலர் (பிப்.,5) நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, செய்முறை தேர்வுகள் நடக்கும் பள்ளிகள் உள்ள பகுதியில், காலை 9.30 முதல் 12.30 மணி வரையும், மதியம் 1.30 முதல் மாலை 4.30 மணி வரையும் தடையின்றி மின்சாரம் சப்ளை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

        இதே நிலை எழுத்து தேர்வின் போதும் இருக்க வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பு.

அனைத்து அரசு பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என, கல்வியாளர்கள் கோரிக்கை


      "தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு பள்ளிகளிலும், கட்டாய கல்வி சட்டத்தில் உள்ளபடி, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     கடந்த, 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் 2011ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்வி சட்ட விதிகளை அமல்படுத்துவதை கண்காணித்து, மேம்படுத்துவதற்கான உத்திகள் குறித்த

      கலந்துரையாடல் நிகழ்ச்சியில், எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் நடந்தது. இதில் கல்வியாளர்கள் கூறியதாவது:

     ராஜகோபால் - கல்வியாளர்: தமிழகத்தில், கல்வி உரிமை சட்டத்தின் படி, அனைத்தும் சட்டபூர்வமாக நடக்கிறதா என்பதை, அனைவரும் ஒன்று சேர்ந்து கண்காணிக்க வேண்டும். சட்டத்தின் படி, பள்ளிகளில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறதா என்பதை அறிய தனிக்குழு அமைக்க வேண்டும்.

       அவ்வாறு குழந்தை கல்வியின் மீது ஆர்வம் கொண்டிருப்பவர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டால், எந்தெந்த பள்ளிகளில் என்னென்ன அடிப்படை வசதிகள், பூர்த்தி செய்யப்படவில்லை என்பதை அறிய முடியும். அரசும், எந்தெந்த பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதை அறிந்து, வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

நாராயணன் - ஆசிரியர், பாடம் இதழ்: தமிழகத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில், அடிப்படை வசதிகள் இல்லாததாலும், காப்பாளர்கள் சரி வர செயல்படாததாலும், அங்கு சேரும் குழந்தைகள் மேலும், குற்றவாளிகளாக மாறுகின்றனர்.

         குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில், பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதால், குழந்தைகளின் முன்னேற்றத்தில் அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை.

புகழ்வாய்ந்த இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்

     இந்தியாவின் மறைந்த பிரபல தொழிலதிபர் ஜே.என்.டாடாவின் எண்ணத்தில் உதித்ததுதான் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் எனப்படும் ஐஐஎஸ்சி.
கடந்த 1896ம் ஆண்டே இந்நிறுவனத்தை துவங்குவதற்கான அடிப்படைகள் உருவாகிவிட்டாலும், முழுமையாக செயல்படுவதற்குரிய அரசின் சட்டம் 1909ம் ஆண்டுதான் வெளியானது. ஆனால், 1904ம் ஆண்டே, ஜே.என்.டாடா இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

     அரசு - தனியார் பங்களிப்பின் வெற்றிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த ஐஐஎஸ்சி திகழ்கிறது. இன்றைய நிலையில், இக்கல்வி நிறுவனம், ஒரு சிறந்த அரசுத்துறை, நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

     பெங்களூரின் ஒரு முக்கிய இடத்தில், 400 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கல்வி நிறுவனம்அமைந்துள்ளது. இந்த நிலமானது, கடந்த 1907ம் ஆண்டு, மைசூர் மகாராஜாவால் நன்கொடையாக அளிக்கப்பட்டதாகும். பெங்களூருக்கு சுற்றுலா செல்பவர்கள் பார்க்க விரும்பும் முக்கிய இடங்களில் ஒன்றாக இந்த IISc -ம் திகழ்கிறது.
துவக்கத்தில், இரண்டே இரண்டு துறைகளுடன்தான் இந்தக் கல்வி நிறுவனம் செயல்படத் துவங்கியது. ஜெனரல் மற்றும் அப்ளைடு கெமிஸ்ட்ரி மற்றும் எலக்ட்ரோ-டெக்னாலஜி போன்றவையே அத்துறைகள். இந்நிறுவனத்தின் முதல் இயக்குநராக மோரிஸ் W டிராவர்ஸ் இருந்தார். இன்றைக்கு, கம்பீரமாகவும், அழகாகவும் உயர்ந்து நிற்கும் கட்டடத்தை அவர்தான் கட்டத் தொடங்கினார்.
          
        ஆர்கானிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோகெமிஸ்ட்ரி போன்றவை, இக்கல்வி நிறுவனத்தில் தொடக்க காலத்தில் உருவாக்கப்பட்ட கல்வித் துறைகளாகும். கடந்த 1933ம் ஆண்டு இயற்பியல் துறை உருவாக்கப்பட்டது. இக்கல்வி நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி வகித்த முதல் இந்தியர் சர்.சி.வி.ராமன்.

முக்கிய நிர்வாகப் பதவிகள்
VISITOR
PRESIDENT OF THE COURT
CHAIRMAN OF THE COUNCIL
DIRECTOR
ASSOCIATE DIRECTOR
போன்றவை, இக்கல்வி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகப் பதவிகள். இதில், விசிட்டர் பதவியில், நாட்டின் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இருக்கிறார். கோர்ட் பிரசிடென்ட் பதவியில் ரத்தன் டாடாவும், கவுன்சில் சேர்மன் பதவியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கனும் இருக்கிறார்கள்.

சிறப்பான நூலகம்
இக்கல்வி நிறுவன நூலகமானது, கடந்த 1911ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. நாட்டின், சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நூலகமாக இந்த நூலகம் திகழ்கிறது. மேலும், முக்கிய நூலகம் தவிர்த்து, ஒவ்வொரு துறைக்கும் தனி நூலகங்கள் இருக்கின்றன.
கடந்த 1995ம் ஆண்டு, இக்கல்வி நிறுவன நூலகமானது ஜே.ஆர்.டி.டாட்டா நினைவு நூலகம் என்று பெயர் மாற்றப்பட்டது. உயர்நிலை கணிதத்திற்கான தேசிய வாரியம், இந்த நூலகத்தை, தென் மண்டலத்தில், கணிதத்திற்கான ஒரு பிராந்திய மையமாக அங்கீகரித்துள்ளது.

இக்கல்வி நிறுவனத்திலுள்ள துறைகள்
* பயாலஜிகல் சயின்சஸ் என்ற பிரிவில், மொத்தம் 7 துறைகள் உள்ளன.
* கெமிக்கல் சயின்சஸ் என்ற பிரிவில், மொத்தம் 5 துறைகள் உள்ளன.
* எலக்ட்ரிகல் சயின்சஸ் என்ற பிரிவில், 4 துறைகள் உள்ளன.
* மேதமேடிகல் மற்றும் பிசிகல் சயின்சஸ் என்ற பிரிவில், மொத்தம் 8 துறைகள் உள்ளன.
* மெக்கானிக்கல் சயின்சஸ் என்ற பிரிவில், மொத்தம் 10 துறைகள் உள்ளன.
* இவைத்தவிர, இயக்குநரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ், இயங்கக்கூடிய 11 மையங்கள் உள்ளன.
இவை அனைத்தையும் பற்றி விரிவாக அறிந்துகொள்ள http://www.iisc.ernet.in/academics/departments.php என்ற வலைத்தளம் செல்க.

வழங்கப்படும் படிப்புகள்
அறிவியல் படிப்புகள்
உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழல் அறிவியல், மெட்டீரியல்ஸ், கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய பிரிவுகளில், பி.எஸ்., படிப்புகள் வழங்கப்படுகின்றன.
மானுடவியல் படிப்புகள்
இளநிலை அளவில், மானுடவியல் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இலக்கியம், இசை, விசூவல் ஆர்ட்ஸ் மற்றும் தியேட்டர் உள்ளிட்ட பல அம்சங்கள் இப்படிப்பில் இடம்பெறுகின்றன.
இளநிலைப் படிப்புகளைப் பற்றிய விரிவான தகவல்களுக்கு http://www.iisc.ernet.in/ug/ என்ற வலைத்தளம் செல்க.

கோர்ஸ் ப்ரோகிராம்கள்
இக்கல்வி நிறுவனத்தில், எம்.இ., எம்.டெக்., மற்றும் எம்.டெஸ்., மற்றும் மேலாண்மை போன்ற படிப்புகள், கோர்ஸ் ப்ரோகிராம் என்ற வகையின்கீழ் வழங்கப்படுகின்றன.

ஆராய்ச்சிப் படிப்புகள்
Ph.D
Integrated Ph.D
M.Sc (Engg.)
External Registration Program
போன்றவை வழங்கப்படுகின்றன.

மாணவர் சேர்க்கை
இக்கல்வி நிறுவனம் வழங்கும் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, பல விதிமுறைகள் மற்றும் தகுதி நிலைகள் உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ள,http://www.iisc.ernet.in/academics/departments.php and http://www.iisc.ernet.in/students-corner/adv2013.htm என்ற வலைத்தளங்கள் செல்லவும்.
மற்றபடி, இந்த இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் அனைத்து அம்சங்கள் பற்றியும் விரிவாக அறிந்துகொள்ள http://www.iisc.ernet.in/index.php என்ற இணையதளம் பயனளிக்கும்.

மேற்குவங்கத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்: எஸ்.ஐ. பலி - Dinamalar

      மேற்குவங்கத்தில், கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் தொடர்பான பிரச்னையில், திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் மாணவர்களுக்கு இடையே, நேற்று பயங்கர மோதல் வெடித்தது.

         இரு தரப்பினரும், துப்பாக்கி, வெடிகுண்டுகளை சரமாரியாக பயன்படுத்தினர். மாணவர்கள் வெறித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில், எஸ்.ஐ., ஒருவர் பலியானார்.

        கோல்கட்டாவின் ஹரி மோகன் கோஷ் கல்லூரியில், மாணவர் பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் படிவங்கள் நேற்று வழங்கப்பட்டன. போட்டியிட விரும்பிய திரிணமுல் காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சியான காங்கிரஸ் கட்சிகளின் மாணவ உறுப்பினர்கள், நேற்று பயங்கரமாக மோதினர்.

       கல்லூரி வளாகத்தை, போர்க்களமாக மாற்றிய அவர்கள், பரஸ்பரம், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும், பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும், கற்களையும், கையில் கிடைத்த பொருட்களையும் வீசி தாக்கி கொண்டனர்.சண்டையிடும் மாணவர்களை தடுக்கச் சென்ற, கோல்கட்டா போலீசார், தாக்குதலுக்கு ஆளாகினர்.

         மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், தபஸ் சவுத்ரி என்ற எஸ்.ஐ., குண்டு காயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். அதிர்ச்சி அடைந்த போலீசார், இருதரப்பு மாணவர்களையும் சரமாரியாக தாக்கி, ஒருவழியாக, அவர்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

டான்செட் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

         அண்ணா பல்கலை, இந்த கல்வியாண்டுக்கான "தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு(டான்செட்)" தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

     இத்தேர்வு, எம்.பி.ஏ/எம்.சி.ஏ/எம்.இ/எம்.டெக்/எம்.ஆர்க்/எம்.பிளான்., போன்ற தொழிற் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலை, அதன் அங்கீகாரம் பெற்ற இன்ஜினியரிங் கல்லூரிகள், அரசு மற்றும் உதவிபெறும் இன்ஜினியரிங், கலை அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் போன்றவற்றில், இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

கல்வித் தகுதி: எம்.பி.ஏ., படிப்பிற்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில், பிளஸ் 2விற்கு பின், மூன்றாண்டு பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.சி.ஏ., படிப்பிற்கு, பிளஸ் 2, பட்டப் படிப்பில் கணிதத்தை ஒரு பாடமாக பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

        மற்ற படிப்புகளுக்கு சம்பந்தப்பட்ட படிப்புகளில் 50 சதவீத மதிப்பெண்களோடு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வகுப்பு வாரி அடிப்படையில், 5 சதவீத மதிப்பெண்கள் தளர்வு உண்டு. மேலும் கல்வித்தகுதிகள் பற்றி அறிய http://www.annauniv.edu/tancet2013/eligibility.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

         அனைத்து படிப்புகளுக்கும் விண்ணப்பக்கட்டணமாக (எஸ்.சி/எஸ்.டி., 250, மற்றவர்  500 ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள், தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

          விருப்பமுள்ளவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ்களின் நகல், டிடி போன்றவற்றுடன் பல்கலையின் ரிஜிஸ்ட்ரேஷன் மையத்திற்கு பிப்.,26க்குள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது http://www.annauniv.edu/tancet2013/ என்ற பல்கலை இணையதள முகவரியில் உள்ள படிவத்தை டவுண்லோடு செய்து, பூர்த்தி செய்த படிவத்தை பிரின்ட் அவுட் செய்து, டிடி மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களை இணைத்து, பல்கலை முகவரிக்கு பிப்.,28க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

           எம்.பி.ஏ., படிப்பிற்கு ஏப்., 06 அன்று காலையும், எம்.சி.ஏ., படிப்பிற்கு ஏப்., 06 அன்று மாலையும், மற்ற படிப்புகளுக்கு ஏப்.,07 அன்று காலையும் தேர்வு நடைபெறும்.

பல்கலைகளில் வருகிறது கவுன்சிலிங்

        வரும் கல்வியாண்டு முதல் எம்.ஏ/ எம்.எஸ்சி., போன்ற முதுகலை பட்டப் படிப்புகளுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

     தமிழகத்தில் 11 பல்கலைகள் உள்ளன. இவற்றில் 62 அரசு கல்லுõரிகள், 132 உதவி பெறும் கல்லுõரிகள், 500க்கும் மேற்பட்ட சுயநிதி கல்லுõரிகள், இணைப்பு பெற்று செயல்பட்டு வருகின்றன. மருத்துவம், பொறியியல் படிப்புகள் ஒரே பல்கலைகளின் கீழ் இணைப்பு பெற்றுள்ளதால் மாணவர் சேர்க்கை மாநில அளவில் ஒரே கவுன்சிலிங் மூலம் நடத்தப்படுகிறது.

        அது போன்று எம்.ஏ/எம்.எஸ்சி., போன்ற முதுகலை பட்டப் படிப்புகளுக்கும் பல்கலை அளவில் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக, அனைத்து பல்கலைகளின் துணைவேந்தர்கள் கலந்து கொண்ட உயர்கல்வி மன்ற கூட்டம் நடந்தது.

         இதுகுறித்து அக்கூட்டத்தின் துணைத்தலைவர் சந்தியா பாண்டியன் கூறுகையில், கலைஅறிவியல் கல்லுõரிகளில் உள்ள எம்.ஏ/எம்.எஸ்சி., போன்ற முதுகலை படிப்புகளுக்கு அக்கல்லுõரி இடம்பெற்ற பல்கலையில் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

          தொடர்ந்து பி.ஏ/பி.எஸ்சி., போன்ற இளங்கலை படிப்புகளுக்களுக்கும் பல்கலை அளவில் கவுன்சிலிங் நடத்தி, மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையை தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் அரசுக்கு அனுப்பி உள்ளது. இப்புதியமுறை வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்றார்.

உத்தரப் பிரதேசத்திலும் இலவச லேப்டாப்!         தமிழக அரசின், இலவச லேப்டாப் திட்டத்தை போல உத்திரபிரதேச அரசும், பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும், லேப்டாப் வழங்குகிறது.
 
     இதன்படி 15 லட்சம் லேப்டாப் கொள்முதல் செய்வதற்கு எச்.பி., கம்ப்யூட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஒரு லேப்டாப் விலை 19,058 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 2 ஆயிரத்து 858 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

     பள்ளி, கல்லுõரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல், இந்த சாதனங்களை மட்டும் வழங்குவதில் எவ்வித பயனுமில்லை என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

Exam Dates - Reminderயு.பி.எஸ்.சி., சி.டி.எஸ்., தேர்வு - பிப்ரவரி 17

ஏ.ஐ.சி.டி.இ., நடத்தவுள்ள மேனேஜ்மென்ட் பொது நுழைவுத் தேர்வு - பிப்ரவரி 21 முதல் 25 வரை 


ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு ஜே.ஈ.ஈ - ஏப்ரல் 7

சி.ஆர்.பி.எப்., ஏ.எஸ்.ஐ., ஸ்டெனோ மற்றும் ஹெட்கான்ஸ்டபிள் 

பணிகளுக்கான தேர்வு - ஏப்ரல் 15 முதல் 22 வரை

சென்னை ஐ.ஐ.டி., ஹியூமானிடிஸ் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு - ஏப்ரல் 21

ஜே.ஈ.ஈ., அட்வான்ஸ்ட்(ஆர்க்கிடெக்சர்) தேர்வு - ஜூன் 28

கல்வியை இலவசமாகத் தர வேண்டும்; ஆனால், தேர்ச்சி இலவசமாகிவிடக் கூடாது என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.


         ஒப்பியல் நோக்கில் செவ்விலக்கியக் கோட்பாடுகள்' என்ற தலைப்பில் திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழாசிரியர்களுக்கான 10 நாள் பயிலரங்க நிறைவு விழாவில் அவரது நிறைவுரை:
 
ஞாயிறுதோறும் வெளிவரும் தமிழ்மணியை ஏன் புத்தகமாகக் கொண்டுவரக் கூடாது என்று பலரும் கேட்கின்றனர். அது புத்தகமானால், தமிழாசிரியர்கள் படிக்கவும் பாதுகாக்கவும் மட்டுமே பயன்படும்.
 
                  இப்போது நாளிதழின் ஒரு பக்கமாக இருப்பதால் சராசரி வாசகர்களுக்கும் தமிழ் இலக்கியம் பற்றிய ஆர்வம் ஏற்படவும், தமிழறிஞர்கள் பற்றிய செய்திகள் சென்றடையவும், நடைமுறைத் தமிழ் வளர்ச்சி அடையவும் வழிகோலுகிறது.
 
உலகம் ஏற்றுக் கொள்ளும் கோட்பாடாகத் தமிழ் இலக்கியங்களில் என்ன இருக்கிறது என்று கேட்டால், "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று உலகுக்கு உரத்துச் சொன்ன ஒரு கோட்பாடு நம் சங்கத் தமிழில்தான் இருக்கிறது. கிரேக்கம், சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளில் பல காவியங்கள் உண்டு. ஆனால், சங்கத் தமிழ்ப் பாடல் ஒவ்வொன்றும் ஒரு காவியம். ஒவ்வொரு புறநானூற்றுப் பாடலும் ஒரு காவியமல்லவா? ஏனைய மொழிகளில் காண முடியாதவை பல நம்மிடம் உள்ளன. ஆனால், நாம் அவற்றைப் பிற மொழிகளுக்குப் பெயர்க்கவில்லை. எடுத்துச் சொல்லவில்லை. நமக்குள்ளே பழம் பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர அதை பிற மொழியினருக்கு எடுத்துச் சொல்லத் தவறிவிட்டோம். "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்' என்ற பாரதியின் கூற்றில் எனக்குக் கருத்து மாறுபாடு உண்டு. நமது தேவை தமிழ் மொழியில் கூறப்பட்டுள்ளவற்றை பிற மொழிகளில் பெயர்க்க வேண்டும் என்பதுதான். ஒப்பிலக்கியம் பற்றிய பயிலரங்கம் இது. இதில் கலந்து கொள்ளும் எத்தனை பேருக்கு இரண்டுக்கு மேற்பட்ட மொழிகள் தெரியும்? ஆங்கிலம் எழுதவும் பேசவும் தெரிந்த எத்தனை பேர் தமிழாசிரியர்களாக இருக்கிறார்கள்? நம் மொழி, பண்பாட்டின் அருமை, பெருமைகளை உலக மொழிகளில் பெயர்க்க வேண்டும். ஆனால், இங்கு ஆங்கிலம் படித்துவிட்டால் உடனே தமிழாசிரியர் பணியை விட்டு ஆங்கில ஆசிரியராகிவிடுகிறார்கள். ஆங்கிலம் என்றில்லை, சம்ஸ்கிருதம், மலையாளம், ஒரியா, லத்தீன், அரபி, பிரெஞ்சு, சீனம் என ஏதோவொரு மொழியை தமிழாசிரியர்கள் கூடுதலாகக் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழிலுள்ள கருத்துகளை அந்த மொழிகளுக்கு கொண்டு செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழும் தெரியாத, ஆங்கிலமும் தெரியாத தலைமுறையை நாம் உருவாக்கி வருகிறோம். இதற்கு வருங்காலம் யாரைக் குறை சொல்லும் தெரியுமா? அரசையா? பெற்றோரையா? இல்லை. இந்தப் பழி ஆசிரியர்களைத்தான் வந்துசேரும். 
         
ஆசிரியர்கள் நம்மைச் சுற்றி அன்றாடம் நிகழும் மாற்றங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய புதிய செய்திகளை மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மேலைநாடுகளில் 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் தகுதி பரிசோதிக்கப்படுகிறது. ஆனால், இங்கு ஒரு முறை பணி கிடைத்துவிட்டால் போதும், அரசுப் பணி- நிரந்தர வருவாய் போதும் என்ற மனநிலை வந்துவிடுகிறது. ஏதோ சம்பளம் கிடைத்தால் போதும் என்று சொல்லும் அளவுக்கு சாதாரண பணியா, ஆசிரியர் பணி? விவசாயிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் மரியாதை அளிக்காத சமுதாயம் சீரழிந்து போகும். சமுதாயம் ஆசிரியர்களைத் தலைவணங்கி மரியாதை செலுத்த வேண்டும். அதற்கு உகந்தவர்களாக ஆசிரியர்கள் வாழ வேண்டும். இப்போதைய தொடக்கக் கல்வி முறையில், இந்தியாவில் 60 விழுக்காடு 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்புப் பாடங்களைப் படிக்கத் தெரியவில்லை. 9-ம் வகுப்பு ஆசிரியர்தான் அவர்களுக்கு ஆங்கில எழுத்துகளைச் சொல்லித் தருகிறார். இதற்குக் காரணம் 8-ம் வகுப்பு வரை தடையில்லா தேர்ச்சி முறைதான். கல்வியை இலவசமாகக் கொடுக்க வேண்டும். அனைவருக்கும் கல்வி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.ஆனால், தேர்ச்சி இலவசமாக இருக்க முடியாது. தடையில்லாத் தேர்ச்சி முறை மாணவர்களின் தரம் குறைந்திருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம். அடிப்படைக் கல்வியே சரியாக இல்லாவிட்டால், உயர்கல்வியில் தரம் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்?  கவலையளிக்கும் ஒரு சூழலில், தமிழாசிரியர்கள் ஆர்வத்துடன் இந்தப் பயிலரங்கத்தில் கலந்த கொள்ள வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட முனைவர் நெடுஞ்செழியன் தம்பதியைப் போல, மாவட்டத்துக்கு ஒரு தம்பதி இருந்துவிட்டால், ஆசிரியர்கள் தரம் உயரும். கல்வியின் நிலை உயரும்'' என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.

Tips to Improve the Performance in SSLC/+2 EXAMINATIONS


Posted: 12 Feb 2013 07:10 PM PST

No comments:

Post a Comment