Friday, February 22, 2013


அனைத்து பள்ளிகளிலும் நலவாழ்வு மையங்கள் அமைக்க அரசு உத்தரவு

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நலவாழ்வு மையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக வட்டார வளமைய மேற்பார்வையாளர் கி. ராமசுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுவாக, தொற்றுநோய்களான வைரஸ் காய்ச்சல், டெங்கு, சிக்கன் குனியா குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டுள்ளது.

இருதய நோய், நீரிழிவு, மன அழுத்தம், உடல் பருமன், புகைப்பிடித்தல் போன்றவை குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றியத்தில் 48 பள்ளிகளில் நலவாழ்வு மன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

மாவட்ட சுகாதார திட்டம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் இணைந்து செயல்படுத்தும் இந்த மன்றம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக, வட்டாரம் வாரியாக அரசு நிதி ஒதுக்கி, மாணவர்களுக்கு இருதய நோய் என்றால் என்ன, உடல் பருமனாகினால் எவ்வித பாதிப்புகள் ஏற்படும், புகைப்பிடித்தலினால் ஏற்படும் தீமைகள், பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுகளால் ஏற்படும் விளைவுகள், காய்கறிகளை சாப்பிடுவதால் விளையும் நன்மைகள் குறித்து டாக்டர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

மேலும், தொற்று நோய்களிலிருந்து தம்மை தற்காத்து கொள்வதற்கான உடற்பயிற்சி, யோகா குறித்து வரைபடங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தந்த பள்ளி குடியிருப்பு பகுதிகளில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர்.

இதற்காக ஒவ்வொரு பள்ளிகளிலும், படங்கள் வடிவமைத்து சிறந்த வாசகங்களை எழுதும் போட்டிகள் நடத்தப்பட்டன. வட்டார அளவில் சிறந்த போஸ்டர்கள் மற்றும் வாசகங்களை எழுதிய மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு அனுப்பப்பட உள்ளனர். இதில் மாவட்ட அளவில் முதல் பரிசாக 16 ஆயிரத்து 635 ரூபாய், மாநில அளவில் முதல் பரிசாக 83 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது என்றார்.

ஆசிரியப் பயிற்றுநர்கள் உமா மகேஸ்வரி, முருக திருநாவுக்கரசு, பெத்தணசாமி, பொற்கொடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆரம்ப கல்விக்கு முக்கியத்துவம்: ஜனாதிபதி

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை துவக்கி வைத்து ஜனாதிபதி பிரணாப் பேசுகையில்: பணவீக்கம் குறைந்த போதிலும், வளரும் நாடுகளில் பொருளாதார மீட்சி மந்தமாக உள்ளது. ஆரம்ப கல்வியை அதிகரிக்க



பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கணக்கு எண் வழங்கப்பட்டு பிடித்தம் செய்த விவரங்களை தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை அனுப்ப உத்தரவு.



ஆசிரியர் நியமனத்திற்கு போலீஸ் நற்சான்றிதழ் தேவை

ஆசிரியர் நியமனத்திற்கு, போலீசாரிடமிருந்து நற்சான்றிதழ் கடிதம் பெற்று வந்தால் மட்டுமே சாத்தியம்" என்ற நடைமுறையை அறிமுகப்படுத்த, ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

இதனால், ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பள்ளிக்கூடத்தில், மாணவ மாணவியரை, கண்டிப்பு என்ற பெயரில், ஆசிரியர்கள் பிரம்பால் அடித்தோ, உடல்ரீதியாக துன்புறத்தவோ கூடாது என, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன், பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை அமல்படுத்தும் முகமாக, ஆந்திராவில், ஆசிரியர்கள் நியமனத்தில், புது நடைமுறையை கொண்டு வர, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அரசு ஆசிரியர் பணிக்கு வருபவர்கள், இதற்கு முன் வேலை பார்த்த இடங்களில், எப்படி நடந்து கொண்டார்; வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை கண்டறிவதற்காக, போலீசாரிடம் இருந்த சான்றிதழ் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், போலீசாரிடம் இருந்து சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ் இருந்தால் தான், நியமனம் வழங்கப்படும் என, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும், இந்த முடிவுக்கு ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: ஆசிரியர்கள் பொறுப்பு பற்றியும், அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை, ஆண்டுதோறும் பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். இதில் தவறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன் வலியுறுத்தியுள்ளது. ஆனால், மாநில அரசு இதற்கு, மாறாக நடந்து கொள்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பள்ளி கல்வி துறை அதிகாரிகள் கூறுகையில், "மாணவர்களை அடித்து துன்புறுத்தாத ஆசிரியர்களை, மாணவர்கள் எதிர்காலம் கருதி தேர்வு செய்வதற்கு இது சிறந்த வழி. ஆசிரியர்களின் முந்தைய கால வரலாற்றின் மூலமே, தண்டிக்காத ஆசிரியர்களை தேர்வு செய்ய முடியும்" என்றனர்.
பிளஸ் 2 தேர்வு - சிறப்பான ஏற்பாடுகளை செய்ய அமைச்சர் உத்தரவு
பிளஸ் 2 தேர்வில் எவ்வித குளறுபடியும் இன்றி ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்" என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் சிவபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச் 1ம் தேதி துவங்குகின்றன. 8.50 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். கடந்தாண்டு, 1,500 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இத்தாண்டு, 2,000 மையங்களில் தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சமீபத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், அமைச்சர் சிவபதி, "பிளஸ் 2 தேர்வில், எவ்வித குளறுபடிகளும் இன்றி, மாணவர்களின் நலன் பாதிப்பின்றி, தேர்வுகள் நடைபெற வேண்டும்&' என அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து, தேர்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தாண்டு, 8.50 லட்சம் மாணவர்கள், தேர்வு எழுத தயாராக உள்ளனர். தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய வினாத்தாள், தேர்வு நெருங்கும் நேரத்தில், அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுதுவதற்கு வசதியாக, தேர்வு மையங்கள், அதிகரிக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையத்திற்கு அனுமதி கேட்டு, ஏராளமான பள்ளிகள், விண்ணப்பத்திருந்தன.

அதில், 2,000 பள்ளிகளில், தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கண்காணிப்பு பணியில், பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுவர். 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவர். கண்டறியப்பட்டுள்ள பிரச்னைக்குரிய தேர்வு மையங்களில், தேர்வு முடியும் வரை, அந்த சமயத்தில், "ஸ்டேண்டிங் ஸ்குவாட்" அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார். ஒரு மாவட்டத்திற்கு குறைந்தபட்சம், 30 முதல் 40 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளன.

தனியார் பள்ளிகள், மாணவர்களை, "பிட்" அடிக்க உதவி செய்வதாக, புகார்கள் வந்துள்ளன. அந்த பள்ளிகள் மீது, அதிக கவனம் செலுத்தப்படும். மாணவர்கள், "பிட்" அடித்து சிக்கினால், அவர்கள் மீண்டும் தேர்வு எழுத முடியாது. மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர, முக்கிய பாடமாக கருதப்படும் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாட தேர்வின் போது, அண்ணா பல்கலை ஆசிரியர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 10.5 லட்சம் பேர் பங்கேற்பு!

பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள், மாநிலம் முழுவதும் துவங்கின. இதில், 10.5 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச், 27ல் துவங்கி, ஏப்ரல் 12 வரை நடக்கிறது. சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்ததன் காரணமாக, அனைத்துப் பள்ளிகளைச் சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கும், அறிவியல் பாடத்தில், செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. எழுத்து தேர்வுக்கு முன்னதாக, இந்த செய்முறைத் தேர்வு, நேற்று, மாநிலம் முழுவதும் துவங்கியது.

மொத்தம், 25 மதிப்பெண்களுக்கு, செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது. மீதமுள்ள, 75 மதிப்பெண்களுக்கு, எழுத்து தேர்வு நடக்கும். எழுத்து தேர்வை எழுதும் அனைத்து மாணவ, மாணவியரும், செய்முறைத் தேர்விலும் பங்கேற்கின்றனர். அதன்படி, 10.5 லட்சம் மாணவ, மாணவியர், இந்த தேர்வில் பங்கேற்றுள்ளனர்.

மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, இம்மாதம், 28ம் தேதிக்குள், செய்முறைத் தேர்வுப் பணிகளை முடித்து, அதன் விவரங்களை, தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹால்டிக்கெட் பெறுவதில் மாணவர்கள் கடும் அவதி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் 2 தனித் தேர்வாளர்களுக்கான, ஹால்டிக்கெட் புறநகரில் உள்ள பள்ளியில் வைத்து வழங்குவதால் மாணவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மார்ச் முதல் தேதி துவங்குகிறது. பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு ஆகிய மூன்று தாலுகாவை உள்ளடக்கிய பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், இத்தேர்வுக்கு 500க்கும் மேற்பட்ட தனித்தேர்வாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஹால்டிக்கெட், பொள்ளாச்சி அடுத்த ஏ.நாகூர் மத்திய மேல்நிலைப்பள்ளியில் மட்டும் வினியோகிக்கப்படுகிறது.

பொள்ளாச்சி நகருக்குள் பள்ளிகள் இருந்தும் ஆண்டுதோறும், பிளஸ் 2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் அனைத்தும், 15 கி.மீ., தூரம் தொலைவில் உள்ள பள்ளியில் வழங்கப்படுகிறது. இப்பள்ளி, புறநகர் பகுதியில் திருப்பூர் மாவட்ட எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. பள்ளிக்கு செல்ல போதுமான பஸ் வசதி இல்லாததால், வால்பாறை, கிணத்துக்கடவு, ஆனைமலை, கோட்டூர் உட்பட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த தனித்தேர்வாளர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

தனித்தேர்வாளர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கும் மையத்தை மாற்றி அமைக்க வேண்டும், என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் கல்வித்துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால், மாணவர்களும், பெற்றோர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

"உடனடியாக, இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்" என, மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கும் மையங்கள் குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து முடிவு செய்யப்படுகிறது. இதில், கல்வித்துறை அதிகாரிகளின் தலையீடு எதுவும் இல்லை. பல ஆண்டுகளாக, இதே பள்ளிதான் ஹால்டிக்கெட் மையமாக தேர்வு செய்யப்படுகிறது.

மாணவர்களின் தற்போதைய நிலை குறித்து தேர்வுத்துறைக்கு அறிவுறுத்தி, மாற்று மையம் அனுமதிக்க பரிந்துரை செய்யப்படும். தேர்வுகளை பொறுத்தவரை, தேர்வுத்துறையின் முடிவே இறுதியானது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
பள்ளிகளில் பாலியல் கல்வி?

டில்லி கற்பழிப்பு சம்பவத்தில், இளஞ்சிறார் ஒருவன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து நீதிபதி வர்மா குழு சமர்பித்த அறிக்கையில், "நாடு முழுவதும் பாலியல் வன்முறை சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்.

பழைய பள்ளிப் பாடத்திட்டத்தை சீரமைத்து, பாலியல் கல்வியை ஒரு பகுதியாக சேர்க்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது. அறிக்கை பற்றி கருத்து தெரிவித்த, மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பல்லம் ராஜூ, "நமது பள்ளிப்பாடத் திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்க்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர். இது குறித்து பல்வேறு பாடத்திட்ட அமைப்பை கொண்ட மாநிலங்களிடம், மத்திய அரசு பேச வேண்டும் என்கின்றனர்.

தற்போது தனி பாடத்திட்டத்தை கொண்ட மாநிலங்களில், பாலியல் கல்வி குறித்த பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளோம். இது பற்றி என்.சி.ஆர்.டி., தலைவரிடமும் பேசியுள்ளோம். நீதிபதி வர்மா குழு அறிக்கை, ஒரு நபரின் முடிவு அல்ல. இத்திட்டம் குறித்து சமூகத்தின் எண்ணம், எந்த வயது மாணவர்களுக்கு பாலியல் கல்வி கற்பிப்பது போன்றவை குறித்து முடிவு செய்யப்படும்" என்றார்.
நர்சரி பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., பொருந்துமா? - மத்திய அரசு தகவல்

நர்சரி பள்ளிகளுக்கு கல்வி உரிமை சட்டம் ( ஆர்.டி.இ.,) பொருந்தாது, நர்சரி பள்ளி சேர்க்கை குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு, டில்லி ஐகோர்டில் தெரிவித்துள்ளது.

நர்சரி பள்ளிகள் சேர்க்கை குறித்து, ஒரு தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.முருகேசன் மற்றும் நீதிபதி வி.கே.ஜெயின், ஆர்.டி.இ., விதிமுறையை விளக்க சில நாட்களுக்கு முன் மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

இதுபற்றி மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜிவ் மெஹ்ரா ஐக்கோர்டில் கூறுகையில், கல்வி உரிமை சட்டத்தில் பிரிவு 13ன் படி 6 முதல் 14 வயதுக்குட்டபட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய தொடக்கக்கல்வி கொடுக்க வேண்டும். இப்பிரிவில் 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் வரமாட்டார்கள் என்றார்.

இது பற்றி மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இயக்குனர் விக்ரம் சகாய் கூறுகையில், பிரிவு 12(1)(சி)ன் படி, முதல் வகுப்பில் 25 சதவீத பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு, அவர்கள் படிப்பு காலம் வரை இலவச மற்றும் கட்டாய தொடக்க கல்வி கொடுக்க வேண்டும் என்று கூறுகிறது. அந்தந்த மாநில அரசுகள், பிரைமரி, நர்சரி பள்ளிக் கல்வி சேர்க்கை குறித்த முடிவை எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

தொண்டு நிறுவன வழக்கறிஞர் அசோக் அகர்வால் கூறுகையில், அரசு உதவிபெறாத அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, மத்திய அரசின் இந்த ஒப்புதல் மகிழ்ச்சி தரக்கூடியது என்றார்.
பிளஸ் 2 தத்கால் தேர்வு - கூடுதல் விண்ணப்பத்தை பூர்த்திசெய்ய வேண்டும்

பிளஸ் 2 பொதுத்தேர்வை, தனித்தேர்வாக எழுத, "தத்கால்" திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்கள், உரிய இணைப்புகளுடன், மேலும் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 22,23 தேதிகளில், தேர்வுத்துறை இயக்குனரகத்தில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தேர்வுத்துறை அறிவிப்பு: "ஆன்-லைன்" வழியில், ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர்கள், "கன்பார்மேஷன் காப்பி" என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய இணைப்புகளுடன், தேர்வுத்துறை இயக்குனரகத்தில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், 50 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி, சுய முகவரியிட்ட கவரினையும், சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப எண், 1251000001 முதல், 1251001000 வரையில் உள்ள தேர்வர்கள், நாளை நேரில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். 1001 முதல், 2099 வரையிலான தேர்வர்கள், 23ம் தேதி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இப்படி, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் மாணவ, மாணவியருக்கு மட்டுமே, "ஹால் டிக்கெட்" வழங்கப்படும். இவ்வாறு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment