Monday, February 18, 2013


கிரென்கே கிளாசிக் செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன்!

ஜெர்மனியில் நடந்து வரும் கி‌ரென்கே கிளாசிக் செஸ் தொடர் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். 

ஜெர்மனியில் இன்று நடந்த கி‌ரென்கே கிளாசிக் செஸ் தொடர் போட்டியின் 10 ஆவது சுற்றில்,தன்னை எதிர்த்து ஆடிய ஜெர்மன் வீரர் அகர்காடி‌ஜை வீழ்த்தி சாம்பியன் பட்டம்‌ வென்றார்.


அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் B.Ed., தகுதியுடன் பணியாற்றிவரும் (01.06.2006 வரை) இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கொள்கை முடிவு எடுக்க கோருதல் சார்பான விவரம்.

இந்திய - ஜப்பானின் சூப்பர்-30 பள்ளி திட்டம்

         ஜப்பான் கூட்டுறவு நிறுவனம் (சிஜிசி) இந்தியாவில் சூப்பர்-30 பள்ளி திட்டத்தை இந்தியாவில ‌துவங்குகிறது.

        இதற்கான ஒப்பந்தம் நேற்று ஜப்பான் நிறுவனத்திடம் பீகாரை சேர்ந்த கணிதவியல் நிபுணர் ஆனந்த் குமார் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பள்ளிகள் மீதான புகார்களை விசாரிக்க குழுக்கள் அமைப்பு


          பள்ளிகள் மீதான கட்டண புகார்களை விசாரிக்க, 32 மாவட்டங்களிலும், முதன்மைக் கல்வி அதிகாரிகள் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, ஒவ்வொரு மாதத்திலும், முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமை கூடி, பள்ளிகள் மீது வரும் புகார் குறித்து, விசாரணை நடத்தி, சம்பந்தபட்ட துறைகளுக்கு, பரிந்துரை அறிக்கையை அனுப்பும்.


         அதிக கட்டணம் வசூலிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, புகார் அளிப்பதற்காக, சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை சந்திக்க, பெற்றோர், சென்னைக்கு வரும் நிலை உள்ளது. இதனால், துறை இயக்குனரகத்தின் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

             இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு அமைப்பு சட்டத்தின் படி, பள்ளிகள் மீது, அதிக கட்டணம் வசூலிப்பு தொடர்பாக வரும் புகார்களை விசாரிக்க, மாவட்டந்தோறும், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில், விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்கள், உறுப்பினர் - செயலராக இருப்பர்.

            மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், மெட்ரிக் பள்ளிகள் தரப்பில், ஒரு முதல்வர், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் தரப்பில், ஒரு முதல்வர் ஆகியோர், குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

             இக்குழுவிற்கு, புகாருக்கு உள்ளான பள்ளிகளில், ஆய்வு செய்யவோ, பறிமுதல் செய்யவோ, அதிகாரம் இல்லை. ஆனால், புகாரில் சிக்கும் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு, சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை, சம்பந்தபட்ட துறை இயக்குனர்களுக்கு, பரிந்துரை செய்யும்.
பரிந்துரையின் அடிப்படையில், சம்பந்தபட்ட துறை இயக்குனர்கள், முடிவு அறிவிப்பர். இந்தக் குழு, ஒவ்வொரு மாதமும், முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில், மாவட்ட தலைநகரத்தில் கூடி, புகார் மனுக்கள் குறித்து, விசாரணை நடத்தும்.

             புகார் மனுக்கள் அதிகமாக வந்தால், சி.இ.ஓ., வசதிக்கு ஏற்ப, கூடுதலாக சில நாட்கள், விசாரணை நடத்தவும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை மொழிப் பாடம்: தேர்வு பெற்றவர்கள் பட்டியல் வெளியீடு


          சிறுபான்மை மொழிப்பாடங்களில் தேர்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.

          ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவிப்பு:பட்டதாரி, சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கு நடந்த சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில், தேர்வு பெற்ற, 36 பேரின் பெயர் பட்டியல், டி.ஆர்.பி., அலுவலக, அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.


          மலையாள வழியில், 12 பேர்; தெலுங்கு, 13; உருது, 9 பேர் என, 34 பேர், தேர்வு பெற்றுள்ளனர். முதுகலை ஆசிரியரில், உருது வழியில் ஒருவரும்; தெலுங்கு வழியில் ஒருவரும் தேர்வு பெற்றுள்ளார்.

        இவர்களின் தேர்வுப் பட்டியல், 18ம் தேதி, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

          பட்டதாரி ஆசிரியரில், மேற்கண்ட நான்கு மொழிகளில், 92 பேர், டி.இ.டி., தேர்வில் தகுதி பெற்றிருந்தும், 34 பேருக்கு மட்டுமே, வேலை கிடைத்துள்ளது. 58 பேர், அவர்கள் சார்ந்த பாடங்களில் காலி பணியிடங்கள் இல்லாததாலும், குறிப்பிட்ட இன சுழற்சியில், தேர்வர் இல்லாததாலும், அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

         மலையாளத்தில், 57 பேர், தகுதி பெற்றிருந்தும், 12 பேர் மட்டுமே, இறுதியாக தேர்வு பெற்றனர். இவர்கள், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு பெற்றுள்ளனர். மற்றவர்கள், மலையாள மொழிப் பாடத்தையே, பிரதானமாக எடுத்து படித்துள்ளனர்.

            மொழிப் பாடத்தில், காலி பணியிடம் இல்லாததால், அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

குரூப்-2 தேர்வு: 22ம் தேதி முதல் நேர்காணல்


              "குரூப்-2 தேர்வு முடிவு, மிக விரைவில் வெளியிடப்படும்; இதற்கான நேர்காணல், 22ம் தேதி முதல், தேர்வாணையத்தில் நடக்கும்" என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர், நடராஜ் தெரிவித்துள்ளார்.


           சமூக வளைதளம் ஒன்றில், அவர், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனவே, எந்த நேரமும், குரூப்-2 தேர்வு முடிவு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

         நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட, 19 வகையான பதவிகளில் உள்ள, 3,631 காலி பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஆக., 12ல், போட்டித் தேர்வு நடந்தது.இதில், 6.5 லட்சம் பேர் பங்கேற்றனர்.

          தேர்வு வினாத்தாள், முன்கூட்டியே,"லீக்&' ஆன தகவல், தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில், தேர்வு நடந்த நாளன்று தெரிய வந்தது. இதையடுத்து, தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., ரத்து செய்து, நவ., 4ல், மறு தேர்வு நடத்தியது.

       வேளாண் அதிகாரிகள், 460 பேர் தேர்வுப் பட்டியல், நேற்றிரவு, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டிலும், தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியலை, தேர்வாணையம் வெளியிட்டது.

          இவர்களுக்கு, பணி ஒதுக்கீட்டு ஆணை, 20ம் தேதி வழங்கப்படும் என, நடராஜ் அறிவித்துள்ளார்.

அங்கீகாரமற்ற பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிக்கு மாற்றம்


        மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், அங்கீகாரம் பெறாத தனியார் பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.


        திருமங்கலம் செல்டன் நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. ஆனால், 6, 7, 8ம் வகுப்புக்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்கு அங்கீகாரம் பெறவில்லை.

           இதையடுத்து, திருமங்கலம் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆஷா மற்றும் அதிகாரிகள், நேற்று பள்ளியில் ஆய்வு செய்தனர். பின், 45 மாணவ, மாணவிகளின் மாற்றுச் சான்றிதழ்களை, பெற்றோர் சம்மதத்தோடு பெற்று, திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளி, அரசு ஆண்கள் பள்ளியில் சேர்த்தனர்.

          கல்வி அலுவலர் ஆஷா கூறுகையில், "மீண்டும் பள்ளி நிர்வாகம் இதே போல் தொடர்ந்து செயல்பட்டால், பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

சான்றிதழ் படிப்புகள் வழங்குகிறது பி.எஸ்.என்.எல்.


      தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் குறித்த, குறுகிய கால சான்றிதழ் படிப்புகளை, பி.எஸ்.என்.எல்., துவங்க உள்ளது.


பி.எஸ்.என்.எல்., தமிழ்நாடு வட்டம், மாணவர்கள், வேலை தேடுவோர், பணியாளர்கள் ஆகியோருக்கு, இரண்டு மாத சான்றிதழ் படிப்புகளை, இம்மாதம், 25ம் தேதி, சென்னையில் துவக்க உள்ளது.
இதில், பிராட்பேண்ட், இன்டர்நெட், நெட்வொர்க்கிங், மொபைல் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்கான, கல்வி தகுதி, கல்வி கட்டணம் உள்ளிட்ட விவரங்களை, www.rttcchennai.bsnl.co.inwww.chennai.bsnl.co.in ஆகிய இணையதளங்களில் பெறலாம்.n

அரசு பள்ளி வசதிகளை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு

      தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர், மாணவர்கள் விகிதம் குறித்து கணக்கெடுக்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், 6 முதல் பிளஸ் 2 வரை உள்ள அரசு பள்ளிகளில், முதன்மை கல்வி அலுவலரின் ஆலோசனையின் பேரில், மாவட்ட கல்வி அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள், உள்ளிட்ட அதிகாரிகளின் கீழ் பல்வேறு குழுக்கள் அமைக்க வேண்டும்.


       அந்த குழுக்கள், பிப்.,18, 19 தேதிகளில் அரசு பள்ளிகளுக்கு சென்று, அங்கு வகுப்பறை, ஆய்வக வசதி, குடிநீர், விளையாட்டு மைதானம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளனவா, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் உள்ளனரா, என நேரடியாக ஆய்வு செய்து கணக்கெடுக்க வேண்டும்.
       இதன் முழு விவரங்களை அறிக்கையாக தயாரித்து, இம் மாதம் 20ல் சென்னையில் நடைபெற உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில், சமர்பிக்க வேண்டும், என பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில், அட்மிஷன் கிடைப்பது கேள்விக்குறி - Dinamalar

     கட்டாயக் கல்வி சட்டம் காரணமாக பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், சீட் வழங்குவதற்கு, தனியார் பள்ளி நிர்வாகங்கள், ஏகப்பட்ட கெடுபிடிகளை விதிக்க திட்டமிட்டுள்ளன. இதனால், அட்மிஷன் எளிதில் கிடைக்குமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது.
இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம் அமலாவதற்கு முன்வரை, தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பு சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. வசதியான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் என்றில்லாமல், அனைத்து தரப்பு குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும், நுழைவுத் தேர்வில் பங்கேற்றன.

     இதில், திறமையான குழந்தைகளுக்கு, எந்த பரிந்துரைகளும் இல்லாமல்,
இடங்கள் கிடைத்தன. தற்போது, கட்டாயக் கல்வி சட்டம் அமலுக்கு வந்துவிட்ட நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, மேற்கண்ட சட்ட விதிமுறைகளின்படி நடைபெற உள்ளது.
கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது; பெற்றோருக்கு, நேர்முகத் தேர்வு நடத்தக் கூடாது. நன்கொடை பெறக் கூடாது.ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்கை எனில், பள்ளி அமைந்துள்ள இடத்தில் இருந்து, ஒரு கி.மீ., சுற்றளவுக்குள் உள்ள குழந்தைகளுக்கு, சீட் வழங்க வேண்டும்.
எட்டாம் வகுப்பு வரையிலான, நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கை எனில், 3 கி.மீ., சுற்றளவிற்குள் வசிக்கும் மாணவ, மாணவியருக்கு சீட் வழங்க வேண்டும். நடைமுறையில், பெரும்பாலான மாணவ, மாணவியர், 6 - 10 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளிகளுக்குச் சென்றும் படிக்கின்றனர்.
இதனால், பெற்றோர் விரும்பும் பள்ளிகளில், குழந்தைகளுக்கு சீட் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். மேலும், ஆரம்ப நிலை சேர்க்கை வகுப்பில் உள்ள மொத்த இடங்களில், 25 சதவீதத்தை, வறுமை மற்றும் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இந்த ஒதுக்கீட்டை, கடந்த கல்வியாண்டில், தனியார் பள்ளிகள் சரிவர கடைபிடிக்காத நிலையில், வரும் கல்வியாண்டில், இந்த ஒதுக்கீட்டின் கீழ் நடக்கும் சேர்க்கையை, தீவிரமாக கண்காணிக்க, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் திட்டமிட்டு உள்ளது.
மாணவ, மாணவியர் சேர்க்கை விதிமுறைகள் ஒருபக்கம் இருந்தாலும், கட்டணம் செலுத்தக் கூடிய திறன் படைத்த பெற்றோர், வீட்டு அமைவிடம் ஆகியவற்றின் அடிப்படையில், சீட் வழங்க, பள்ளி நிர்வாகங்கள் முடிவு எடுத்துள்ளன.
இதுகுறித்து, தனியார் பள்ளிகள் வட்டாரங்கள் கூறியதாவது: நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டதால், சேர்க்கையை எப்படி நடத்துவது என்றே புரியவில்லை. எனினும், பள்ளி நிர்வாகம் நிர்ணயிக்கும் கட்டணங்களை செலுத்தக்கூடிய திறன், பெற்றோருக்கு இருக்கிறதா என்பதை, முதலில் பார்க்க திட்டமிட்டு உள்ளோம்.
இரண்டாவது மாணவ, மாணவியரின் வீடு, அருகாமையில் இருக்கிறதா என்றும் பார்ப்போம். மூன்றாவதாக, பரிந்துரைகளின் கீழ் வரும் மாணவ, மாணவியரையும், பரிசீலிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
விண்ணப்பங்கள் குறைவாக வந்தால், சீட் வழங்குவதில் பிரச்னை ஏற்படாது. ஆனால், அதிகளவு விண்ணப்பங்கள் வந்தால், யார், யாருக்கு சீட் வழங்குவது; யாரை நிராகரிப்பது என்பதில், பிரச்னை ஏற்படும். நிராகரிக்கப்படும் குழந்தைகளின் பெற்றோருக்கு, எந்த காரணத்தைச் சொல்வது என்றும் தெரியவில்லை. இவ்வாறு, தனியார் பள்ளி வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னணி தனியார் பள்ளிகளில், வழக்கம் போல், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சேர்க்கை நடத்தினர். ஆனால், கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, சேர்க்கைப் பணிகளை, மே மாதம் தான் துவங்க வேண்டும் என்பதால், இதன்படியே பள்ளிகள் செயல்பட வேண்டும் என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் கண்டித்தது.
இதனால், பெரும்பாலான பள்ளிகள், சேர்க்கையை உடனடியாக நிறுத்திவிட்டன. இந்த பள்ளிகளில், மே மாதத்தில் சேர்க்கை நடைபெற உள்ள நிலையில், பள்ளி நிர்வாகங்கள் இப்போதே, ஏகப்பட்ட கெடுபிடிகளை விதித்து வருவதால், விரும்பிய பள்ளிகளில், சீட் கிடைக்குமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது.
விரைவில் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை: மாணவர் சேர்க்கையில், பள்ளிகள் தெளிவில்லாத நிலையில் இருப்பது குறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனரக வட்டாரங்கள் கூறியதாவது: சேர்க்கை குறித்து, இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தில், பல்வேறு விதிமுறைகள் கூறப்பட்டு உள்ளன.
எனினும், இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு புரியும் வகையில், தெளிவான வழிகாட்டுதல் அடங்கிய சுற்றறிக்கையை, விரைவில் பள்ளிகளுக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளோம். கட்டாயக் கல்வி சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும், பள்ளி நிர்வாகங்கள், 100 சதவீதம் கடைபிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
இவ்வாறு, இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்தன.

முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியாவதில் தொடரும் இழுபறி

          தமிழ் வழி ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தாவரவியல் பாடத்திற்கான, முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியாவதில், தொடர்ந்து, இழுபறி ஏற்பட்டுள்ளது.
போட்டித் தேர்வு அடிப்படையில், தேர்வு பெற்ற முதுகலை ஆசிரியர் 2,300 பேர், கடந்த டிசம்பரில், பணி நியமன உத்தரவுகளை பெற்றனர். இவர்கள், பணியில் சேர்ந்து, இரண்டு மாதம், சம்பளமும் பெற்றுவிட்டனர். ஆனால், இவர்களுடன் தேர்வெழுதிய தாவரவியல் பாட தேர்வர்களுக்கு, இதுவரை, இறுதிப்பட்டியல் வெளியிடப்படவில்லை.

        தவறுதலான கேள்விகள் விவகாரம் தொடர்பாக, சென்னை, ஐகோர்ட் உத்தரவின்படி, விடைத்தாள்களை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்து, இறுதிப் பட்டியல் தயாரிக்கும் பணியில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது. 195 பேர் வரை, இந்தப் பாடத்தில் தேர்வு செய்யப்படலாம் என, கூறப்படுகிறது.
தமிழ்வழி படித்தவர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 200 இடங்களுக்கான அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது:
       தாவரவியல் பட்டியல் தயாராகிவிட்டது; எந்நேரமும் வெளியாக, வாய்ப்பு உள்ளது. ஆனால், தமிழ் வழி ஒதுக்கீட்டு பட்டியல், இன்னும் தயாரிக்கப்படவில்லை.
       முதுகலையில், எந்தெந்த கல்லூரிகளில், எந்தெந்த பாடங்களில், தமிழ் வழிப் பிரிவு உள்ளது என்ற விவரங்களை, பல்கலைகளிடம் கேட்டோம்; இதுவரை பதில் வரவில்லை; பதில் வந்தால் தான், நாங்கள் இறுதிப்பட்டியல் தயாரிக்க முடியும்.
         பொருளியல், வரலாறு மற்றும் வணிகவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் சேர்த்து, 200 இடங்கள் வரை, நிரப்புவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றம்: மீண்டும் கருத்துக் கேட்க முடிவு
          தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. இதுதொடர்பாக பெற்றோர், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி, அறிக்கை சமர்பிக்கும்படி, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

      இதையடுத்து, அறிவியல் பாடத்திற்கான கூட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்தன. தற்போது, பொதுத்தேர்வு நெருங்குவதால், மற்ற பாடங்களுக்கான கூட்டம், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் எல்லா பாடத்திற்கும் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி, இணையதளத்தில் வெளியிட கல்வித்துறைக்கு அரசு வலியுறுத்தியுள்ளது. இதனால், பிப்., 20ல் சி.இ.ஓ.,க்கள் தலைமையில், மீண்டும் புதிய பாடத்திட்டத்திற்கான கருத்துக்கேட்பு நடக்கிறது.

       இதுபற்றி கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், "கடந்த 3 நாட்களுக்கு முன்பு, இணையதளத்தில் அடுத்த கல்வியாண்டிற்கான, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத் திட்டங்கள் வெளியாகின. இதில், மாற்றம் இல்லாததால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதற்காகவே, மீண்டும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, ஒட்டு மொத்தமாக அனைத்து பாடங்களுக்கும் உரிய புதிய பாடங்களை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.

மரபணு அறிவியலை புறக்கணிக்கும் நாடுகள் வளர்ச்சியில் பின்தங்கும்

          "மரபணு அறிவியலை புறக்கணிக்கும் நாடுகள், வளர்ச்சியில் பின்தங்க நேரிடும்" என, நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் மேரி லேன் பேசினார்.
புதுச்சேரி பல்கலைக்கழக இயற்பியல் துறை சார்பில், "பொருளிலிருந்து உயிர், அதற்கு காரணம் வேதியியலா" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு, பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. 

        விழாவில், நோபல் பரிசு பெற்ற, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வேதியியல் பேராசிரியர் மேரி லேன் பேசியதாவது: நாம் வாழும் இந்த பூமி, 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், சூரியனிலிருந்து வெடித்து சிதறி உருவாகியது.

       இப்பேரண்டத்தில் பிரிந்த பூமி, பரிணாம வளர்ச்சி அடைந்து, தற்போது பல கட்டமைப்புடைய மூலக்கூறுகளையும், சிந்திக்கும் திறன் கொண்ட உயிரோட்டப் பொருள்களையும் படைத்துள்ளது. இப்பேரண்டத்தில், இது வரை, பூமி மட்டுமே உருவாகி இருப்பதாக கருதுகிறோம்; இப்பூமி இத்துடன் நிற்கவில்லை; தொடர்ந்து பரிமாண வளர்ச்சியடைந்து வருகிறது.

       மரபணு அறிவியல் தான் எதிர் காலத்தில் உலகை ஆளும். மரபணு அறிவியலில் முக்கியத்துவத்தை உணர்ந்து, பல நாடுகள், இத்துறையில் கால்தடம் பதித்து ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளன. சில நாடுகள் இதை வேண்டாம் என்று புறக்கணிக்கின்றன.

        நமது உடலே மரபணு மாற்றத்தினால் ஏற்பட்டது என்பதை, நாம் மறந்துவிடக் கூடாது. எனவே, இத்துறையை புறக்கணிக்கும் நாடுகள் வளர்ச்சியில் பின்னடைவை சந்திக்க நேரிடும். இவ்வாறு மேரி லேன் பேசினார்.

குரூப்-1 தேர்வு: 25 பணியிடங்களுக்கு 1.25 லட்சம் பேர் போட்டி

       டி.எஸ்.பி., - ஆர்.டி.ஓ., உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 25 பணியிடங்களை நிரப்ப, 16ம் தேதி, குரூப்-1, முதல்நிலைத் தேர்வு நடக்கிறது. மிக குறைந்த காலி இடங்கள் என்ற போதும், இந்த தேர்வுக்கு, எப்போதும் இல்லாத அளவிற்கு, 1.26 லட்சம் பேர், போட்டி போடுகின்றனர்.

      தமிழகம் முழுவதும், 33 மையங்களில், முதல்நிலைத் தேர்வுகள் நடக்கின்றன. சென்னை நகரில் மட்டும், 26 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வு, புதிய தேர்வு முறையின்படி நடக்கிறது.
        முதல்நிலைத் தேர்வு, 300 மதிப்பெண்களுக்கு நடக்கும். இதன்பின், முக்கிய தேர்வு, மூன்று தாள்களாக, தலா, 300 மதிப்பெண்கள் வீதம், 900 மதிப்பெண்களுக்கு நடக்கும். மூன்று தாள்களுமே, பொது அறிவை சோதிப்பதாக இருக்கும்.
         இதைத் தொடர்ந்து, 120 மதிப்பெண்களுக்கு, நேர்முகத் தேர்வு நடக்கும். முக்கியத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், தேர்வு செய்யப்படுவர்.
16ம் தேதி நடக்கும் தேர்வில், ஒரு பணியிடத்திற்கு, 5,040 பேர் வீதம், போட்டி போடுகின்றனர். குரூப்-1 தேர்வில், தேர்வு பெற்றால், எதிர்காலத்தில், பதவி உயர்வு மூலம், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக பதவி ஏற்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
         அதிகாரம் உள்ள பதவிகளும், கை நிறைய சம்பளமும் நிறைந்த பணிகளாக, குரூப்-1 பதவிகள் உள்ளன. இதன் காரணமாகவே, இந்த தேர்வுக்கு, பட்டதாரிகள் மத்தியில், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆதிதிராவிட பள்ளிகளில் சேரும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

     ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மேல்நிலைப் பள்ளிகளுக்கு, டி.ஆர்.பி., மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 20ம் தேதி, சென்னையில் கலந்தாய்வு நடக்கிறது.

      ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், பல்வேறு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், காலியாக உள்ள பணிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் தேர்வு செய்யப்பட்டு, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 70 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும், வரும், 20ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது.
         சேப்பாக்கத்தில் உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில், காலை, 11:00 மணிக்கு, கலந்தாய்வு நடக்கிறது. தேர்வு செய்யப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உரிய சான்றுகளுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment