Wednesday, February 20, 2013


ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான உறவு எவ்வாறு இருக்க வேண்டும்?

மாணவர்களைப் பற்றி, ஒரு செய்தியை தென்கச்சி சுவாமிநாதன் சொல்கிறார். நாய்களில் முரட்டு நாயை ஒருவர் வளர்த்து வந்தார். அந்த நாய்க்கு டாபர்மேன் என்று பெயர். அப்படிப்பட்ட நாயை ஒருவர் வளர்த்து வந்தார். அந்த நாய்க்கு உடம்பு சரியில்லாமல் போனது. உடனே அதற்கு மருந்து தருவதற்காக அந்தப் பணக்காரர், கால்நடை மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கி வருகிறார். வீட்டிலுள்ள பலரையும் அழைத்து நாயை அமுக்குங்கள் என்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் இறுக்கி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். மருந்தை எடுத்து அந்த நாயின் வாயில் ஊற்றினால், அந்த நாய் நாலு பேரையும் தள்ளிக் கொண்டு மருந்தையும் தட்டிவிட்டுத் தப்பி ஓடிவிட்டது. அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு மருந்தைக் கொண்டு வந்தார். இந்த நாய் இப்படித் தட்டிவிட்டதே என வருத்தப்பட்டு, மீண்டும் திரும்பினார். ஓர் இன்ப அதிர்ச்சி! மெதுவாக உயர் நடைபோட்டு வந்து அதுவாகவே நிதானமாக நக்கிக் குடிக்க ஆரம்பித்தது. அவர் ஆச்சரியமடைந்தார்.

இச்சம்பவத்தில் நாய் மருந்து குடிப்பதை வெறுக்கவில்லை. ஆனால் மருந்து கொடுத்த முறையை வெறுக்கிறது. மாணவர்கள் படிப்பை அல்ல, கற்பிக்கும் முறையைத்தான் வெறுக்கிறார்கள், எதிர்காலத்தில்தான் மாணவர்கள் ஆசிரியர்களை நினைத்துப் பார்ப்பார்கள், இப்பொழுது ஆசிரியர்களின் அருமை அவர்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் ஒன்றை ஆசிரியர்கள் மனதில் வைக்க வேண்டியது. நாம் பெற்ற குழந்தைகள் நம்மை எவ்வளவு சங்கடப்படுத்தினாலும், அவர்களை நாம் கைவிடுவதில்லை. அதேபோல் நம்மிடம் படிக்கும் மாணவர்கள் எவ்வளவு சங்கடப்படுத்தினாலும் அவர்களைக் கைவிடுவதில்லை. என்று சபதமெடுத்தால் தான் நம்மால் அவர்களைக் காப்பாற்ற முடியும்.

என்ன இந்த பையன் இப்படிச் செய்கிறான், இவன் நல்லதற்குத் தான் நாம் இப்படி நடந்து கொள்கிறோம் என்று நினைத்துவிட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவனை நம்மால் காப்பாற்ற முடியாது. ஏனென்றால் அவனுக்குப் படிப்பின் அருமை தெரியாது.

ஆசிரியப் பணி என்பது என்ன? இதைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் கேட்டால் இது ஒரு சேவை என்பார்கள். நீங்கள் சம்பளம் என்று ஒன்றை வாங்கிவிட்டால் அது எப்படி சேவை ஆகும்? பலன் என்று ஒன்றைப் பெற்றுவிட்டாலே அது சேவை அல்ல. சம்பளத்தைப் பார்த்து , கணக்கு செய்து எதையும் ஈடு செய்ய முடியாது. ஓர் உதாரணம். மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை அடைத்துக் கொண்டது. அதில் இறங்கி ஒருவர் சுத்தம் செய்து எடுக்கிறார். அவருக்கு என்ன சம்பளம் தந்து விடுவார்கள்? 300 ரூபாய் தருவார்களா? அவர் இறங்கிச் சுத்தம் செய்த பிறகு 300 ரூபாய் சம்பளம் வாங்கிய பிறகு, அவர் செய்த சேவைக்கு அது ஈடாகுமா? அவர் மட்டும் இறங்கவில்லை என்றால் ஊரே நாறும். அவர் செய்திருக்கிற பணிக்கு எவ்வளவு சம்பளம் தந்தாலும்கூட அது பணி அல்ல, சேவை என்றே கருதப்படும்.

ஏனென்றால் ஈடு செய்ய முடியாத சில பணிகளுக்கு, என்ன சம்பளம் கொடுத்தாலும் அவை பணிகள் அல்ல. சேவை என்றே கருதப்படுகின்றன.

ஒருவரின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், அது அதற்கு ஈடாகாது. ஆசிரியர் பணி என்பது ஒரு சேவை என்று சொல்லலாம்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நான்கு உறவுகளை ஒன்றாக வகுத்துக் கூறினார்கள். இவை நான்கும் ஒரே பிரிவு என்று வைத்துவிட்டார்கள். இதில் மாதா என்பதும், பிதா என்பதும் ஓர் உறவு. அப்படி ஆசிரியர் என்பதும் ஒரு புனிதமான உறவு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களை சிறந்தவர்களாக உருகவாக்கும் ஆசிரியர்களே தெய்வங்களாக வணங்கப்படுகின்றன.

No comments:

Post a Comment