Monday, February 11, 2013

CPS calculation Excel Sheet


பாலியல் தொழிலாளர்களுக்கான இக்னோவின் கல்வித்திட்டம்

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ), பாலியல் தொழிலாளர்‌கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கான கல்வித் தி்ட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


இதுகுறித்து, இக்னோ மண்டல இயக்குனர் சுஜிஸ் கே கோஷ் கூறியதாவது, சமுதாயத்தில், இத்தரப்பு மக்கள் கல்வி சேவை பெறுவதில் பெருந்தடை உள்ளது. இதன்காரணமாக, இவர்கள் சமுதாயத்தில் மேம்பட்ட இல‌க்கை அடைய முடியாமல் உள்ளனர்.

இவர்களை மேம்படுத்தும் பொருட்டு, இந்த கல்விமுறையை, வரும் ஜூலை மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.
வெளிநாட்டில் படிப்பு - யோசிக்க வேண்டியவை

வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வியை மேற்கொள்வதென்பது ஒரு பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. அதுவும் தான் விரும்பும் ஒரு புகழ்பெற்ற பல்கலையில், விரும்பும் படிப்பில் இடம் கிடைத்துவிட்டால், ஒரு மாணவரின் சந்தோஷத்திற்கு அளவேயில்லை.

ஆனால், அவற்றிலுள்ள சாதக-பாதகங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. வெளிநாட்டிற்கு உயர்கல்வி மேற்கொள்ள செல்லும் முன்பாக, கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன. இது மாணவர் தொடர்பானது மட்டுமல்ல, பெற்றோர் தொடர்பானதும்தான்.

நிதி தொடர்பானவை
வெளிநாட்டுப் படிப்பில், அதுவும் குறிப்பாக, முன்னேறிய மேற்கத்திய நாடுகளில் கல்வி கற்க செல்கையில், அதிகம் செலவாகும். ஆசைக்காக கால்வைத்து விட்டு, பின்னர் சமாளிக்க முடியாமல் திண்டாடுவது கூடாது. தகுதி அடிப்படையில், வெளிநாட்டு மாணவர்களுக்கான பல உதவித்தொகை திட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், சிலரால் மட்டுமே அதைப்பெற முடியும்.

மேலும், நாம் தேர்ந்தெடுக்கும் நாட்டிற்கும், நம் நாட்டிற்குமுள்ள பண மதிப்பு வேறுபாடுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், சில நாடுகளில் வாழ்க்கைச் செலவுகள் கட்டுபடியாகக்கூடிய வகையில் இருக்கும். ஆனால், சில நாடுகளிலோ, மிக அதிகமாக இருக்கும். அனைவருக்குமே, பல்கலை விடுதிகளில் இடம் கிடைத்துவிடாது. அதற்கேற்ப, மாணவர்களும், பெற்றோர்களும் தெளிவாக திட்டமிட வேண்டும்.

நீங்கள் படிக்கச் செல்லும் நாட்டிற்கு சென்று வருவதற்கான விமானப் பயண கட்டணம், பல்கலை அல்லது கல்லூரி கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவுச் செலவு மற்றும் பராமரிப்பு செலவு ஆகிய அனைத்தைப் பற்றியும் தெளிவான மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு
கடந்த ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவில், இந்திய மாணவர்கள் இனவெறி தாக்குதலுக்கு தொடர்ச்சியாக ஆளானது, வெளிநாட்டுக் கல்வியின் பாதுகாப்பு குறித்த பல்வேறான கேள்விகளை இந்தியாவில் எழுப்பியது. மேலும், இங்கிலாந்தில், சில இந்திய மாணவர்களின் மரணச் செய்திகளும் அடிபட்டன. இதனால், வெளிநாட்டிற்கு உயர்கல்வி கற்க, தங்களின் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரின் பீதி அதிகரிக்கத் தொடங்கியது.

பல பெற்றோர்கள், தங்களின் உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் இருக்கும் நாடுகளுக்கே, தங்களின் பிள்ளைகளை அனுப்ப விரும்புகின்றனர். இதுவும் ஒரு பாதுகாப்புக் காரணமே. பாதுகாப்பு விஷயத்தில், மாணவர்களைவிட, பெற்றோர்களுக்கே அதிக கவலை. குறிப்பிட்ட நாட்டில், தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றி தங்களால் இயன்றவு விசாரித்து, அதனடிப்படையில் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அதேசமயத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக, தங்கள் பிள்ளைகளின் வெளிநாட்டுக் கல்வியை தடைசெய்ய, பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புவதில்லை.

பழகிக் கொள்ளுதல்
ஒரு புதிய நாட்டின், பழக்கமில்லா கலாச்சார சூழலுக்கு, ஒரு மாணவர் பழகிக்கொள்வது இந்த வகையில் சேரும். அந்நாட்டின் காலநிலை, வாழ்க்கைச் சூழல், உணவுப் பழக்கவழக்கம் மற்றும் உடனிருப்பவர்களுடன் சரியான உறவாடலை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்றவை முக்கியமானவை.

ஏனெனில், சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம். சிலருக்கு உணவு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். சிலருக்கு, நீண்டதூரம் பெற்றோரைவிட்டு, உறவினர்களைவிட்டு பிரிந்து வந்தது தாங்க முடியாததாய் இருக்கலாம். குடும்பத்தாரின் அரவணைப்பிலேயே இருந்தவர்கள், தனித்து வாழ கஷ்டப்படலாம்.

வெளிநாட்டிற்கு சென்று படித்தல் என்ற நிலை வரும்போதே, இந்த அம்சங்கள் அனைத்தையும், பெற்றோரும், மாணவர்களும் யோசிக்க வேண்டும். இவற்றையெல்லாம் சமாளித்துவிடலாம் என்ற மனோதைரியத்தை உருவாக்கிய பின்னர், உங்களின் ஏற்பாடுகளை தொடங்கலாம்.
உங்களின் அனுபவம் இனிதாகும்! அறிவு வளமாகும்!

No comments:

Post a Comment