மத்திய பட்ஜெட்: வரி செலுத்துவோர் கனவு நிறைவேறுமா?
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வரும் 28ம் தேதி, 2013-14ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார். 2014ம் ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தல், பணவீக்க உயர்வு, அதிகரித்துள்ள நடப்பு கணக்கு பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் உள்ளிட்டவற்றை மனதில் கொண்டு, அனைத்து தரப்பினருக்கான பட்ஜெட்டை உருவாக்கும் பெரும் பொறுப்பு அவருக்கு உள்ளது.
அதே சமயம், மக்களுக்கு, விலைவாசி குறையுமா, சமையல் எரிவாயுவிற்கான கட்டுப்பாடு அடியோடு நீக்கப்படுமா என்பது போன்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.வருமான வரி வரம்பு உயர்த்தப் படுமா, வீட்டு கடன் வட்டிக்கான வரிச் சலுகை கூடுமா என்பது போன்ற எதிர்பார்ப்புகளும், வரி செலுத்துவோருக்கு உள்ளன. இவற்றுக்கான விடை, அடுத்த 16வது நாளில் தெரிந்து விடும். இந்நிலையில், வரி செலுத்துவோரின் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை இனி பார்க்கலாம்.வருமான வரி வரம்பு : தற்போதுள்ள வருமான வரி வரம்பை, 2 லட்சம் ரூபாயில் இருந்து, 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். 10 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட வருவாய்க்கு, உச்சபட்சமாக, 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இதே மதிப்பிலான தொகைக்கு, ரஷ்யாவில், 13 சதவீதமும், ஹாங்காங்கில், 17 சதவீதமும், சிங்கப்பூரில், 20 சதவீதம் என்ற அளவில் தான் வரி விதிக்கப்படுகிறது.
அதை பின்பற்றி, உச்சபட்ச வரி வரம்பிற்கான வருமானத்தை, 10 லட்ச ரூபாயில் இருந்து 20 லட்ச ரூபாயாக உயர்த்தலாம். நேரடி வரிகள் குறித்து, பார்லிமென்ட் நிலைக்குழு, மத்திய அரசுக்கு அளித்த பரிந்துரையை பின்பற்றலாம். வீட்டு வாடகைப் படிவீட்டு வாடகைப் படிக்கான வரி விலக்கு, முதல் நிலை நகரங்களுக்கு, 50 சதவீதமாகவும், இரண்டாம் நிலை நகரங்களுக்கு, 40 சதவீதமாகவும் உள்ளது. சிறு நகரங்களிலும், வாழ்க்கை செலவினம் உயர்ந்துள்ளதால், இதை, அனைத்து நகரங்களுக்கும் பொதுவாக, 50 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும்.
வீட்டு வசதிக் கடன் : வீட்டு வசதி கடனில், ஆண்டுக்கு, 1.50 லட்ச ரூபாய் வரை செலுத்தப்படும் வட்டிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதை, 5 லட்ச ரூபாயாக உயர்த்தலாம். கடந்த, 1999ம் ஆண்டுக்குப் பிறகு, இந்த வரம்பு உயர்த்தப்படவில்லை. அதே சமயம், நிலத்தின் மதிப்பு பன்மடங்காக உயர்ந்து விட்டது. வட்டியும் அதிகரித்துள்ளது. வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டால், ரியல் எஸ்டேட் துறையிலும் முதலீடு குவியும்.
மருத்துவ செலவினங்கள் : தற்போது, ஒருவர் தமக்கும், குடும்பத்தாருக்கும் செய்யும், 15 ஆயிரம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவினங்களுக்கு, வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதை, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தலாம்.
பயணப்படி : தற்போது, ஒரு நிறுவனம், அதன் ஊழியருக்கு மாதம், 800 ரூபாய் வரை வழங்கும் பயணப்படிக்கு, வரி விலக்கு வழங்கப்படுகிறது. இந்த வரம்பை, 3,500 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
கடந்த 1997ம் ஆண்டுக்குப் பிறகு, இதுவரை இந்த வரம்பு உயர்த்தப்படவில்லை. அதே சமயம், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டன.பல ஆண்டுகளாக, ஒரு லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டிற்கு, வருமான வரிச் சட்டம், 80 சி., பிரிவின் கீழ் வரி விலக்கு வழங்கப்படுகிறது. இந்த வரம்பை, 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். இதனால், பல்வேறு சேமிப்பு திட்டங்களில், முதலீடு அதிகரிக்கும்.
கல்வி செலவினங்கள் : கல்வி சார்ந்த செலவினங்கள் அனைத்திற்கும், வரிச் சலுகை வழங்க வேண்டும். தற்போது, கல்விப் பயற்சிக் கட்டணத்திற்கு மட்டுமே, 80 சி., பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இச்சலுகை, பள்ளி சேர்க்கை கட்டணம், விடுதிக் கட்டணம் போன்றவற்றுக்கும் விரிவுபடுத்த வேண்டும். இந்தியாவில் தனியார் கல்வி நிறுவனங்கள் பெருகி வருகின்றன. கல்விச் செலவினமும் அதிகரித்து வருகிறது. அதனால், 10 லட்சத்திற்கு மேற்பட்ட கல்விச் செலவினத்திற்கு, 80 சி., பிரிவின் கீழ், தனி வரம்பை ஏற்படுத்தலாம்.
இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி குறைந்தபட்ச நிலப் பரப்பளவு 1,500 தனியார் பள்ளிகளில் இல்லை - Dinamalar
குறைந்தபட்ச நில அளவு இல்லாததன் காரணமாக, 1,500 பள்ளிகள், தொடர் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்த விவகாரத்தில், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கும் முன், ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது.
இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளும், அரசின் அங்கீகாரத்துடன் இயங்க வேண்டும். அங்கீகாரம் இல்லாமல், பள்ளிகள் இயங்கக் கூடாது. அப்படி இயங்கினால், அந்தப் பள்ளிகளை மூட வேண்டும் என, சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச நில அளவு இல்லாததன் காரணமாக, 1,500 பள்ளிகள் வரை, மூடும் அபாயத்தில் உள்ளன. ஊராட்சி பகுதியாக இருந்தால், 3 ஏக்கர்; நகர பஞ்சாயத்து பகுதி எனில், 1 ஏக்கர்; நகராட்சி பகுதியாக இருந்தால், 10 கிரவுண்டு; மாவட்ட தலைநகராக இருந்தால், 8 கிரவுண்டு; மாநகராட்சி பகுதியாக இருந்தால், 6 கிரவுண்டு இடமும், பள்ளிக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்.
இந்த நில அளவு, 20, 25 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய பள்ளிகளில் இல்லை. தற்போது துவங்கப்படும் பள்ளிகள், மேற்கண்ட குறைந்தபட்ச நில பரப்புடன் விண்ணப்பிக்கின்றன. பழைய பள்ளிகளில், குறைந்தபட்ச நில அளவு இல்லாததால், தொடர் அங்கீகாரம் வழங்க, சம்பந்தப்பட்ட துறைகள் மறுத்து விட்டன.
இதன் காரணமாக, மெட்ரிகுலேஷன் இயக்குனரக துறையில், 1,000 பள்ளிகளும், பள்ளிக்கல்வித் துறையின் கீழ், 120 பள்ளிகளும், தொடக்க கல்வித் துறையின் கீழ், 500 நர்சரி, பிரைமரி மற்றும் துவக்க, நடுநிலைப் பள்ளிகளும், அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக கூறப்படுகிறது.
ஜூன் மாதம் பள்ளி துவங்குவதற்குள், இந்த பிரச்னையில், ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில், தமிழக அரசு உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் செயலர் இளங்கோவன் கூறியதாவது: நில அளவு காரணமாகத் தான், அங்கீகாரம் பெற முடியாத நிலை உள்ளது. இதனால், பள்ளி வாகனங்களுக்கு, பெர்மிட்டும் வாங்க முடியவில்லை. அங்கீகாரம் இல்லாததால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
புதிய விதிமுறைகளை பூர்த்தி செய்ய, 6 ஆண்டுகள், தமிழக அரசு கால அவகாசம் அளித்தது. இருந்த போதும், நில மதிப்பு, 20 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், பள்ளியை ஒட்டி, நிலம் வாங்க முடியாத நிலை உள்ளது.
பள்ளிக்கு, அருகாமையில், இடம் வாங்கினால், அதை ஏற்பது இல்லை. பள்ளிக்கு பக்கத்திலேயே வாங்க வேண்டும் என, கூறுகின்றனர். நடைமுறையில், இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதை, அதிகாரிகளும், அரசும் உணர வேண்டும்.
எனவே, பள்ளி இயங்கும் இடத்திற்கு ஏற்ப, குறிப்பிட்ட மாணவ, மாணவியர் படிக்கும் வகையில், அரசு அனுமதித்து, உத்தரவு வழங்க வேண்டும். ஒரு மாணவருக்கு, 10 சதுர அடி வேண்டும் என, அரசு கூறுகிறது. 6 சதுர அடி போதும் என, நாங்கள் கூறுகிறோம்.
எனவே 20 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட பள்ளிகள், புதிய விதிமுறைகளை நிறைவேற்றுவதில் உள்ள பிரச்னைகளை உணர்ந்து, அரசு சுமூகமான ஒரு முடிவை எடுத்து, வரும் கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன் அறிவிக்க வேண்டும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
மெட்ரிக் பள்ளி இயக்குனரக வட்டாரம் கூறுகையில், "கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் இயங்கக் கூடாது. இந்த பிரச்னையை, அரசுக்கு சுட்டிக்காட்டி உள்ளோம். ஜூன் மாதத்திற்குள், தமிழக அரசு, ஒரு முடிவை எடுத்து அறிவிக்கும் என, எதிர்பார்க்கிறோம்," என, தெரிவித்தனர்.
|
கல்வி உதவி: ஜப்பானுக்கு இந்திய கல்வியாளர் கோரிக்கை
"இந்தியாவை சேர்ந்த, ஏழை மாணவர்களின் கல்விக்கு, ஜப்பான் அரசு உதவ வேண்டும்" என, இந்தியாவை சேர்ந்த கல்வியாளர் ஆனந்த் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏழை மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும் வகையில், 2002ல், பீகாரில், "சூப்பர் 30" என்ற கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த கல்வி திட்டத்தின் தலைவரான ஆனந்த் குமார், ஜப்பான் அரசின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜப்பான் அரசின், அறிவியல் துறை ஆலோசகரை, ஆனந்த் குமார் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்கு, ஜப்பான் அரசு உதவ வேண்டும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள், பொருளாதார வசதி கொண்ட இந்திய மாணவர்களை, தங்கள் நாட்டில் கல்வி பயில அழைக்கின்றன.
இந்தியாவின் ஏழை மாணவர்கள், உயர் கல்வி பெற, ஜப்பான் உதவினால், திறமையான மாணவர்கள் பயன்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.
ஜப்பானில் கல்வி பயில செல்லும், 1.4 லட்சம் வெளிநாட்டு மாணவர்களில், இந்திய மாணவர்கள் எண்ணிக்கை, 600 மட்டுமே. இந்திய மாணவர்களுக்கு உதவினால், வரும், 2020க்குள், மூன்று லட்சம் மாணவர்கள், ஜப்பானில் கல்வி பெற முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
|
வங்கி உதவியுடன் அரசு மாணவர் விடுதிகளில் யு.பி.எஸ்.
தமிழகத்திலேயே முதல் முறையாக, கோவை மாவட்டத்திலுள்ள அரசு மாணவர் விடுதிகளுக்கு யு.பி.எஸ்., மூலமாக, தடையற்ற மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, மாநிலம் முழுவதும் செய்தால் பல ஆயிரம் ஏழை மாணவ, மாணவியர் பொதுத்தேர்வில் சாதிக்க முடியும்.
தமிழகத்தில் சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களில், 8 மணி நேரத்திலிருந்து 14 மணி நேரம் வரையிலும் மின் வெட்டு அமலில் இருப்பதால், தொழில் துறையினர், வணிகர்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றவர்களை விட, பொதுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவியரின் நிலைதான் மிகவும் பரிதாபத்துக்கு உரியதாகவுள்ளது. ஏழை மாணவ, மாணவியர் மட்டுமின்றி, அரசுக்குச் சொந்தமான விடுதிகளில் தங்கிப் படிப்பவர்களின் கல்வியும், எதிர்காலமும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
அரசு விடுதிகளில் மின்வெட்டால் பூச்சிக்கடி, கொசுத்தொல்லை ஆகிய காரணங்களால் தூக்கம் இழந்து, உடல்ரீதியாக பாதிக்கப்படுவதுடன், சரியாகப் படிக்கவும் முடியாமல் மன ரீதியாகவும் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். தேர்வு நேரத்தில், இவர்களுக்கு ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்தித் தர அரசு அனுமதி அளித்திருந்தாலும், அது எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்பது கேள்விக்குறியாகவுள்ளது.
இந்நிலையில், மாநிலத்துக்கே முன்னுதாரணமாக, கோவை மாவட்டத்திலுள்ள அரசு விடுதிகளுக்கு யு.பி.எஸ்., வசதி செய்து கொடுப்பதற்கு சிறப்பு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், சிங்காநல்லூர், ரெட்பீல்ட்ஸ், புலியகுளம், ரேஸ்கோர்ஸ், பாலசுந்தரம் ரோடு, ஆனைமலை, சொக்கம்பாளையம், லட்சுமி நாயக்கன் பாளையம், கோட்டூர், பொள்ளாச்சி, வால்பாறை, துடியலூர் என பல்வேறு இடங்களிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கான 23 விடுதிகள், அரசால் நடத்தப்படுகின்றன.
பள்ளிகளில் படிக்கும் 588 மாணவர்கள், 389 மாணவியர், கல்லூரிகளில் படிக்கும் 354 மாணவர்கள், 318 மாணவியர், ஐ.டி.ஐ., மாணவர்கள் 90 பேர் என மொத்தம் 1,739 பேர், இந்த விடுதிகளில் தங்கிப் படித்து வருகின்றனர். மின்வெட்டால் தங்களுடைய கல்வி, உடல் நலம், எதிர்காலம் பாதிக்கப்படுவது குறித்து, கோவை கலெக்டர் கருணாகரனிடம் இந்த மாணவ, மாணவியர் பலரும் நேரில் முறையிட்டனர்.
இவர்களுக்கு தடையற்ற மின்சாரம் தருவதற்கு உதவும் வகையில், யு.பி.எஸ்., பொருத்துவதற்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக முயற்சி எடுக்குமாறு, சம்மந்தப்பட்ட துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் சுரேஷ், முன்னோடி வங்கி உதவியுடன் இதற்கான முயற்சிகளில் இறங்கினார்; அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.
மாவட்டத்திலுள்ள 23 அரசு மாணவர் விடுதிகளுக்கும் யு.பி.எஸ்., (இன்வெர்ட்டர்) பொருத்துவதற்கு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் முன் வந்துள்ளன. அவற்றை ஒருங்கிணைத்து, இதற்கான ஏற்பாடுகளை முன்னோடி வங்கி செய்து வருகிறது.
அரசு விடுதிகளுக்கு, யு.பி.எஸ்., பொருத்தப்பட்டிருப்பது, தமிழகத்திலேயே முதன்முறையாகும். இதேபோல, மாநிலம் முழுவதும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மூலமாக அரசு மாணவர் விடுதிகளுக்கு யு.பி.எஸ்., பொருத்த நடவடிக்கை எடுத்தால், ஏழை மாணவ, மாணவியரும் இடையூறின்றிப் படித்து, தேர்வில் சாதிக்க முடியும்.
தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை கமிஷனர் சிவசங்கரனிடம் கேட்ட போது, "அரசு விடுதிகளில் தங்கிப்படிக்கும் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தேர்வு காலங்களில் ஜெனரேட்டர் எடுத்துக்கொள்ள அரசு அனுமதித்துள்ளது.
கோவையைப் போல, மற்ற பகுதிகளில் இத்தகைய உதவி கிடைத்தால், அதைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படும்," என்றார்.
|
|
No comments:
Post a Comment