Thursday, February 28, 2013

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2009-2010 ம் ஆண்டு தேர்வு பெற்ற ஆங்கிலம், கணிதம், சமூகவியல், மற்றும் அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களின் பள்ளிக்கல்வித்துறையின் பணிவரன்முறை ஆணை



மார்ச் 5ம் தேதி வி.ஏ.ஓ., 4ம் கட்ட கலந்தாய்வு

வி.ஏ.ஓ., நான்காம் கட்ட கலந்தாய்வு, மார்ச், 5ம் தேதி நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 


இதுதொடர்பாக தேர்வாணைய செயலர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஏற்கனவே, மூன்று கட்டங்களாக நடந்த கலந்தாய்வு மூலம், 1,685 தேர்வர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், பல்வேறு துறைகளுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டனர். 

மீதம் உள்ள, 185 பணியிடங்களை நிரப்ப, நான்காம் கட்ட கலந்தாய்வு, மார்ச், 5ம் தேதி, தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது. இந்த கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பதிவு எண்கள் விவரம், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

தேர்வர்கள், தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பம் இட்ட நகல்களையும் கொண்டு வர வேண்டும். கலந்தாய்வுக்கு வரத் தவறினால், அவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு தரப்படாது. இவ்வாறு செயலர் கூறியுள்ளார்.


உயிருள்ள மூட்டைகளா பள்ளிக் குழந்தைகள்?

தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டப்படி, ஒரு ஆட்டோவில் 3 பேர் உட்காரலாம்; டிரைவரைச் சேர்த்து 4 பேர் பயணிக்கலாம். குழந்தைகளாக இருந்தால், 5 பேர் வரை அனுமதிக்கலாம் என்கிறது போக்குவரத்துத்துறையின் சுற்றறிக்கை. ஆனால், இங்கே நடப்பதென்ன...? 

முன்புறத்தில், டிரைவருக்கு வலதும், இடதுமாக 2 அல்லது 3 பேர், பின்புற இருக்கையிலும், இடையில் அமைக்கப்பட்டுள்ள கட்டையிலுமாகச் சேர்த்து 7 அல்லது 8 பேர் என மொத்தம் பத்துக் குழந்தைகள், கம்பிகளையும், உயிரையும் கையில் பிடித்துக்கொண்டு அன்றாடம் பயணிக்கிறார்கள். பார்க்கும்போதே பதறுகிறது மனசு...

ஆனால், இப்படித்தான் ஆட்டோக்களில் குழந்தைகளை ஏற்றி விட்டு, குதூகலமாக "டாட்டா" காட்டுகிறார்கள் பெற்றோர்கள். கேட்டால், "நம்ம சக்திக்கு ஆட்டோவுலதான் அனுப்ப முடியும்" என்பார்கள்; ஆட்டோக்காரர்கள், "பெட்ரோல் விக்கிற விலைக்கு இத்தனை பேரை ஏத்திட்டுப் போனால்தான் கட்டுப்படியாகுது" என்பார்கள். 

ஆட்டோவில் புளி மூட்டைகளைப் போல, குழந்தைகளை அடைத்துக் கொண்டு போனாலும், வாங்கும் கட்டணத்தில் இவர்கள் குறைவு வைப்பதில்லை; ஆபத்தான வகையில் குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள் என்று தெரிந்தாலும், வேகத்தையும் குறைப்பதில்லை. ஏதேனும் ஒரு விபரீதம் நிகழும் வரை, இத்தகைய விதிமீறல்கள் யாரையும் உறுத்துவதில்லை.

வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு தினமும் ஆயிரம் வேலை இருக்கிறது. பத்திரிக்கையில் படம் பிடித்துப் போட்டால், இரண்டு நாட்களுக்கு நாலைந்து ஆட்டோக்களைப் பிடித்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள்; மூன்றாவது நாளில் அவர்களின் மாமூல் பணிக்குத் திரும்பி விடுவார்கள். 

ஆட்டோக்காரர்கள், ஆட்சியர் அலுவலகத்துக்குப் போய், ஒரு மனுவைக் கொடுத்து விட்டு, மறுபடியும் தங்கள் அன்றாடப் பயணத்தைத் தொடர்வார்கள். இதில், ஆட்டோக்காரர்களை மட்டும் குற்றம் சொல்வதற்கில்லை. 

மாணவ, மாணவியர்க்கான தனி போக்குவரத்தை உருவாக்காத அரசாங்கம், பல கோடி ரூபாய்களில் கட்டடங்கள் கட்டினாலும் தேவையான பஸ்களை இயக்க மறுக்கும் பள்ளி நிர்வாகங்கள், விதிமீறலைத் தடுக்காத போக்குவரத்துத்துறை அலுவலர்கள், சிக்கனம் என்ற பெயரில் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாத பெற்றோர்கள்... எல்லோருமே தவறிழைப்பவர்கள்தான். 

இத்தனை பேருடைய தவறுகளால், ஒரு மழலை கூட ரத்தம் சிந்தி விடக்கூடாது என்பதுதான் நமது மன்றாட்டு.

மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு 10 சதவீதம் பாஸ்!

       மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வில் 10.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும்கூட, கடந்த தேர்வுடன் ஒப்பிடும்போது தற்போதைய தேர்ச்சி விகிதம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.


       கடந்த அக்டோபர் மாதம் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நடத்திய மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வை (செட்) 51,699 மாணவர்கள் எழுதினர். இதில் 5,495 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 10.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த முறை நடைபெற்ற மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வில் 41,164 பேர் தேர்வு எழுதினர். இதில் 1,396 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதாவது தேர்ச்சி விகிதம் 3.39 சதவீதம். 2002-ஆம் ஆண்டில் இத்தேர்வில் தேர்ச்சி 0.68 சதவீதம். 2004-ஆம் ஆண்டில் 0.85 சதவீதமாகவும் 2006-ஆம் ஆண்டில் 2.20 சதவீதமாகவும் 2008-ஆம் ஆண்டில 2.19 சதவீதமாகவும் தேர்ச்சி விகிதம் இருந்தது. தற்போதைய தேர்வில் கடந்த ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


          பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி, மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 9 சதவீதம் பேர் தேர்ச்சியடையும் மதிப்பெண்ணையே கட் ஆஃப் மதிப்பெண்களாக நிர்ணயித்து, தேர்ச்சி கணக்கிடப்படுகிறது. அதன்படி, இத்தேர்வு எழுதிய தமிழ்ப்பாட மாணவர்களில் 5,886 பேரில் 826 பேர் (14.03 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். வேதியியல் அறிவியல் பாடத்தில் 2,639 பேரில் 136 பேரும் வணிகவியல் பாடத்தில் 5,484 பேரில் 630 பேரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 6,587 பேரில் 589 பேரும் பொருளாதாரப் பாடத்தில் 2,410 பேரில் 280 பேரும் கல்வியியல் பாடத்தில் 2,164 பேரில் 264 பேரும் ஆங்கிலத்தில் 4,605 பேரில் 572 பேரும் வரலாறு பாடத்தில் 2,815 பேரில் 387 பேரும் நூலக அறிவியலில் 1,118 பேரில் 149 பேரும்  உயிர் அறிவியலில் 4,863 பேரில் 501 பேரும் மேலாண்மை பாடத்தில் 2,456 பேரில் 317 பேரும் கணிதத்தில் 4,778 பேரில் 329 பேரும் இயல் அறிவியலில் 2,638 பேரில் 125 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த முறை நடைபெற்ற மாநில விரிவுயாளர் தகுதித் தேர்வில் இயற்பியல், வேதியியல், புவியியல், கணிதம், நூலக அறிவியல் போன்ற பாடங்களில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறாத நிலை இருந்தது. தற்போது 27 பாடங்களிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

           அரசு உதவி பெறும் கல்லூரிகளில்  3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணி இடங்களும் அரசுக் கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்தச் சூழ்நிலையில் செட் தேர்வில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஏற்கெனவே இத்தேர்வில் தகுதி பெற்ற பலரும் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். இத்தேர்விலும் தகுதி பெற்று பிஎச்டி படித்துள்ள மாணவர்கள்தான் பெரும்பாலும் விரிவுரையாளர் பணியில் சேரும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

ஆயிரம் காலி இடங்கள்!

          தமிழ்நாட்டில் உள்ள 69 அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 1063 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. முக்கியப் பாடப்பிரிவுகளில் உள்ள உத்தேசக் காலி இடங்கள் விவரம்:

தமிழ்  
76
ஆங்கிலம்
140
கணிதம்
135
இயற்பியல்
100
வேதியியல் 
95
தாவரவியல்
60
விலங்கியல்
55
கம்ப்யூட்டர் சயின்ஸ்
95
வரலாறு
77
பொருளாதாரம்
58
வணிகவியல்
75
அரசியல் அறிவியல்
5
நிர்வாகவியல்
8
புள்ளியியல்
18

பாடத் திட்டங்களை மாற்றியமைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு

      ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
 
         முதுநிலை, இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கான தேர்வு பாடத்திட்டங்கள் 5  ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான தேர்வுகளுக்கு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு 10 ஆண்டுகள் வரை ஆகின்றன.

             எனவே, இப்போதைய மாற்றங்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களை மாற்றும் பணி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிகிறது. ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் கடந்த ஆண்டு தயாரிக்கப்பட்டதால், இதில் மாற்றம் எதுவும் இருக்காது எனவும் தெரிகிறது.

No comments:

Post a Comment