Thursday, February 7, 2013

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த பள்ளி கல்வி துறை உத்தரவு

          பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 
         தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற, அனைத்து அரசு பள்ளிகளிலும், சிறப்பு வகுப்புகள் நடத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 
        படிப்பில் திறமையான மாணவர்கள், நடுத்தர மாணவர்கள் என பிரித்து, காலை-மாலை என தினமும் 2 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். இதனால் மாணவர்களின் கல்வி தரம் உயர்த்தலாம் என்று பள்ளி கல்வித்துறை அனைத்து அரசு தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவை அனுப்பியுள்ளது.


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளதாக சட்டசபையில் அமைச்சர் தகவல்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால் அவர்களுக்கு எந்த பலனும் இல்லை என கூறுகின்றனர். இந்த திட்டம் இரத்து செய்யப்படும் என ஏற்கனவே அதிமுக வாக்குறுதி அளித்துள்ளதையும் அரசு ஊழியர், ஆசிரியர் சுட்டிக்காட்டுகின்றனர்.

சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பணம் எங்கே போகிறது என்றும் அவர்களுக்கு தெரியவில்லை. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எழுப்பட்ட கேள்விக்கு மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் கீழ்வரும் பதிலளித்துள்ளார்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அமலில் உள்ளது. எனினும் இத்திட்டம் தமிழக அரசின் ஆய்வில் உள்ளது என தெரிவித்துள்ளார். 
அரசு தொடக்க பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை

           அரசு தொடக்கப் பள்ளிகளில், குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வித்தரத்தை மேம்படுத்தவும், பள்ளி கல்வித்துறை சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

        தமிழகத்தில், ஆங்கில மோகம் காரணமாக குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே தனியார் பள்ளிகளில் சேர்ப்பது அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில், பல்வேறு சலுகை வழங்கப்பட்டாலும், ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உயர்கிறது.

        அரசு பள்ளிகளில், துவக்க நிலையில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறித்து பள்ளி கல்வி துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதில், மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவித்துள்ளது. பல பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 40 மாணவர்களுக்குள் மட்டும் படிக்கின்றனர். இதனால், அரசு கொண்டு வரும் திட்டங்களும், முயற்சிகளும் வீணாகி வருகின்றன.

         இதே நிலை நீடித்தால், ஓரிரு ஆண்டுகளில் பல அரசு பள்ளிகள் மூடும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்த்து, பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி தரத்தை மேம்படுத்தவும் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

         முதல்கட்டமாக, தமிழ் வழி, ஆங்கில வழி கல்விக்கு தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்காக, பள்ளி வாரியாக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

          அடுத்த கல்வியாண்டில், பள்ளி திறப்பதற்கு முன் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி, ஆசிரியர்கள் நியமிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போதுள்ள ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த பயிற்சி முழுவீச்சில் வழங்கப்படவுள்ளது. இதில், தனியார் பள்ளிகளை போன்று, விளையாட்டு முறையுடனும், எளிமையான முறையிலும் கல்வி கற்பிக்க ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

         இதற்கு தேவைப்படும் பயிற்சிகள், பயிற்சியாளர்கள் விபரம் ஆகியவை தயாரிக்கும் பணி நடக்கிறது. அதுபோல், பள்ளி நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் தலைமை ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

           இதற்கான, முதல்கட்ட பயிற்சி முகாம் இரு நாட்களுக்கு முன் துவங்கியது. தேர்வு நேரம் நெருங்குவதால், இப்பயிற்சி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏப்., மாத இறுதியில் மீண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பயிற்சி வழங்கப்படவுள்ளது.

             பள்ளி திறக்கப்படும் போது, மாணவர்களை கொண்டு சிறப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தவும், பள்ளி மேலாண்மை குழு, கிராம கல்விக்குழு உறுப்பினர்களை கொண்டு வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

          இதன்மூலம், வரும் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை கணிசமாக உயரும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள் காத்துள்ளனர்.

சி.ஏ.,வில் சாதித்த பிரேமாவிற்கு பாராட்டு விழா ஏற்பாடு


        தேசிய அளவில், சி.ஏ,.தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, சாதனை படைத்த பிரேமாவிற்கு, பாராட்டு விழா நடத்த, சொந்த கிராம மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

     விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த, பெரிய,கொள்ளியூரைச் சேர்ந்த ஜெயகுமார் மகள் பிரேமா. பி.காம்., முடித்த இவர், இந்தாண்டு, சி.ஏ., தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து, சாதனை படைத்தார்.

        தேர்வில் சாதனை படைத்து, பெரியகொள்ளியூருக்கு பெருமை சேர்த்த பிரேமாவிற்கு, பாராட்டு விழா நடத்த, சொந்த கிராம மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். பிரேமாவை பாராட்டி, பெரிய கொள்ளியூர் பொதுமக்கள் சார்பில், சங்கராபுரம், பகண்டை கூட்ரோடு, அத்தியூர், கொள்ளியூர் ஆகிய இடங்களில், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்களின் திறன் கவலையளிக்கிறது: மன்மோகன் சிங்

          "நம் நாட்டில், ஆசிரியர்களின் கல்வி போதிக்கும் திறன், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. கல்வித் துறையில் உள்ள, முக்கிய பிரச்னைகளுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும்," என பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

      கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின், பொன் விழா கொண்டாட்ட விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:பள்ளி படிப்பை, பாதியிலேயே கைவிடுவோரின் எண்ணிக்கையை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பள்ளி படிப்பை, பாதியில் கைவிடுவோரின் எண்ணிக்கை, அதிகமாகவே உள்ளது. இது, மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது.

         நாட்டின் குடிமகன்கள், தரமான கல்வி கற்றால் மட்டுமே, நாடு, வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்பதை, அரசு உணர்ந்துள்ளது. ஐ.மு., கூட்டணி அரசு, பதவிக்கு வந்ததிலிருந்து, கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இத் துறையில், அதிகமான முதலீடு செய்யப்படுகிறது.

           சமுதாயத்தின் அடித்தட்டில் உள்ளவர்களும், தரமான கல்வி கற்க வேண்டும். தரமான கல்வி கற்பதற்கு, அவர்களுக்கு, போதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும். நம் நாட்டில், ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் திறன், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை.
 
             கல்வித் துறையில், இது போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இதற்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும். தரமான கல்வியை அளிப்பதில், கேந்திரிய வித்யாலயா சிறப்பாக செயல்படுகிறது. இந்த பள்ளிகளில், தங்களுக்கு அருகில் உள்ள, மற்ற பள்ளிகளுக்கு, முன் மாதிரியாக செயல்பட வேண்டும்.இவ்வாறு, மன்மோகன் சிங் பேசினார்.
 

2 comments: